July 25, 2010

அசின், இலங்கை, நடிகர் சங்கம்,மீனவர்கள்....


அசின் சர்வதேசத் திரைப்பட விழாவுக்காக இலங்கை சென்று வந்தாலும் வந்தார், அந்த விஷயத்தை வைத்து ஏகப்பட்ட பேர் தமிழ்ப்பற்றை வெளிக்காட்டிக்கொண்டிருந்தார்கள். அசினை தமிழ் சினிமாவை விட்டே ஒதுக்கி வைக்க வேண்டும், தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டிருந்தார்கள். மீனவ நண்பர்கள் கூட விவேக் ஓப்ராய் மற்றும் அசினுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்று கூடிய நடிகர் சங்கத்தில் இலங்கை செல்ல நடிகர் நடிகைகளுக்குத் தடை விதிக்கக் கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகப் படிக்கக் கிடைத்தது.

Do I miss something?

என்னவாயிற்று தமிழுணர்வு? அடப்போங்கப்பா.... நாமும் நம் தமிழுணர்வும். கேட்க வேண்டியவர்களைக் கேட்க முடியவில்லை, அசினுக்கும் விவேக் ஓப்ராய்க்கும் தடை விதிக்கிறார்களாம். சாவிலும் அரசியல் ஆதாயம் தேடும் நம்மவர்கள் போக்கு, அருவருப்பாயிருக்கிறது.

What say you ?

July 19, 2010

பார்டர் கட்டலாம் வாங்க - ஃபோட்டோஷாப்

பார்டர் என்றாலே பிரச்சனை தான். ஆனால் புகைப்படங்களைப் பொறுத்தவரை பார்டர் ஒரு படத்தை எடுப்பாக்கிக் காட்டும். உதாரணத்துக்கு ஒரு ஆறு அல்லது கடலின் புகைப்படம்.... பார்டர் இல்லாமல் தண்ணீர் படத்தைவிட்டு வழிந்தோடும் உணர்வைத் தரும். (என்னது அப்படியெல்லாம் இல்லையா? எனக்கு அப்படித் தான் தோன்றித் தொலைகிறது). போகட்டும்! பார்டருடன் கூடிய புகைப்படம் தனி அழகு தான்.
ஃபோட்டோஷாப்பில் மிக எளிய டெக்னிக் மூலம் இந்த பார்டரைக் கொண்டு வரலாம்.

1) தேவையான படத்தை PS இல் திறக்கவும். படத்தின் சைஸ் தெரிந்திருக்க வேண்டும்.

2) கேன்வாஸ் சைசை தெரிவு செய்து கொள்ளுங்கள். Image > Canvas Size

3) கீழ்கண்ட உரையாடல் பெட்டி திறக்கும். பார்டரின் நீள அகலங்களை Width மற்றும் Height ல் நிரப்பவும். Anchor இல் எல்லா அம்புகளும் வெளிநோக்கி இருக்கட்டும். பார்டர் கலரை Canvas Extension Color இல் தெரிவு செய்து கொள்ளலாம்

4) எல்லாவற்றையும் தெரிவு செய்து ஓ.கே கிளிக்கினால் அழகான பார்டர் ரெடி.

கீழிருக்கும் படத்தைப் பாருங்கள்!


சில படங்களுக்கு இரண்டு பார்டர்கள் கொடுத்தால் அழகாக இருக்கும்.


ஃபோட்டோவுக்கு காண்ட்ராஸ்ட்டாக மெல்லிய பார்டர் ஒன்று. அதற்கு மேல் ஃபோட்டோவின் கலரை ஒட்டி திக்கான பார்டர் ஒன்று... முதலில் வெள்ளை.. அடுத்து கரும்பச்சைக்கு அதே வழிமுறை.

சில ஃபோட்டோக்களில் நான்கு பார்டர் வரை பார்த்து இருக்கிறேன். படத்தை விட பார்டர் பெரிதாக இருக்கும்.. :)

நன்றி!

July 15, 2010

தாயம்

தாயம்... கிட்டத்தட்ட மறக்கப்பட்ட இந்த ஆட்டம் தான் எங்கள் ஊரின் தேசிய விளையாட்டு. சில வருடங்களுக்கு முன் வரை பொழுது போக்க இருந்த ஒரே அம்சம். அதனாலேயே ஊரில் அனைவரும் இதை விளையாடிப் பழகியிருப்பார்கள். ஆண் பெண் என்ற பேதமெல்லாம் கிடையாது.

