March 11, 2010

ஈ.எஸ்.பி

                                             

ஏதாவது ஒரு ரெஸ்டரண்டில் நண்பனுடன் அம‌ர்ந்திருப்பீர்க‌ள். லேவண்டர் கலர் சுடிதாரணிந்த சொர்க்கம் ஒன்று புன்னகைத்தபடி உங்கள் இருக்கையைக் கடந்து போகும். "அட, இது மாதிரி ஏற்கெனவே நடந்த மாதிரி இருக்கே" என வியப்பீர்கள். அல்லது "இந்த மாதிரி நடக்கும் என ஏற்கெனவே எனக்குத் தோன்றியிருக்கிறது" என சந்தோஷப்படுவீர்கள். உங்கள் நண்பர் கூட "ஒருவேளை உனக்கு ஈ.எஸ்.பி (Extrasensory perception) இருக்கும்" என உற்சாகப்படுத்துவது போல கலாய்த்திருப்பார். இது மாதிரி நடப்பதற்குக் காரணம் நம் மூளை ஒரே காட்சியை இரண்டு முறை பெறுவது தானாம். வழக்கமாக, ஒரு காட்சியை இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் மூளைக்கு அனுப்புகின்றன.இரு கண்களுக்குமிடையே Co-Ordination இல்லாத சில நேரங்களில், அனுப்பப்படும் இரு காட்சிகளுக்கிடையே மில்லி செகண்ட்கள் வித்தியாசம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த சுடிதார் சொர்க்கம் ஒரு கண் மூலமாக ஏற்கெனவே மூளைக்குச் சென்று பதிவாகியிருக்கும். சில மில்லி செகண்ட்கள் கழித்து அதே காட்சி மூளைக்கு மறுபடியும் போகும். ஏற்கெனவே நினைவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சித் திரும்பவும் மூளைக்குக் கிடைப்பதால் தான் இப்படித் தோன்றுகிறதாம்.

இன்னொரு வகை Co-Ordination பிரச்சனை இருக்கிறது. தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் கை கால்களை அசைக்க முடியாமல் மிரண்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். பொதுவாக நாம் தூங்கும் போது நம் கை கால்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன(sleep paralysis). கனவுகளுக்கு React செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தூக்கம் தெளிந்தவுடன், சரியாகச் சொல்வதென்றால் கான்ஷியஸ் வந்தவுடன், கை கால்கள் இனி அசையலாம் என்று மூளையிடமிருந்து சிக்னல் கிடைக்கும். சில நேரங்களில் கான்ஷியஸ் வந்தும் உடலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கும். அந்த சமயங்களில் தான் அசைய நினைத்தாலும் அசைய முடியாமல் திணறியிருப்போம். மிரட்டும் உருவங்கள், அமானுஷ்ய ஒலி, கையைக் காலை யாரோ பிடித்து அமுக்குகிறார்கள் என்னும் புகார்களெல்லாம் இதனால் தான்.
       
அட.... ஈ.எஸ்.பி என ஆரம்பித்து வேறு எங்கோ போகிறது. ஈ.எஸ்.பி (Extra Sensory Perception) என்பதைச் சாதாரண புலன்களுக்குச் சாத்தியப்படாத உணர்ச்சிகளை உணர்தல்(!) எனச் சொல்லலாம். இந்த மாதிரி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை பாராநார்மல் என்று சொல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை எதிர்காலத்தைக் கணிப்பது. இன்னும் சில வகைகள் இருக்கின்றன. டெலிபதி, தொலைவில் நடக்கும் விஷயத்தை அறிவது, ஆவிகளுடன் சவகாசம் வைத்திருப்பது(சிக்ஸ்த் சென்ஸ் நினைவிருக்கிறதா?), ஒரு பொருளை வைத்துக்கொண்டே ஒரு ஆளைப் பற்றிக் கணிப்பது(Psychometry). ஒரு பொருளை உருவம் மாற்றுவது கூட ஈ.எஸ்.பி தான்.

இந்த ஈ.எஸ்.பி பற்றிய ஒரு தியரி பின்வருமாறு கூறுகிறது. அனைவருக்கும் ஆழ்மனதில்  ஈ.எஸ்.பி சக்தி/உணர்ச்சி இருக்கிறது. ஆழ்மனது வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் போது தான் புற மனதுக்குத் தெரிகிறது. அது வரை இந்த உணர்ச்சி அறியப்படாமலே போய் விடுகிறது.  அதாவது எல்லோருக்குமே ஈ.எஸ்.பி திறன் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை அறியும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. இது ஒரு சாம்பிள் தான். நிறைய‌ தியரிகள் வந்துவிட்டன. ஈ.எஸ்.பி எங்கு ஏற்படுகின்றது என ஒன்று, இரண்டு ஆழ்மனங்கள் உள்ளன என ஒன்று.. இப்படி நிறைய!

ஆனால் அறிவியலைப் பொறுத்தவரை ,ஈ.எஸ்.பி விஷயத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஏனெனில் அறிவியலில் எல்லாமே டெஸ்ட் கேஸ் தான். எல்லாவற்றிலும் பாஸ் செய்தாக வேண்டும். சுஜாதா அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால், ராமசாமிக்கு ஈ.எஸ்.பி இருக்கிறதென்றால் அதே தெருவில் வசிக்கும் குப்புசாமிக்கும் ஈ.எஸ்.பி இருக்கவேண்டும். விஞ்ஞானம் நம்பாவிட்டாலும் போலீஸ் ஈ.எஸ்.பியை நம்புகிறது போல! நிறைய கேஸ்களில் ஈ.எஸ்.பி குற்றவாளியை நெருங்க ‌உதவியிருக்கிறதாம்.

நித்யானந்தருக்கு ஈ.எஸ்.பி இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More