March 31, 2009

அயன்
அப்படி இப்படியென்று முக்கால்வாசி படம் பார்த்தாயிற்று! 

முழுக்க முழுக்க சூர்யா படம். ஜிலீர் சிரிப்பும், துடிப்பான நடிப்பும் அதகள ஆக்ஷனுமாய் கலந்துகட்டி கலக்கியிருக்கிறார்.  ஒரு கோபக்கார, நடுத்தர வர்க்க இளைஞன் தேவா (சூர்யா). அவன் வாழ்க்கையில் குறுக்கிடும் யுவதி சீமா (தமன்னா). இவர்கள் மத்தியில் தொழிலதிபர் சந்தனபாண்டியன் (பிரபு). இவர்களைப் பற்றிய கதை தான் அயன்.  திரையுலகுக்கு புதிய கதை எல்லாம் இல்லை. எல்லோர் வாழ்விலும் நடக்கக்கூடிய சம்பவங்கள் தான். திடுக் திரைக்கதை மூலம் சுவாரஸ்யம் கூட்டியிருக்கிறார் இயக்குனர் கே வி ஆனந்த். முதல் பாதி முழுக்க சூர்யாவும் தமன்னாவும் காதல் கபடி விளையாடியிருக்கிறார்கள். இடையியிடையே ஜெகனின் காமெடி கபடி. இரண்டாவது பாதியில், பார்த்த வரை, ஒவ்வொரு ஃப்ரேமும் விறுவிறுப்பு.    சிக்ஸ் பேக் சிங்கமாக சூர்யா! ஆக்ஷன், காதல், காமெடி என்று ரகளை செய்திருக்கிறார். பிரபுவுக்கு இந்த படம் நிச்சயம் ஒரு புதிய பரிமாணம். 

படத்தில் இன்னொரு அழகான விஷயம் இருக்கிறது. அது தான் சென்னை. அவ்வளவு அழகாகக் காட்டியிருக்கிறார்கள்!  ஒளிப்பதிவாளருக்கும், கலை இயக்குனருக்கும் ஒரு "ஓ" போடலாம்!!! பாடல்கள் படமாக்கப்பட்டிருக்கும் விதம் அழகோ அழகு. "விழி மூடி" பாட்டில் மலேஷியாவையும், துருக்கியையும் அள்ளியிருக்கிறார்கள். ஹாரீஸ் ஜெயராஜுக்கும் சூர்யாவுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியவில்லை, இசை பட்டையைக் கிளப்புகிறது. பிண்ணனி இசை துள்ளும் ரகம். அதுவும் தமன்னாவை சந்திக்கும் போது வரும் சாக்சஃபோன் இசை அட்டகாசம்! 

மொத்தத்தில் அயன் ஒரு இளமைத்திருவிழா! முழுதாகப் பார்க்க காத்திருக்கிறேன்! 


ஒழுங்காக ஆணி புடுங்கிக் கொண்டிருந்தவனை மெயில் மேல் மெயில் அனுப்பி "ஏப்ரல் ஃபூல்" என்று கலாய்த்து புண்ணியம் கட்டிக் கொண்ட அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் இந்த பதிவு சமர்ப்பணம்!!!

சின்சியராக படித்த அனைவருக்கும் ஏப்ரல் 1 வாழ்த்துக்கள்! 

March 22, 2009

என்ன குறை கண்டீர்கள் "யாருக்கு யாரோ" படத்தில்?


நண்பர்கள் வாயிலாக இந்த படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு (எந்த படமா? "யாருக்கு யாரோ ஸ்டெப்னி" என்ற படத்தைப் பற்றி கேள்விப்படாத உங்கள் அறியாமையை வியக்கிறேன்!) யு-ட்யூபில் தேடினேன். முழுப்படமே பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கிடைத்தது! ஒவ்வொரு பகுதியாக பார்த்ததில் ஒரு விஷயம் புரியவேயில்லை.  ஏன் இந்த படத்தைப் போட்டு ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள்? எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன இந்த படத்தில்!

*  ஒரு Alpha Male தான் கதை நாயகனாக இருக்க வேண்டும் என்றில்லாமல் ஒரு சாமான்யனை நாயகனாகக் காட்டி அவனது ஆசாபாசங்களை படமாக்கியிருப்பதே தமிழ் சினிமாவின் முக்கிய திருப்பம் என்று சொல்லலாம்.

* காதை வருடும் இன்னிசை, கண்ணியமான பாடல் வரிகள் என்று இந்த படத்தின் பாடல் காட்சிகள் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகின்றன அல்லவா? 

* முகம் சுளிக்கும் இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருப்பான சண்டைக்காட்சிகளோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாய் அமைந்திருக்கிறதே, அது போதாதா? 

