April 24, 2009

போங்கடா நீங்களும் உங்க அரசியலும்

உடனடியாக சண்டையை நிறுத்துமாறு இலங்கை அரசை கோர வெளியுறவுத்துறைச் செயலாளர் சிவசங்கர் மேனன் மற்றும் பிரதமரின் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை மறுபடியும் மத்திய அரசு அனுப்பியிருந்தது. எதற்காக? மத்திய அரசின் கவலையை இலங்கை அரசுக்கு எடுத்துச் சொல்லவாம்! தமிழனின் கவலையைச் சொல்ல ஒரு தமிழன் தூதுவனாக கிடைக்கவில்லையா? ஆனால் தமிழ்ப் பிரதிநிதிகளையும் அனுப்ப பயமாகத்தானிருக்கிறது! ஏனென்றால்,

* இங்கே முதலைக் கண்ணீர் சிந்தி கவிதை வடிப்பதும், மத்தியில் பம்முவதுமாய் மக்களை ஏய்த்தவர்களல்லவா நாம்?

* எம்.பிகள் அனைவரும் ராஜினாமா என்று பூச்சாண்டி காட்டி ஒரு சில நாட்களிலேயே அடங்கிப் போனவர்கள் தானே நாம்?

* ஆதரவாக இருப்போம் என்று தமிழர்கள் எதிர்பார்த்த நிலையில் "என்னால் சொல்லத் தான் முடியும்" என்று மனசாட்சியே இல்லாமல் பதிலிறுத்தவர்கள் அல்லவா நாம்?

* தமிழுணர்வு பேசியவர்களை, மத்தியை மகிழ்விப்பதற்காக தேசிய பாதுகாப்புச் சட்டம் கொண்டு கைது செய்தவர்கள் தாமே நாம்? 

* தேர்தல் நெருங்க நெருங்க, ஈழத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாக காட்டிக்கொள்வதும், ஈழ மக்கள் ஆதரவிற்காக வேலை நிறுத்தம் செய்வதும், ஆனால் மதுக்கடைகளிலும், ஊடகங்களிலும் வேசித்தனமாக திருவிழா கொண்டாட்டங்கள் நடத்துவதுமாக போராடுபவர்கள் அல்லவா நாம்?  

* போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று சொல்லி திடீர் ஞானோதயமாக உண்ணாநிலை அறிவித்தவர்கள் அல்லவா நாம்?

* வாரிசின் பதவியைக் காப்பாற்ற, அங்கு ஆட்சியில் பங்கு வைத்துக் கொண்டே இங்கு அதை எதிர்த்த சிறந்த பொதுநலவாதிகளல்லவா நாம்? 

* ஈழ ஆதரவும் உண்டு, அதே சமயம் நான்கு சீட் ஐந்து சீட் என்ற பேரமும் உண்டு என்று இரட்டை வேடம் பூண்ட மாபெரும் தமிழ் உணர்வாளர்கள் அல்லவா நாம்?

* எந்த கட்சியை பூண்டோடு ஒழிப்போம் என்று சபதம் போட்டோமோ அதே கட்சியுடன் கூட்டணி வைக்கும் தன்மானத் தமிழர்களல்லவா நாம்?

* மூன்றாவது சக்தியாக இருப்போம் என்ற நிலையில், மூச்சுக் கூட காட்டாமல் பதுங்கியிருந்த மாவீரர்களல்லவா நாம்? 

எப்படி அனுப்புவது?

காவிரிப் பிரச்சனைக்கு கூட ஒன்று சேர வேண்டாம். சொந்த இனம் செத்துக் கொண்டிருக்கும் போது கூடவா ஒன்று சேர முடியவில்லை? அப்படி என்ன தான் சாதிக்கப் போகிறீர்கள்? பாரத ரத்னா விருதா? ஆட்சிக் கட்டிலா? இல்லை கடற்கரையில் கல்லறையா? எதுவாக இருந்தாலும் வாரித்தருகிறோம். எங்களவர்களைக் காப்பாற்றுங்கள்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More