April 12, 2009

கல்யாண சாவு

சீரங்கன் தாத்தா சம்சாரம் அருக்காணி பாட்டி இறந்து போய்விட்டார். வயிரம் பாய்ந்த கட்டை என்று சொல்வார்களே அந்த மாதிரி ஜீவன் அது. சில நாட்களாக இழுத்துக் கொண்டு கிடந்தது என்று பேச்சு.  கொள்ளுப் பேரன் கொள்ளுப் பேத்தி என்று கொஞ்சியாயிற்று. தாத்தா இருக்கும்போதே சுமங்கலியாய் போய்ச்சேர்ந்துவிட்டார். அதனாலேயே யாருக்கும் அதிகம் துக்கம் இல்லை, தாத்தாவைத் தவிர! கல்யாணச் சாவாம் அது. கொண்டாட வேண்டுமாம்.

தாத்தா பாட்டிக்கு ஐந்து மகள் ஒரு மகன். ஒவ்வொருவருக்கும் வாரிசுகள் இரண்டுக்கு குறையாமல். அவர்களின் மனைவி/கணவன்மார்கள், குழந்தைகள் என்று பெரிய குடும்பம். நிறைய பேர் வெளியூரில் இருந்தார்கள். எல்லோருக்கும் ஆள் அனுப்பப்பட்டது. ரேடியோ, பந்தலுக்கு, சமையல் ஆளுக்கு சொல்லிவிட்டார்கள்.  அரை மணியில் பந்தல் போட்டு, ரேடியோ கட்டியாகிவிட்டது. முதல் பாட்டு வழக்கம் போல "சட்டி சுட்டதடா!". வீட்டருகில் இருந்த பூவரச மரத்தடியில் மூன்று கல் வைத்து அடுப்பு கூட்டி சமையல் வேலையும் ஆரம்பமானது.

செத்துப்போனது ஊர்க்கவுண்டர் சம்சாரம் என்பதால் இழவுக்கு (துக்கத்திற்கு) ஏகப்பட்ட பேர் வர ஆரம்பித்தார்கள். வந்திருந்தவர்களில் ஆண்கள் தாத்தாவிடமும், அவர் மகனிடமும் துக்கம் விசாரித்தார்கள். பேருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அருகில் இருந்த தென்னைமர நிழலில் உட்கார்ந்து அரசியல் பேச ஆரம்பித்தார்கள். பெண்கள் எல்லாம் தாத்தாவின் மகள்களிடமும்,  மருமகளிடமும் கட்டிபிடித்து அழுவதும், மாரடித்து அழுவதுமாய் துக்கம் விசாரித்தார்கள். ஐந்து நிமிடம் தான், அதன் பின் வந்திருந்த பெண்களில் கொஞ்ச பேர் வெளியே வந்துவிட்டார்கள். சரியாக "டீ" தயாராக இருந்தது. அழுது வறண்டிருந்த தொண்டையை நனைத்துக்கொண்டு, இவர்கள் ஒரு புறம் அரட்டையை ஆரம்பித்தார்கள். "எப்படியோக்கா! மாரப்பனுக்கும் (மகன்) தொந்தரவு வெக்காம தானும் இம்ச படாம பாட்டி சீக்கிரம் போய் சேந்துடுச்சு". இந்த மாதிரி!

இன்று பாட்டியை எடுத்தால் தான் நாளை மறு நாள் காரியம் செய்ய முடியும். அதற்கப்புறம் அடுத்த மாதம் பிறந்துவிடுகிறது. ஒரே மாதத்தில் காரியம் செய்துவிட வேண்டும். அதனால் ரெய்ப்பூரில் இருக்கும் மகன் வயிற்றுப் பேரன் வரும் வரை வைத்திருக்க முடியாது. இன்றே எடுப்பது என்று முடிவானது. பாட்டி குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் எல்லோரும் கூரை மேல் சோறு வீசினார்கள் (பாட்டியின் ஆத்மாவிற்கு உணவளித்து பசியாற்றும் சடங்கு). பெண் வயிற்றுப் பேத்திகள் எல்லோரும் பாட்டியை நல்லவிதமாக வழியனுப்ப வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். மலர்த்தேர் (பல்லக்கு) செய்ய ஆள் கூட்டி வந்தார்கள். ஐந்து கோபுரம் உள்ள தேர் தயாரானது. 

