March 06, 2009

பொன்னியின் செல்வன்.

ஜேம்ஸ்பாண்ட் கதைளை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு சாகசம், காதல், வஞ்சகம், மர்மம், நகைச்சுவை என்று பல அம்சங்கள் நிறைந்த இந்த புதினத்தை அனேகமாக அனைவரும் படித்து இருப்போம். அமரர் கல்கி அவர்களின் கொஞ்சும் தமிழில் மெய்மறந்திருப்போம். குந்தவை, நந்தினி ஆகியோரைப்பற்றிய வர்ணனைகளில் லயித்திருப்போம். இந்த புதினத்தை திரைப்படமாக காண வேண்டும் என்று எண்ணியிருப்போம் (பின்னே, நந்தினி போன்ற சூப்பர் ஃபிகரை திரையில் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் யாருக்கு தான் இருக்காது?). ஆனால் இதுவரை அது நடந்தபாடில்லை. எம்.ஜி.ஆர் நடிக்க ஆசைப்பட்டார், இயக்குனர் மகேந்திரன் அவர்கள் திரைக்கதை எழுதினார், மணிரத்தினம் இயக்க ஆசைப்பட்டார் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன். யார் தயாரிப்பது என்ற சிக்கலால் ஆசை அப்படியே நின்றிருக்கும். சன் பிக்சர்ஸ் பெரிய மனது செய்து மொக்கை படங்களை எல்லாம் தயாரிப்பதை நிறுத்திவிட்டு இதைத் தயாரிக்கலாம். 
ஆனால் படம் எடுக்க ஆகும் செலவை விட சிக்கலானது பாத்திரத்தேர்வு...  ஒன்றும் இல்லை, நந்தினி பாத்திரத்திற்கு யார் பொருத்தமாக இருப்பார்கள் என்று வீட்டில் கேட்டேன். அவ்வளவு தான். என் தாத்தா டி. ஆர். ராஜகுமாரி என்றார். நைனா மாதவி தான் என்றார். எனக்கு, ரம்யா கிருஷ்ணன் சரியாக இருந்திருப்பார் என்றேன். என் தம்பி முத்தழகு தான் சரி என்கிறான். ஒரு வீட்டுக்குள்ளேயே இவ்வளவு கற்பனைகள் இருந்தால், லட்சக்கணக்கான வாசகர்கள் மத்தியில் எவ்வளவு கற்பனை வேறுபாடு இருக்கும்? அதை அறிந்து கொள்ளும் முயற்சிதான் இந்த பதிவு. முதலில் என் தேர்வைத் தருகிறேன்.

வல்லவரையன் வந்தியத்தேவன் : வினய்
குந்தவை நாச்சியார் : அசின் 
அருள்மொழிவர்மன் : கார்த்தி
வானதி : பூஜா
பூங்குழலி : விஜய் டி.வி ரம்யா
ஆதித்த கரிகாலன் : நரேன் 
நந்தினி - மந்தாகினி தேவி : பிரியாமணி
ஆழ்வார்க்கடியான் : பிரபு
அநிருத்தர் : டெல்லி கணேஷ்
மணிமேகலை : கார்த்திகா ("கருவாப்பயா" புகழ்)
செம்பியன் மாதேவி : மனோரமா
சுந்தர சோழர் : சிவக்குமார்
வானமாதேவி : சரண்யா
பெரிய பழுவேட்டரையர் : நெப்போலியன் 
சின்ன பழுவேட்டரையர் : பசுபதி
மதுராந்தகன் : விஷால்
சேந்தன் அமுதன் : ஜெய்
கந்தமாறன் : அஜ்மல்
பார்த்திபேந்திரன் : பிரசன்னா
குடந்தை சோதிடர் : எம்.எஸ்.பாஸ்கர்
ரவிதாசன் : அதுல் குல்கர்னி

இதில் சில பேருக்கு அவர்கள் பாத்திரங்கள் குருவி தலை பனங்காய் கதைதான். இயக்குனர் பாலாவிடம் விட்டு ட்ரில் எடுத்தால் போகிறது! 

உங்களது கற்பனைகளையும் அறியத்தரலாமே?

கொசுறு: இந்த தேர்வை நண்பர்களுடன் விவாதிக்கும்போது சத்யராஜை பெரிய பழுவேட்டரையராகவும், ஒரு சேஞ்சுக்காக கவுண்டமணியை சின்ன பழுவேட்டரையராகவும் நடிக்க வைக்கலாம் சென்று சொன்னார்கள். நந்தினியை பற்றி இருவரும் விவாதிக்கும் காட்சியை எண்ணிப்பார்த்தேன். திருமதி பழனிசாமி படத்தில் கோவை சரளாவை பற்றி இருவரும் சண்டை போடும் காட்சி ஒரு நிமிடம் கண் முன் வந்து போனது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More