October 20, 2009

பாடம் படிக்கும் சுவர்கள்.







பாடம் படிக்க ஆரம்பித்திருக்கின்றன எங்கள் வீட்டு சுவர்களும் திண்ணைகளும். அண்ண‌ன் ம‌கள் திவ்யாவை ப்ரீ‍‍கேஜி யில் சேர்த்திருக்கிறார்கள். பல்ப‌த்தை வைத்துக்கொண்டு திண்ணை பூராவும் வ‌ட்டெழுத்துக்க‌ளாக‌ எழுதித் த‌ள்ளுகிறாள். எழுதும்போது திண்ணைக்கு பாட‌ம் எடுக்கிறாள். அவ‌ளுக்கு ம‌ட்டும் புரியும் மொழியில்...


முதல் சில நாட்கள் அவள் புறப்படும் போது பார்க்க வேண்டுமே, எந்நேரமும் வெடித்து விடுபவள் போல இருப்பாள். தற்போது ப‌ழ‌கிக் கொண்டாள். அவ‌ளுக்கு உற‌வுக்கார‌க் குழ‌ந்தையின் நட்பு கிடைத்துவிட்டது. இப்பொழுது அவ‌ர்க‌ள் இருவ‌ரும் தான் வ‌குப்பில் சேர்ந்து தூங்குகிறார்க‌ளாம். 


தீபாவளிக்கு ஊருக்குப் போயிருந்த போது "அ ஆ இ ஈ" சொல்லிக் காண்பித்தாள். உண்மையிலேயே நான்கு எழுத்துக்கள் தான் சொன்னாள். அதற்குள் வெட்கம் வர, ஓடிவிட்டாள்.


பள்ளிக்குப் போகும் குழந்தைகள் உள்ள எல்லோர் வீட்டையும் போல, எங்கள் வீட்டிலும் பொம்மைகள் அந்தந்த இடத்தில் வைக்கப்பட்டுள்ளன. பாத்திரங்கள் சிதறாமல் இருக்கின்றன. ஆனால் எல்லோரும் அவளை மிஸ் செய்கிறார்கள். அண்ணன் வாழைத் தோப்புக்கு தண்ணீர் பாய்ச்சும்போது, அண்ணி சமைக்கும் போது, அப்பா மாட்டுக்குத் தீவனம் வைக்கும்போது, அம்மா பால் கறக்கும் போது என எப்போதும் காலைக் கட்டிக் கொண்டே சுற்றுவாள். எல்லாம் அமைதியாய் இருப்பது வித்தியாசமாக இருக்கிறதாம்.


தினமும் இதை சொல்லிக் கொடு அதை சொல்லிக் கொடு என அண்ணிக்கு வீட்டுப்பாடம் தருகிறார்களாம். அண்ணிக்கு செம கடுப்பில் இருக்கிறார்கள். ஆனால் நிம்மதியாக இருக்கும் ஜீவன்கள் எங்கள் வீட்டு ஆட்டுக்குட்டிகள். சும்மா படுத்திருக்கும் ஆட்டுக்குட்டியை தர தரவெனெ இழுத்து வந்து தண்ணீர்த் தொட்டியில் தள்ளிவிடுவாள். இப்பொழுது அவை தப்பித்தன‌.


இப்போது ஒரே ஒரு சிலேட், ஒரு டயரி (அண்ணிக்கு வீட்டுப்பாடம்) மட்டும் தான் கொண்டு போகிறாள். இன்னும் சில வருடங்களில் அவள் முதுகில் புத்தகச் சுமையை ஏற்றி எலும்பை உடைக்கப் போகிறார்கள். குழந்தையிலிருந்து சிறுமியாகப் போகிறாள். :( 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More