June 30, 2010

"சூரியக்" குடும்பம்.


புளூட்டோ... பதவியிழந்த இந்த முன்னாள் கிரகத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. புளூட்டோவிற்கு அந்தப் பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எட்டு கோள்களே அறியப்பட்டிருந்தன. சூரியக் குடும்பத்தின் அந்த ஒன்பதாவது கிரகத்துக்கான(Planet X) தேடல் வெகுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி இப்படியென்று 1930ல் இந்தக் கிரகம்(?) கண்டறியப்பட்டது. கிரகம் என்றால் பெயர் வைக்கவேண்டுமே! பெயர் வைக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள், பரிந்துரைகள் குவிந்தன. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமியின் பரிந்துரை மிகப் பொருத்தமாக இருந்தது. அவள் சொல்லியிருந்த பெயர் "புளூட்டோ." சொல்லியிருந்த காரணம் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ய உதவியது. "சூரியக் குடும்பத்தின் எல்லாக் கோள்களும் (பூமியைத் தவிர) ரோமானிய அல்லது கிரேக்கக் கடவுளர்களின் பெயரைக் கொண்டுள்ளன. அதே போல, இந்தக் கிரகத்துக்கும் கடவுளின் பெயரை வைப்பதே சரி. இயல்பில் இருட்டு மற்றும் அதீத குளிரைக் கொண்டுள்ள இந்தக் கிரகத்துக்கு ரோம் புராணத்தின் பாதாள உலகின் கடவுளான புளூட்டோவின் பெயரே மிகப் பொருத்தமானதாக இருக்கும்" என்பதே அவள் கொடுத்திருந்த விளக்கம். இப்படியாக புளூட்டோ கிரகம் நாமகரணம் சூட்டப்பட்டது. ஓரிரு கோள்களுக்கானப் பெயர் காரணம் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மற்றக் கோள்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளத் தூண்டியது அந்தக் கட்டுரை.

கூகிள் அண்ணாச்சியைக் கேட்டேன். மற்ற கோள்களுக்கானப் பெயர்க் காரணங்கள்.

புதன் - மெர்க்குரி -  வேகமான கிரகம். 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. இறக்கைகள் கொண்ட ரோமானியக் கடவுளான மெர்க்குரியின் பெயர் வாய்த்தது. இவரது இறக்கைகள் இவரது தகப்பனாரான ஜூபிடர் அளித்ததாம். இவற்றை வைத்துக் காற்றை விட வேகமாகப் பறப்பாராம்.

வெள்ளி - வீனஸ் - பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம். ரோமானியக் காதல் தேவதை. அழகி. பிரகாசமான அழகியத் தோற்றத்தால் இந்தப் பெயர்.

பூமி - எர்த் -  கடவுள் பெயர் இல்லாத ஒரே கிரகம். பழங்கால ஜெர்மன்-ஆங்கிலத்தில் எர்டா என்றால் நிலம்/மண் என்று பெயர். இது மருவி எர்த் ஆனது.

செவ்வாய் - மார்ஸ் - ரோமானிய யுத்தக் கடவுள். இந்தக் கோளின் சிவப்பு நிறம் இரத்தத்தை நினைவூட்டுவதால் இந்தப் பெயர்.

வியாழன் - ஜூபிடர் - ரோமானியக் கடவுள்களின் அரசன். இந்தக் கோளின் பிரம்மாண்டத்துக்காக இந்தப் பெயர்.

சனி - சேடர்ன். - ஜுபிடரின் அப்பா. ரோமானிய லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் :). வில்லனாக மாறிய இவரது தந்தையான யுரேனஸிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துத் தனியாக அரசாண்டார் என்று ஒரு கதை உண்டு. பிறகு இவரிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்தார் ஜுபிடர்.