* "70,000 ரூபாயில் கார்" என்ற கதை நாயகனின் அருமையான லட்சியம் தான் இன்று நமக்கு ஒரு டாடா நேனோ கிடைத்திட முன்னுதாரணமாக இருந்தது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! 

* ஒரு குழந்தை வரைந்த கார் படத்தை வைத்தே, அதைப் போன்ற காரை வடிவமைக்கும் ஒரு அறிவியல் கதையை நம்மால் புரிந்து கொள்ள இயலாதது தமிழ் சினிமாவின் துர்ப்பாக்கியம் தான்.

* வன்முறை ஏதும் இல்லாமல் அமைதியான வழியிலேயே (டாலரைக் கொடுத்து),  துர்புத்திக்காரர்களை திருத்த முடியும் என்பதற்கு இந்த படத்தை விட வேறென்ன உதாரணம் காட்டிவிடமுடியும் உங்களால்? 

* படத்தின் இறுதிக்கட்டத்தில், கார் ஸ்டெப்னியை வைத்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கும் இந்த பாங்கை வேறு எந்த படத்திலாவது காண முடியுமா ? 

* தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் சாதாரண ஏரிக்கரை, கல்குவாரி போன்ற இடங்களிலேயே படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்க விஷயம் அல்லவா ?

* மேலும்.. ஆவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க. என்னால முடியல !  :( 

ஏதாவது நல்லதாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன்! சத்தியமா முடியல! எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது? 

ஹீரோ சாம் ஆண்டர்சன் சார் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை என்னவென்று சொல்ல? அவர் நடை என்ன? உடையலங்காரம் என்ன? வசன (இங்க்லீஷ் வேற!) உச்சரிப்பு என்ன ? நடன அசைவுகள் என்ன ? என்ன.. என்ன? பார்த்த வீடியோ அனைத்திலும் சாரையே கவனித்து வந்ததால் அந்த இரு சொரூபராணிகளைப் (ஜோதி & வர்ணிகா! ) பற்றி அதிகம் சொல்வதற்கு இல்லை.

இறுதிக்காட்சியில் சார் ஸ்டெப்னியைப் பற்றி அவர் இப்படி விளக்கம் கொடுப்பார் என்று தெரிந்திருந்தால், எந்த கார் கம்பெனிகாரனும் ஸ்டெப்னி வைத்தே கார் தயாரித்திருக்கமாட்டான்! 

அந்த கருமாந்தரத்த இங்க போய் பாருங்க! 


அப்புறம் அந்த டாலர் மேட்டர். "உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று நாயகி, நாயகன் தந்த சங்கிலியை அவரிடமே கொடுப்பாராம். அவர் மறுபடியும் நாயகியிடமே திருப்பிக் கொடுப்பாராம். உடனே நாயகி "இனிமேல் எனக்கு எல்லாமே நீங்க தான்"னு சொல்லிடுவாங்களாம்! டேய்! என்னங்கடா நடக்குது இங்க? 

ஜோ ஸ்டேன்லி (இந்த பேர பாத்து தாங்க ஜெர்க் ஆயிட்டேன்! ) தான் இந்த காவியத்திற்கு கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், லைட்பாய்,,, எல்லாமே! இதப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒரு கெரகமும் இல்லை!

சாம் ஆண்டர்சன் சாருக்கு நல்ல பட்டப்பெயர் கொடுத்தே ஆகவேண்டும்! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. :) 

கொசுறு: நம்பினால் நம்புங்கள்! இப்போதெல்லாம் யு-ட்யூப் என்ற பேரைக் கேட்டாலே உடம்பு நடுங்குகிறது! 

March 16, 2009

குஷ்பூவுக்கு ஏன் இந்த வேலை?

கலைஞர் டி.வியில் "மானாட மயிலாட" நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும், ரஜினி,கமல் சுற்று, ரஹ்மான் சுற்று,  நகைக்சுவை சுற்று இப்படி ஏதாவது ஒரு சுற்று இருக்கும்.  அதில் போன வாரம் ஒவ்வொரு பாடலும் ஒவ்வொரு நிறம் என்ற சரித்திரப் புதுமையான கான்செப்ட்டை எடுத்துக்கொண்டு உள்ளூர் ஆட்டக்காரர்கள் எல்லாம் திறமை காட்டிக்கொண்டிருந்தார்கள் (மறுஒளிபரப்பு என்று நினைக்கிறேன்). 

