September 21, 2009

உன்னைப் போல் ஒருவன்...ஏற்கெனவே "வெட்னெஸ்டே" படத்தைத் திணறத் திணறப் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். எப்படி? சூயிங்கம் மெல்லும் போலீஸ் ஆஃபீசர், மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்... ரீமேக். என்ன ஒன்று, தமிழில் கொஞ்சம் அரசியல் சாயம் பூசியிருக்கிறார்கள்.


படத்தின் ஒன்லைன் சொன்னால் கூட படம் பார்க்கும் அந்த சுவாரஸ்யம் கெடக்கூடும் என்பதால், "நோ கதை".


சேட்டன் மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, இப்படி நிறைய "போது"களில் ரசிக்கவைக்கிறார். லட்சுமி - தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். நிறைய ஆங்கிலம் பேசுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி1 ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்.... கமலைப் பற்றி? நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? கமல் இதில் தனியாகத் தெரிவதற்கு எந்த வேலையும் செய்யவில்லை. இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.


இனி கிளைமாக்ஸ்! ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா பேசும் வசனத்தை விட ஒரு கிராமாவது அழுத்தம் குறைவாக இருந்த மாதிரி தோன்றியது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஹிந்தியில் இந்தப் பாத்திரத்தின் வயது. அதில் சுமார் அறுபது வயது சொல்லலாம். இதில் மிகக்குறைவு. தவிர கமலை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கமுடிகிறது. இரண்டாவது, நஸ்ருதீன் ஷா இந்தக் காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது பயம். உயிரோடு இருக்கவேண்டுமே என்ற சாமானியனின் பயம். தமிழில் அப்படியில்லை. அதனாலும் கமல் ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார். தவிர, ரேஷன் கடைகளில் புளுத்த அரிசி வாங்கும் சாமானியன் தோரணை கமலுக்கு இல்லை. அவர் பேசும் ஆங்கிலம் காரணமா எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்தியன் தாத்தாவோ அல்லது அவ்வை சண்முகியோ(உன்னைப் போல் ஒருத்தி?) இந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். Just Kidding... :)


ச்சும்மா!

படத்தை ஏ மற்றும் பி செண்டர்களை மட்டும் குறி வைத்து எடுத்திருப்பார்கள் போல. படம் நெடுக தமிழில் வசனங்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் வேகமாக போய் விடுகிறது. அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.


தீவிரவாதம் பற்றி கமல் அடிக்கும் லெக்சர்களுக்கெல்லாம் கைத்தட்டல் அள்ளுகிறது.


வசனங்கள் ஷார்ப். இசை ஒளிப்பதிவெல்லாம் உறுத்தாத அளவு. எடிட்டிங் கச்சிதம்.


உன்னைப்போல் ஒருவன் - கமல் கிரீடத்தில் இன்னொரு வைரம்.


பின்குறிப்பு : படத்தில் பாடல்களைத் திணிக்காமல், தனி ஆல்பமாக விட்டு படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்திருப்பது நல்ல முயற்சி. இனிமேல் இதுமாதிரி படங்களை எதிர்பார்க்கலாமா?

September 08, 2009

Global Warming : என்ன செய்யலாம்?


2012 என்று ஒரு படம். ட்ரெய்லர் பார்த்திருப்பீர்கள். 2012ம் வருடத்துடன் மயன் காலண்டர் முடிந்துவிடுகிறது, பைபிளிலும் 2012ல் உலகம் அழிந்துவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது, அதனால் 2012ல் நிச்சயமாக உலகம் அழிந்துவிடும் என்று மிரட்டியிருப்பார்கள். நெருப்பு மழை பொழிவதாகவும், கடல் ஊருக்குள் நுழைவதாகவும் காட்டியிருப்பார்கள். இது 2012ல் நடக்கிறதோ இல்லையோ, சீக்கிரமாகவே நடந்துவிடும் அபாயம் இருக்கிறது. காரணம் Global Warming என்று சொல்லப்படுகிற உலக வெப்பமாதல் பிரச்சனை. வாகனங்கள், குளிர் சாதனப்பெட்டிகள் இவற்றிலிருந்து வெளிப்படும் கார்பன் கழிவுகள் வளிமண்டலத்தை மாசடையச் செய்வதுடன் அவற்றை வெப்பமாக்குகிறது என்பதெல்லாம் நமக்கு பால பாடம். அதனால், இந்தப் பிரச்சனைக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளைப் பார்ப்போம்.

1) காகிதப் பயன்பாட்டைக் குறைத்தல்.

இதன் மூலம் காகிதத் தயாரிப்பில் மூலப் பொருளான மரங்களைக் காக்க முடியும். தவிர காகித உற்பத்தியின் போது தேவைப்படுகிற எரிபொருளைச் சேமிக்க முடியும்.