யுரேனஸ் - முதலில் இங்கிலாந்து மன்னரின் நினைவாக ஜார்ஜியன் கிரகம் என்று தான் இதனை அழைத்தார்கள். பிறகு கிரேக்கக் கடவுளான ஔரானஸின் நினைவாக யுரேனஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஔரானஸ் சனிக் கிரகத்தின் தந்தை. சொர்க்கங்களின் கடவுள்.

நெப்டியூன் - கடல் நிறம் கொண்ட கிரகம். கடல்களின் கடவுளான (ரோமானிய) நெப்டியூனின் பெயர் சூட்டப்பட்டது.

கிரகங்கள் மட்டுமில்லாது அவற்றின் நிலாக்களுக்கும் இதே முறை பின்பற்றப்பட்டது.

தமிழ்நாட்டைச் சற்று நினைத்துப் பாருங்கள். "சூரியக்" குடும்பத்துக்கு இப்போதைய முதல்வர் பாராட்டுக் குழுவினர் பெயர் வைத்திருந்தால் என்னென்ன பெயர்கள் வைத்திருப்பார்கள்? உதாரணம் : சூரியன் - கலைஞர்.June 16, 2010

மதிப்பெண்

இந்தத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலெல்லாம் ஒரு குழப்பம் எழுந்து அடங்கும். முடிவுகள் எல்லாம் கன்னாபின்னாவென்று இருக்கும். அதிக மதிப்பெண்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். சில நேரத்தில் எதிராகவும் நடக்கும். எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தியின் நிலைமை இது. பொதுவாக அதிக மதிப்பெண்கள் வாங்கும் பெண் அவள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் நன்றாக எழுதியிருந்தாள். ஆனால் முடிவுகள் அவள் எதிர்பார்த்த மாதிரியில்லை. மதிப்பெண்கள் குறைந்திருந்தன. சந்தேகப்பட்டு விடைத்தாள் நகல் வாங்கிப் பார்த்ததில் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் இரண்டு விடைகள் திருத்தப்படவேயில்லை. இன்னொரு பாடத்தில், சரியான விடைக்கு மதிப்பெண்கள் தரப்படவேயில்லை. சரி மறு கூட்டலுக்கு அல்லது மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால் "இருக்கிற மதிப்பெண்களும் போய்விடப்போகிறது ஜாக்கிரதை" என்கிறார்களாம் அவளது வகுப்பாசிரியை. குழப்பத்தில் இருக்கிறாள்.

இது ஒரு உதாரணம் தான். இதை மாதிரி நிறைய வகை சொதப்பல்கள் இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தும்போது தரப்படும் சம்பளம் போதவில்லையென்று ஒரு ஆசிரியை சில விடைத்தாள்களை ஒளித்து வைக்க முயன்றார் என்று கூட செய்தி வந்தது. எவ்வளவு அலட்சியம்? மாணவர்களின் எதிர்காலமல்லவா இது? இவர்களது கோபத்தைக் காட்ட யாரோ ஒரு முகம் தெரியாதவனின் எதிர்காலத்தைப் பாழடிப்பதா?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் போது நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தோன்றின. ஆசிரியர்களை விட்டுவிடுங்கள். அனைவரும் அதை சேவையாகப் பார்ப்பதில்லை. தொழிலாக மாறி வெகு காலம் ஆகிறது. ஆனால் நம் கல்விமுறை? ஏன் இன்னும் இந்த மாதிரி தேர்வு முறை/மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இருக்கிறது? நிறைய பேர் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தல்லவா தேர்வெழுதுகிறார்கள்? தமிழ்ப்பாடத்தில் வரும் செய்யுள்கள் கூட பொருள் புரிந்து கொண்டு படித்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் தாவரவியலில் வரும் ஒளிச்சேர்க்கைச் சுழற்சியையோ அல்லது இயற்பியலில் வரும் ஏதேனும் ஒரு ஆய்வையோ மனப்பாடம் செய்வதால் என்ன நன்மை இருக்க முடியும்? (நானெல்லாம் மனப்பாடம் செய்தால் தேர்வு எழுதி முடிக்கும் வரை நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். முடித்தவுடம் அந்தப் பாடம் இருக்கும் பகுதியை மட்டும் மூளை தானாகவே ஃபார்மெட் செய்துவிடும்.)