பாட்டியை குளிப்பாட்டி கோடித் துணி அணிவித்து வாசலில் உட்கார வைத்தார்கள். பேரன்களும், கொள்ளுப் பேரன்களும் ஒரு சிறு குச்சியில் நெய் நனைத்த துணியை சுற்றி நெய்ப்பந்தம் பிடித்தார்கள். பாட்டியை எடுத்து தேரில் கிடத்தினார்கள். சில பெண்கள் பாட்டியை சுற்றி வந்து ஒப்பாரிப் பாட்டு சொல்லி கும்மியடித்தார்கள். மூத்த மகள் பின்வரும் பாட்டைப் படித்தார்.

கொத்து நெளிவளையம் கொத்துசரம் சங்கிலியும் - நீ பெத்த 
குயிலிக்கு தாரேன்னு கொள்ளையாக சொன்னீங்களே!
குயிலிய தான் மறந்து குளத்திலேயே இறங்குனீங்க
*
அரும்பு நெளிவளையம் அரும்புசரம் சங்கிலியும் - நீ பெத்த
அல்லிக்கு தாரேன்னு ஆசையாக சொன்னீங்களே!
அல்லிய தான் மறந்து ஆத்துலயே இறங்குனீங்க.

மகனும், மருமகன்கள் மூவரும் தேரைத் தூக்கினார்கள். சரியாக "போனால் போகட்டும் போடா" பாட்டு ஒளிபரப்பப்பட்டது. பெண்களில் சிலர் பின்னாடியே அழுது கொண்டு வாசல் வரை சென்றார்கள். அதற்கப்புறம் போகமுடியாது. கான காட்டுக்கு (கானல் காடு - சுடுகாடு) வர பெண்களுக்கு அனுமதியில்லை. 

பாட்டி பிரேதம் இருந்த இடத்தில் அவர் ஃபோட்டோ ஒன்று வைக்கப்பட்டது . சுடுகாட்டுகுப் போய் வந்த ஆண்கள் பாட்டி படத்திற்கருகே வந்து வணங்கி விட்டு கிளம்பினார்கள். "நாளன்னிக்கு சாஸ்திரம் (காரியம்), கான காட்டுக்கு வந்தவங்க எல்லாம் மறக்காம வந்துடுங்கப்பா." ஒருவர் அறிவித்தார்.

முக்கால்வாசிப்பேர் கிளம்பிவிட்டார்கள், இருந்தவர்களில் எல்லோருக்கும் சாப்பாடு பரிமாறப்பட்டது. ரேடியோக்காரரிடம் சொல்லி டெக் எடுத்து வந்து தங்கப்பதக்கமும் ரத்தக்கண்ணீரும் பார்த்தார்கள். மறு நாள் காலையில் மூத்த பேரன் வந்து சேர்ந்தார். வரும் வரை பா(ட்)டியை வைத்திருக்கவில்லை என்று சத்தம் போட்டார். "பாட்டிக்கு ஏதோ கொற வச்சுட்டேன்.  அதான் நான் வரக்கு (வருவதற்கு) முந்தியே போய்ட்டாங்க" என்று தாத்தாவைக் கட்டிக் கொண்டு அழுதார். அடுத்த நாள் காரியம் முடிந்தது. அனைவருக்கும் புதுத்துணி எடுக்கப்பட்டது. "மறு பிறால்" (மகள்கள் செய்யும் )சடங்குக்காக ஆடு ஒன்று வெட்டி சமைக்கப்பட்டு விருந்து பரிமாறப்பட்டது. மகள்களைத் தவிர அனைவரும் கிளம்பிவிட்டார்கள். 

மூன்று நாள் அமளி துமளியாக இருந்த அந்த வீடு துக்க நிறம் பூண்டது. மகனின் நிம்மதி, பேரனின் கோபம், பேத்தியின் பெருமிதம், குழந்தைகளின் ஆரவாரம் இவைகளுக்கு மத்தியில் அமுங்கிப்போயிருந்த தாத்தாவின் துக்கம் வெளிவர ஆரம்பித்தது. பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார் தாத்தா! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More