October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை"


திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.

இனி கதை...

கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.


குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.

இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். 


பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார். 


ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை "இராஜராஜீச்சுரம் கொண்ட" என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.


பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும். ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த "அது" இந்த நாவலில் இல்லை :)


குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More