March 22, 2009

என்ன குறை கண்டீர்கள் "யாருக்கு யாரோ" படத்தில்?


நண்பர்கள் வாயிலாக இந்த படத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு (எந்த படமா? "யாருக்கு யாரோ ஸ்டெப்னி" என்ற படத்தைப் பற்றி கேள்விப்படாத உங்கள் அறியாமையை வியக்கிறேன்!) யு-ட்யூபில் தேடினேன். முழுப்படமே பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு கிடைத்தது! ஒவ்வொரு பகுதியாக பார்த்ததில் ஒரு விஷயம் புரியவேயில்லை.  ஏன் இந்த படத்தைப் போட்டு ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள்? எவ்வளவு நல்ல விஷயங்கள் இருக்கின்றன இந்த படத்தில்!

*  ஒரு Alpha Male தான் கதை நாயகனாக இருக்க வேண்டும் என்றில்லாமல் ஒரு சாமான்யனை நாயகனாகக் காட்டி அவனது ஆசாபாசங்களை படமாக்கியிருப்பதே தமிழ் சினிமாவின் முக்கிய திருப்பம் என்று சொல்லலாம்.

* காதை வருடும் இன்னிசை, கண்ணியமான பாடல் வரிகள் என்று இந்த படத்தின் பாடல் காட்சிகள் தமிழ் சினிமா ஆரோக்கியமான பாதையில் போய்க்கொண்டிருப்பதையே காட்டுகின்றன அல்லவா? 

* முகம் சுளிக்கும் இரட்டை அர்த்த வசனங்களோ, அருவருப்பான சண்டைக்காட்சிகளோ இல்லாமல் எடுக்கப்பட்டிருக்கும் இந்த படம் குடும்பத்துடன் பார்க்கக் கூடியதாய் அமைந்திருக்கிறதே, அது போதாதா? 

* "70,000 ரூபாயில் கார்" என்ற கதை நாயகனின் அருமையான லட்சியம் தான் இன்று நமக்கு ஒரு டாடா நேனோ கிடைத்திட முன்னுதாரணமாக இருந்தது என்பதை இங்கே நான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்! 

* ஒரு குழந்தை வரைந்த கார் படத்தை வைத்தே, அதைப் போன்ற காரை வடிவமைக்கும் ஒரு அறிவியல் கதையை நம்மால் புரிந்து கொள்ள இயலாதது தமிழ் சினிமாவின் துர்ப்பாக்கியம் தான்.

* வன்முறை ஏதும் இல்லாமல் அமைதியான வழியிலேயே (டாலரைக் கொடுத்து),  துர்புத்திக்காரர்களை திருத்த முடியும் என்பதற்கு இந்த படத்தை விட வேறென்ன உதாரணம் காட்டிவிடமுடியும் உங்களால்? 

* படத்தின் இறுதிக்கட்டத்தில், கார் ஸ்டெப்னியை வைத்தே உணர்ச்சிகளை வெளிப்படுத்தியிருக்கும் இந்த பாங்கை வேறு எந்த படத்திலாவது காண முடியுமா ? 

* தயாரிப்பாளருக்கு செலவு வைக்காமல் சாதாரண ஏரிக்கரை, கல்குவாரி போன்ற இடங்களிலேயே படத்தை முடித்திருப்பது பாராட்டத்தக்க விஷயம் அல்லவா ?

* மேலும்.. ஆவ்வ்வ்வ்வ்வ்... முடியலைங்க. என்னால முடியல !  :( 

ஏதாவது நல்லதாக எழுதலாம் என்று தான் ஆரம்பித்தேன்! சத்தியமா முடியல! எவ்வளவு நேரம் தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது? 

ஹீரோ சாம் ஆண்டர்சன் சார் கொடுக்கும் எக்ஸ்பிரஷனை என்னவென்று சொல்ல? அவர் நடை என்ன? உடையலங்காரம் என்ன? வசன (இங்க்லீஷ் வேற!) உச்சரிப்பு என்ன ? நடன அசைவுகள் என்ன ? என்ன.. என்ன? பார்த்த வீடியோ அனைத்திலும் சாரையே கவனித்து வந்ததால் அந்த இரு சொரூபராணிகளைப் (ஜோதி & வர்ணிகா! ) பற்றி அதிகம் சொல்வதற்கு இல்லை.

இறுதிக்காட்சியில் சார் ஸ்டெப்னியைப் பற்றி அவர் இப்படி விளக்கம் கொடுப்பார் என்று தெரிந்திருந்தால், எந்த கார் கம்பெனிகாரனும் ஸ்டெப்னி வைத்தே கார் தயாரித்திருக்கமாட்டான்! 

அந்த கருமாந்தரத்த இங்க போய் பாருங்க! 


அப்புறம் அந்த டாலர் மேட்டர். "உங்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை" என்று நாயகி, நாயகன் தந்த சங்கிலியை அவரிடமே கொடுப்பாராம். அவர் மறுபடியும் நாயகியிடமே திருப்பிக் கொடுப்பாராம். உடனே நாயகி "இனிமேல் எனக்கு எல்லாமே நீங்க தான்"னு சொல்லிடுவாங்களாம்! டேய்! என்னங்கடா நடக்குது இங்க? 

ஜோ ஸ்டேன்லி (இந்த பேர பாத்து தாங்க ஜெர்க் ஆயிட்டேன்! ) தான் இந்த காவியத்திற்கு கதை, வசனம், பாடல்கள், இசை, இயக்கம், லைட்பாய்,,, எல்லாமே! இதப் பத்தியெல்லாம் சொல்றதுக்கு ஒரு கெரகமும் இல்லை!

சாம் ஆண்டர்சன் சாருக்கு நல்ல பட்டப்பெயர் கொடுத்தே ஆகவேண்டும்! பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. :) 

கொசுறு: நம்பினால் நம்புங்கள்! இப்போதெல்லாம் யு-ட்யூப் என்ற பேரைக் கேட்டாலே உடம்பு நடுங்குகிறது! 

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More