2) வாகனப் பயன்பாடு.

* கார் அல்லது பைக் வைத்திருப்பவர்களா? நண்பர்களாக்ச் சேர்ந்து (CarPooling) வருவதன் மூலம் எரிபொருள்பயன்பாட்டைக் குறைக்கலாம்.

* 20 வினாடிகளுக்கு மேல் சிக்னலில் காத்திருக்க வேண்டியிருந்தால் வாகனத்தை ஆஃப் செய்யலாம்.

3) குப்பைகள்

பேக் செய்வதற்கு குறைவான காகிதங்கள் அல்லது பிளாஸ்டிக் உபயோகப்படுத்தப்பட பொருட்கள் வாங்குவதால் குப்பைகளை ஓரளவு குறைக்க முடியும்

4) ஷாப்பிங்

* ஷாப்பிங் லோக்கலாக வீட்டுக்கு அருகிலேயே இருக்குமாறு பார்த்துக்கொள்ளலாம். வண்டியை எடுக்கவேண்டாமல்லவா?
* பொருட்களை வாங்கிவிட்டு கேரிபேக் கேட்டுக்கொண்டிருக்காதீர்கள். துணிப்பையை உபயோகிக்கலாம்.

5) மின்சாரம் சேமிப்பு

* சார்ஜர் போன்ற சாதனங்களை ஆஃப் செய்யாமல் விடாதீர்கள். நாம் அடிக்கடி சார்ஜ் ஆகிக்கொண்டிருக்கும் மொபலை சார்ஜர் ஆஃப் செய்யாமல் அப்படியே எடுப்போம். அது வேண்டாம்.

* கணினித்திரையை தேவையில்லாத போது (ப்ரேக், மீட்டிங்... ) ஆஃப் செயவது.

6) மரம்

முடிந்தால் மரம் நடுங்கள். :)

இன்னும் எத்தனையோ வழிகள் இருக்கின்றன. உங்களுக்குத் தெரிந்தவற்றைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்.

இது நடக்க வேண்டுமா?

A race begins in a single step! இது நாம் அனைவரும் ஒன்றாக ஓடியாக வேண்டிய ரேஸ். முதலடியை எடுத்துவைப்போம் வாருங்கள்!

September 06, 2009

உள்ளம் கேட்குமே...

நண்பர்கள் யாருமில்லாமல் வீக் எண்ட் கழிவது இதுதான் முதல்முறை. சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் ஊருக்குப் போயிருந்தார்கள்! போரடித்த சனிக்கிழமை மதியம் படம் ஏதாவது பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்க்கில் தேடியபோது "உள்ளம் கேட்குமே" கண்ணில் பட்டது. படத்தை போட்டுவிட்டு, பீட்ஸா ஹட்டை அழைத்து ஒரு சிக்கன் சுப்ரீமுடன் ஒரு பெப்சியும் ஆர்டர் செய்வதற்குள் லைலா பேச ஆரம்பித்திருந்தார். "அமெரிக்கா! உலகத்துல எல்லாருக்கும் இங்க வரணும்னு ஆசை இருக்கும். ஆனா நான் தவிர்க்க முடியாம தான் வந்தேன்." எனும்போதே படம் ஆரம்பித்துவிடுகிறது.

உடன் படித்த நண்பன் ஒருவன் திருமணத்திற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அதன்பின் ஃப்ளாஷ்பேக்கும் நடப்புமாக படம் தெளிந்த நீரோடையைப் போல பயணிக்கிறது. துள்ளித்திரியும் கல்லூரி வாழ்க்கையில் கேட்பதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை என்ற சிம்பிள் லாஜிக் தான் கதை. இரண்டு நாயகர்கள், மூன்று நாயகிகள். அவர்கள் யாருடைய காதலும் நிறைவேறாமல் போகிறது. இதை சோக வயலினெல்லாம் வாசிக்காமல் அழகாகச் கொல்லியிருப்பார் ஜீவா. வழக்கமான கதைகளில் சில பல சபதங்கள் நிறைவேறியிருக்கும். இங்கு ஜஸ்ட் லைக் தட் பிரிகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. ஷாம், ஆர்யா, லைலா, பூஜா, அசின் என படம் முழுக்க இளமைப்பட்டாளம். இதில் ஷாம், லைலா தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். லைலாவைப் ப‌ற்றிச் சொல்லியே ஆக‌ வேண்டும். சும்மாவே லூசு போல‌ இருப்பார். இந்த‌ப் பாத்திர‌த்தில் ந‌டிக்க சொல்லித்த‌ர‌வா வேண்டும்? அசத்தியிருப்பார். ஷாமிடம் காதலைச் சொல்லப்போகும் இடத்தில் அழுகையும் சிரிப்புமாக அதகளம் பண்ணியிருப்பார். அந்நியன் விக்ரம் போல. மற்றவர்களும் குறை சொல்லாத அளவுக்கு நடித்திருப்பார்கள்.