இன்னும் ஏன் இந்த பக்கம் பக்கமாக விடை எழுதும் முறை ஊக்குவிக்கப் படுகின்றது? நுழைவுத்தேர்வுகளில் இருப்பது போன்ற சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை இருந்தால் என்ன? இப்பொழுது இருக்கும் குழந்தைகள் நம்மை விட சீக்கிரம் விஷயங்களைத்(!) தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மாதிரி கல்வி இருக்க வேண்டாமா? இப்போது இருக்கும் முறை தான் மொழிப்பாடங்களுக்குச் சிறந்தது. பிள்ளைகளுக்கு விளக்கி எழுதும் திறமை அவசியம். அதற்கு இந்த முறை தான் சரி என்று ஒரு வாதம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரி? மொழிப்பாடங்களுக்கு மட்டும் இந்த முறையை வைத்துக்கொள்ளக்கூடாதா? கல்வி முறை குழந்தைகளைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை அப்படி இருக்கிறதா என்ன? கல்லூரிகளில் இருப்பது போன்று பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளிலேயே ப்ராஜெக்ட் செய்யவிட்டால் என்ன? பத்தாம் வகுப்பு வரை அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளட்டும்! அதற்கப்புறமாவது அவர்கள் படித்ததை உபயோகிக்கட்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இப்பொழுது இருக்கும் பள்ளிக் கல்வி முறையில் ஒரு மாற்றம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?

June 09, 2010

கூத்து

                              

எங்கள் ஊர் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டிவிட்டார்கள். பண்டிகைக்கு ஆர்கெஸ்ட்ரா ஏற்பாடு செய்திருக்கிறார்களாம்.  பத்து பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன் தெருக்கூத்து இல்லாமல் எந்த கோவில் விழாவும் நடந்ததில்லை.  கூத்து பார்ப்பதே ஒரு தனி அனுபவம். அதிலும் பாட்டிகள் கூத்து பார்ப்பது அலாதியானது!  கூத்து ஆடபோகிறார்கள் என்றாலே பாட்டிகளுக்கு குஷி பிறந்துவிடும். எந்த ஊர் பார்ட்டி, என்ன கதை ஆடப்போகிறார்கள் என்று கேட்டு நச்சரிக்க ஆரம்பித்துவிடுவார்கள். மாலையில் சீக்கிரமே வேலைகளை முடித்துவிட்டு கூத்து பார்க்க போவதற்கு ஜமா சேர்ப்பார்கள். கூத்தாடுபவர்களை பார்த்துவிட்டால், இவரிவர் இன்னின்ன வேஷம் கட்டபோகிறார்கள் என்று யூகிப்பார்கள்.

