March 13, 2009

ஒரு பள்ளியின் மரணம்.

அமலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி.

சேலம், ஈரோடு சுற்றுவட்டாரங்களில் இந்த பெயர் ரொம்பவே பிரபலம். எடப்பாடி அருகே மொரசப்பட்டியில் இருக்கிறது இந்த பள்ளி.  மாநில அளவில் மதிப்பெண், 2000 மாணவர்கள், அவர்களை அழைத்து வந்து அழைத்து செல்லவே 24 பள்ளி பேருந்துகள், திரைப்பட இயக்குனரை வைத்து நடத்தப்படும் ஆண்டுவிழாக்கள் என்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த இந்த பள்ளி இன்று சம்பளம் மற்றும் நிர்வாக செலவுகளுக்கு பணம் இல்லாததால் மூடிக்கிடக்கிறது. ஆரம்ப காலத்தில் கீற்றுக் கொட்டகைகளில் தான் வகுப்பறைகள். மாணவர்களை அழைத்து வர ஒரே ஒரு ஆட்டோ தான் இருக்கும். இப்படி ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளியின் வளர்ச்சி அபரிமிதமானது. ஐந்தாவதில் இருந்து பத்தாவது பின்பு பன்னிரெண்டு என்று வளர்ந்தது. ஆனால் வெகு காலமாக அதிக வட்டிக்கு கடன் வாங்கியே பள்ளியை நடத்தி வந்திருக்கிறார் முதல்வர். கொஞ்ச காலத்தில் கடன் கையை மீறியது. அதே சமயத்தில் நிர்வாகத்தில் செய்த சில மாற்றங்களால் ரிசல்ட்டும் மந்தமாகத் தொடங்கியது. போதாக்குறைக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வேறு ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. நிலைமை கை மீறியதில் பள்ளி இழுத்து மூடப்பட்டது. யார் யாரோ பெரிய தலைகள் எல்லாம் இந்த பள்ளியை வாங்கவிருப்பதாக பேசிக்கொண்டார்கள். ஆனால் கதவுகள் என்னவோ இன்னும் திறக்கப்படவேயில்லை.  நிறைய பேரின் வாழ்க்கையில் வசந்தங்களை விதைத்துவிட்டு இன்று ஒரு மரணத்தின் சாட்சியாக மட்டுமே நின்று கொண்டிருக்கின்றன கட்டிடங்கள்.


இப்போது... 

பள்ளியைக் கடந்து செல்லும்போதெல்லாம்,ஒரு கனத்த மௌனம் வந்து ஆக்கிரமிக்கும். அதே சமயம் மனம் மட்டும் கலவையான நினைவுகளில் மூழ்க ஆரம்பிக்கும். அங்கு படித்த இனிமையான இரண்டு வருடங்கள்,   ராஜம்மாள், ஜாக்லைன் என்று இரு கண்டிப்பான தலைமையாசிரியைகள், "ஸ்டடி ஹவர்" என்ற பேரில் அடித்த அரட்டைகள், அருமையாக ஆங்கிலம் பேசிய ராஜலிங்கம் சார், லைலா போலவே இருந்த கீழ்வகுப்பு கணக்கு டீச்சர், பள்ளி வளாகத்தில் துள்ளித் திரிந்த பதின் வயது பட்டாம்பூச்சிகள், பக்கத்துக் காடுகளில் எல்லாம் சுற்றி சேகரித்த ஹெர்பேரியம், வாட்ச்மேனை டபாய்த்துவிட்டு பள்ளி அருகில் உள்ள ஹோட்டலில் சென்று சாப்பிட்டு வந்த பரோட்டா, பக்கத்து கோயில்களில் திருவிழாவின்போது ஒலிபரப்பப்பட்ட பாடல்கள் இப்படி ஏதேதோ! 

2 கருத்து:

அமலா பள்ளி ஒரு காலத்தில் எல்லோருக்குள்ளும் ஆச்சரியத்தை ஏற்படுத்திய பள்ளி.... இந்த பகுதியில் அநேகமாக பல ஊர்களுக்கு பஸ் அனுப்பி பிள்ளைகளை கவர்ந்த முதல் பள்ளியாகக் கூட இருக்கும்....

அந்த லைலா டீச்சர் ஒப்புமை சுவாரசியமானது

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More