April 28, 2010

கிரிப்டோக்ராஃபி

கிரிப்டோக்ராஃபி என்றால் தெரியுமல்லவா? தகவல்களை மறைத்துப் பரிமாற்றிக்கொள்ளும் முறை பற்றியப் படிப்பு. மறைத்து என்றால் சங்கேதங்களாக இருக்கலாம். குறியீடுகளாக இருக்கலாம், விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது டான் ப்ரௌன் நாவல்களிலோ வருவது போல புதிர்களாகவும் இருக்கலாம். இன்றும் கிராமங்களில் ஜாடை பேசுவது என்று ஒரு வழக்கு உண்டு. வெளியாருக்குத் தெரியாத மாதிரி(சில சமயம் தெரியும் மாதிரியும்) வார்த்தைகளை அமைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் பேசுவார்கள். இவ‌ற்றையெல்லாம் கிரிப்டோக்ராஃபியில் சேர்ப்பார்க‌ளா என்று தெரிய‌வில்லை. ஆனால் கிரிப்டோக்ராஃபி என்று முறைப்ப‌டி வ‌கைப்ப‌டுத்தியுள்ள‌து நான்காயிரம் ஆண்டுக‌ளுக்கு முந்தைய மெசபடோமிய எழுத்துக்கள் சிலவற்றை. எனது அபிப்ராயப்படி முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு இடையூறாக‌ மூன்றாவது மனிதன் வந்த அந்த கணத்தில் கிரிப்டோக்ராஃபி பிறந்திருக்க வேண்டும். :)

இந்தச் சங்கேதங்கள், குறியீடுகள் பற்றிய படிப்புக்கு ஆங்கிலத்தில் கிரிப்டாலஜி/கிரிப்டோக்ராஃபி என்றும் தமிழில் மறையீட்டியல் என்றும் பெயர். கிரிப்டோ(ரகசியமாக) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது தான் கிரிப்டோக்ராஃபி. இந்த ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. 1. என்கிரிப்ஷன் 2. ட்ரான்ஸ்மிஷன் 3. டிகிரிப்ஷன்.

நீங்கள் மறைக்க வேண்டிய தகவலை (Plain Text) யாருக்கும் புரியாத எழுத்துக்களாக(Cypher Text) மாற்றுவது என்கிரிப்ஷன். என்கிரிப்ட் செய்ய உப்யோகப்படுத்தப்படும் வழிமுறையை "கீ" என்பார்கள். ட்ரான்ஸ்மிஷன் என்பது மாற்றப்பட்ட செய்தியை உங்கள் பார்ட்னருக்கு அனுப்புவது. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட முறை புறாக்காலில் கட்டி அனுப்புவது. நிறைய அவகாசமிருந்தால் தெரிந்தவர்களின் தலையை மொட்டையடித்து, அதில் சைஃபர்டெக்ஸ்ட்டை பச்சை குத்தி முடி வளர்ந்த பிறகு கூட அனுப்பலாம்.
டிக்ரிப்ஷன் என்பது சைஃபர்டெக்ஸ்ட்டை உடைத்து அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுவது. பொதுவாக என்கிரிப்ட் செய்ய மற்றும் உடைக்க ஒரே "கீ" யை உபயோகிப்பார்கள்.

ரொம்ப‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்கொள்ளாமல் சில என்கிரிப்ஷன் வகைகளைப் பார்ப்போம். மிக‌ எளிய முறை பதிலீடு (Substitution). அதாவ‌து ஒரு எழுத்துக்குப் ப‌தில் குறிப்பிட்ட‌ இன்னொரு எழுத்து.

உதார‌ண‌ம். Army is In. இந்தச் செய்தியை dupblvlq என்று மாற்றலாம். எப்படியென்றால் Aக்கு பதில் மூன்று எழுத்து தள்ளி இருக்கும் d ஐ எழுதிக் கொள்ள வேண்டும். R க்கு பதில் u. இந்த மாதிரி.... இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். செய்தியைப் பெறும் படைத்தளபதிக்கு இந்த முறை எத்தனை எழுத்துத் தள்ளியிருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.

இன்னொரு முறை:

உதாரணத்துக்கு உங்கள் காதலிக்கு Meet Me In Inox at three என்ற செய்தியை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கீழ்கண்டவாறு எழுதுங்கள். முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள். இரண்டாவது வரியில் அடுத்த ஐந்து.....



எழுதிய முறைக்கு மாறாக மேலிருந்து கீழாக படியுங்கள். Meoheixrenaetitemnt என்று வரும். அவ்வளவுதான். இதை உங்க்களுக்குத் தோதான ட்ரான்ஸ்மிஷன் முறையில் அனுப்புங்கள். பின் விளைவுகளுக்குக் கம்பெனி பொறுப்பல்ல.

பழங்காலத்தில் கிரிப்டோக்ராஃபி என்று பெரிதாக எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், சாதாரண எழுத்துருக்களே போதுமானதாக இருந்தன. கல்வியறிவு வளர வளர, தகவல்களைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் தேவைப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் கிரிப்டோக்ராஃபி. குறியீடுகள், கலைத்துப் போடப்பட்ட எழுத்துக்கள், ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்து என மாற்றம் காண ஆரம்பித்தது இந்தத் துறை. ஒவ்வொரு என்கிரிப்ஷன் முறையும் வெகு சீக்கிரத்தில் காலாவதியாக ஆரம்பித்தது. அதுவும் கணிப்பொறியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெர்முடேஷன் காம்பினேஷன் முறை, மற்றும் புள்ளிவிவர (ப்ளைன்டெக்ஸ்ட் எந்த மொழி என்று தெரிந்தால் அந்த மொழியில் அதிகமாக சேர்ந்து வரும் எழுத்துக்களை வைத்து டிகிரிப்ட் செய்ய ஆகும் நேரத்தைக் குறைப்பது. உதாரணத்துக்கு ஆங்கிலம் என்றால் the, -ent, -nd இப்படி) அடிப்படையிலெல்லாம் சைஃபர்டெக்ஸ்ட் உடைக்கப்பட்டது அதனால் மிகச் சிக்கலான என்கிரிப்ஷன் முறைகள் தேவைப்பட்டன. இப்பொழுதெல்லாம் Bits, Bytes, Hexa Decimal என்று ரொம்பவே ஃபிலிம் காட்டுகிறார்கள்.

கிரிப்டோக்ராஃபியின் முக்கிய நோக்கம் தகவல் பாதுகாப்பு! தகவல் திருடப்படாமல் இருக்க உங்கள் மின்னஞ்சலை என்கிரிப்ட் செய்து அனுபுதல் முதற்கொண்டு பாஸ்வேர்டு, ஏ.டி.எம் பின் நம்பர், டிஜிட்டல் கையெழுத்து, பெறப்படும் தகவல் நடுவில் எங்க்கேயும் மாற்றப்பட்டதா என்று சரிபார்த்தல், அனுப்பியது இன்ன ஆள் தான் என்று சரிபார்த்தல் என்று கிரிப்டோக்ராஃபியின் பயன்பாடுகள் எராளம்.

இன்று பிரபலமான கிரிப்டோக்ராஃபி முறைகளில் சில SHA1 & Md5 என்றான் நண்பன். Md5 முறையில் "Karki is getting married Soon" என்ற வாக்கியத்தை என்கிரிப்ட் செய்தேன்.

bda25b3704807770ebf1de41e2461c41 என்று வருகிறது!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More