July 07, 2010

மன்னாதி மன்னன் - சந்திரகுப்த மௌரியர்



நந்தவம்சத்து அரசவை அன்று பரபரப்பாக இருந்தது. அவையில் நேர்ந்த மிகப்பெரிய அவமானத்தில் கூனிக் குறுகிப் போய் இருந்தார் அந்த அந்தணர். சாதாரண அவமானமா அது? பழி தீர்த்தே ஆக வேண்டும். நந்த வம்சத்தை வேரறுக்கும் வன்மத்துடன் அவையை விட்டு வெளியேறினார் அவர். மனதில் பல திட்டங்களுடன் பாடலிபுத்திரத்திலிருந்து(இன்றைய பாட்னா) தட்சசீலத்துக்குத் திரும்பிக் கொண்டிருந்த போது, காட்டுப்பகுதியில் வேட்டையாடிப் பிழைக்கும் பதின் வயது இளைஞனைச் சந்தித்தார். அவனிடம் தேர்ந்த தளபதிக்குரியத் திறமைகளைக் கண்ட அவர் அவனையே தனது நோக்கத்துக்குப் பயன்படுத்திக் கொள்ளத் தீர்மானித்தார். இது தான் இந்தியாவின் முதல் பேரரசின் வித்து. அந்த அந்தணர் சாணக்கியர்(கௌடில்யர்). இளைஞன் மௌரியப் பேரரசை நிறுவி இப்போதைய இந்தியாவை விடப் பெரிய நிலப்பரப்பை ஆண்ட சந்திரகுப்தன்(ர்). 2300 வருடங்களுக்கு முந்தைய வரலாறு இது. தெளிவான ஆதாரங்கள் இல்லாமையால் சந்திரகுப்தரின் ஆரம்ப கால வாழ்க்கையில் பல்வேறு குழப்பங்கள் நிலவுகின்றன. ராஜவம்ச ஆணுக்கும் சூத்திரப் பெண்மணிக்கும்(முரா) பிறந்த இவர் அரண்மனையை விட்டுத் துரத்தப்பட்டார் என்பார்கள் சிலர். பரம்பரையாகவே வேடர் என்றும் சொல்வார்கள் சிலர். எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எந்தப் பின்புலமுமின்றி காட்டில் திரிந்து கொண்டிருந்தவர் பிரம்மாண்டமான ஒரு பேரரசை நிறுவியது வரலாறு.

கல்வி, அரசியல், போர்த்தந்திரங்கள் போன்ற ஒரு தேர்ந்த அரசனுக்குரிய அனைத்தையும் சாணக்கியரிடமிருந்து கற்றார் சந்திரகுப்தர். சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில், ஒரு நல்ல நாளில் சிறு படையைத் திரட்டி மகத தேசத்தின்(நந்த வம்சம்) எல்லைப்புறங்களைக் கைப்பற்றினார். முதல் வெற்றி. அந்த சமயம் நந்த அரசு மிகவும் வலுவிழந்திருந்தது. முதல் வெற்றி தந்திருந்த உற்சாகத்துடன் பாடலிபுத்திரத்தை நோக்கி முன்னேறினார். சந்திரகுப்தரின் வீரத்துக்கு முன்னால் நந்த வம்சம் நிறைய நேரம் நிலைக்கமுடியாமல் வீழ்ந்தது. நந்தவம்சம் மண்டியிட்டது. தனது இருபதாம் ஆம் வயதில்(கி.மு 321) மகத அரசனாக முடிசூடினார் சந்திரகுப்தர். மன்னிக்கவும்... சந்திரகுப்த மௌரியர். ஆம். மௌரிய வம்சம் இவ்வாறாக உதயமாகிறது. இந்த மௌரியர் என்ற சொல்லுக்கும் இரண்டு காரணங்களைச் சொல்வார்கள். தாய் முராவின் பெயரால் மௌரியா வந்தது என்பது ஒரு கருத்து. மயில் வளர்ப்பவர்களால் சந்திரகுப்தர் வளர்க்கப்பட்டார். அதனால் மயூரா(சமஸ்கிருதத்தில் மயிலின் பெயர்.) என்ற வார்த்தையிலிருந்து வந்தது மௌரியா என்பது ஒரு கருத்து. 

