November 09, 2009

புராதான அதிசயங்கள் : Seven Ancient Wonders.இப்போதைய உலக அதிசயங்கள் என்னென்ன என்று நமக்குத் தெரியும். பழங்கால அதிசயங்கள்? 
பழங்கால அதிசயங்கள் எங்கிருந்தன, எப்படி அழிந்தன என்று ஒரு லுக் விடுவோம். 


இப்போது போலவே அப்போதும் ஏழு தான் (அல்லது அப்போது போலவே இப்போதும்?). கிசா பிரமிடு : 

மர்மங்களின் தேசம் என்று வரலாற்று ஆசிரியர்களால் அழைக்கப்படும் எகிப்து நாட்டில், கிட்டத்தட்ட நான்காயிரம் ஆண்டுகளாக, பிரம்மாண்டமாய் நின்று கொண்டிருக்கும் பேரதிசயம். புராதான, இடைக்கால, நவீன என்று எத்தனை பட்டியல்கள் தயாரித்தாலும் பிரமிடுகளுக்குக் கட்டாயம் ஒரு இடம் இருக்கும். துல்லியமான அதே சமயம் நுணுக்கமான கட்டட அமைப்பு இதனைத் தனித்து நிற்கச் செய்கிறது. இதனைக் கட்டப் பயன்படுத்தப்பட்ட ஒவ்வொரு கல்லும் இரண்டு டன் எடை கொண்டதாம். வழக்கமான‌ பிரமிடுகளைப் போல் அல்லாமல் இதன் உச்சியில் சிறிய சமதளம் இருப்பதைக் கவனித்திருப்பீர்கள். இதற்குக் காரணம் கேப்ஸ்டோன் எனப்படும் ஒரு பிரமிட் துண்டு. இந்த கேப்ஸ்டோனும் ஒரு பிரமிடு தான். இந்த துண்டு இல்லாமல் ஒரு பிரமிடு முழுமையடைவதில்லை. சில பிரமிடுகளுக்கு இந்த கேப்ஸ்டோன் தங்கத்தால் செய்யப்பட்டிருக்கும். கிசா பிரமிடில் கேப்ஸ்டோன் என்ற பகுதி இல்லை. இதற்கு இரண்டு காரணம் இருக்கலாம். 
(1) தங்கமாக இருந்து யாராவது அபேஸ் செய்திருக்கக் கூடும் (கிசா பிரமிடின் கேப்ஸ்டோனின் உயரம் எட்டு மீட்டராக இருந்திருக்கும்!!!) 
(2) பிரமிடு முழுமைப்படுத்தப்படாமலேயே இருந்திருக்கக் கூடும்.


அலெக்சாண்ட்ரியாவின் கலங்கரை விளக்கம் : மறுபடியும் எகிப்து. அலெக்சாண்ட்ரியா மத்தியத்தரைக் கடலின் ஒரு துறைமுக நகரம். இதன் தாழ்வான நீர்ப்பரப்பு அடிக்கடி கப்பல் விபத்துக்களை ஏற்படுத்தியது. அதனைத் தவிர்க்க கி.மு 299ல் ஃபாரோஸ் தீவில் கட்டப்பட்டது. பகலில் சூரிய ஒளியையும், இரவில் தீ வெளிச்சத்தையும் பிரதிபலிக்கும் வகையில் மாபெரும் கண்ணாடி கொண்டு அமைக்கப்பட்டது. கி.பி ஆயிரத்து முன்னூறுகளில் அடுத்தடுத்த நில நடுக்கங்களால் சிதிலமடைந்த இந்த கலங்கரைவிளக்கம், இருந்த வரை மூன்றாவது உயரமான கட்டிடமாக இருந்தது(135 மீ). கட்டப்பட்ட கலங்க்கரை விளக்கங்களிலேயே உயரமானதும் கூட. 

பாபிலோன் தொங்கும் தோட்டம் கி.மு அறுநூறுகளில் பாபிலோன் மன்னன் நெபுகாட்நேசரால் கட்டப்பட்டது இந்தத் தோட்டம் நோயாளி மனைவியின் சுகவாசத்திற்காகக் கட்டப்பட்டதாம் இந்தத் தோட்டம். நீரூற்று எல்லாம் இருந்தது என்று சொல்கிறார்கள். ஆனாலும், இப்படியொரு இடமே இல்லை, இது கவிதைகளில் புனையப்பட்ட இடம் என்றும் சிலர் சொல்வார்கள். இந்த இடத்தைப் பற்றி பலமான ஆதாரங்கள் ஏதும் இல்லாததே காரணம்.