கூத்து, பொதுவாக வெட்டவெளியில், ஏதாவது அறுவடை முடிந்த வயலில் தான் நடக்கும். ஒரு கபடி கோர்ட் மாதிரி போட்டு ஒரு பாதியை படுதா ஏதாவது வைத்து சுற்றி மறைத்து விடுவார்கள். இது வேஷம் கட்டுவற்கு. (நிறைய பேர் இந்த படுதாவை சுற்றி நின்று கொண்டு உள்ளுக்குள் வேடிக்கை பார்ப்பார்கள். அது எதற்கு என்று ஊகித்துக்கொள்ளுங்கள் :).. ). இன்னொரு பகுதி கூத்து ஆடுவதற்கு! இந்த பகுதியை சுற்றிலும் முதல் வரிசையில் இடம்பிடிக்க பாட்டிகள் மத்தியில் பலத்த போட்டி நடக்கும். அமருவதற்கு பாய் அல்லது கோணிப்பை, ஒரு போர்வை சகிதமாக கூத்து ஆரம்பிப்பதற்கு அரை மணி முன்னாலேயே வந்துவிடுவார்கள். இடம் பிடிக்க வேண்டுமே! தாத்தாகளை டபாய்த்துவிட்டு லேட்டாக வரும் பாட்டிகளுக்கு முன் வரிசை இடம் கிடப்பதில்லை. கடை போடும் பாட்டிகள் மட்டும் முன் வரிசையை விரும்புவதில்லை. சற்று தள்ளி, கூத்து பார்ப்பதற்கு ஏதுவாக தங்கள் கடையை போட்டுவிடுவார்கள். ஒரு கட்டிலில் கோணிப்பையை விரித்து, வெற்றிலை, முறுக்கு, பீடி-சிகரெட், பாக்கு வகையறாக்கள் என்று இரவு நேரத்தை தூங்காமல் கழிக்க உதவும் பொருட்களாக விற்பார்கள்.

கூத்து ஆரம்பித்தவுடன் எல்லா பாட்டிகளும் அமைதியாகிவிடுவார்கள். முதலில் வரும் கோமாளியுடன் மட்டும் பாட்டிகள் எளிதில் பழகி விடுவார்கள். கோமாளியுடன் ஏதாவது பதிலுக்கு பதில் பேசிக்கொண்டே இருப்பார்கள். சில நேரம் கோபம் வந்தால், கோமாளியை அடித்துவிடும் பாட்டிகள் கூட உண்டு. (தூங்கிகொண்டிருந்த என்னை தூக்கிக்கொண்டு போய் வேஷம் போட்டுவிட முயன்ற போது, என் பாட்டி, தான் வைத்திருந்த கோலால் கோமாளியை அடித்திருக்கிறார்). ஏதாவது சண்டை நடக்கும் கட்டம் வந்தால் சில பாட்டிகள் கதாநாயகனை உற்சாகப்படுத்துவார்கள். வசனம் சரியாக பேசவில்லை என்று நடிகர்களுடன் வாக்குவாதம் செய்யும் பாட்டிகளும் உண்டு. பொதுவாகவே எல்லோரும் தூங்காமல் கூத்தை கண்டுகளிப்பார்கள். சில பாட்டிகளுக்கு எவ்வளவு முயன்றாலும் தூக்கத்தை அடக்க முடியாது. அவர்களை எழுப்புவதற்காகவே, முகத்தில் தண்ணீர் தெளிப்பார்கள். கூத்து முடிய எவ்வளவு நேரம் ஆனாலும் பாட்டிகள் இருந்து பார்த்துவிட்டு வருவார்கள். தவசி நாடகம் என்று பாட்டிகளால் அன்போடு அழைக்கப்படும் "அர்ஜுனன் தபசு" என்ற நாடகம் அவ்வப்போது நடக்கும். இதில், மரத்தில் ஏறிக்கொள்ளும் நடிகர் (அர்ஜுனன்) விடிந்து எவ்வளவு நேரம் ஆனாலும், கழுகு கண்ணில் தென்படும் வரை இறங்கமாட்டார். கதை அப்படி! அவர் இறங்கும் வரை காத்திருந்து பார்த்து, கூத்தை சிறப்பித்துவிட்டு வருவார்கள்.

ஒரு நாடகத்தை எத்தனை முறை பார்த்தாலும் அலுப்பதில்லை அவர்களுக்கு. பாட்டிகளுக்கு பொதுவாக இரண்டு விஷயங்கள் பிடிக்காது.

1) வழக்கமாக பெண் வேடமிடும் நடிகர், அவசரத்துக்கு ஆண் பாத்திரத்திற்கு வேடமிட்டால் பிடிப்பதில்லை.
2) பெண் வேடத்திற்கு "பணம் குத்தும்" தங்கள் வீட்டு தாத்தாக்களை சுத்தமாக பிடிப்பதில்லை.