அலெக்சாண்டர் படையெடுப்பில் வட-மேற்கு இந்தியாவில் இருந்த சில் பகுதிகள் அவர் வசம் போனதும் கி.மு 323ல் மரணமடைந்ததும்  தெரிந்திருக்கும். அவர் மரணத்துக்குப் பிறகு அவர் வென்ற பகுதிகளையெல்லாம் அவரது தளபதிகள் ஆண்டு கொண்டிருந்தார்கள். இந்தியாவின் கிரேக்கக் காலனிகளை செலுக்கஸ் நிக்டர் என்ற தளபதி ஆண்டு கொண்டிருந்தார். கி.மு 317ல் செலுக்கஸ் மீது படையெடுத்தார் சந்திரகுப்தர். இந்தப் போருக்குப் பிறகு ஏற்பட்ட உடன்படிக்கையின் பேரில் செலுக்கஸ் ஆண்டு கொண்டிருந்த ஆஃப்கானிஸ்தான், பலுச்சிஸ்தான் வரை சந்திரகுப்தர் வசம் போனது. தவிர செலுக்கஸின் மகளையும் மணம் முடித்தார். வட இந்தியாவில் வலிமையான அரசை நிறுவிய சந்திரகுப்தரின் பார்வை தென்னிந்தியா பக்கம் திரும்பியது. விந்திய மலைச் சாரல் தாண்டி தக்காண பீடபூமி வரை அவரது ராஜ்ஜியம் விரிவடைந்தது. இந்தியாவில் தமிழகமும், கலிங்கமும், வட கிழக்கில் மலை நாடுகளும் மட்டும் அவர் வசம் இல்லாதிருந்தன. பதிலாக மேற்கில் பெர்சியாவின் எல்லை வரை அவரது ராஜ்ஜியம் பரவியிருந்தது. பெர்சிய இளவரசி (Princess of Persia :) ) ஒருத்தியையும் அவர் மணந்ததாகச் சொல்வார்கள். சந்திரகுப்தரின் இந்த மாபெரும் வெற்றிக்கு அவரது படை முக்கியக் காரணம். ஒன்றரை லட்சம் வீரர்கள், 30,000 குதிரைகள், 9000 யானைகள், 8000 தேர்கள் கொண்டது அவர் படை.... விஸ்தீரணம் புரிந்திருக்கும்.

கி.மு 300ல் அவரது ராஜ்ஜியம்




சந்திரகுப்தரை மன்னாதி மன்னர் என்று சொல்லக்காரணம் அவர் அடைந்த வெற்றிகளோ அவர் ஆண்ட நிலப்பரப்போ மட்டும் அல்ல! அவரது ஆட்சிமுறையும் கூட அவர் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற ஒரு காரணம். இன்றைய ஆட்சி முறையில் இருக்கும் துறைகள் போல, ஆறு முக்கியத் துறைகள் வகுக்கப்பட்டன. வணிகம்/தொழில், உள்கட்டமைப்பு, புள்ளியியல், சுற்றுலா உள்ளிட்ட துறைகள் அவை. நீதியும் காவலும் தழைத்தோங்கியிருந்தன. சாணக்கியரின் வழிகாட்டுதலின் பேரில் முறையான நீதி மன்றங்கள் செயல்பட்டன. தண்டனைகள் கடுமையானவை. திருட்டு, வரி ஏய்ப்புக்குக் கூட மரண தண்டனை விதிக்கப் பட்டது. வர்த்தகத்திலும் பல வரைமுறைகள் செய்யப்பட்டன. முறையான அளவைகள், வரிகள் கொண்டுவரப்பட்டன. 