அதில் பச்சை நிறத்திற்கான பாடல் முடிந்ததும் "குஷ்பூ மேம்" ஐ கருத்து கேட்டார்கள். அவரும் தனக்கே உரிய தமிழில் ஆட்டக்காரர்களின் கெமிஸ்ட்ரி , ஃபிசிக்ஸ் பற்றி எல்லாம் சொல்லிவிட்டு, பச்சை நிறத்தை பற்றி ஆங்கிலத்தில் விளக்கம் கொடுத்தார். அதுவும் எப்படி ? 
    "நம் தேசியக்கொடியில் கூட பச்சை நிறம் இருக்கிறது. அது அமைதியைக் குறிக்கிறது. அது மாதிரி நீங்..."

என்னது? பச்சை நிறம் அமைதியைக் குறிக்கிறதா? அப்ப வெண்மை நிறம் எதற்கு? 

எங்கள் ஆசிரியர்கள் எல்லாம் காவி நிறம் தியாகம், வெண்மை - அமைதி, பச்சை - வளம் என்று தான் சொல்லிக்கொடுத்தார்கள். இவற்றை மாற்றக்கூடாது என்று உருப்போட வைத்தார்கள். இவர் இப்படி சொல்லிக்கொண்டிருக்கிறார். எரிச்சல் தான் வந்தது!!! 

இந்த மாதிரி ஒரு வெகுஜன ஊடகத்தில், அதிலும் அதிகம் பேரால் பார்க்கப்படும் இப்படி ஒரு நிகழ்ச்சியில் இந்த மாதிரி அபத்தமாக பேசலாமா குஷ்.....? சொந்தக் கருத்தைத் தெரிவிக்க இது கற்பு சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை மேடம்!!! 

March 15, 2009

லகான் ரீ-மேக்கில் ஜே கே ரித்தீஷ்???

புடுங்குவதற்கு ஆணிகள் குறைவாக இருந்த போது வலையில் மேய்ந்துகொண்டிருந்தேன். அப்போது பழைய செய்தி ஒன்று கண்ணில் பட்டது. முதலில் நம்பவே முடியவில்லை. அப்படியே ஷாக்காயிட்டேன்!!! கண்களைத் தேய்த்துவிட்டுக் கொண்டு பார்த்த போது உண்மைதான் என்று தெரிந்தது.

"கானல் நீர்" தந்த காவியத்தலைவன், கலைத்தாயின் கைக்குழந்தை, அஞ்சாநெஞ்சன், வீரத்தளபதி ஜே கே ரித்தீஷ் "லகான்" படத்தை ரீ-மேக்கப்போகிறார்.

இப்போதைக்கு தமிழில் அதிக படங்கள் வைத்திருக்கும் ஒரே நடிகர் தளபதி தான் :). தில்லு முல்லு, தளபதி, வேட்டைப்புலி என்று மூன்று படங்கள் இவர் கைவசம் உள்ளன. இவற்றை முடித்துவிட்டு லகான் ரீ-மேக்கில் நடிப்பார் என்று தெரிகிறது. ரீ-மேக் உரிமை குறித்து ஜே கே ஆர் தரப்பினரும், அமீர்கான் தரப்பினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்களாம். (தலைவா, அப்படியே 'தாரே ஜமீன் பர்' படத்தின் உரிமையையும் வாங்கிட்டு வந்துடுங்க. கலந்து கட்டி கலக்கிடலாம்.)

படத்தின் வசனங்களையும், காட்சிகளையும் நினைத்தால் இப்பவே கண்ண கட்டுதே! தளபதி நடித்தால் எப்படி இருக்கும் என்று பார்க்க ஒரு ஸ்டில் முயற்சி செய்தேன். அது உங்கள் பார்வைக்கு!

தலைவா, உங்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணம் தலைவா!!!

முக்கிய அறிவிப்பு : தளபதியின் புதிய படத்திற்கு சிறந்த "குத்து வசனம்" (பன்ச் டயலாக்) சொல்பவர்களுக்கு 1000 பொற்காசுகள் பரிசளிக்கப்படும்.

செய்தி: http://www.kollywoodtoday.com/tag/actor-jk-ritheesh/

March 13, 2009

ஒரு பள்ளியின் மரணம்.

அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

சேலம், ஈரோடு சுற்றுவட்டாரங்களில் இந்த பெயர் ரொம்பவே பிரபலம். எடப்பாடி அருகே மொரசப்பட்டியில் இருக்கிறது இந்த பள்ளி.  மாநில அளவில் மதிப்பெண், 2000 மாணவர்கள், அவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவே 24 பள்ளி பேருந்துகள், திரைப்பட இயக்குனரை வைத்து நடத்தப்படும் ஆண்டுவிழாக்கள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த இந்த பள்ளி இன்று சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு பணம் இல்லாததால் மூடிக்கிடக்கிறது. ஆரம்ப காலத்தில் கீற்றுக் கொட்டகைகளில் தான் வகுப்பறைகள். மாணவர்களை அழைத்து வர ஒரே ஒரு ஆட்டோ தான் இருக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஐந்தாவதில் இருந்து பத்தாவது பின்பு பன்னிரெண்டு என்று வளர்ந்தது. ஆனால் வெகு காலமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கியே பள்ளியை நடத்தி வந்திருக்கிறார் முதல்வர். கொஞ்ச காலத்தில் கடன் கையை மீறியது. அதே சமயத்தில் நிர்வாகத்தில் செய்த சில மாற்றங்களால் ரிசல்ட்டும் மந்தமாகத் தொடங்கியது. போதாக்குறைக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேறு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நிலைமை கை மீறியதில் பள்ளி இழுத்து மூடப்பட்டது. யார் யாரோ பெரிய தலைகள் எல்லாம் இந்த பள்ளியை வாங்கவிருப்பதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் கதவுகள் என்னவோ இன்னும் திறக்கப்படவேயில்லை.  நிறைய பேரின் வாழ்க்கையில் வசந்தங்களை விதைத்துவிட்டு இன்று ஒரு மரணத்தின் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன கட்டிடங்கள்.


இப்போது... 

பள்ளியைக் கடந்து செல்லும்போதெல்லாம்,ஒரு கனத்த மௌனம் வந்து ஆக்கிரமிக்கும். அதே சமயம் மனம் மட்டும் கலவையான நினைவுகளில் மூழ்க ஆரம்பிக்கும். அங்கு படித்த இனிமையான இரண்டு வருடங்கள்,   ராஜம்மாள், ஜாக்லைன் என்று இரு கண்டிப்பான தலைமையாசிரியைகள், "ஸ்டடி ஹவர்" என்ற பேரில் அடித்த அரட்டைகள், அருமையாக ஆங்கிலம் பேசிய ராஜலிங்கம் சார், லைலா போலவே இருந்த கீழ்வகுப்பு கணக்கு டீச்சர், பள்ளி வளாகத்தில் துள்ளித் திரிந்த பதின் வயது பட்டாம்பூச்சிகள், பக்கத்துக் காடுகளில் எல்லாம் சுற்றி சேகரித்த ஹெர்பேரியம், வாட்ச்மேனை டபாய்த்துவிட்டு பள்ளி அருகில் உள்ள ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த பரோட்டா, பக்கத்து கோயில்களில் திருவிழாவின்போது ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் இப்படி ஏதேதோ! 

March 12, 2009

தேர்தலுக்கு நேரம் சரியில்லை..????

லோக்சபா தேர்தல் ஏப்ரல் மாதம் தொடங்குகிறது. ஆனால் அது சரியான நேரம் இல்லை என்றும் நட்சத்திரங்களும், வானிலையும் கூடி வராத காலத்தில் தேர்தலை திட்டமிட்டுள்ளதால், தேர்தலுக்கு முன்பு பெரும் குழப்பங்களும் வன்முறையும் மூளும் என பீதியைக் கிளப்பியுள்ளனர் ஜோதிடர்கள் (நல்லா கெளப்புறாங்கய்யா பீதிய!). 

ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஜோதிடர் ஜெகன்னாத் மிஸ்ரா கூறுகையில், இந்திய அரசியலமைப்புக்கு இந்த தேர்தல் நல்லதல்ல. அரசியல் கிரிமினல்களின் கூடாரமாகி விட்டது. (தெரிஞ்சது தானே?) வரும் காலம் நல்லதாக இருக்காது என்பதே எனது கணிப்பு என்கிறார்.

தேர்தலுக்கு முன்பு தீவிரவாதத் தாக்குதல்கள் நடைபெறும் வன்முறைகள் மூளும் என்கிறார் மிஸ்ரா. (உளவுத்துறையில இருந்து உங்களுக்கு தகவல் வந்துச்சா?)

இதுமட்டுமல்லாமல் தேர்தல் முடிந்த பின்னர், பூகம்பம், கடல் கொந்தளிப்புகள், புயல்கள் போன்ற இயற்கை சீற்றங்களும் ஏற்படுமாம். ஏன் மினி சுனாமிகள் கூட வரலாமாம். இதனால் உயிருக்கும், பொருளுக்கும் பேரிழப்பு ஏற்படும் எனவும் ஜோதிடர்கள் பயமுறுத்துகிறார்கள் (நல்ல விஷயமா எதுவும் சொல்லுங்கய்யா!).

அசோக் சனோரியா என்பவர் கூறுகையில், அடுத்த பிரதமர் நிச்சயம் ஒரு பெண்தான். அதிலும் ஜெயலலிதாவின் ஜாதகம் மிகவும் வலுவாக உள்ளது, எனவே அவருக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன என்கிறார் (அதனாலதான் நேரம் சரியில்லனு சொல்றீங்களா? புரிஞ்சுடுச்சுயா புரிஞ்சுடுச்சு). 