இப்போது சுயத்தைத் தொலைத்த கிராமங்களில் நமீதாக்களும், ஸ்ரேயாக்களுமே ஊர்த்திருவிழாவில் இடம்பெறுவதால் பாட்டிகளால் கூத்து பார்க்க முடிவதில்லை. அது ஒரு ஏக்கமாகவே இருக்கிறது அவர்களுக்கு.  :(


June 06, 2010

ஃபோட்டோஷாப் - கலரடிக்கலாம் வாங்க - Color Enhancingசில புகைப்படங்கள் கலரே தெரியாமல் மிக டல்லாக இருக்கும். கலர் கொஞ்சம் ப்ரைட்டாக இருந்திருந்திருந்தால் அந்த புகைப்படமே அழகாகியிருக்கும் என்று நினைப்பீர்கள். சரி எடுத்த பின்பு வருத்தப்பட்டு என்ன செய்வது? ஃபோட்டோஷாப் இருக்கவே இருக்கிறது.

கீழ்கண்ட இரண்டு புகைப்படங்களைப் பாருங்கள். முதல் படம் கொஞ்சம் வெளிறிப்போய் இருப்பதாக நினைத்தேன். சூர்யாஸ்தமனம் ஃபீல் கொடுக்க இன்னும் சிவந்த வானம் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்தேன். ஃபோட்டோஷாப் உதவியுடன் இரண்டாவது படம் கிடைத்தது.

இதை எப்படிச் செய்வது?

1) படத்தை PS ல் திறங்கள்.

2) படத்தை Lab Color Mode க்கு மாற்றிக்கொள்ளுங்கள் Image > Mode > Lab Color

3) புதிய Curves Adjuastment Layer ஐத் திறந்து கொள்ளுங்கள். Layer > New Adjustment Layer > Curves

4) New Layer பெட்டியில் ஒ.கே கொடுத்தால் Curves பெட்டி திறக்கும். பொதுவாக Curves 4 x 4 கட்டங்களாக இருக்கும். ஆனால் நமக்கு 10 x 10 கட்டங்கள் தேவை. அதனால் Alt ஐ அழுத்திக்கொண்டே Curves மீது க்ளிக் செய்யுங்கள். 10 x 10 கட்டங்கள் திறக்கும்.

5) இனி தான் கலர் கரெக்டிங்க். Curves பெட்டியில் Channel ல் Lightness தெரிவாகியிருக்கும். அதற்குப் பதிலாக A Channel ஐ தெரிவு செய்யவும். நேராக இருக்கும் கர்வின் இடது கீழ் முனையை இரு கட்டங்கள் வலது பக்கம் தள்ளுங்கள். அதே போல வலது மேல் முனை இரு கட்டங்கள் இடப்பக்கம்...6) இதே போல B Channel க்கும் செய்யுங்கள். கலர் கன்னாபின்னாவென்று அதிகமாகியிருக்கும். கலர் ரொம்ப அதிகமாகியிருந்தால் Opacity அளவைக் குறைத்துக் கொள்ளவும். படத்தை ஆர்.ஜி.பி க்கு மாற்றிக் கொள்ளலாம்.

Hope Its Good! 

June 01, 2010

ஐயைய்யோ பதிவுலகம்.


சில நாட்களாக இந்த தமிழ்ப் பதிவுலகம் முழுக்க ஒரே கூச்சல் குழப்பம். ஊரே அவசரமாகப் பஞ்சாயத்துக்கு ஒடிக் கொண்டிருக்கும்போது நமக்கு மட்டும் காரணம் புரியவில்லையென்றால் எப்படி இருக்கும்? அந்த மன நிலையில் தான் இருந்தேன். என்ன நடக்கிறது என்று ஒரு எழவும் புரியவில்லை. ஆஃபீஸ் லீவ் போட்டு விட்டு அங்கே தேடி இங்கே தேடி சில பல பதிவுகளைப் படித்து ஒரு வழியாகப் பிரச்சனை புரிவதற்குள் இன்னும் பல பதிவுகள். எல்லாப் பதிவுகளின் சாராம்சம் இது தான்... 

