July 10, 2010

மதராசப்பட்டினம்



முதல் நாள் பார்த்தே ஆக வேண்டும் என்று ரொம்ப நாட்கள் காத்திருந்து, அடித்துப் பிடித்து ரிசர்வ் செய்து பார்த்தப் படம். கேட்டுக் கேட்டுத் தீர்த்தப் பாடல்கள், ஆவலைத் தூண்டும் விளம்பரங்கள் என்று எத்தனையோ காரணங்கள்!! காத்திருப்பும் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. இயக்குனர் விஜய்க்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடக்கும் நெகிழ்வான, கனமான ஒரு காதல் கதை. சலவைக்கார மல்யுத்த வீரனாக ஆர்யா. பிரிட்டிஷ் சீமாட்டியாக ஏமி ஜாக்ஸன்(பொண்ணு Miss World Teen !!!!). இருவருக்குமிடையே காதல். சந்தர்ப்பவசத்தால் 1947ல் பிரிகிறார்கள். காதலி இங்கிலாந்து போக நேரிடுகிறது. கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஆயாவாக தன் பழைய காதலனைத் தேடிக் கொண்டு(கணவன் இறந்த பிறகு தான் :) ) சென்னை மன்னிக்கவும், மதராசப்பட்டினம் வருகிறார். தேடலையும், காதலையும் அழகான திரைக்கதை மூலமாக அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க காமெடி சரவெடி. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று அறிவிக்கும் போது இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கேசிங். வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அருமை. ஒன்ற முடிகிறது. காட்சிகள் என்று சொல்ல ஆரம்பித்தால் நிறைய சொல்ல வேண்டும்.

ஆர்யா, ஏமி இருவரும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள். ஹனீஃபாவைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். மனிதர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் தியேட்டர் அதிர்கிறது. அவர் இன்னும் வெகு நாட்கள் நம்மோடு இருந்திருக்க வேண்டும். நேதாஜியைப் பின்பற்றும் குஸ்தி வாத்தியாராக வரும் நாசர் முறுக்கிக் கொண்டு திரிகிறார். பாலா சிங், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் மிகக் குறைவாகவே வந்தாலும் நிறைவு.

படத்தின் முக்கிய பலம் கலை(செல்வகுமார்), ஒளிப்பதிவு(நீரவ் ஷா) மற்றும் இசை(ஜி.வி). மூவரும் அருமையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சில இடங்களில் உறுத்தினாலும் சி.ஜியும் நன்றாக இருக்கிறது. Again, பீரியட் படம் எடுப்பது கடினமானது. பணம் ஒரு முக்கியக் காரணி. காட்சிகள், உடைகள், வசனம், சம்பவங்களின் தொடுப்பு இப்படி எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் ப்டத்திலும் உழைப்பு தெரிகிறது. இயக்குனர் விஜய் ரொம்ப அமைதியானவராக்த் தெரிந்தார். ஆனால், படத்தில் அடித்து ஆடியிருக்கிறார்.

பழைய சென்னையைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இந்தப் படம், பல்வேறு படங்களை நினைவு படுத்தினாலும் அதையெல்லாம் வசதியாக மறந்துவிடலாம். சில காட்சிகளின் நீளமும் பெரிதாக பாதிக்கவில்லை.

படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்.

டிஸ்கி : ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More