May 01, 2009

பத்மஸ்ரீ விவேக்


குரு என் ஆளு - மாதவன், அப்பாஸ், விவேக், மம்தா மோகன்தாஸ், எம் எஸ் பாஸ்கர் மற்றும் பலர் நடித்த படம். இந்த படத்தைப் பற்றி பெரிதாகச் சொல்ல எதுவும் இல்லை. ஆனால் இந்த படத்தின் இடம்பெற்ற விவேக்கின் நகைச்சுவைக் காட்சிகள் துணுக்குறச் செய்தன. முக்கால்வாசி படத்தில் சரோஜாதேவி கெட்டப், ஸ்ரேயா கெட்டப் என்று பெண் வேடமிட்டு நடித்திருப்பார். ஆண் வேடம், பெண் வேடம் இரண்டிலும் இரட்டை அர்த்த வசனங்களில் புகுந்து விளையாடியிருப்பார். பெண் வேடமிட்டுருந்ததையே பார்க்க முடியவில்லை. அதில் அந்த மாதிரி வசனங்கள் வேறு! படிக்காதவன் படத்திலும் இதே போல தான். ஆரம்ப காட்சிகளில் ஒழுங்காக நடித்துவிட்டு இறுதிக்காட்சியில் எல்லாவற்றையும் மொத்தமாக போட்டு உடைத்திருப்பார். ஆனால் இந்த படத்தில் ஆரம்பம் முதலே ஒரே மாதிரி தான். இவருடன் சேர்ந்து சிரிப்பு காட்ட சோனா, ஷர்மிலி என்று இருவர். கேட்கவும் வேண்டுமா? போதாக்குறைக்கு இறுதியாக மெசேஜ் வேறு. "ஒரு பொண்ண காதலிக்கறதுக்கு முன்னாடி, அவ மொதல்ல பொண்ணானு தெரிஞ்சிக்குங்க". முடியல... :( ஒரு அளவு வேண்டாமா ?

மின்னலே, ரன், சாமி, காதல் சடுகுடு போன்ற தரமான காமெடிகளைத் தந்தவரிடமிருந்து இந்த மாதிரி வருவது சகிக்க முடியவில்லை. நண்பருடன் பேசிக்கொண்டிருந்தபோது "என்னங்க இது, பத்மஸ்ரீ விருது வாங்கினவர் இப்படியா நடிப்பது?"  என்ற பேச்சு வந்தது. அவர் சினிமாத்துறையச் சேர்ந்தவர். "அவரை சொல்லி என்ன செய்வது? அவருக்கு வாய்க்கும் வேடங்கள் அப்படி" என்றார்.உண்மையாகத் தான் தோன்றியது. என்ன தான் தன் காமெடி ட்ராக்கை தானே எழுதிக்கொண்டாலும் இயக்குனர் ஒத்துக்கொள்ள வேண்டும். தவிர இயக்குனர்கள் எழுதும் ட்ராக் அவ்வாறு இருந்தால் என்ன செய்வது? அவ்வாறு நடிக்க முடியாது என்று சொன்னால் அதை செய்ய இன்னொருவர் காத்திருப்பார். வரும் வாய்ப்புகளை விட்டுவிட்டால் வருமானத்திற்கு என்ன செய்ய? 

ஒன்று மட்டும் உண்மை. ஒரு திறமையான கலைஞனை வீணடிக்கிறது கோலிவுட். அதே சமயம், விவேக்கும் வடிவேலுவுடனான போட்டி மனப்பான்மையை விட்டுவிட்டு தரமான காமெடிகளைத் தர முன்வரவேண்டும். பார்க்கலாம்! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More