என்னதான் அனைவரும் விளையாடினாலும் பாட்டிகள் விளையாடும் போது நிச்சயம் கலாட்டா தான். அவர்களுக்கு வீட்டில் வேலையென்று பெரிதாக எதுவும் இருக்காது. வயலிலும் போய் வேலை செய்ய முடியாது. எவ்வளவு நேரம் தான் தனித்திருப்பது? கையில் தாயக்கட்டையை வைத்துக் கொண்டு சரியான மீனுக்காகக் காத்திருக்கும் கொக்கைப் போலப் வாசல் பார்த்திருப்பார்கள். வீட்டு வாசலில் யாராவது தென்பட்டால் குஷி பிறந்துவிடும். தேர்ந்த மேலாளரின் பேச்சுத் திறமையுடன் அவர்களை விளையாட்டுக்கு அழைப்பார்கள். அவ்வளவு சீக்கிரம் படியாத ஆட்களாய் இருந்தால், அதற்கும் ஒரு தந்திரம் இருக்கிறது.

"சின்னத்தாயி, காப்பி வெக்கட்டுமா? " இது தான் தூண்டில்
"வெய்யிக்கா..." இது மாட்டப் போகும் மீன்.
"சரி, காப்பி காயுற வரைக்கும் ஒரே ஒரு ஆட்டம்" - அவ்வளவு தான். கண்டிப்பாக மீன் மாட்டிவிடும்.

இந்த விளையாட்டு நிறைய கலைச்சொற்களைக் கொண்டுள்ளது(ஊருக்கு ஊர் பெயர் மாறுபடும்). நகர்த்தப்படும் காய் சில சமயம் நாய் என்று அழைக்கப்படும். அது ஆடுபவர்களின் மனநிலையைப் பொறுத்தது. மலை, சோறு, பழம் எடுத்தல், வெட்டுதல், விருத்தம் எல்லாம் தெரியுமா? விளையாட்டில் கூழ் ஊற்றுவது என்று ஒரு கான்செப்ட் உண்டு. எதிரணியினர் நம் காய்களை வெட்டுவதற்கு முன்னர் நாம் அனைத்துக் காய்களையும் பழமாக்கினால், நமக்கு மாபெரும் வெற்றி. அதாவது எதிரணியினர் கூழ் குடித்தல் என்ற பரிதாபகரமான நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவார்கள். அந்த நிலையிலிருந்து மீள தொடர்ந்து ஏழு ஆட்டங்கள் ஜெயிக்க வேண்டும். அல்லது அவர்கள் நமக்கு கூழ் ஊற்ற வேண்டும். கூழ் ஊற்றினால் வரும் எக்காளம் இருக்கிறதே, பொக்கைச் சிரிப்புத் தான்.

வீர விளையாட்டு என்றால் அனல் பறக்காமலா? விளையாட்டின் விதி முறைகள் ஊருக்கு ஊர் மாறுபடும். இரண்டு வெவ்வேறு ஊர்ப் பாட்டிகள் விளையாட உட்கார்ந்தால் அடிதடியே நடக்கும். அவரவர் விதி முறைகள் அவரவருக்கு உசத்தி தானே? பின்பு யாராவது ஒரு மத்தியஸ்தர் இடையில் புகுந்து, இரண்டு ஊரின் விதிமுறைகளையும் கலந்து ஒரு புது விதிமுறையை உருவாக்கித் தர வேண்டியிருக்கும். அவ்வளவு சீக்கிரம் பழக முடியாதல்லவா? அரை மனதுடனேயே விளையாடுவார்கள்.

கிரிக்கெட் என்றால் சச்சின் என்று ஒரு நட்சத்திரம். அது போல இந்த விளையாட்டிலும் நட்சத்திர வீராங்கனை இருப்பார்(கொஞ்சம் ஓவர் தானோ?). அவர் கட்டை உருட்டும் போது என்ன கேட்கிறாரோ அது விழும். தாயம் என்றால் தாயம். ஆறு என்றால் ஆறு. இப்படி ஒழுங்காக விளையாடி ஜெயிப்பவர்களும் உண்டு. என் பாட்டியைப் போல ஏமாற்றி ஜெயிப்பவர்களும் உண்டு,.பன்னிரெண்டு விழுந்தால் பதினைந்து கரம் தள்ளி வைப்பது, விழாத தாயத்தை விழுந்ததாகச் சாதிப்பது, யாரும் பார்க்காத போது காயை நகர்த்தி வைப்பது என்று எக்கச்சக்க தில்லுமுல்லுகள். அதுவும் நான் எதிரணியில் இருந்தால் இன்னும் சந்தோஷம். நிச்சயமாகத் தோல்விதான் எனக்கு.

