October 15, 2009

டயானா, ஆதித்த கரிகாலன், ரூஸ்வெல்ட், தாஜ்மகால்...

சர்ச்சை.. தொன்று தொட்டு வரும் மனிதனின் பொழுதுபோக்கு. சுவாரஸ்யமான பொழுதுபோக்கு. திரு முத்துவேலரின் சிலையைப் பேருந்து நிலையத்தில் வைக்கலாமா வேண்டாமா என்று சர்ச்சை செய்வதில் யாதொரு சுவாரஸ்யமும் இருக்கப் போவதில்லை. ஆனால் வரலாற்றில் நடந்து முடிந்த அல்லது இப்போது நடந்து கொண்டிருக்கும் ஒரு முக்கியமான விஷயத்தின் பின்னால் உள்ள சதிச்செயல் (Conspiracy) பற்றிய சர்ச்சை மிகவும் சுவாரஸ்யமானது.

உதாரணத்துக்கு, தாஜ்மகாலைப் பற்றி ஒரு மின்னஞ்சல் வந்தது. அது மும்தாஜ் கல்லறை இல்லை. உண்மையில் அது ஒரு சிவன் கோவில். அது ஆக்கிரமிக்கப்பட்டு பின்பு கல்லறையாக்கப்பட்டது என படங்கள், விளக்கங்களுடன் இருந்தது அந்த மின்னஞ்சல் இருந்தது. இப்படியும் இருக்கலாமோ என்று நம்பும் அளவுக்கு இருந்தது அந்த விளக்கங்கள். அது தான். Conspiracy Theory களின் அழகு. ஆனால் வரலாற்றில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய தியரிகள் தான் அதிகம்.

செப்டம்பட் 11 - இரட்டைக் கோபுரத் தாக்குதல்.


இந்த கோர நிகழ்வுக்குப் பின் ஏகப்பட்ட தியரிகள் உள்ளன. அவற்றில் ஒன்று, இந்தத் தாக்குதலுகுக் காரணமே அமெரிக்க இராணுவம் என்பது. அவர்களின் படைபலத்தை அதிகரிப்பதற்காக, மக்களின் ஆதரவைப் பெற அமெரிக்காவே திட்டமிட்டு நடத்திய சதி என்கிறது இந்த தியரி. இதனை வைத்து நிறைய புத்தகங்கள், படங்கள் வெளியாகியுள்ளன.

பியர் ஹார்பர் தாக்குதல்.

இதுவும் அமெரிக்காவின் கவனத்துக்குட்பட்டே நடந்தது என்கிறது ஒரு தியரி. அதாவது ஜப்பான் ராணுவச் செய்திகள் டீ-கோட் செய்யப்பட்டு இந்த தகவல் பிரிட்டன் இராணுவத்தால் அமெரிக்காவிற்கு அளிக்கப்பட்டது. ஆனால் போரில் ஈடுபடுவதற்காக, அப்போதைய ஜனாதிபதி ரூஸ்வெல்ட் தெரிந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருந்தாராம். அதன் பிறகு தான் அமெரிக்கா போர் பிரகடனம் செய்தது.

அதிபர் ஜான் கென்னடி மரணம்.

1963 ல் நவம்பர் மாத வெள்ளிக்கிழமை ஒன்றில் ஜான் கென்னடி சுட்டுக்கொல்லப்பட்டர். திறந்தவெளி கார் (?) ஒன்றில் அவர் மனைவியுடன் பயணம் செய்துகொண்டிருந்த போது சுடப்பட்டார். இந்தக் கொலைக்குக் காரணம் சி.ஐ.ஏ வில் ஆரம்பித்து, ரிச்சர்ட் நிக்சன்(வாட்டர் கேட் ஊழல்), ஃபிடல் கேஸ்ட்ரோ, ஜார்ஜ் புஷ் (சீனியர்) ஆகியோர் என்று யார் யாரையோ கைகாட்டும் இந்த தியரி.

இது மட்டும் இல்லாமல் ஆம்ஸ்ட்ராங்கின் நிலவுப் பயணம் பொய், 1947 ல் கிடைத்த பறக்கும் தட்டின் மிச்சம் (அமெரிக்கா இதை ஏதோ ஒரு ஆராய்ச்சியில் விபத்திற்குள்ளான பலூன் என்கிறது), டயானா மரணத்தின் பிண்ணனி, மடோனா கொல்லப்பட்டார் என ஏகப்பட்ட தியரிகள் உலகம் முழுக்கக் கொட்டிக்கிடக்கின்றன. நிறைய தியரிகள் உண்மை என நிரூபிக்கப்பட்டன. நிறைய தியரிகள் பலம் பொருந்திய நாடுகளால் மூடிமறைக்கப்பட்டன.

டான் பிரௌன் ஒன்று கிளப்பிவிட்டாரே, ஏசு நாதருக்கு கல்யாணம் ஆகி குழந்தை பிறந்தது. அதன் வம்சாவளி இன்றும் இருக்கிறது என...

இந்தியாவிலும் சில இருக்கின்றன. "நேரு குடும்பம் தொன்று தொட்டு முஸ்லீம் குடும்பம். நேருவின் தந்தையார் ஒரு இங்கிலாந்து சீமாட்டியை ஏமாற்றி பணம் பறித்தார்" இந்த மாதிரி.

ஆதித்த கரிகாலனைக் கொல்வித்தது செம்பியன் மாதேவியா, குந்தவையா அல்லது பாண்டிய ஆபத்துதவிகளா என இன்றும் நாம் மண்டையை பிய்த்துக்கொள்கிறோம் அல்லவா?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More