நர்சிம் செய்தது பாதகம், இல்லையில்லை முல்லை தான் ஆரம்பித்தார்கள். அட..... ரெண்டு பேர் மேலேயும் தப்பிருக்கப்பா! நோ நோ.... நடுநிலை என்பது அயோக்கியத் தனம்... ஒரு பக்கச் சார்பாகப் பேசியே ஆக வேண்டும். தவிர நடுநிலையாகப் பேசினால் நாட்டாமையாமே? சரி அமைதியாக இருந்து தொலைக்கலாம் என்றால், பதிவர்கள் எப்படி அமைதியாக இருக்கலாம்....? கருத்து சொல்லியே ஆக வேண்டும். அவ்வளவு சொரணை கெட்டவர்களா நம்மவர்கள்? சரி விடுங்க. ரெண்டு பேரும் பேசித் தீர்த்துக்கொள்ளட்டும். அதெப்படி? இது பொது வெளி, விவாதத்திற்கு வந்தால் எல்லோரும் பேசத்தான் செய்வார்கள். ஒன்று மட்டும் புரிகிறது. ஏதாச்சும் செய்யணும் பாஸ்! 

அதனால் ஒன்றும் சொல்லாமல் விட்டால் ஊரை விட்டே ஒதுக்கு வைக்கப்படும் அபாயத்திலிருப்பதால் கிராமப்புறங்களில் நடப்பதை மட்டும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். எங்கள் ஊரிலெல்லாம் சர்வசாதாரணமாக சண்டை நடக்கும். இங்கு நடந்ததை விட அசிங்கமான வார்த்தைப்பிரயோகங்கள் இருக்கும். மிகத் தரம் தாழ்ந்த வார்த்தைகள். மேல் சாதி - கீழ் சாதி, ஆண் - பெண். இப்படி வகை தொகை தெரியாமல் சண்டை நடக்கும். உணர்ச்சி வசத்தில் வந்து விழும் வார்த்தைகள் அவை. ஆனால் அவையெல்லாம் ஆணாதிக்கம் என்றோ சாதி வெறி என்றோ முத்திரை குத்தப்படுவதில்லை. சில மாதங்களிலேயே அடித்துக்கொண்ட இருவரும் பட்டும் படாமலும் பேசிக்கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள். நாம் படித்தவர்கள்! 

அதே போல் இந்தப் பிரச்சனையும் தீரும் என்ற நம்பிக்கையுடன், ஒருவேளை சண்டையிட்டுக்கொள்ளும் இருவரும் தங்களது கசப்புகளையெல்லாம் மறந்து (அட.. ஒரு வாதத்துக்காவது வைத்துக்கொள்ளுங்களேன்.) சமாதானமாக முன்வந்தால், வரிந்து கட்டி வக்காலத்து வாங்கிய நாமெல்லாம் நமது முகத்தை எங்கே வைத்துக்கொள்ளலாம் என்ற சந்தேகத்தையும் முன்வைக்கிறேன். மன்னிப்பதும் மறப்பதும் மனித இயல்புதானே?

இந்தப் பிரச்சனையில் ஐஃபா அழைப்பை நமீதா ஏற்க மறுத்த சரித்திரப் புகழ் வாய்ந்த செய்தியைக் கவனிக்க மறந்துவிட்டிருக்கிறோம் என்பதையும் சுட்டிக் காட்ட விழைகிறேன்.

டிஸ்கி : பதினெட்டுப் பட்டிக்கும் பஞ்சாயத்துப் பண்ணும் நாட்டாமையின் பேரனாக்கும் நான்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More