June 09, 2010

கூத்து

                              

எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டிவிட்டார்கள். பண்டிகைக்கு ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.  பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தெருக்கூத்து இல்லாமல் எந்த கோவில் விழாவும் நடந்ததில்லை.  கூத்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அதிலும் பாட்டிகள் கூத்து பார்ப்பது அலாதியானது!  கூத்து ஆடபோகிறார்கள் என்றாலே பாட்டிகளுக்கு குஷி பிறந்துவிடும். எந்த ஊர் பார்ட்டி, என்ன கதை ஆடப்போகிறார்கள் என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மாலையில் சீக்கிரமே வேலைகளை முடித்துவிட்டு கூத்து பார்க்க போவதற்கு ஜமா சேர்ப்பார்கள். கூத்தாடுபவர்களை பார்த்துவிட்டால், இவரிவர் இன்னின்ன வேஷம் கட்டபோகிறார்கள் என்று யூகிப்பார்கள்.

கூத்து, பொதுவாக வெட்டவெளியில், ஏதாவது அறுவடை முடிந்த வயலில் தான் நடக்கும். ஒரு கபடி கோர்ட் மாதிரி போட்டு ஒரு பாதியை படுதா ஏதாவது வைத்து சுற்றி மறைத்து விடுவார்கள். இது வேஷம் கட்டுவற்கு. (நிறைய பேர் இந்த படுதாவை சுற்றி நின்று கொண்டு உள்ளுக்குள் வேடிக்கை பார்ப்பார்கள். அது எதற்கு என்று ஊகித்துக்கொள்ளுங்கள் :).. ). இன்னொரு பகுதி கூத்து ஆடுவதற்கு! இந்த பகுதியை சுற்றிலும் முதல் வரிசையில் இடம்பிடிக்க பாட்டிகள் மத்தியில் பலத்த போட்டி நடக்கும். அமருவதற்கு பாய் அல்லது கோணிப்பை, ஒரு போர்வை சகிதமாக கூத்து ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே வந்துவிடுவார்கள். இடம் பிடிக்க வேண்டுமே! தாத்தாகளை டபாய்த்துவிட்டு லேட்டாக வரும் பாட்டிகளுக்கு முன் வரிசை இடம் கிடப்பதில்லை. கடை போடும் பாட்டிகள் மட்டும் முன் வரிசையை விரும்புவதில்லை. சற்று தள்ளி, கூத்து பார்ப்பதற்கு ஏதுவாக தங்கள் கடையை போட்டுவிடுவார்கள். ஒரு கட்டிலில் கோணிப்பையை விரித்து, வெற்றிலை, முறுக்கு, பீடி-சிகரெட், பாக்கு வகையறாக்கள் என்று இரவு நேரத்தை தூங்காமல் கழிக்க உதவும் பொருட்களாக விற்பார்கள்.

கூத்து ஆரம்பித்தவுடன் எல்லா பாட்டிகளும் அமைதியாகிவிடுவார்கள். முதலில் வரும் கோமாளியுடன் மட்டும் பாட்டிகள் எளிதில் பழகி விடுவார்கள். கோமாளியுடன் ஏதாவது பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில நேரம் கோபம் வந்தால், கோமாளியை அடித்துவிடும் பாட்டிகள் கூட உண்டு. (தூங்கிகொண்டிருந்த என்னை தூக்கிக்கொண்டு போய் வேஷம் போட்டுவிட முயன்ற போது, என் பாட்டி, தான் வைத்திருந்த கோலால் கோமாளியை அடித்திருக்கிறார்). ஏதாவது சண்டை நடக்கும் கட்டம் வந்தால் சில பாட்டிகள் கதாநாயகனை உற்சாகப்படுத்துவார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்று நடிகர்களுடன் வாக்குவாதம் செய்யும் பாட்டிகளும் உண்டு. பொதுவாகவே எல்லோரும் தூங்காமல் கூத்தை கண்டுகளிப்பார்கள். சில பாட்டிகளுக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கத்தை அடக்க முடியாது. அவர்களை எழுப்புவதற்காகவே, முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். கூத்து முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் பாட்டிகள் இருந்து பார்த்துவிட்டு வருவார்கள். தவசி நாடகம் என்று பாட்டிகளால் அன்போடு அழைக்கப்படும் "அர்ஜுனன் தபசு" என்ற நாடகம் அவ்வப்போது நடக்கும். இதில், மரத்தில் ஏறிக்கொள்ளும் நடிகர் (அர்ஜுனன்) விடிந்து எவ்வளவு நேரம் ஆனாலும், கழுகு கண்ணில் தென்படும் வரை இறங்கமாட்டார். கதை அப்படி! அவர் இறங்கும் வரை காத்திருந்து பார்த்து, கூத்தை சிறப்பித்துவிட்டு வருவார்கள்.

ஒரு நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை அவர்களுக்கு. பாட்டிகளுக்கு பொதுவாக இரண்டு விஷயங்கள் பிடிக்காது.

1) வழக்கமாக பெண் வேடமிடும் நடிகர், அவசரத்துக்கு ஆண் பாத்திரத்திற்கு வேடமிட்டால் பிடிப்பதில்லை.
2) பெண் வேடத்திற்கு "பணம் குத்தும்" தங்கள் வீட்டு தாத்தாக்களை சுத்தமாக பிடிப்பதில்லை.

இப்போது சுயத்தைத் தொலைத்த கிராமங்களில் நமீதாக்களும், ஸ்ரேயாக்களுமே ஊர்த்திருவிழாவில் இடம்பெறுவதால் பாட்டிகளால் கூத்து பார்க்க முடிவதில்லை. அது ஒரு ஏக்கமாகவே இருக்கிறது அவர்களுக்கு.  :(


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More