ஹ்ம்ம்ம்ம்ம்,,, எவ்வளவோ கேட்டுட்டோம். இதக் கேட்க மாட்டோமா? 

நன்றி : தட்ஸ்தமிழ்

கிளியூர் அருவி - ஒரு புகைப்படப்பதிவு!!!

ஏற்கெனவே ஏற்காடு பற்றி பதிவிட்டிருந்தாலும், கிளியூர் அருவி பற்றி தனியாக புகைப்படப்பதிவு ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாளைய விருப்பம்.  அதனால் இந்த பதிவு. 

**************

கிளியூர் அருவி சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது.  சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பொதுவாக பருவமழைக்கு பிறகே (ஜூலை முதல் நவம்பர் வரை) அருவியில் நல்ல  நீர்வரத்து இருக்கிறது. மற்ற சமயங்களில் வறண்டே காணப்படுகிறது. 

எப்படி போவது?  

ஏற்காடு ஏரி அருகே ஒரு வழி பிரிகிறது. 

அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ வரை வாகனங்களில் செல்லலாம். நடந்து செல்ல விரும்புவர்கள், வரும் வழியில் இருக்கும் காஃபி தோட்டங்கள் வழியாக 
காலாற நடந்து வரலாம் (திரும்பி வருவது சிரமம்).

அங்கிருந்து அருவி வரை நடராஜா சர்வீஸ் தான். 

சிறிது தூரம் வந்த பிறகு ஒரு சிறிய உணவகம் இருக்கிறது (பெயர் ஏதோ "கார்த்திக்" என்று நினைவு!). 

அங்கிருந்து ஒற்றையடிப்பாதை ஆரம்பிக்கிறது. 

இந்த வழியாக இறங்க ஆரம்பித்தால், இப்படி ஒரு இடம் வருகிறது.

இந்த இடத்தில் கொஞ்சம் வழுக்கும். அப்புறம்.. 

கொஞ்ச நேரத்தில் இந்த மாதிரி சரிவு ஆரம்பிக்கிறது. அடுத்து... 

இந்த மாதிரி இடங்களில்,

இப்படி கவனமாக இறங்கி வந்தால்,  

இந்த இடத்தை தாண்டி, கொஞ்ச நேரத்தில்... அருவி!!! 

ஆள் நடமாட்டம் அதிகமின்றி நமக்கே நமக்கு என்று இருக்கிறது அருவி. மணிக்கணக்கில் குளிக்கலாம்.  அருவிக்கு அருகில் சில பேர் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைப்பதால் ஏகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கிடக்கின்றன.  அதனால்.. கால் பத்திரம்!

பொது நலன் கருதி குளிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தவிர்க்கப்படுகின்றன.. :) 

**************

இனி சில குறிப்புகள்:

1) மழை பெய்திருந்தால் ஒரு நாள் கழித்து போவதே உத்தமம். ஏனெனில் பாதை மிகவும் வழுக்கும். 
2) பெண்கள் மலையேற்றத்திற்கு வசதியான உடை அணிந்து செல்லவும்.
3) அண்மையில் காலில் அடிபட்டிருந்தால் போகாமல் இருப்பதே நலம்.
4) வாடகை காரில் செல்பவர்கள் சரியான வாடகையை முன்னமே பேசிவிடவும்.

சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் கிடைக்கும். குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கின்றன. இரண்டு நாள் பயணத்திற்கு அருமையான இடம் ஏற்காடு!

March 06, 2009

பொன்னியின் செல்வன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சாகசம், காதல், வஞ்சகம், மர்மம், நகைச்சுவை என்று பல அம்சங்கள் நிறைந்த இந்த புதினத்தை அனேகமாக அனைவரும் படித்து இருப்போம். அமரர் கல்கி அவர்களின் கொஞ்சும் தமிழில் மெய்மறந்திருப்போம். குந்தவை, நந்தினி ஆகியோரைப்பற்றிய வர்ணனைகளில் லயித்திருப்போம். இந்த புதினத்தை திரைப்படமாக காண வேண்டும் என்று எண்ணியிருப்போம் (பின்னே, நந்தினி போன்ற சூப்பர் ஃபிகரை திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது?). ஆனால் இதுவரை அது நடந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார், இயக்குனர் மகேந்திரன் அவர்கள் திரைக்கதை எழுதினார், மணிரத்தினம் இயக்க ஆசைப்பட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் தயாரிப்பது என்ற சிக்கலால் ஆசை அப்படியே நின்றிருக்கும். சன் பிக்சர்ஸ் பெரிய மனது செய்து மொக்கை படங்களை எல்லாம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இதைத் தயாரிக்கலாம். 
ஆனால் படம் எடுக்க ஆகும் செலவை விட சிக்கலானது பாத்திரத்தேர்வு...  ஒன்றும் இல்லை, நந்தினி பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று வீட்டில் கேட்டேன். அவ்வளவு தான். என் தாத்தா டி. ஆர். ராஜகுமாரி என்றார். நைனா மாதவி தான் என்றார். எனக்கு, ரம்யா கிருஷ்ணன் சரியாக இருந்திருப்பார் என்றேன். என் தம்பி முத்தழகு தான் சரி என்கிறான். ஒரு வீட்டுக்குள்ளேயே இவ்வளவு கற்பனைகள் இருந்தால், லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் எவ்வளவு கற்பனை வேறுபாடு இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் முயற்சிதான் இந்த பதிவு. முதலில் என் தேர்வைத் தருகிறேன்.

