May 31, 2009

அரட்டை : 01-06-09

ஒரு அனுபவம்

தாத்தாவிற்கு பேஸ் மேக்கர் ஆபரேஷனுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தோம். ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. ஆனால் இந்த பணியாளர்கள்... "இங்கு சிகிச்சைகள் அனைத்தும் இலவசம். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்" என்று கண்ணில் படும் இடத்தில் எல்லாம் எழுதியிருந்தும் 'நான் அதை செய்தேன், இதை செய்தேன் .. கொஞ்சம் கவனியுங்க" என்று நிற்கிறார்கள். கொடுக்காமல் இருக்கத் தோன்றவில்லை. நம் தாத்தாவைப் பார்த்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தாலா அல்லது ஒழுங்க்காக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற பயத்தினாலா என்று தெரியவில்லை.

ஒரு நெகிழ்ச்சி

போன முறை ஊருக்குப் போயிருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டுப் பசுவிற்கு பேறு காலம். அம்மாவும் நானும் கூடவே இருந்தோம். பசுவிற்கு முதல் பிரசவம் என்பதால் என்ன செய்வதென்று அதற்குத் தெரியவில்லை. வலியெடுத்தால் உந்தித் தள்ளுவதற்கு பதில் காலை மட்டும் உதைத்துக் கொண்டிருந்தது. படுக்காமால் நின்று கொண்டேயிருந்தது. முக்கால் மணி நேரமாகியும் கன்று வெளியே வந்தபாடில்லை. அம்மாவிற்கு பயம் வந்துவிட்டது. மாட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால்? ஒரு மாடு இறந்ததற்காக பத்து நாள் அழுது கொண்டிருந்தவர்கள் என் அம்மா. 
அதன் பிறகு என் பெரியப்பா வந்து லாவகமாக கன்றை இழுத்து வெளியே எடுக்க - சுகப்பிரசவம். உடனே அம்மா "பேத்தி பிறந்திருக்கா" என்று ஆனந்தக் கூச்சல்! 

ஒரு முடிவு

இந்த வார மொட்டை மாடி கூட்டத்தில் (எங்கள் வீட்டில் -கிழக்கு பதிப்பகத்தில் அல்ல) பின் நவீனத்துவத்தைப் பற்றி ஏனோ பேச்சு எழுந்தது. அந்த பதத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம் அவ்வளவு தான். அது என்ன என்று நடந்த விவாதத்தை வெளியே சொன்னால் பின் நவீனத்துவவாதிகள் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள். என்னென்னவோ பேசி கடைசியாக "ஒரு எழவும் புரியாமல் இருந்தால் அது பின் நவீனத்துவம்" என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. 

ஒரு புகைப்படம்

இது எங்கள் வயல். நெல் பயிரிட்டிருந்த போது எடுத்தது. அந்த பருவத்தில் ஊர் முழுக்க இப்படி தான். ரம்மியமாக இல்லை?

நோ ஸ்மோக்கிங்!

இன்று (May 31) புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  மூச்சு வாங்குதலில் இருந்து மாரடைப்பு, புற்று நோய் ஆண்மைக்குறைவு வரை எராளமான விளைவுகள். புகைப்பவர் மட்டுமின்றி உடனிருப்பவரும் புகையால் பாதிக்கப்படுகிறார். புகைப்பவர்கள் அனைவருக்குமே அதன் விளைவுகள் தெரிந்திருந்தும், அந்த பழக்கத்தை விடமுடியாமல்/விரும்பாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.
{}
இன்று பதின் வயது சிறுவர்கள் கூட இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருவது கண்கூடு. அவர்களைப் பொறுத்தவரை இந்த பழக்கம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. சரி எது தவறு எது என்று புரியாத வயதில், தன் மனம் கவர்ந்த ஹீரோ சினிமாவில் புகைப்பது சாகசமாகத் தெரிகிறது. விளைவு? டீக்கடை சந்தில் ஒதுங்குகிறான். யதார்த்த சினிமா எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் சில புண்ணியவானகள் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருணை காட்டி புகையை திரையில் காட்டாமல் இருங்களேன்! 
{}
இளைஞர்களுக்கும் புகைப்பதில் ஏதோ ஒரு அலாதி இன்பம். யாரையோ வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டதாக ஒரு ஆனந்தம். "சும்மா!" என்று ஆரம்பித்து இன்று விட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு அது மன அழுத்தத்தின் வடிகால். மூளை செல்களைத் தளர்வடையச் செய்வதனால் ஒருவித ரிலாக்ஸான நிலையை அளிக்கும் நிக்கோட்டின் வேறு பல கொடூர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அது இல்லையென்றால் "காலை வேலை" கூட ஒழுங்காக நடைபெறாது.  அந்த அளவிற்கு உடம்பு அடிமையாகி போய்விடுகிறது! 
{}
ஒரு நாளைக்கு ஒன்று என்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட் என்பது வரை ஏகப்பட்ட வெரைட்டியில் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு புகையினால் ஏற்படும் தீங்குகளும், இறப்பு புள்ளி விவரங்களும் தெரிந்தே இருக்கின்றன. தெரிந்தும் விட முடியாமல் தவிக்கிறார்கள். ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும் என்பது என் கருத்து! 
{}
எது எப்படியோ புகையை விட்டொழித்து வருங்கால சந்ததிக்கு புகையில்லாக் காற்றை பரிசளிப்போம்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More