March 04, 2009

அல்டாப்பு பஸ் ஸ்டாப்.

சென்னை மாநகர் போக்குவரத்து கழகம், கண்ணகி சிலை பேருந்து நிறுத்தத்தில் ஒரு அழகான நிழற்கூடத்தைக் கட்டி உள்ளது. GPS முறையில் பேருந்துகளின் இருப்பிடம் அறியும் வசதி, சில்லறை மாற்றும் இயந்திரம், ISD வசதியுடன் கூடிய பொது தொலைபேசி, செல்பேசி சார்ஜ் செய்யும் வசதி, மின்விளக்குகள், இரண்டு மின்விசிறிகள், தூரத்தில் வரும் பேருந்துகளை பார்க்க Concave கண்ணாடி (குவி ஆடி தானே ?), கடிகாரம், வசதியான இருக்கைகள், வெப்பநிலை அறியும் வசதி மற்றும் இவற்றை எல்லாம் பாதுகாக்க காவலாளி என்று நிழற்கூடம் அமர்க்களப்படுகிறது. இதுபோல இன்னும் 500 பேருந்து நிறுத்தங்கள் கட்டப்படும் என்று சொல்கிறார்கள். நல்ல செய்தி.
இவை எல்லாம் கண்டிப்பாக பயணிகளுக்கு பயன் தரும் என்பதில் சந்தேகம் இல்லை. ஒழுங்காக பராமரிக்க படவேண்டும், அவ்வளவு தான். முக்கியமாக மழை காலங்களில். சாதரணமாகவே அந்த இடத்தில் மழை பெய்தால் நிழற்கூடத்திற்கு பின்னால் இறக்கும் மைதானம் வரை சாரல் அடிக்கும். இப்போது இந்த இயந்திரங்கள் மேல் கண்டிப்பாக சாரல் விழும். காப்பாற்ற என்ன செய்ய போகிறார்களோ! இவ்வளவு செய்தவர்கள் இதைப் பற்றி யோசித்து இருப்பார்கள் என்று நம்புவோம்.
நண்பர் ஒருவர் இயந்திரத்தில் சில்லறை மாற்ற ஓரிரு முறை முயன்றிருக்கிறார். "No Stock" என்றே பதில் வந்ததாம்! இதெல்லாம் சரி செய்தால் மகிழ்ச்சி.
எப்படியோ... ஒரு நல்ல முயற்சியை நாமும் வாழ்த்துவோம்!!!

நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!

தேர்தல் தேதி அறிவித்துவிட்டார்கள். ஒட்டுமொத்த தேசமே உடுக்கை அடித்துவிட்டது போல் திரியப்போகிறது. தலைவர்கள் கழகக் கண்மணிகளையும், ரத்தத்தின் ரத்தங்களையும் உணர்ச்சி பொங்கும் குரலில் கட்சிப்பணி செய்ய அழைப்பார்கள். இரண்டாம் நிலை கட்சிகள் கூட்டணி பிடிக்க அலையும். இவ்வளவு நாள் காணாமல் போன சில லெட்டர் பேட் கட்சிகள் எல்லாம் "மக்கள் பிரச்சனைகள் தீர எங்களுக்கு ஓட்டு போடுங்கள்" என்று கூப்பாடு போடும். ஒருவருக்கொருவர் மற்ற கட்சியினர் மேல் புகார் சேற்றை வாரி இறைப்பார்கள். காவிரி பிரச்சனை, இட ஒதுக்கீடு பிரச்சனை, ஈழத்தமிழர் பிரச்சனை, தேசிய பாதுகாப்பு பிரச்சனை இவற்றை எல்லாம் தீர்க்கப்போகிறோம் என்று கூசாமல் பொய் சொல்வார்கள். பிரியாணிக்குள் தங்க காசு வைத்து தருவார்கள். தேர்தலில் வெற்றி பெற்றால் வீட்டுக்கு வீடு ஒரு குளிர்சாதன பெட்டி தருவோம் என்று வாக்குறுதி வெளியிடுவார்கள். தேர்தல் முடிந்த பின் இவ்வளவு சதவீதம் வாக்குப்பதிவு என்று பெருமை பேசுவார்கள். இப்படி நிறைய....
எல்லாம் சரி, வாக்காளர்கள் பாடு தான் திண்டாட்டம். ஓட்டு புதிதாக முளைத்த தன் ஜாதிக்கட்சிக்கா, மனம் கவர்ந்த நடிகன் "வாய்ஸ்" கொடுக்கும் கட்சிக்கா, கண்மூடித்தனமாக இவ்வளவு நாள் ஓட்டு போட்டுக்கொண்டிருந்த முதுபெரும் கட்சிக்கா அல்லது வாக்குப்பதிவு நாளன்று பிரியாணியும் கட்டிங்கும் கொடுத்த கட்சிக்கா என்று குழம்ப போகிறான். ஒரே கொள்கை உடைய கட்சிகள் கூட்டணி அமைப்பது எல்லாம் பழைய பேஷன். இப்போது பேரம் படிந்தால் கூட்டணி ரெடி. ஒரே கூட்டணியில் கொள்கை முரண் உள்ள கட்சிகள் இருக்க முடியும். போதாக்குறைக்கு ஜாதி கட்சிகள் வேறு. ஓட்டளிப்பது எல்லாம் இப்போது இடியாப்ப சிக்கல் ஆகிவிட்டது. குழப்பம் வர தானே செய்யும்?
பிரச்சனைகளை தீர்ப்பார்கள் என்று நம்பி தான் ஒவ்வொரு முறையும் ஓட்டு போடுகிறோம். அந்த பிரச்சனைகளை பத்திரமாக வைத்திருந்தது அடுத்த தேர்தலுக்கு அதே பிரச்சனைகளை முன்வைத்து ஓட்டு கேட்பார்கள்.

இவற்றை எல்லாம் பார்க்கும் போது ஒரே ஒரு வசனம் நினைவுக்கு வருகிறது. "நாடும், நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும்!!!"

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More