October 02, 2009

டைம் மெஷினும் உன்னைப்போல் ஒருவனும்

Time Machine ???? (ரெண்டு குதிரையைக் கொண்டாந்து பூட்டுங்கப்பு)

"VCR மாதிரி வாழ்க்கையிலும் ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்?" அனேகமாக நம் அனைவருக்கும் இந்த எண்ணம் வந்து போயிருக்கும். ஆனால், காலப்பயணம் என்றொரு விஷயம் இன்று வரை ஒரு கனவாகவே இருக்கிறது.

விஞ்ஞானிகளைக் கேட்டால் இந்த விஷயம் முடியும் என்று நிரூபிக்கப்படவில்லை, அதே சமயம் முடியாது என்றும் சொல்லிவிட முடியாது என்று மேலும் குழப்புவார்கள். அவர்களைப் பொறுத்தவரை, ஒருவர் ஒளியை விட வேகமாக, அதாவது வினாடிக்கு மூன்று லட்சம் கிலோமீட்டருக்கு மேல் பயணம் செய்ய முடிந்தால் அவர் பல தலைமுறைகளுக்குப் பிறகு உள்ள சந்ததிகளைச் சந்திக்க முடியும் என்பது தர்க்க ரீதியில் சாத்தியம். அதாவது, ஒளியை விட வேகமாக பயணித்துவிட்டு கொஞ்சம் வேகம் குறைத்து, திரும்பவும் ஒளியின் வேகத்தில் பூமிக்கு வந்தால், சில் ஆயிரம் வருடங்கள் ஆகியிருக்குமாம். இந்த முறையில் Time Dilation, Special Relativity என ஏதேதோ கான்செப்ட்களை உபயோகிக்கலாமாம். ஆனாலும் இந்த முறையில் கடந்த காலத்துக்குப் போவது சாத்தியமில்லையாம்.

கடந்த காலத்திற்குப் போவதற்கு Wormhole என்ற ஓட்டையைப் பயன்படுத்தமுடியும் என்கிறார்கள். என்ன எழவோ, ஒரு கருமமும் புரிய மாட்டேன் என்கிறது.

கடந்த காலம் என்பது ஏற்கெனவே நடந்து முடிந்தது. கண்டிப்பாக ஒரு "நான்" இருப்பேன். இப்போது 2009ல் இருந்து இன்னொரு நான் கிளம்பி 2000க்குப் போனால் என்ன ஆகும்? இரண்டு "நான்"கள் இருப்போமா? காலப்பயணம் செய்த "நான்" கடந்த காலத்தில் இருக்கும் "என்னைக்" கொன்றுவிட்டால்.....? நிகழ்கால "நான்" என்றே ஒரு ஆள் இருக்க முடியாதே? அல்லது ஒரே ஒரு "நான்" தான் இருப்பேனா? நிகழ்காலத்து ஞாபகங்கள் இருக்குமா? என்னால் இதைத் தாண்டியெல்லாம் யோசிக்கத் முடியவில்லை. ஜித்தர்களைக் கேட்டால் அதெல்லாம் ஒன்றும் பிரச்சனையில்லை என்கிறார்கள். புத்தகம் போட்டு இந்த பாரடாக்ஸ் பற்றி விளக்குகிறார்கள். அதையெல்லாம் படிப்பது உடல்நிலைக்குக் கேடு என்பதால் அந்தப் பக்கமே போகவில்லை.

வெறும் வாயிலேயே வெள்ளாமை செய்யும் ஹாலிவுட்காரர்கள் இந்த கான்செப்ட்டை சும்மா விடுவார்களா? இதை வைத்து ஏகப்பட்டப் படங்களைச் சுட்டுத்தள்ளியிருக்கிறார்கள். "தி டைம் மெஷின்" என்று ஒரு படம். இறந்த காதலியைக் காப்பாற்ற கடந்த காலத்திற்குச் செல்கிறான் நாயகன். அந்த சந்தர்ப்பத்திலிருந்துக் காப்பாற்றினாலும், அதே நாளில் வேறொரு விபத்தில் இறந்து போகிறாள். ஆயிரம் முறை திரும்பி வந்தாலும் ஆயிரம் முறையும் இறந்து விடுவாள் எனப் புரிந்துகொண்ட நாயகன் எதிர்காலத்துக்குப் பயணிப்பது போல் கதை வரும். "தி பட்டர்ஃப்ளை எஃபெக்ட்" என்று மற்றொரு படம். இதில் இறந்த காலத்துக்குப்போய் நடந்த தவறுகளைத் திருத்துவான் நாயகன்(எனக்குப் புரிந்தவரை).

நடந்ததையோ, நடக்கப்போவதையோ மாற்றியமைப்பது சாத்தியப்பட்டால் சுவாரஸ்யமே இல்லாமல் போய்விடும் இல்லை? தவறு ஏதாவது நடந்தால் "விடு திருத்திக்கலாம்" என்ற நிலை வரும் யாருக்குத் தெரியும், கடந்த காலத்துக்குப் போய், கமலிடம் "உன்னைப் போல் ஒருவன்" படத்தில் உங்கள் காமன் மேன் கெட்டப் எடுபடவில்லை என்று கூட சொல்லலாம் :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More