சந்திரகுப்தரின் ஆட்சியை இரண்டு புத்தகங்கள் மூலம் அறியலாம். எப்படி ஆண்டார் என்பதை சாணக்கியரின் "அர்த்த சாஸ்திரம்" மூலமும், அவர் ஆட்சியில் தேசம் எப்படி இருந்தது என்பதை கிரேக்கப் பயணி மெகஸ்தனிஸின் "இண்டிகா" மூலமும் அறியலாம். சந்திரகுப்தர் கடைசி நாட்களில் சமண மதத்தைத் தழுவினார். துறவியாக வாழ்ந்து வந்த சந்திரர் கி.மு 298ல் இன்றைய கர்நாடகாவில் இருக்கும் சரவணபெல்கோலாவில் மோன நிலையடைந்தார். 

சந்திரகுப்தரின் மகன் பிந்துசாரர், பேரன் அசோகன் என மூன்று தலைமுறை மௌரிய வம்சம் சிறப்பான ஆட்சியை அளித்தது. அசோகர் காலத்தில் தான் அதுவரை கைப்பற்றப்படாமல் இருந்த கலிங்கம் (ஒரிஸ்ஸா) வேட்டையாடப்பட்டது. அதன் பிறகு புத்த மதம், இலங்கை, சாலையோர மரம் என அசோகரது வாழ்க்கை நீளும். அசோகருக்குப் பிறகு வந்த மௌரிய அரசர்கள் வலிமையாக இல்லாததால் 50 வருடங்கள் கழித்து(கி.மு 180) மௌரியப் பேரரசு வீழ்ந்தது. 

{}

விக்கிப்பீடியாவில் தமிழ்க் கட்டுரைகளை அதிகம் வலையேற்றும் சிறு முயற்சியாக இந்தப் பதிவைத் தொடர்பதிவாக்கத் திட்டமிட்டிருக்கிறேன். ஆகவே, விருப்பமிருக்கும் அனைவரும் "மன்னாதி மன்னன்" என்றத் தலைப்பில் தொடரலாம். பின்வரும் விதிகளை மட்டும் கவனத்தில் கொள்க! 

1) வரலாற்றில் முக்கியமான எந்த மன்னரைப் பற்றியும் கட்டுரை இருக்கலாம்(ராணிகளைப் பற்றியும் எழுதலாம் கார்க்கி!)

2) விக்கியில் தமிழில் அதிகம் தகவல் இல்லாத மன்னராக இருக்க வேண்டும்.

3) கட்டுரையை முடித்ததும் விக்கியில் வலையேற்றவும்.

இந்தப் பதிவைத் தொடர நான் அழைப்பவர்கள் 

1) தமிழ்ப்பறவை - வானம் வசப்படும்
2) கார்க்கி - சாளரம்
3) ராஜூ(முன்னாள் டக்ளஸ்)
4) பிரசன்னா - கொத்து பரோட்டா
5) ஜில்லு - ஜில்தண்ணி
6) கார்த்திக் - வானவில் வீதி. 

இவர்கள் தான் என்றில்லை. விருப்பமிருக்கும் அனைவரும் ஸ்டார் மீஜிக்.


டிஸ்கி 1: இந்தப் பதிவு நிறைய பேரைச் சென்றடைய உங்கள் பொன்னான வாக்குகளை தமிழ்மணத்திலும், தமிழிஷிலும்..... 
டிஸ்கி 2: வரலாறு எப்பொழுதுமே குழப்பமானது. ஒரே புத்தகத்தில் கூட ஒரே சம்பவத்துக்கு பல்வேறு ஆண்டு சொல்லப்படும். இந்தக் கட்டுரையில் தவறேதும் இருந்து அதைத் தெரிவித்தால் தன்யனாவேன்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More