வல்லவரையன் வந்தியத்தேவன் : வினய்
குந்தவை நாச்சியார் : அசின் 
அருள்மொழிவர்மன் : கார்த்தி
வானதி : பூஜா
பூங்குழலி : விஜய் டி.வி ரம்யா
ஆதித்த கரிகாலன் : நரேன் 
நந்தினி - மந்தாகினி தேவி : பிரியாமணி
ஆழ்வார்க்கடியான் : பிரபு
அநிருத்தர் : டெல்லி கணேஷ்
மணிமேகலை : கார்த்திகா ("கருவாப்பயா" புகழ்)
செம்பியன் மாதேவி : மனோரமா
சுந்தர சோழர் : சிவக்குமார்
வானமாதேவி : சரண்யா
பெரிய பழுவேட்டரையர் : நெப்போலியன் 
சின்ன பழுவேட்டரையர் : பசுபதி
மதுராந்தகன் : விஷால்
சேந்தன் அமுதன் : ஜெய்
கந்தமாறன் : அஜ்மல்
பார்த்திபேந்திரன் : பிரசன்னா
குடந்தை சோதிடர் : எம்.எஸ்.பாஸ்கர்
ரவிதாசன் : அதுல் குல்கர்னி

இதில் சில பேருக்கு அவர்கள் பாத்திரங்கள் குருவி தலை பனங்காய் கதைதான். இயக்குனர் பாலாவிடம் விட்டு ட்ரில் எடுத்தால் போகிறது! 

உங்களது கற்பனைகளையும் அறியத்தரலாமே?

கொசுறு: இந்த தேர்வை நண்பர்களுடன் விவாதிக்கும்போது சத்யராஜை பெரிய பழுவேட்டரையராகவும், ஒரு சேஞ்சுக்காக கவுண்டமணியை சின்ன பழுவேட்டரையராகவும் நடிக்க வைக்கலாம் சென்று சொன்னார்கள். நந்தினியை பற்றி இருவரும் விவாதிக்கும் காட்சியை எண்ணிப்பார்த்தேன். திருமதி பழனிசாமி படத்தில் கோவை சரளாவை பற்றி இருவரும் சண்டை போடும் காட்சி ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது.

March 05, 2009

புற்றை இடித்தால் கனவில் பாம்பு வருமா?