நட்பு, காதல், காமெடி, ஏமாற்றம், வலி எல்லாம் கலந்த ஒரு Stylish Movie இந்த படம். படத்தில் பாதிக்கும் மேல் சில ஆங்கில மற்றும் இந்திப் படங்களின் ( American Pie, Kuch Kuch Hota Hai) பாதிப்பு இருக்கும். ஆனாலும் சுஜாதாவின் எளிமையான வசனங்களோ, ஹாரீஸின் இனிமையான இசையோ, அழகான காட்சியமைப்புகளோ அல்லது கதை சொல்லப்பட்ட விதமோ... ஏதோ ஒன்று ரொம்பக் கவர்ந்துவிட்டது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஹாரீஸ். சொந்தச் சரக்கு என்று நம்புகிறேன். பாட்டுக்களும், பிண்னனி இசையும் அட்டகாசம். குறிப்பாக அந்த லைக்கோ லைமா! கல்யாண வீட்டில் ஒருவருக்குப் பூக்கும் காதலுக்கு இந்த இசைப் பிண்ணனி அபாரம். பாடல்களில் மழை மழையும், ஓ மனமேவும் என் All time Favs. யார் வந்தது யார் வந்தது... இந்த வரிகளை மறக்க முடியுமா என்ன?

படத்தில் சில பிடித்த காட்சிகள்:

1) ஆர்யா அம்மா, மணப்பெண்ணிடம் ஆர்யாவின் நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி. இது பிரியா என்று ஆரம்பிப்பார். "இதுல யாரு ஐரின்?" என்று மணப்பெண் கேட்பாள். அப்போது ஒரு மியூசிக் வருமே? அது.

2) ஷாம் அசினிடம் ப்ரபோஸ் பண்ணும் காட்சி. "காதல் ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயாமா இருக்கலாம். ஆனா நம்ம Culture ல கல்யாணம் ரெண்டு குடும்ப சம்பத்தப்பட்ட விஷயம்." அந்த வசனம்.

3) க்ளைமாக்ஸ் ஏர்போர்ட் காட்சி

4) அப்புறம் அந்த Farewell காட்சி.

இப்படி நிறைய காட்சிகள் படம் முழுக்க.

{}

இந்தப் படம் பல கல்லூரி நினைவுகளைக் கிளறி விட்டது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஆசிரியர்களைப் பகைத்துக்கொண்டது, நட்பா காதலா என்று தெரியாமலேயே முறிந்து போன ஒரு உறவு, கனமான சிலத் தருணங்களில் உடனிருந்த நண்பர்கள் என்று ஏதேதோ நினைவுகள். அன்று முழுவதும்.... "மறக்க நெனச்ச சில விஷயங்களை, காலம் திரும்பவும் நெனச்சுப் பார்க்க வைக்கும். அப்படி நெனச்சுப் பார்க்கும் போது சோகமான அந்த நினைவுகள் கூட சுகமானதா இருக்கும்." எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

இந்தப்படம் ஆகச்சிறந்த படம் கிடையாது. இசையும் உலகத்தரம் கொண்டதல்ல. ஆனால் உங்களுக்கு கொஞ்சம் ஃபீல் பண்ணப் பிடிக்குமென்றால், சொல்லாமல் போன காதலை நினைத்துப் பார்க்க இஷ்டம் என்றால், தொடர்பறுந்து போன நண்பர்களை நினைத்துப் பார்க்கப் பிடிக்குமென்றால் இந்தப் படம் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும். Try பண்ணிப் பாருங்கள்!!!

டிஸ்கி : படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அதைச் சொல்லியெல்லாம் இந்தப் படத்தைப் பாழ் பண்ண விரும்பவில்லை...:)

September 03, 2009

12ம் வகுப்பு படிக்க ஒரு கோடி ரூபாய்!

அபியும் நானும் படத்தில் ஒரு காட்சி வரும். பிரகாஷ்ராஜ் தன் குழந்தையை பள்ளியில் சேர்க்கச் சென்றிருப்பார். அப்பொழுது பள்ளி முதல்வர் "நீங்க Non Refundable Caution Deposit ஒரு பத்தாயிரம் கட்டிடுங்க. அதுக்கப்புறம் ஒரு டெர்முக்கு ஆயிரத்து அறுனூறு ருபாய்" என ஆரம்பித்து அடுக்கிக்கொண்டே போவார். இன்று அனேகமாக எல்லா தனியார் பள்ளிகளும் இந்த ரீதியில் தான் வசூலித்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், அது எல்லாம் சும்மா என்று சொல்லும் அளவுக்கெல்லாம் இந்தியாவில் பள்ளிகள் இருக்கின்றன தெரியுமா?

