May 24, 2009

கொலைவெறி எனப்படுவது யாதெனில்...

மைனருக்குக் கல்யாணம். மூன்று மாதங்களுக்கு முன்னாலேயே சொல்லிவிட்டார். கல்யாணம் தூத்துக்குடியில் ஒரு வெள்ளிக்கிழமை வைத்திருந்தார்கள். அதனால் கல்யாணத்துக்குப் போய்விட்டு அப்படியே மூன்று நாள் எங்காவது என்சாய் பண்ணிவிட்டு வரலாம் என்று ஏற்பாடாயிற்று. ஒரு எட்டு பேருக்கு போக வர டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டது. எங்கெல்லாம் சுற்றலாம் என்று ஒரு டீம் ஆராய்ந்தது. அப்புறம் நிறைய நாள் இருந்ததாலோ என்னவோ ட்ரிப்பைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவில்லை. பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று டீலில் விட்டாயிற்று. 

எல்லாம் சுமூகமாகப் போய்க் கொண்டிருந்தது கார்த்திக் ஆரம்பிக்கும் வரை. ஒரு நாள் லன்ச் பிரேக்கில் தான் சொன்னான். "மச்சி ஒரு பத்து நாள் ஆஸ்திரேலியா போக வேண்டி வரும்டா!"
"டேய். என்னடா சொல்ற? ட்ரிப்புக்கு இன்னும் 15 நாள் தான் இருக்கு!" முத்து கேட்டான்.
"Don't Wrorry மச்சி. கண்டிப்பா நான் அதுக்குள்ள வந்துடுவேன்" - அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தான் கார்த்திக். ஆனால் அப்போதே தெரிந்தது தலைவர் வர மாட்டார் என்று. 

ரெண்டு நாள் கழித்து எலிசபெத் ஃபோன் செய்தார்கள்.  "மகேஷ், நான் லிஸ் (பேர ஷார்ட் பண்றாங்களாம்) பேசுறேன்." 
"சொல்லுங்க எலி"
"டேய், இந்த மந்த் நெறய லீவ் எடுத்துட்டேன்.. அதனால 22nd லீவ் கெடைக்காதுன்னு நெனைக்கிறேன். சாரிடா."  என்ன சொல்வதென தெரியாமல் "சரி விடுங்க எலி" என்று சொல்லி வைத்தேன். 

சரியாக கிளம்புவதற்கு ஒரு வாரம் முன்னால் சிவா கூப்பிட்டான்.  "மகேஷ்,,, சிவா"
"ம். சொல்லு சிவா!"
"எனக்கு ஒடம்பு சரியில்லடா. ஊருக்குப் போய்ட்டு இருக்கேன். கல்யாணத்துக்கு வரமுடியுமான்னு தெரியல." 
"பரவாயில்ல சிவா. ஒடம்ப பார்த்துக்க." எல்லோரும் பிச்சுக்குவாங்களோ என்று லேசாக பயம் வர ஆரம்பித்தது. 

இருப்பவர்களையாவது கன்ஃபார்ம் செய்யணும் என்று நினைத்துகொண்டே ஸ்டாலினுக்கு ஃபோன் போட்டேன். "டேய் ஸ்டாலின். லீவ் கேட்டாச்சா"
"எதுக்குடா லீவ் ?" நிலைமயைப் புரிந்து கொள்ளாமல் கேட்டான் என் நண்பன். 
"%(#@?^&, கல்யாணத்துக்குடா. கல்யாணம் வர வெள்ளிக்கிழமை. "
"ஓ. நான் மறந்தே போயிட்டேன். இன்னிக்கு லீட் லீவ்ல இருக்காரு, மன்டே கேக்குறேன்டா."

குருவுக்கும் முத்துவுக்கும் ஏற்கெனவே லீவ் கிடைத்திருந்தது தெரியும். யுவராஜ் "டேய் கவலையே படாத. லீவ் கெடச்சாச்சுன்னு வச்சுக்க." என்று பாலை வார்த்தான்.