பதிவர் வித்யா அவர்களின் பாம்பு சம்பந்தப்பட்ட இந்த இடுகையைப் பார்த்ததும் உன்மையிலேயே டரியல் ஆகிவிட்டது. சுவாரஸ்யமாக படித்துக்கொண்டு இருக்கும்போது பாம்பு படத்தை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.
இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இறுதி ஆண்டு படிக்கும்போது தேசிய அளவில் கருத்தரங்கு ஒன்றை நடத்த துறைத் தலைவர் அனுமதி கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். போஸ்டர் டிசைன் செய்வது, நிதி வசூலிப்பது, சுத்தம் செய்வது இப்படி நிறைய வேலைகள்.
நான் படித்தது சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில். எங்கள் கல்லூரியில் காலி இடத்திற்கு பஞ்சமே இல்லை (பெரியார் பல்கலைக்கழகம், இந்தியன் ஆயில் நிறுவனம் இவை போக ஒரு 200 ஏக்கர் தேறும்). அதனாலேயே புதர்கள் நிறைய உண்டு. அதோடு பாம்பு புற்றுகளும்... எங்கள் துறை கட்டிடம் முன்பு இருந்த வெட்டவெளியிலும் நான்கு புற்றுகள் இருந்தன. அந்த இடத்தையும் சுத்தம் செய்தாக வேண்டும். புற்று அருகில் செல்வதற்கே பயம். எங்கள் ஆசிரியர் வேறு "தூக்குங்கடா அந்த புத்த! " என்று ரம்யா கிருஷ்ணன் போல சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். வேறு வழியின்றி சூரப்புலிகள் நான்கு பேர் கையில் கடப்பாரை, மண்வெட்டிகளுடன் குல தெய்வங்களை வேண்டிக்கொண்டே களத்தில் இறங்கினோம். கடப்பாரையை புற்று மேல் இறக்கியதும் அந்த இடமே அதிர்ந்தது. அட, புற்று அவ்வளவு ஸ்ட்ராங்க். சரி, தண்ணீர் விட்டு கரைப்பது என்று பொதுக்குழு எல்லாம் கூட்டாமலேயே தீர்மானித்தோம். பைப் இழுத்து புற்றுக்குள் தண்ணீர் விட ஆரம்பித்தோம். தண்ணீர் விடுவதும் மண்வெட்டியில் வெட்டுவதுமாக புற்று கொஞ்சம் கரைந்தது. அப்போது தான் தலையை சிறிது மேலே தூக்கி பார்த்தார் நண்பர். பார்த்ததும் தெரிந்துவிட்டது நாகம் இல்லையென்று. அப்பாடா என்று இருந்தது. தலையை பார்த்ததும் கடப்பாரையை ஓங்கி ஒரு குத்து குத்தினேன். தலையை உள்ளே இழுத்துக்கொண்டது. அதற்கப்புறம் வேலை வேகமாக நடந்தது. புற்றும் சீக்கிரம் கரைய ஆரம்பித்தது. பாம்பும் தலையைத் தூக்கி பார்ப்பதும், உள்ளே இழுத்துக்கொள்வதுமாக இருந்தது. எங்களிடம் அடிபட்டு சாவதை விட தண்ணீரில் மூழ்கி செத்து தொலையலாம் என்று நினைத்தது போலும். விடுவோமா நாங்கள்? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வேலையைத் தொடர்ந்தோம்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த பாம்பு உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்தது. ஆகா.. சாரைப்பாம்பு. எப்படியும் ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும். சாரைப்பாம்பின் வேகம் அசாதாரணமானது. வெளியே வந்ததும் கிடைத்த சந்தில் ஓடப்பார்த்தது. அருகில் இருந்த ஜெயப்பிரதி, கையில் இருந்த மண்வெட்டியைத் திருப்பி அதன் தலையில் ஒரு போடு போட்டான். நானும் கோபாலும் கடப்பாரையால் ரெண்டு போட்டோம். சில வினாடிகளில் அசைவு நின்று விட்டது. உயிர் போய்விட்டதா என்று தெரியாததால் இன்னும் நாலு சாத்து சாத்தினோம். முடிந்தது அதன் கதை.
இவ்வளவு நேரம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் கிட்ட வந்து கதை பேசத் தொடங்கிவிட்டார்கள். எரிக்க வேண்டும், இல்லை.புதைத்தால் போதும் என்று (டேய்.. என்னங்கடா, நாட்டாமை படத்துல செத்துப் போன டீச்சருக்கு காரியம் பண்ற ஃபீல் கொடுக்கறீங்க? ). சரி கருமம் தொலையுது என்று எதிர்த்தாற்போல இருந்த டீக்கடையில் கொஞ்சம் பாலும் மஞ்சள் தூளும் வாங்கி, என் அழுக்கு கைக்குட்டையில் பாலை விட்டு மஞ்சள் தூளை தடவி, ஒரு ஐம்பது பைசாவை அதில் கட்டி பாம்பின் மேல் போட்டு கொள்ளிவைத்துவிட்டு எஸ்கேப்..... ஆச்சரியமாக மற்ற மூன்று புற்றுகளிலும் பாம்பே இல்லை. இவை எல்லாம் அந்த பாம்பின் கெஸ்ட் ஹவுஸ் போல...
அதற்கப்புறம் அங்கு இருந்த புதர்களையெலாம் அகற்றி சுத்தம் செய்து, மற்ற வேலைகளையெலாம் செய்து முடித்து பல்வேறு அரசியல் விளையாட்டுகளுடன் கருத்தரங்கு நடந்த கதையை சொன்னால், கல்லூரி இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்படுவேன்.

கொசுறு: எங்கள் துறையில் இருந்த ஆய்வக உதவியாளர் வேறு "இன்று உங்கள் கனவில் பாம்பு வரும்" என்று பயமுறுத்திவிட்டார். பாம்பு வந்தால் கூட பரவயில்லை. நாககன்னி கெட்டப்பில் இந்நாளைய ஸ்ரீப்ரியா வந்துவிட போகிறார் என்ற பயத்தில் தூங்கப் போனேன். நல்ல வேளையாக அன்றைய கனவில் அசின் வந்து ரட்சித்து அருளினார்!!!

