July 09, 2009

அவள் பெயர்...

வெள்ளி மாலை 3 மணி. அலுவலகத்தில் அமர்ந்து கணிணியை சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் நண்பன் அழைத்தான்.
"மச்சி, இன்னிக்கு போகலாம் டா" என்றான்
"நெசமாத்தான் சொல்றியா?" நம்ப முடியாமல் கேட்டேன்.
"சத்தியமாடா, சீக்கிரம் வரப் பார்" என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான்

எனக்கு பரபரப்புத் தொற்றிக்கொண்டது. எத்தனையோ முறை அவளைப் பற்றி சிலாகித்துக் கூறியிருக்கிறான். அனுபவங்களைக் கதை கதையாய் சொல்லியிருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட என்னை அழைத்துச் சென்றதில்லை. இதை வேறு யாரிடமும் கேட்கவும் தயக்கமாயிருந்தது. நான் மட்டும் தான் பாக்கி. நண்பர்கள் எல்லோரும் ஏற்கெனவே... விடுங்கள் அது எதற்கு இப்போது? ஒரு வழியாக இன்றைக்குத் தலைவருக்கு மனம் இறங்கியிருக்கிறது. அது போதாதா?
*
ஆறரைக்கெல்லாம் அறையில் தயாராக இருந்தேன். நண்பன் வந்தான். "என்னடா போலாமா?"
"போலாம் மச்சி" உடனே சொன்னேன். என் உடுப்பைப் பார்த்தவன் நகைத்தான்.
"என்னடா இப்படி ட்ரெஸ் பண்ணியிருக்க? அங்க போற(து)க்கு எல்லாம் ஒரு தனி டைப்பான ட்ரெஸ் இருக்குடா" என்றான். அவன் அறிவுரையின் படி தயாரானேன்.
*
போகும் வழியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று விலாவாரியாக வகுப்பெடுத்தான். நானும் பவ்யத்துடன் கேட்டுக்கொண்டேன். இடம் நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது. அதே சமயம் "இன்றைக்கே அவசியமா?" என்றும் தோன்றியது. "சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே!" என்ற அசட்டு தைரியம் உந்தித் தள்ளியது.
*
உள்ளே நுழைந்தோம். ஒரு மார்க்கமான வெளிச்சம் வரவேற்றது. "சரி தான், இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட வெளிச்சம் தான் சரி போல" என்று தோன்றியது.
அருகில் வந்து நின்ற "அவனிடம்" அவள் பெயரைச் சொன்னான் நண்பன். புதுப்பழக்கம் அல்லவா? நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். சிக்கென்று கச்சிதமாக, அழகாக, செக்சியாக...
*
எல்லாம் முடிந்து வெகுநேரம் கழித்து வெளியே வந்தோம். "மச்சி சூப்பர்டா, ஒரு மாதிரி இருக்குடா" என்றேன்.
"நல்லா இருக்கு இல்ல? அதுக்கு தான் காசு செலவானாலும் பரவாயில்லன்னு இங்க வரேன்" என்றான். உற்சாகத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்தோம்.

ம், சொல்ல மறந்துவிட்டேனே, அவள் பெயர்.......... டக்கீலா!

டிஸ்கி : அவளை பற்றி.. சாரி, டக்கீலாவைப் பற்றி அறியாதவர்கள் என் மானசீக குருநாயர் கார்க்கியானந்தா சுவாமிகள் எழுதியதை இங்கே படிக்கவும்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More