சீயஸ் சிலை ஒலிம்பியா:கிரீஸ் நாட்டில் கி.மு 466  456ல் கட்டப்பட்ட இந்த சிலை 13 மீ உயரம் கொண்டது தந்தம் மற்றும் தங்கத்தால் வடிவமைக்கப்பட்டது இந்த சிலை. ஹோமரின் இலியட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த சிலையை வடிவமைத்ததாக இதன் சிற்பி சொன்னாராம். கண்ணால் காண்பதே பெரும் புண்ணியமாகக் கருதப்பட்ட இந்த சிலை கி.பி நான்காம் நூற்றாண்டில் தீக்கிரையாக்கப்பட்டது.


ஆர்ட்டிமிஸ் கோவில்ஆர்ட்டிமிஸ் ஒரு கிரேக்கப் பெண் தெய்வம்.  இயற்கைக்கான தெய்வம். இந்த தெய்வத்திற்காக துருக்கியில் கட்டப்பட்டது தான் இந்த கோவில். கி.மு 550 ல் முடிந்த இந்த கோவில் கி.மு 356 லியே அழிக்கப்பட்டது. 115 மீ நீளம், 55 மீ அகலம் 18 மீ உயரம் கொண்டிருந்த இந்தக் கோவில் அந்நாளைய கிரேக்கக் கட்டடங்களில் மிகப்பெரியதாகும். 


மாசோலஸ் கல்லறை

கி.மு 353 ல் அப்போதைய துருக்கியில் பெர்சிய பேரரசன் மாசோலசுக்காகக் கட்டப்பட்ட மாபெரும் கல்லறை. 105 மீ நீளம், 242 மீ அகலம், 43 மீ உயரம் கொண்டிருந்தது.  கி.பி 14 ஆம் நூற்றாண்டின் தொடர்ச்சியான நிலநடுக்கத்தால் அழிந்து போனது. (Mausoleum - Great Tomb)


கொலோசஸ் சிலை

கிரேக்க சூரியக் கடவுள் ஹீலியஸுக்காக கி.மு 305 இல் ரோட்ஸ் தீவில் கட்டப்பட்டது இந்த சிலை. 33 மீ உயரம் கொண்டது. கிமு 226 லேயே நிலநடுக்கத்தால் அழிந்து போனது. மிகக் குறைந்த நாட்கள் இருந்த அதிசயம் இதுதான். 


{}


இந்த இல்லாத அதிசயங்களை வைத்து நாவல் ஒன்றை எழுதியிருக்கிறார் மேத்யூ ரெய்லி. தலைப்பு -  “Seven Ancient Wonders”. 


ஒரு Treasure Hunt கதை. பிரமிட் கேப்ஸ்டோன் ஏழாகப் பிரிக்கப்பட்டு ஆறு அதிசயங்களிலும், அந்த கேப்ஸ்டோனின் கேப்ஸ்டோன் (ஸ்ஸ்ஸபா) அலெக்ஸாண்டர் கல்லறையிலும் மறைத்து வைக்கப்பட்டதாம். நிற்க, நான்காயிரம் வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் ஒரு சூரிய நிகழ்வின் போது இந்த கேப்ஸ்டோன் துண்டுகளை பிரமிட் மீது பொருத்தி பூஜை (?) செய்தால் பேரழிவு தடுக்கப்படும். அதே சமயம் அப்படி செய்யும் நாடு ஆய்ரம் வருடங்களுக்கு வல்லரசாக இருக்கும். இந்த தேடுதல் வேட்டையில் அமெரிக்கா, தீவிரவாதிகள் என இரு குழுக்கள் ஈடுபடுகின்றன. மூன்றாவதாக நம்ம ஹீரோ ஜாக் வெஸ்ட் (ஆஸி) தலைமையில் ஏழு சிறு நாடுகளும் தேடுகின்றன. எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பது தான் கதை. 


படித்துப்பாருங்கள!!! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More