November 04, 2009

ஊட்டி மலை ப்யூட்டி.

சோம்பலான ஒரு வியாழக்கிழமை மதியம். கேஃப்டீரியாவில் உட்கார்ந்து கொண்டு அலுவலக அப்சரஸ்களை சுவாரஸ்யமின்றி பார்த்துக் கொண்டிருக்கையில் ரகு கேட்டான் "மச்சி, ஊட்டி ட்ரிப் போலாமா?" 
"ஊட்டி போர்டா, எத்தனை வாட்டி பார்க்கிறது?" தலையைத் திருப்பாமல் பதில் சொன்னான் சரவணன். 
"இல்ல மச்சி, நார்மலா பார்க்கிற இடம் வேண்டாம், காட்டுக்குள்ள போலாம், ட்ரெக் மாதிரி...  முக்குர்த்தி பார்க், வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட், போர்த்திமண்ட் அணை... இப்படி வித்தியாசமா இருக்கும்."


இப்படித் தான் தொடங்கியது எங்கள் சரித்திரப் புகழ் பெற்ற பயணம். பத்து பேர் போவது என்று முடிவாகி, டிக்கெட், தங்குமிடம் ஆகியவை ரிசர்வ் செய்யப்பட்டன. 


மங்களகரமான ஒரு சனிக்கிழமை காலை மேட்டுப்பாளையத்தை அடைந்தோம். அங்கிருந்து ஊட்டிக்கு அந்த பொம்மை ரயிலில் போவது என ஏற்பாடு. உட‌ன் பயணம் செய்த‌வ‌ர்க‌ள் பாவ‌ப்ப‌ட்ட‌வ‌ர்கள். ரயிலில் ஏறி உட்கார்ந்த‌வுட‌ன் ஆர‌ம்பித்த‌து எங்க‌ள் க‌ச்சேரி.  பாடுகிறோம் என்ற‌ பெய‌ரில் ஹை டெசிபலில் கத்தி அவ‌ர்க‌ளை வெறுப்பேற்றிக்கொண்டிருந்தோம். ஊட்டியில் இறங்கிய அவர்கள் ஒரு வித விரோதப் பார்வையுடனே விலகிச் சென்றார்கள்.

ஊட்டியில் ந‌வ‌ம்ப‌ர் மாத‌க் குளிர், வாவ்..... மறுநாள் தான் காட்டுக்குள் போவதற்கு அனுமதி வாங்கியிருந்தோம் என்பதாலும், சனிக்கிழமை வேறு எங்கும் போக நேரம் இல்லாததாலும் பைக்காரா, நைன்த் மைல், பைன் காடுகள் ஆகியவை பார்ப்பது என முடிவானது. "நாட்டாமை ப‌ட‌த்தில், கொட்ட‌ பாக்கு பாட‌லில் குஷ்பூ ஓடி வ‌ரும் புண்ணிய‌ஸ்த‌லம் இது" என்று நைன்த் மைலை அறிமுக‌ப் ப‌டுத்தினார் ட்ரைவ‌ர் (வாழ்க!). இது ரோஜா கிளைமாக்சில் அர்விந்த்சாமி வரும் இடம், இது ஷாருக் ஒரு படத்தில் கோல்ஃப் விளையாடும் இடம், இது சூப்பர்ஸ்டார் வாலிபால் ஆடிய இடம் என வழியெங்கும் சினிமா புராணம். 

அடுத்த நாள் காலை ஏழு மணிக்கே மூட்டை முடிச்சுக்களைக் கட்டிக் கொண்டு புறப்பட்டோம் காட்டுக்கு. ஜீப் ஒன்று ரெடியாக இருந்தது. கூட வந்த கைடு ஊட்டி பற்றியும், தோடர்களைப் பற்றியும் நிறைய சொன்னார். வழியில் தோடர் இனத்தைச் சார்ந்த ஒருவரைச் சந்தித்தோம். எங்கோ அவசரமாய் சென்று கொண்டிருந்தவரை கொஞ்சம் போர் பண்ணிவிட்டு மேலே தொடர்ந்தோம். இன்னும் கொஞ்சம் காட்டுக்குள் போனதும் சிம்பன்ஸி குரங்குகள் தென்பட்டன. உள்ளே செல்லச் செல்ல அருமையான வியூ. உங்களிடம் கொஞ்சம் நல்ல கேமராவும், நிறைய கிரியேட்டிவியும் இருந்தால் சரியான தீனி.

ஜீப் சுமார் இருபது கி.மீக்களை விழுங்கியிருந்தது. முதலில் சென்றது பார்சன்ஸ் பள்ளத்தாக்கு அணை. இது முக்குர்த்தி பீக்குக்கு அருகில் உள்ளது. ஆளரவம் ஏதுமின்றி தண்ணீரின் சலசலப்பும், பறவைகளின் சத்தமும் கொஞ்சம் குளிருமாக ரம்மியமாக இருந்தது அணை. உண்மையில் ரோஜா கிளைமாக்ஸ் இங்கு தான் எடுக்கப்பட்டது என்றார் ட்ரைவர்!
"அப்ப நேத்து சொன்னது?"
"அப்படித்தான் சொல்வோம் டூரிஸ்ட் கிட்ட" - வாரினார்.
அணையில் நடந்து அக்கரைக்குச் சென்ற‌போது ஜீப் சுற்றிக்கொண்டு வந்திருந்தது.

