September 21, 2009

உன்னைப் போல் ஒருவன்...



ஏற்கெனவே "வெட்னெஸ்டே" படத்தைத் திணறத் திணறப் பார்த்துவிட்டதால் எந்தவித எதிர்பார்ப்புமின்றி தான் போனேன். ஆனால் சும்மா சொல்லக்கூடாது. மூலப்படத்தின் அந்த இயல்பு கெடாமல் ரீமேக்கியிருக்கிறார்கள். எப்படி? சூயிங்கம் மெல்லும் போலீஸ் ஆஃபீசர், மனைவியிடம் குக்கரால் அடிபடும் அப்பாவிக் கணவன், கமிஷனரிடம் புகார் கொடுக்க வரும் அந்த நடிகர் (விஜய்?) என்று ஒன்றையும் விடவில்லை. ஹ்ம்ம்ம்ம்ம்... ரீமேக். என்ன ஒன்று, தமிழில் கொஞ்சம் அரசியல் சாயம் பூசியிருக்கிறார்கள்.


படத்தின் ஒன்லைன் சொன்னால் கூட படம் பார்க்கும் அந்த சுவாரஸ்யம் கெடக்கூடும் என்பதால், "நோ கதை".


சேட்டன் மோகன்லாலுக்கு அசால்ட்டான பாத்திரம். சென்னை நகர கமிஷனர். கமலிடம் பேச்சுவார்த்தை நடத்தும்போது, லட்சுமியை சதாய்க்கும்போது, அதிகாரிகளை வழிநடத்தும்போது, இப்படி நிறைய "போது"களில் ரசிக்கவைக்கிறார். லட்சுமி - தலைமைச் செயலர். முதல்வரிடம் பேசும் போது பம்முகிறார். மோகன்லாலிடம் எகிறுகிறார். நிறைய ஆங்கிலம் பேசுகிறார். இளம் போலீஸ் ஆஃபீசராக வரும் அந்த இருவரும் துடிப்பாக இருக்கிறார்கள். டிவி1 ரிப்போர்ட்டராக வரும் அந்தப் பெண் யாரையாவது முறைத்துக்கொண்டே இருக்கிறார். கேப் கிடைத்தால் தம்மடிக்கிறார். அவ்வளவுதான்.... கமலைப் பற்றி? நன்றாக நடித்திருக்கிறார் என்று தனியாகச் சொல்ல வேண்டுமா? கமல் இதில் தனியாகத் தெரிவதற்கு எந்த வேலையும் செய்யவில்லை. இது நடிகரின் படமாக இல்லாமல் கதையின் படமாக இருக்கும். அதற்காகவே கமலுக்கு நன்றிகள்.


இனி கிளைமாக்ஸ்! ஹிந்தியில் நஸ்ருதீன் ஷா பேசும் வசனத்தை விட ஒரு கிராமாவது அழுத்தம் குறைவாக இருந்த மாதிரி தோன்றியது. இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, ஹிந்தியில் இந்தப் பாத்திரத்தின் வயது. அதில் சுமார் அறுபது வயது சொல்லலாம். இதில் மிகக்குறைவு. தவிர கமலை ஒரு ஹீரோவாகத்தான் பார்க்கமுடிகிறது. இரண்டாவது, நஸ்ருதீன் ஷா இந்தக் காரியத்தை செய்யக் காரணமாயிருந்தது பயம். உயிரோடு இருக்கவேண்டுமே என்ற சாமானியனின் பயம். தமிழில் அப்படியில்லை. அதனாலும் கமல் ஒரு ஹீரோவாகத்தான் தெரிகிறார். தவிர, ரேஷன் கடைகளில் புளுத்த அரிசி வாங்கும் சாமானியன் தோரணை கமலுக்கு இல்லை. அவர் பேசும் ஆங்கிலம் காரணமா எனத் தெரியவில்லை. ஒருவேளை இந்தியன் தாத்தாவோ அல்லது அவ்வை சண்முகியோ(உன்னைப் போல் ஒருத்தி?) இந்தப் பாத்திரத்தில் நடித்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கலாம். Just Kidding... :)


ச்சும்மா!

படத்தை ஏ மற்றும் பி செண்டர்களை மட்டும் குறி வைத்து எடுத்திருப்பார்கள் போல. படம் நெடுக தமிழில் வசனங்கள் குறைவு. அப்படியே இருந்தாலும் வேகமாக போய் விடுகிறது. அப்புறம் முதல்வர் குரல் கலைஞர் குரல் போல இல்லை? அவரையும் கலாய்த்திருக்கிறார்கள். உன்னிப்பாகக் கவனியுங்கள்.


தீவிரவாதம் பற்றி கமல் அடிக்கும் லெக்சர்களுக்கெல்லாம் கைத்தட்டல் அள்ளுகிறது.


வசனங்கள் ஷார்ப். இசை ஒளிப்பதிவெல்லாம் உறுத்தாத அளவு. எடிட்டிங் கச்சிதம்.


உன்னைப்போல் ஒருவன் - கமல் கிரீடத்தில் இன்னொரு வைரம்.


பின்குறிப்பு : படத்தில் பாடல்களைத் திணிக்காமல், தனி ஆல்பமாக விட்டு படத்தை இரண்டு மணி நேரமாகக் குறைத்திருப்பது நல்ல முயற்சி. இனிமேல் இதுமாதிரி படங்களை எதிர்பார்க்கலாமா?

6 கருத்து:

படம் அருமை.படம் டக்கென்று இடைவேளை வந்துவிட்டது. இந்தி பாக்கவில்லை. அதனாலேயே இன்னும் பிடித்திருக்கிறது.

நன்றி அம்மிணி. தரமான படம்.

கிடைத்தால் இந்தியில் பார்த்துவிடுங்கள். நஸ்ருதீன் ஷா வுக்காக.

மகேஷ் அண்ணே, அந்த சண்முகி..செம காமெடி.

நறுக் விமர்சனம் மகேஷ்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More