கிளம்புவதற்கு முதல் நாள், முத்து என் கேபினுக்கு வந்தான். "மச்சி, அம்மாக்கு ஒடம்பு சரியில்ல. அப்பா வேற ஊர்ல இல்ல.நான் இங்கயே இருக்கணும்டா!"
"டேய், நீயுமாடா?, யாருமே இல்லனா ட்ரிப் நல்லா இருக்காதுடா." 
"அதான் யுவா இருக்கான்ல. போய்ட்டு வாங்க" என்று சொல்லிவிட்டு நடையைக் கட்டினான்.

சுத்தம்! நாலு பேர வச்சுக்கிட்டு என்ன பண்றது என்று நினைத்துக்கொண்டே, ஸ்டாலினை திரும்ப அழைத்தேன்.  "மச்சி, நாளை காலைல சொல்றேன்டா" என்றான்.   
"ஹ்ம்ம்ம்ம்" அரைமனதாக தொடர்பைத் துண்டித்தேன்.

அடுத்த நாள் வியாழக்கிழமை. இரவு எட்டு மணிக்கு தாம்பரத்தில் ட்ரெய்ன். அவனவன் ஆஃபீசில் இருந்து ரயில் நிலையத்திற்கு வந்துவிடுவதாக ஏற்பாடு.  

காலை பதினோரு மணி இருக்கும். ஸ்டாலினிடமிருந்து ஃபோன் வந்தது. "மச்சி, சாரிடா."
"டேய், வரலன்னு மட்டும் சொல்லிடாதடா!" கெஞ்சினேன் நான்.
"இல்ல மச்சி, லீவ் இல்லனு சொல்லிட்டாங்கடா. Production Support டீம்ல நான் மட்டும் தான் இருக்கேன். அதனால் முடியாதுன்னு சொல்லிட்டாங்க"
"போடா ^(!+$%&" கட் செய்தேன். 

மூன்று மணி.
"சரித்திரத்த ஒரு நிமிஷம் பாருங்க"  பில்லா பட தீம் மியூசிக் ரிங் டோனாய் அலறியது. அழைத்தது யுவராஜ்!
"மாப்பி, டீம்ல ஆடிட் இருக்குதுடா" என்றான்.
"என்னடா ஆடுது" என்று கேட்டேன் நான் நேரம் தெரியாமல். 
"டேய், எங்க டீமுக்கு நாளைக்கு ஆடிட்."
"சோ?"
"சோ, நான் இருக்கணும்"
என்னடா இப்படி பண்ணிட்ட என்ற என் கேள்விக்கு ஏதேதோ விளக்க்ம் சொன்னான்.

குருவும் நானும் தான். அவன் அப்படியே தாம்பரம் வந்துவிடுவான். ஆறரை மணிக்கு நானும் கிளம்பிவிட்டேன். ஏழரை மணிக்கு ஸ்டேஷனை அடைந்தேன் எனக்கு அங்கு ஏழரை காத்திருப்பது தெரியாமல்.  போனவுடன் குருவை கூப்பிட்டேன். கட் செய்தான். ஐந்து நிமிடம் கழித்து மெஸேஜ் வந்தது. "In Meetin da. Gt bak 2 u ltr. U carry On" 

இருந்த ஒரே நம்பிக்கையும் போய்விட்டது. இப்போது நான் தனியாக தூத்துக்குடி வரை போய்விட்டு அன்றைக்கே திரும்ப வேண்டும். ட்ரெய்ன் வேறு வந்துவிட்டது. அரை நிமிடம் யோசித்தேன். 

ஃபோனை எடுத்து டயல் செய்தேன். "மைனர், நான் மகேஷ்"
"சொல்றா"
"ஒரு Severe Production Issue, நான் இருந்தே ஆகணும்"
"()*&^$%())_( )_*)*&*&0-)_()**^^&%   #)$)$" மைனர் அர்ச்சிக்க ஆரம்பித்தபோது ட்ரெய்ன் என்னை விட்டுவிட்டு போய்க் கொண்டிருந்த்தது.

பின்குறிப்பு : ஆஸ்திரேலியாவிலிருந்து வந்தவுடன் எல்லாம் ஊட்டி போய்ட்டு வரலாமா என்று நேற்று கார்த்திக் கேட்டான். (தலைவர் இன்னும் வரவில்லை)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More