December 28, 2009

சுப்பிரமணீஈஈஈஈஈஈஈ....

ருக்குப் போயிருந்த போது, புதிதாக வாங்கி வந்திருந்த நாய்க்குட்டிக்கு நாலைந்து செங்குளவிகளைப் பிடித்து அரைத்துப் பாலில் கலந்து கொடுத்துக்கொண்டிருந்தார் பாட்டி. செங்குளவி பால்(!) குடித்தால் நாய் சத்தமாகவும், ஆக்ரோஷமாகவும் குரைக்கும் என்பது ஐதீகம். நாய்க்குட்டிகளின் மெனு பீஃப் பிரியாணி, கருவாடு, ரத்தம் என்று நீளும்.


ஊரில் ஒரு வீட்டுக்கும் மற்றொரு வீட்டுக்கும் சராசரியாக 200 மீட்டர் தூரம் இருக்கும். எல்லோருக்கும் அவரவர் வயலுக்குள் வீடு. பாதுகாப்புக் காரணங்களுக்காக, நாய் குரைப்பது மூன்று வீடுகளுக்காவது கேட்க வேண்டும்! அதற்காகத் தான் இந்தக் கொலைவெறி மெனு. நாயின் குரைப்புச் சத்தத்தை வைத்து கூட அதன் ஓனர் புகழப்படுவதால் நாய்க்கு தனி கவனிப்பு இருக்கும். வீட்டில் இருப்பவர்கள் பழைய சாதம் சாப்பிட்டாலும் நாய்க்கு விருந்து தான்.

வீட்டுக் காவலுக்கு இரண்டு, பட்டிக் காவலுக்கு ஒன்று என எங்கள் வீட்டில் மூன்று நாய்கள் இருந்தன. வயல்வெளி பக்கத்திலிருப்பதால் பாம்புகளெல்லாம் சர்வசாதாரணமாக வாசல் வரை வந்து போகும். அவற்றிலிருந்தெல்லாம் காப்பாற்றுவது நாய்கள் தான். வாசல் ஏறவிடாமல் குரைத்துக்கொண்டே நிறுத்திவைக்கும். பகலில் கட்டிப்போடப்பட்டிருக்கும் நாய்கள் இரவில் அவிழ்த்துப்படுகின்றன. அதனாலேயே இரவில் வீட்டுக்குச் சொந்தக்காரர்கள் கூட வருவதில்லை.

பொதுவாகவே ஊரில் நாய்களுக்கு மணி என்று தான் பெயர் வைப்பார்கள். சில நாய்களுக்கு அதுவும் இல்லை. கூப்பிடுவதென்றால் "கூச் கூச்" என்று கத்த வேண்டியது தான். இப்போது தான் ஜானி, டாமி என்கிற அளவுக்கு வந்திருக்கிறது. மூன்றாம் பிறை படம் பார்த்த என் தாத்தா "சுப்பிரமணி" என்று நாய்க்கு பெயர் வைக்க ஆசைப்பட்டிருக்கிறார். பக்கத்துக் காட்டுக்காரர் பெயரும் அதே தான் என்பதால் அந்த பெயர் கைவிடப்பட்டது.


பாம்புக்குக் கூட பயப்படாத அஞ்சா நெஞ்சன் நாய்கள், சின்ன விஷயத்துக்கெல்லாம் பயப்படும். எங்கள் மணிக்கு பட்டாசுச் சத்தமென்றால் அப்படியொரு பயம். வைக்கோல் போருக்குள் புகுந்துகொண்டு கப்சிப்! இரண்டு நாய்கள் எனிமீஸ் ஆக இருந்தால் கூட பிரச்சனையில்லை. ஒன்று சேர்ந்துவிட்டால் விளையாடுகிறோம் பேர்வழி என வெள்ளாமைக் காட்டையெல்லாம் துவம்சம் செய்துவிடும்.

டிஸ்கி : ஊரில் அனைவரும் லேடீஸ் நாய் வளர்ப்பதைத் தவிர்ப்பதால், ஜென்ட்ஸ் நாய்க்கெல்லாம் சங்கடம் தான். எப்போதாவது வழி தவறி ஊருக்குள் வரும் லேடீஸ் பப்பிக்கள் நிலைமை தான் பாவம்!