March 04, 2009

அல்டாப்பு பஸ் ஸ்டாப்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான நிழற்கூடத்தைக் கட்டி உள்ளது. GPS முறையில் பேருந்துகளின் இருப்பிடம் அறியும் வசதி, சில்லறை மாற்றும் இயந்திரம், ISD வசதியுடன் கூடிய பொது தொலைபேசி, செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி, மின்விளக்குகள், இரண்டு மின்விசிறிகள், தூரத்தில் வரும் பேருந்துகளை பார்க்க Concave கண்ணாடி (குவி ஆடி தானே ?), கடிகாரம், வசதியான இருக்கைகள், வெப்பநிலை அறியும் வசதி மற்றும் இவற்றை எல்லாம் பாதுகாக்க காவலாளி என்று நிழற்கூடம் அமர்க்களப்படுகிறது. இதுபோல இன்னும் 500 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். நல்ல செய்தி.
இவை எல்லாம் கண்டிப்பாக பயணிகளுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒழுங்காக பராமரிக்க படவேண்டும், அவ்வளவு தான். முக்கியமாக மழை காலங்களில். சாதரணமாகவே அந்த இடத்தில் மழை பெய்தால் நிழற்கூடத்திற்கு பின்னால் இறக்கும் மைதானம் வரை சாரல் அடிக்கும். இப்போது இந்த இயந்திரங்கள் மேல் கண்டிப்பாக சாரல் விழும். காப்பாற்ற என்ன செய்ய போகிறார்களோ! இவ்வளவு செய்தவர்கள் இதைப் பற்றி யோசித்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
நண்பர் ஒருவர் இயந்திரத்தில் சில்லறை மாற்ற ஓரிரு முறை முயன்றிருக்கிறார். "No Stock" என்றே பதில் வந்ததாம்! இதெல்லாம் சரி செய்தால் மகிழ்ச்சி.
எப்படியோ... ஒரு நல்ல முயற்சியை நாமும் வாழ்த்துவோம்!!!

நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமே உடுக்கை அடித்துவிட்டது போல் திரியப்போகிறது. தலைவர்கள் கழகக் கண்மணிகளையும், ரத்தத்தின் ரத்தங்களையும் உணர்ச்சி பொங்கும் குரலில் கட்சிப்பணி செய்ய அழைப்பார்கள். இரண்டாம் நிலை கட்சிகள் கூட்டணி பிடிக்க அலையும். இவ்வளவு நாள் காணாமல் போன சில லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் "மக்கள் பிரச்சனைகள் தீர எங்களுக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூப்பாடு போடும். ஒருவருக்கொருவர் மற்ற கட்சியினர் மேல் புகார் சேற்றை வாரி இறைப்பார்கள். காவிரி பிரச்சனை, இட ஒதுக்கீடு பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, தேசிய பாதுகாப்பு பிரச்சனை இவற்றை எல்லாம் தீர்க்கப்போகிறோம் என்று கூசாமல் பொய் சொல்வார்கள். பிரியாணிக்குள் தங்க காசு வைத்து தருவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு ஒரு குளிர்சாதன பெட்டி தருவோம் என்று வாக்குறுதி வெளியிடுவார்கள். தேர்தல் முடிந்த பின் இவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு என்று பெருமை பேசுவார்கள். இப்படி நிறைய....
எல்லாம் சரி, வாக்காளர்கள் பாடு தான் திண்டாட்டம். ஓட்டு புதிதாக முளைத்த தன் ஜாதிக்கட்சிக்கா, மனம் கவர்ந்த நடிகன் "வாய்ஸ்" கொடுக்கும் கட்சிக்கா, கண்மூடித்தனமாக இவ்வளவு நாள் ஓட்டு போட்டுக்கொண்டிருந்த முதுபெரும் கட்சிக்கா அல்லது வாக்குப்பதிவு நாளன்று பிரியாணியும் கட்டிங்கும் கொடுத்த கட்சிக்கா என்று குழம்ப போகிறான். ஒரே கொள்கை உடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது எல்லாம் பழைய பேஷன். இப்போது பேரம் படிந்தால் கூட்டணி ரெடி. ஒரே கூட்டணியில் கொள்கை முரண் உள்ள கட்சிகள் இருக்க முடியும். போதாக்குறைக்கு ஜாதி கட்சிகள் வேறு. ஓட்டளிப்பது எல்லாம் இப்போது இடியாப்ப சிக்கல் ஆகிவிட்டது. குழப்பம் வர தானே செய்யும்?
பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்று நம்பி தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு போடுகிறோம். அந்த பிரச்சனைகளை பத்திரமாக வைத்திருந்தது அடுத்த தேர்தலுக்கு அதே பிரச்சனைகளை முன்வைத்து ஓட்டு கேட்பார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஒரே ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. "நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!"

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More