May 12, 2010

பெய்யெனப் பெய்த மழை.


எங்களது ஒரு விவசாயக் கிராமம். வாய்க்கால், ஏரிகள், கிணறுகள் என்று நீர் நிலைகள் சூழ்ந்த கிராமம். ஆனால் இன்று எல்லாம் வ‌ற‌ண்ட‌ நிலையில். ம‌ழை என்ற‌ ஒன்றே ம‌ற‌ந்து போன‌ பிற‌கு எங்க‌ள் விவ‌சாய‌ம் ந‌ம்பியிருந்த‌தெல்லாம் ஆழ்துளைக் கிண‌றுக‌ளை ம‌ட்டுமே. ஆயிர‌ம் அடி அல்ல‌து ஆயிர‌த்து முன்னூறு அடி வ‌ரை தோண்டி அங்கு கிடைக்கும் நீர்க்கால‌க‌ளையும் உறிஞ்சியெடுத்துவிட்டோம். ஆழ்துளைக் கிண‌றுக‌ளும் இன்றோ நாளையோ என்ற‌ நிலையில் இருக்கின்ற‌ன. கிடைக்கும் கொஞ்ச நஞ்ச தண்ணீரில் இரு தென்னை மரங்களின் தாகம் மட்டுமே தீர்க்க முடியும். ஒரு காலத்தில் க‌‌ரும்பு, நெல், வாழை, ம‌ஞ்ச‌ள் என்று விளைத்த‌ எங்க‌ள் நில‌மெல்லாம் க‌ல‌க‌ம் செய்து சோள‌த்துக்கு மாறிவிட்ட‌ன. அல்லது சும்மாயிருக்கின்றன. 

இந்த நிலை நாங்களே தேடிக் கொண்டது. விவசாயத்துக்குக் கிடைத்த முக்கியத்துவம் நீர் ஆதார மேம்பாட்டுக்குத் தரப்படவில்லை. நிலத்தடி நீர் மேம்படுத்தப்படவில்லை. இருக்கும் நீரும் சரியாக வகையில் உபயோகப்படுத்தப்படவில்லை. உதாரணத்துக்கு ஒரு வயல் தாண்டியிருக்கும் ஒற்றைத் தென்னையாக இருந்தாலும் வாய்க்கால் வழியாகத் தான் தண்ணீர் கொண்டுசெல்லப்பட்டது. எல்லாவற்றிற்கும் மேலாக மழை. ஊரைச் சுற்றியிருந்த மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டு கதவுகளாக, ஜன்னல்களாக மாறின. ஏரியிலிருந்த கருவேல மரங்கள் கூட விறகுகளுக்காக வேட்டையாடப்பட்டன. மழைப்பொழிவு குறைய ஆரம்பித்தது. மரங்களின் முக்கியத்துவத்தையும் மழை நீர் சேகரிப்பின் அவசியத்தையும் எடுத்துச்சொன்னவர்கள் பரிகசிக்கப்பட்டார்கள். சாலையின் ஓரங்களிலும் மரக்கன்று வைக்க அனுமதி மறுத்தோம். மரம் வளர்ந்து பெரிதானால் நிழல் தரும். நிழல் விழும் இடத்தில் வெள்ளாமை பாதிக்கும். அதனால் எங்கள் வயல்களையொட்டிய சாலையோரங்களில் மரம் வளர்வதை அனுமதிப்பதில்லை. மரங்களை வெட்டக்கூடாதாமே? பரவாயில்லை. எங்களிடம் உள்ள ஆடுமாடுகளை ஏவிவிட்டால் போகிறது.

மும்மாரி பெய்த மழை தூரத்து சொந்தம் போல எப்போதாவது தலைக்காட்ட ஆரம்பித்தது. 60, 100 அடியில் இருந்த நீர்க்கால்கள் எல்லாம் வற்றிப்போயின. பூமியைத் துளைக்க ஆரம்பித்தோம். 250 அடியில் ஆரம்பித்தது 1300 அடி வரை கீழிறங்கியது. அந்த ஆழத்தில் இருக்கும் நீர்மட்டங்கள் கூட முகம் காட்ட மறுத்த போது தான் சூழ்நிலையின் தீவிர‌ம் புரிந்தது. இன்று, அருகிலிருக்கும் காவிரி ஆற்றிலிருந்து பாசனத்துக்குத் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடுகள் நடக்கின்றன. "ஒரு வருடம் தானே? காவிரித்தண்ணீர் வந்துவிடும் அப்புறம் சமுத்திரம் மாதிரி தண்ணீர் வந்துவிடும்" என்று திளைத்திருந்தோம். 

மண்வாசமே மறந்து போயிருந்த இந்நிலையில் இரு நாட்களுக்கு முன் வெந்துகொண்டிருந்ததொரு இரவில், விழ ஆரம்பித்தன துளிகள். . பேய்மழை என்று சொல்வார்களே, அந்த மாதிரி பெய்து தீர்த்தது. ஒரே மணி நேர மழையில் இரண்டு ஏரிகள் நிரம்பிவிட்டன. பத்து வருடத்தில் இது தான் பெரிய மழை என்றார்கள் பாட்டி. கிணற்றிலெல்லாம் தண்ணீர் வந்துவிடும். இன்னும் ஒரு வருடத்துக்குத் தண்ணீர் பிரச்சனையில்லை. காட்டுவேலைக்கு வந்தவரிடம் தாத்தா இவ்வாறு பேசிக்கொண்டிருந்தார் "அப்புக்குட்டி, காட்டோரத்துல இருக்குற அந்த 2 வேப்பஞ்ச்செடியையும் வெட்டிரு, ஈரம் காஞ்ச ஒடனே காட்ட ஓட்டிப் போட்டுரலாம்"

ஹ்ம்ம்ம்ம்ம்ம்...... 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More