July 15, 2010

தாயம்

தாயம்... கிட்டத்தட்ட மறக்கப்பட்ட இந்த ஆட்டம் தான் எங்கள் ஊரின் தேசிய விளையாட்டு. சில வருடங்களுக்கு முன் வரை பொழுது போக்க இருந்த ஒரே அம்சம். அதனாலேயே ஊரில் அனைவரும் இதை விளையாடிப் பழகியிருப்பார்கள். ஆண் பெண் என்ற பேதமெல்லாம் கிடையாது.

என்னதான் அனைவரும் விளையாடினாலும் பாட்டிகள் விளையாடும் போது நிச்சயம் கலாட்டா தான். அவர்களுக்கு வீட்டில் வேலையென்று பெரிதாக எதுவும் இருக்காது. வயலிலும் போய் வேலை செய்ய முடியாது. எவ்வளவு நேரம் தான் தனித்திருப்பது? கையில் தாயக்கட்டையை வைத்துக் கொண்டு சரியான மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போலப் வாசல் பார்த்திருப்பார்கள். வீட்டு வாசலில் யாராவது தென்பட்டால் குஷி பிறந்துவிடும். தேர்ந்த மேலாளரின் பேச்சுத் திறமையுடன் அவர்களை விளையாட்டுக்கு அழைப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் படியாத ஆட்களாய் இருந்தால், அதற்கும் ஒரு தந்திரம் இருக்கிறது.

"சின்னத்தாயி, காப்பி வெக்கட்டுமா? " இது தான் தூண்டில்
"வெய்யிக்கா..." இது மாட்டப் போகும் மீன்.
"சரி, காப்பி காயுற வரைக்கும் ஒரே ஒரு ஆட்டம்" - அவ்வளவு தான். கண்டிப்பாக மீன் மாட்டிவிடும்.

இந்த விளையாட்டு நிறைய கலைச்சொற்களைக் கொண்டுள்ளது(ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும்). நகர்த்தப்படும் காய் சில சமயம் நாய் என்று அழைக்கப்படும். அது ஆடுபவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மலை, சோறு, பழம் எடுத்தல், வெட்டுதல், விருத்தம் எல்லாம் தெரியுமா? விளையாட்டில் கூழ் ஊற்றுவது என்று ஒரு கான்செப்ட் உண்டு. எதிரணியினர் நம் காய்களை வெட்டுவதற்கு முன்னர் நாம் அனைத்துக் காய்களையும் பழமாக்கினால், நமக்கு மாபெரும் வெற்றி. அதாவது எதிரணியினர் கூழ் குடித்தல் என்ற பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். அந்த நிலையிலிருந்து மீள தொடர்ந்து ஏழு ஆட்டங்கள் ஜெயிக்க வேண்டும். அல்லது அவர்கள் நமக்கு கூழ் ஊற்ற வேண்டும். கூழ் ஊற்றினால் வரும் எக்காளம் இருக்கிறதே, பொக்கைச் சிரிப்புத் தான்.

வீர விளையாட்டு என்றால் அனல் பறக்காமலா? விளையாட்டின் விதி முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். இரண்டு வெவ்வேறு ஊர்ப் பாட்டிகள் விளையாட உட்கார்ந்தால் அடிதடியே நடக்கும். அவரவர் விதி முறைகள் அவரவருக்கு உசத்தி தானே? பின்பு யாராவது ஒரு மத்தியஸ்தர் இடையில் புகுந்து, இரண்டு ஊரின் விதிமுறைகளையும் கலந்து ஒரு புது விதிமுறையை உருவாக்கித் தர வேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் பழக முடியாதல்லவா? அரை மனதுடனேயே விளையாடுவார்கள்.

கிரிக்கெட் என்றால் சச்சின் என்று ஒரு நட்சத்திரம். அது போல இந்த விளையாட்டிலும் நட்சத்திர வீராங்கனை இருப்பார்(கொஞ்சம் ஓவர் தானோ?). அவர் கட்டை உருட்டும் போது என்ன கேட்கிறாரோ அது விழும். தாயம் என்றால் தாயம். ஆறு என்றால் ஆறு. இப்படி ஒழுங்காக விளையாடி ஜெயிப்பவர்களும் உண்டு. என் பாட்டியைப் போல ஏமாற்றி ஜெயிப்பவர்களும் உண்டு,.பன்னிரெண்டு விழுந்தால் பதினைந்து கரம் தள்ளி வைப்பது, விழாத தாயத்தை விழுந்ததாகச் சாதிப்பது, யாரும் பார்க்காத போது காயை நகர்த்தி வைப்பது என்று எக்கச்சக்க தில்லுமுல்லுகள். அதுவும் நான் எதிரணியில் இருந்தால் இன்னும் சந்தோஷம். நிச்சயமாகத் தோல்விதான் எனக்கு.

தாயக் கட்டைப் பெரும்பாலும் கட்டையில் இல்லாமல் வெண்கலத்திலோ இரும்பிலோ இருக்கும். கோயில் திண்ணையில் தாயம் உருட்டும் போது எழும் ஜலீர் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும். அந்தச் சத்தத்தைக் கேட்டே ஜமா சேர்ந்து விடும். ஆனால் அந்தச் சத்தத்தைக் கேட்டே வெகு நாட்களாகிறது. கோயில் திண்ணையில் வரையப்பட்ட தாயக்கரம் பூசி மொழுகப்பட்டு விட்டது. வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்கும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எல்.கே.ஜி படிக்கும் அண்ணன் மகள் இது என்ன என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். விவரம் தெரிந்ததும் விளையாடப் பழக்க வேண்டும். :)

உங்களுக்குத் தெரியுமா விளையாட?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More