February 22, 2010

ஸ்னேஏஏக் பாபு!

                                       
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய‌‌ பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!

கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.


ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.


எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷ‌க்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப‌ மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமான‌து என்பதே போதுமாயிருக்கிறது.Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More