இன்னும் கொஞ்ச தூரம் பயணித்ததில் முக்குர்த்தி தேசிய பூங்கா செக்போஸ்ட்டுக்கு அருகில் வந்திருந்தோம். நேராக செக்போஸ்ட் போகாமல் போர்த்திமந்த் அணைக்கு விடப்பட்டது வண்டி. மந்து என்பது தோடர்களின் வாழ்விடம். காலனி மாதிரி. போர்த்திமந்து என்பது ஒரு காலனியின் பெயர்.

அங்கிருந்து செக்போஸ்ட் வரை ஜீப்பில் பயணம். அதன்பின் நடராஜா சர்வீஸ் தான். ட்ரெக் என்றவுடன், கரடுமுரடான காட்டுப் பாதை என்றெல்லாம் நினைத்துக்கொள்ள வேண்டாம். ஓரளவுக்கு நல்ல பாதை தான். காட்டுக்குள் ஒரு எட்டு கி.மீ நடக்க வேண்டும் அவ்வளவுதான். பாதி தூர‌ம் ந‌ட‌ந்து வ‌ந்த‌வுடன் முன்ன‌ர் பார்த்த போர்த்தி அணையை மேலிருந்து பார்க்க‌ முடிந்த‌து. 

அருமையான வ்யூ. அங்கிருந்த ஒரு பூவைக்காட்டி "குறிஞ்சிப் பூ" என்றார் கைடு. பார்க்க அப்படித்தான் தெரிந்தாலும் நம்பத் தயக்கமாக இருந்தது. (அர்விந்த்சாமி மேட்டர்?)


இன்னும் கொஞ்ச தூரம் மலையேறினால் புல்வெளிப் பிரதேசம் ஆரம்பிக்கிறது. வின்டோஸ் வால்பேப்பரில் இருக்குமே ஒரு மலை? இரண்டு கி.மீ தூரத்துக்கு அதே மாதிரி இருந்தால் எப்படி இருக்கும்? 

காட்டுத்தீயைத் தடுக்க தீக்கோடுகள் என்று ஒன்றைப் போட்டு வைத்திருக்கிறார்கள். மலை மேல் பாதை போட்டது மாதிரி வெட்டியிருக்கிறார்கள். எந்தப் பக்கம் இருந்து தீ வந்தாலும் அந்தப் பிளவுடன் நின்றுவிடும். 

வழியில் வரையாடுகள், மான்கள் தென்பட்டன. கேமராவைக் கையில் எடுக்கும் முன் விர்ர்ர்ர்ர்ர்ர்.....குவியல் குவியலாக யானை சாணங்கள் இருந்தன. யானைப் பாதம், புலி தோண்டிய பள்ளம் என்று என்னென்னவோ காட்டினார். கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்.....

மேலும் கொஞ்சம் நடந்து வெஸ்டர்ன் கேட்ச்மெண்ட்டை அடைந்தோம். 

இது கொஞ்சம் வில்லங்கமான இடம். தமிழகத்தின் தண்ணீரை சேகரித்து கேரளாவுக்குள் போக விடாமல் தமிழகத்துக்குள்ளேயே திருப்பிவிடுகிறார்களாம். (தெரிஞ்சவங்க கன்ஃபார்ம் பண்ணுங்க ப்ளீஸ்). கொண்டு வந்த பழங்களை சாப்பிட்டுவிட்டு சிறிது இளைப்பாறி விட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தோம். மீண்டும் ஒரு எட்டு கி.மீ.


செக்போஸ்ட் அருகில் வரும்போது வன இலாக்கா அலுவலர்கள் இரண்டு பேர் எதிரில் வந்து கொண்டிருந்தார்கள். "சீக்கிரம் போய்டுங்க, ஒத்த யானை சுத்திகிட்டிருக்கு" (அடப்பாவிங்களா!). அங்கிருந்து கிளம்பிய வண்டி நேரே மேட்டுப்பாளையத்தில் தான் வந்து நின்றது. :)


ஒரே ஒரு நாள் தான் என்றாலும் முழுக்க முழுக்க இயற்கையோடு உலவியது நல்ல அனுபவமாக இருந்தது.


வித்தியாசமான அனுபவம் வேண்டுபவர்கள், நடக்க விரும்புவர்கள், ஃபோட்டோகிராஃபியில் ஆர்வமுள்ளவர்கள் நிச்சயம் பார்க்கவேண்டிய இடம் இந்தக் காடு. Have Fun! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More