August 19, 2009

என்னைக் கொன்னுடுங்க!

மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது? ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.

"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.

"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது." த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.

பெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், "க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க!" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

****

இது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.

எல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா? கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது? யார் அதை முடிவு செய்வது? யார் பரிந்துரைக்கலாம்? அவரை நம்பமுடியுமா? பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா? நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க! கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா?

கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது?

12 கருத்து:

கருணைக்கொலைகள் ஆஸ்திரேலியாவின் ஒரு மாகாணத்தில சட்டபூர்வமா அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
http://chinnaammini.blogspot.com/2008/04/blog-post.html

கவனிக்க ஆள் இருப்பவர்கள் நிலைமை பரவாயில்லை. யாருமில்லாதவர்கள் இதற்குத்தள்ளப்படுகிறார்கள். :(

//ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து//

நம் ஊரில் தெருநாய்கள் தொந்தரவு அதிகமாக இருந்த போது அவைகளுக்கு இதே போல் ஊசி ஏற்றிக்கொல்லப்பட்டது. அந்த முனிசிபாலிடி ஊழியன் ஒரு நாயை அழைத்தபோது , அது வாலாட்டிக்கொண்டே அவனிடம் சென்றது இன்னும் என் மனக்கண்ணில் நிற்கிறது. ஊசி போட்டு ஒரு நிமிடத்தில் அது விறைத்து இறந்து போனது. இது பேருந்து நிறுத்ததில் பலரும் பார்க்க நடந்தது. இதே போன்ற நிலை மனிதர்களுக்குமா ? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.

:) இப்படியெல்லாம் யோசிக்க வைத்தது எது?

ஒரு விலங்கை கருணைக் கொலை செய்யச் சொன்ன காந்தியின் செயலா? மனிதனும் விலங்கும் சமமா?

Ellarum karunai kolai thappunu solreenga, aana padukkyileya ellam adhuvum avangalukku ella unarvum irukuudhungaradhu enna oru kodumai theriyuma? Ovovoru thadavai siruneer/malam kazhikumpodhum avanga padara vedhanai, avamaanam pathi theriyuma? Ivngala clean paana kashtapattukitu saapadu kodukaama vidaravangala naan paathiruken. Adhuku oosi potu kolradhu evalavo mel.
Geetha

மனசாட்சியைக் குத்தும் கேள்வி ஈட்டிகள்...
பதிலில்லை இப்போது..:-(
பதிவு நல்லா இருக்கு...

வாங்க அம்மிணி!

மனிதர்களுக்கும் அதே நிலை தான்! உபத்திரவம் பொறுக்க முடியாதவர்களை வேறு என்ன செய்வது?

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சுல்தான்!

வாங்க கீதா!

கருணைக்கொலை கூடவே கூடாது என்று சொல்லவில்லை. அதன் மூலமாக கொலைகள் அரங்கேறக்கூடாது என்பது தான் கருத்து!

நீங்கள் சொல்வது முற்றிலும் சரி! அந்த மாதிரி நிலைக்கு மரணம் மேல் தான்.

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தமிழ் அண்ணா!

நல்ல ஆழமான கருத்து செறிவுள்ள கதை...... உங்க ஊரு கல்வெட்டுல செதுக்கி வெச்சுபோட்டு... பக்கத்துலையே துண்டு விருச்சுபோட்டு கோந்துக்கோ மாப்ள..... வாரவிங்க ..போரவிங்கெல்லாம் படுச்சுபோட்டு.... நெம்ப பாராட்டுவாங்க....!!





டிஸ்கி : இதற்க்கு நன்றி தெரிவித்து பின்னூட்டம் போடவேண்டாம் என்று பெரிய மனதுடன் தெரிவித்துக் கொள்கிறேன் .

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More