உதாரணத்துக்கு ஊட்டியில் உள்ள பிரபல பள்ளி ஒன்றின் கட்டண விவரங்கள்! (எல்லாம் ரூபாயில்)

பதிவுக்கட்டணம் - 10,000
அனுமதிக்கட்டணம் - 20,000
கேபிடல் மற்றும் வளர்ச்சிக்கட்டணம் - 30,000

இவை மூன்றும் ஒரு முறை செலுத்த வேண்டியது. திருப்பித்தரப்பட மாட்டாது! இனி பள்ளிக் கட்டணங்கள்

வகுப்பு ஒரு டெர்ம் வருடத்துக்கு( x 2) மொத்தமாக
1 முதல் 6 1,51,000 3,02,000 18,12,000
7 முதல் 10 2,33,500 4,67,000 18,68,000
11 & 12 3,50,000 7,00,000 14,00,000

மொத்தம் 50,80,000 ரூபாய். அரை கோடி!
இது தவிர, விடுதிக் கட்டணம், சாப்பாடு, போக்குவரத்து, பிறந்தநாள் கொண்டாட்ட செலவு, புத்தகம், சீருடை, நீச்சல், கராத்தே என டவுசர் கிழியும் அளவுக்கு செலவு! இதெல்லாம் சேர்த்து வருசம் ஒரு ரெண்டு லட்சமாவது செய்துவிடமாட்டார்கள்? ஆக பன்னிரெண்டுக்கும் 24 லட்சங்கள்! Caution Deposit ஒரு இரண்டு லட்சம். மொத்தமாக கிட்டத்தட்ட 75 லட்சம். பன்னிரென்டு வருடமும் கட்டண உயர்வு இல்லாமல் இருந்தால்! 10% வரை கட்டண உயர்வு இருக்கக்கூடும் என்று தெளிவாக சொல்லிவிடுகிறார்கள். இது இந்திய மாணவர்களுக்கு. வெளிநாடு வாழ் இந்தியக் குழந்தைகளுக்கு கட்டணம் இன்னும் அதிகமாக இருக்கும். கிட்டத்தட்ட இரண்டு மடங்கு. ஒரு கோடி ரூபாய்.

மலைப்பாக இருக்கிறது. பள்ளிப் படிப்பை முடிக்க ஒரு கோடி ரூபாயா ? அதுவும் நமது இந்தியாவிலா? நானறிய அரசுப்பள்ளியில் பன்னிரெண்டு வகுப்பு வரை படித்து முடிக்க பத்தாயிரத்துக்கு மேல் ஆகாது. அதுவே அதிகம். அது இல்லாமல் பள்ளிப்படிப்பைத் தொடர முடியாத குழந்தைகள் ஏராளம். ஆனால், இந்த பள்ளியில், முதல் வகுப்பைத் தாண்ட மூன்று லட்சம் ரூபாய்கள். (எனது பொறியியல் படிப்பின் முழுக் கட்டணத்தைப் போல் ஆறு மடங்கு). ஒரு புறம் ஆரம்பக்கல்வியைக் கூடத் தாண்ட முடியாத ஏழைக்குழந்தைகள். மறுபுறம் பள்ளிக்கல்விக்கே அரை கோடி செலவழிக்கும் ராஜா வீட்டுக்கன்னுக்குட்டிகள். இந்த ஏற்றத்தாழ்வு உண்மையிலேயே மலைக்க வைக்கிறது.

என்ன சொல்ல? பல் இருக்குறவன் பக்கோடா சாப்பிடுறான்!

September 01, 2009

மாப்பிள்ளைக்கு நிச்சயதார்த்தம்....

பதிவுலகத் தில்லாலங்கடி
எதிர் கவிதை ஏகாம்பரம்
பின்னூட்ட சுனாமி
அராஜக அலேக்ரா - நண்பர்
லவ்டேல் மேடிக்கு இன்று நிச்சயதார்த்தம்! (மாட்டிக்கிட்டாருடோய்!)

அவரும் அவர் தங்கமணி தமிழ்ச்செல்வியும் பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ தாறுமாறாக வாழ்த்துகிறோம்!

சும்மா சொல்லக் கூடாது. தலைவரு என்னமா ஃபீல் பண்றாரு....

சித்திரமே...!
திருவோணத் திருநாளில்
நம் நிச்சயதார்த்தம்...

ஆனால் அது
சொர்கத்தில்
நிச்சயக்கபடபோவதில்லை...

உன்
உதட்டோர மெளனப்
புன்சிரிப்பில்
நிச்சயக்கப்படப்போகிறது...!!

மாம்ஸ்! நடக்கட்டும் நடக்கட்டும். வாழ்க வளமுடன்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More