தாயக் கட்டைப் பெரும்பாலும் கட்டையில் இல்லாமல் வெண்கலத்திலோ இரும்பிலோ இருக்கும். கோயில் திண்ணையில் தாயம் உருட்டும் போது எழும் ஜலீர் சத்தம் ஊர் முழுக்கக் கேட்கும். அந்தச் சத்தத்தைக் கேட்டே ஜமா சேர்ந்து விடும். ஆனால் அந்தச் சத்தத்தைக் கேட்டே வெகு நாட்களாகிறது. கோயில் திண்ணையில் வரையப்பட்ட தாயக்கரம் பூசி மொழுகப்பட்டு விட்டது. வீட்டுத் தாழ்வாரத்தில் இருக்கும் கேட்பாரற்றுக் கிடக்கிறது. எல்.கே.ஜி படிக்கும் அண்ணன் மகள் இது என்ன என்று கேட்க ஆரம்பித்திருக்கிறாள். விவரம் தெரிந்ததும் விளையாடப் பழக்க வேண்டும். :)

உங்களுக்குத் தெரியுமா விளையாட?

July 10, 2010

மதராசப்பட்டினம்



முதல் நாள் பார்த்தே ஆக வேண்டும் என்று ரொம்ப நாட்கள் காத்திருந்து, அடித்துப் பிடித்து ரிசர்வ் செய்து பார்த்தப் படம். கேட்டுக் கேட்டுத் தீர்த்தப் பாடல்கள், ஆவலைத் தூண்டும் விளம்பரங்கள் என்று எத்தனையோ காரணங்கள்!! காத்திருப்பும் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. இயக்குனர் விஜய்க்கு நன்றிகள், பாராட்டுக்கள்.

இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்தில் நடக்கும் நெகிழ்வான, கனமான ஒரு காதல் கதை. சலவைக்கார மல்யுத்த வீரனாக ஆர்யா. பிரிட்டிஷ் சீமாட்டியாக ஏமி ஜாக்ஸன்(பொண்ணு Miss World Teen !!!!). இருவருக்குமிடையே காதல். சந்தர்ப்பவசத்தால் 1947ல் பிரிகிறார்கள். காதலி இங்கிலாந்து போக நேரிடுகிறது. கிட்டத்தட்ட 60 வருடம் கழித்து ஆயாவாக தன் பழைய காதலனைத் தேடிக் கொண்டு(கணவன் இறந்த பிறகு தான் :) ) சென்னை மன்னிக்கவும், மதராசப்பட்டினம் வருகிறார். தேடலையும், காதலையும் அழகான திரைக்கதை மூலமாக அருமையாகச் சொல்லியிருக்கிறார் இயக்குனர். முதல் பாதி முழுக்க காமெடி சரவெடி. இந்தியாவுக்கு சுதந்திரம் என்று அறிவிக்கும் போது இடைவேளை விடுகிறார்கள். இரண்டாம் பாதியில் கேசிங். வழக்கமான க்ளைமாக்ஸ் என்றாலும் அருமை. ஒன்ற முடிகிறது. காட்சிகள் என்று சொல்ல ஆரம்பித்தால் நிறைய சொல்ல வேண்டும்.

ஆர்யா, ஏமி இருவரும் அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார்கள். ஹனீஃபாவைப் பற்றிச் சொல்லியே தீர வேண்டும். மனிதர் வரும் ஒவ்வொரு ஃப்ரேமுக்கும் தியேட்டர் அதிர்கிறது. அவர் இன்னும் வெகு நாட்கள் நம்மோடு இருந்திருக்க வேண்டும். நேதாஜியைப் பின்பற்றும் குஸ்தி வாத்தியாராக வரும் நாசர் முறுக்கிக் கொண்டு திரிகிறார். பாலா சிங், எம்.எஸ். பாஸ்கர் இருவரும் மிகக் குறைவாகவே வந்தாலும் நிறைவு.

படத்தின் முக்கிய பலம் கலை(செல்வகுமார்), ஒளிப்பதிவு(நீரவ் ஷா) மற்றும் இசை(ஜி.வி). மூவரும் அருமையான பங்களிப்பைத் தந்திருக்கிறார்கள். சில இடங்களில் உறுத்தினாலும் சி.ஜியும் நன்றாக இருக்கிறது. Again, பீரியட் படம் எடுப்பது கடினமானது. பணம் ஒரு முக்கியக் காரணி. காட்சிகள், உடைகள், வசனம், சம்பவங்களின் தொடுப்பு இப்படி எல்லாவற்றிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். இந்தப் ப்டத்திலும் உழைப்பு தெரிகிறது. இயக்குனர் விஜய் ரொம்ப அமைதியானவராக்த் தெரிந்தார். ஆனால், படத்தில் அடித்து ஆடியிருக்கிறார்.