December 20, 2009

அரட்டை - 21-12-2009

”நான் அவன் இல்லை...” இது ஒரு வருடத்திற்கு முன்பு மும்பைத் தீவிரவாதத் தாக்குதலில் கைது செய்யப்பட்ட கசாப்பின் இப்போதைய பல்டி. தான் இந்திப் படங்களில் நடிக்க வந்ததாகவும், படம் பார்க்க சுற்றிக் கொண்டிருந்தவனைத் தவறுதலாகக் கைது செய்துவிட்டதாகவும், AK 47 ஐப் பார்த்ததே இல்லை என்றும் கூறியிருக்கிறான். மேலும், கொஞ்ச காலத்துக்கு முன் குற்றத்தை ஒத்துக்கொண்டது போலீசுக்கு பயந்ததனால் தானாம். ரயில் நிலைய வீடியோவில் தெரிவது, தன்னை மாதிரியே இருக்கும் தீவிரவாதியாம். எதிர்பார்த்தது தான். அவனுக்கென ஒரு வழக்கறிஞர், பாதுகாப்பு, விரும்பியவாறு அசைவு உணவு என ராஜமரியாதையுடன் நடத்தினால் இதுவும் சொல்வான், இன்னும் சொல்வான். செல்லரித்துப் போன அரசியலமைப்பு! அய்யா மன்மோகன் சிங் அவர்களே, கொஞ்ச நாளில் அவனைப் பத்திரமாக பாகிஸ்தானுக்கு அனுப்பிவிடுங்கள். இன்னும் கொஞ்ச பேரைச் சேர்த்துக்கொண்டு மீண்டும் வரட்டும். நாம் இப்படியே கருணை, ஜீவகாருண்யம், காந்தீயம் என்று பேசிக்கொண்டிருப்போம். வெகு விரைவில் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் என இந்தியாவைப் பிரித்து எடுத்துக்கொண்டு போகட்டும். ஜெய்ஹிந்த்!


{}


விதர்பா, கூர்க், பூர்வாஞ்சல், கூர்க்காலாந்து, காரைக்கால்,சௌராஷ்டிரா.... தனித் தெலுங்கானா அறிவிப்பைத் தொடர்ந்து ஒலிக்க ஆரம்பித்திருக்கும் கோஷங்கள் தான் இவை. மகாராஷ்ட்டிராவிலிருந்து விதர்பா, கர்னாடகத்திலிருந்து கூர்க், உத்திரப்பிரதேசத்திலிருந்து பூர்வாஞ்சல், மேற்கு வங்கத்திலிருந்து கூர்க்காலாந்து, புதுச்சேரியிலிருந்து காரைக்கால், குஜராத்திலிருந்து சௌராஷ்டிரா ஆகியவற்றைப் பிரித்து தனித்தனி மாநிலங்களாக ஆக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழ ஆரம்பித்திருக்கின்றன. உத்திரப்பிரதேசத்தை வேறு மூன்றாகப் பிரிக்கப்போகிறார்களாம். இந்நிலையில் தமிழகத்திலும் பிரிவினைக் கோரிக்கைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக முளைக்கின்றன. வெகு காலத்திற்கு முன்பு ஒலித்து அடங்கியது தான் இந்தக் குரல். இப்போது மீண்டும் எழ ஆரம்பிக்கிறது. குரல் கொடுத்திருப்பது பா.ம.க, மூவேந்தர் முன்னணிக் கழகம்(புவனேஸ்வரி புகழ்), வன்னியர் சங்கம் ஆகியவை. தென் மாநிலங்களின் வளர்ச்சிக்காக‌ மதுரையைத் தலைமையிடமாகக் கொண்ட ஒரு மாநிலத்தை அமைக்கக் கோருகின்றனர். சில மாதங்களுக்கு முன், கொங்கு மண்டலம் புறக்கணிக்கப்பட்டால் தன் மாநிலம் கோரப்படும் என கொங்குநாடு முன்னேற்றப் பேரவையும் எச்சரித்திருந்தது (!). சபாஷ்! மொழி ரீதியான பிரிவினைகள் போய் இப்போது ஜாதி ரீதியாகவும் தனி நபர் செல்வாக்குக்காகவும் பிரிவினை பேசும் அளவுக்கு வந்தாயிற்று.


நானும் எங்கள் சொந்தக்காரர்கள் மட்டும் இருக்கிற மாதிரி ஒரு ஏரியாவைத் தனி யூனியன் பிரதேசமாகக் கேட்கலாமென இருக்கிறேன். காசா பணமா? சும்மா கேட்போமே!


