மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இயற்கை உபாதைகளுக்காவது நடமாடிக்கொண்டிருந்தவர், மூன்று மாதங்களுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, படுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, தண்ணீர் மற்றும் எல்லாவற்றிற்கும் என்ன செய்வது? மருமகளைத் தான் சார்ந்திருக்க வேண்டியதாயிற்று."என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் மகராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்."வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,பருத்தி வெடிக்கிற...