பழைய சென்னையைப் பார்க்க நிறைவாக இருக்கிறது. இந்தப் படம், பல்வேறு படங்களை நினைவு படுத்தினாலும் அதையெல்லாம் வசதியாக மறந்துவிடலாம். சில காட்சிகளின் நீளமும் பெரிதாக பாதிக்கவில்லை.

படம் எனக்குப் பிடித்திருக்கிறது. உங்களுக்கும் பிடிக்கும்.

டிஸ்கி : ஏமிக்கு சென்னையில் ரசிகர் மன்றம் ஆரம்பித்தாகிவிட்டதா?

July 07, 2010

மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர்



நந்தவம்சத்து அரசவை அன்று பரபரப்பாக இருந்தது. அவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் இருந்தார் அந்த அந்தணர். சாதாரண அவமானமா அது? பழி தீர்த்தே ஆக வேண்டும். நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார் அவர். மனதில் பல திட்டங்களுடன் பாடலிபுத்திரத்திலிருந்து(இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். இது தான் இந்தியாவின் முதல் பேரரசின் வித்து. அந்த அந்தணர் சாணக்கியர்(கௌடில்யர்). இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்தன்(ர்). 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ராஜவம்ச ஆணுக்கும் சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்த இவர் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டார் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எந்தப் பின்புலமுமின்றி காட்டில் திரிந்து கொண்டிருந்தவர் பிரம்மாண்டமான ஒரு பேரரசை நிறுவியது வரலாறு.

கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்த வம்சம்) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்த அரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார். சந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கமுடியாமல் வீழ்ந்தது. நந்தவம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் ஆம் வயதில்(கி.மு 321) மகத அரசனாக முடிசூடினார் சந்திரகுப்தர். மன்னிக்கவும்... சந்திரகுப்த மௌரியர். ஆம். மௌரிய வம்சம் இவ்வாறாக உதயமாகிறது. இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா(சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து. 

அலெக்சாண்டர் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில் பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்ததும்  தெரிந்திருக்கும். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்டர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுச்சிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் போனது. தவிர செலுக்கஸின் மகளையும் மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கில் மலை நாடுகளும் மட்டும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia :) ) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ஒன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் கொண்டது அவர் படை.... விஸ்தீரணம் புரிந்திருக்கும்.

கி.மு 300ல் அவரது ராஜ்ஜியம்




சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல! அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப் பட்டது. வர்த்தகத்திலும் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன. 

சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸின் "இண்டிகா" மூலமும் அறியலாம். சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகாவில் இருக்கும் சரவணபெல்கோலாவில் மோன நிலையடைந்தார். 

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகன் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்கம் (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடங்கள் கழித்து(கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது. 

{}

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க! 

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்(ராணிகளைப் பற்றியும் எழுதலாம் கார்க்கி!)

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள் 

1) தமிழ்ப்பறவை - வானம் வசப்படும்
2) கார்க்கி - சாளரம்
3) ராஜூ(முன்னாள் டக்ளஸ்)
4) பிரசன்னா - கொத்து பரோட்டா
5) ஜில்லு - ஜில்தண்ணி
6) கார்த்திக் - வானவில் வீதி. 

இவர்கள் தான் என்றில்லை. விருப்பமிருக்கும் அனைவரும் ஸ்டார் மீஜிக்.


டிஸ்கி 1: இந்தப் பதிவு நிறைய பேரைச் சென்றடைய உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும்..... 
டிஸ்கி 2: வரலாறு எப்பொழுதுமே குழப்பமானது. ஒரே புத்தகத்தில் கூட ஒரே சம்பவத்துக்கு பல்வேறு ஆண்டு சொல்லப்படும். இந்தக் கட்டுரையில் தவறேதும் இருந்து அதைத் தெரிவித்தால் தன்யனாவேன்.

July 01, 2010

புகைப்படம் - 02-07-2010

அபி


இந்தப் பூ பேரு என்னங்க?



கல்லிலே கலை வண்ணம்.

புத்தம்புது காலை...



இன்றைக்கு ஏனிந்த ஆனந்தமே..


உங்கள் மேலான கருத்துக்கள் மேம்படுத்திக்கொள்ள உதவும். Start Music!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More