{}


கோபன்ஹேகன் மாநாடு தோல்வியில் முடிந்தது வருத்தத்தைத் தருகிறது :(


{}


நம்மில் பலர் ரெக்கார்ட் டான்ஸ் பார்த்திருப்போம். முன்பு வெளிப்படையாகவும், தற்போது மிகுந்த பாதுகாப்புக்கிடையிலும் நடத்தப்படும் கலைச் சேவை. இப்போது புது அவதாரம் எடுத்திருக்கிறது. மானாட மயிலாட, ராணி ஆறு ராஜா யாரு போன்ற நடன நிகழ்ச்சிகள் மூலம். ரெக்கார்ட் டான்ஸ் பார்க்க முடியாதவர்கள் இதைப் பார்க்கலாம். ஆடுபவனின் மனைவியும், ஆடுபவளின் கணவனும் சொந்தங்களும் சுற்றி உட்கார்ந்துகொண்டு கைத்தட்டி உற்சாகப்படுத்துவது தான் இதில் சிறப்பு. யாராவது கோபப்பட்டு போர்க்கொடி உயர்த்திவிடாதீர்கள். நிறுத்திவிடப் போகிறார்கள்.


{}


இளைய தளபதியைப் நினைத்தால் பாவமாக இருக்கிறது. ஒரு நாளைக்குப் பத்துக்கும் குறையாமல் அவரைக் கலாய்த்து மின்னஞ்சல்களும் குறுந்தகவல்களும் வந்த வண்ணம் இருக்கின்றன. சலிப்பாக இருக்கிறது. சர்தாருக்குப் பதில் விஜய் எனும் தனி மனிதன். கொஞ்சம் ஓவர் டோஸாக இல்லை?


{}


ஒரு மாதத்துக்கு முன் ஊட்டி போன போது எடுத்த படம். லைட்டா Dreamy Effect சேர்த்திருக்கிறேன்.  Hope you like it! ஒரே வருத்தம்.. கடைசி வரை இந்த இளவரசியுடன் பேசவேயில்லை.

December 06, 2009

உலக அழகியைக் காப்பாற்றுவோம்!

கோபன்ஹேகன் - டென்மார்க்கின் தலைநகர். உலக ஊடகங்களின் ஒருமித்தப் பார்வை இப்போது இந்த நகரத்தின் மீது தான். டிசம்பர் 8 முதல் 18 வரையிலான உலக சுற்றுச்சூழல் மாநாடு இங்கு தான் நடைபெறுகிறது. 192 நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் கூடி, தட்பவெப்பநிலை மாறுபாடு குறித்து விவாதிக்கிறார்கள். பெரும்பாலும் பின்வரும் விசயங்கள் விவாதிக்கப்படும்.


1) கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் (குறிப்பாக வளர்ந்த நாடுகளில்) கட்டுக்குள் வைப்பது, 
2) தட்பவெப்ப நிலை மாறுபாட்டைக் கட்டுக்குள் வைக்கத் தேவையான நிதியுதவி,
3) காடுகளின் அழிவைத் தடுக்க கார்பன் ட்ரேடிங் முறை.


இதற்கு முன்னர் 1997 டிசம்பரில் ஜப்பானில் க்யோட்டோ ஒப்பந்தம் என்று ஒன்றைப் போட்டார்கள். அந்த ஒப்பந்தம் வளர்ந்த நாடுகளின் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியீட்டைக் குறைக்க வகை செய்கிறது. ஆனால் முன்னாள் நாட்டாமை அமெரிக்கா மட்டும் நைசாக கழண்டு கொண்டது. இந்நிலையில் கோபன்ஹேகன் மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஒபாமாவும கலந்துகொள்வது எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது. 


2012 படம் பார்த்திருப்பீர்கள். சூரியனிலிருந்து வரும் அதிக நியூட்ரினோக்களால் பூமியின் மையப்பகுதி வெப்பமடைந்து எரிமலையும் பிரளயமுமாக உலகம் அழிவதைக் காட்டியிருப்பார்கள். நமக்கு சூரியனெல்லாம் தேவையில்லை. நாமே பூமியைச் சூடாக்கிக் கொண்டுள்ளோம். அழிவு அது மாதிரி ஒரேயடியாக இல்லாவிட்டாலும், கடல் மட்ட உயர்வு, கடலோர நகரங்கள் மூழ்குவது என்று ஸ்லோ மோஷனில் போய்க்கொண்டிருக்கும். 


அதெல்லாம் வேண்டாமென்று தான் ஊர் கூடி தேரை இழுக்க முயற்சிக்கிறார்கள். இந்த மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகளை அனைத்து நாடுகளும் (நாமும் தான்) செயல்படுத்த முன்வரவேண்டும். பின்னே நம் ”உலக” அழகியைக் காப்பாற்ற வேண்டாமா? 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More