February 22, 2010

ஸ்னேஏஏக் பாபு!

                                       
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய‌‌ பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!

கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.


ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.


எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷ‌க்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப‌ மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமான‌து என்பதே போதுமாயிருக்கிறது.February 20, 2010

அண்ணா ஹாக்கி லீக்


இந்த வருடம் அண்ணா ஹாக்கி லீக் ( சுருக்கமாக AHL) பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்கி ஒரு மாதம் வரை நடக்க இருக்கிற‌து. அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் இணைந்து நடத்தும் இந்தப் போட்டி, நமது தேசிய விளையாட்டான ஹாக்கியின் பக்கம் ரசிகர்களின் ஆர்வத்தைக் கவ‌ரும்(நிலைமையைப் பார்த்தீர்களா?) ஒரு சிறு முயற்சி.ஹாக்கியில் இந்தியா வல்லரசு என்பதெல்லாம் பழங்கதை. அணித் தேர்வில் விளையாடிய பணம்,வீரர்களின் அதிருப்தி, விளையாட்டை ஊக்குவிப்பதில் அரசு காட்டிய மெத்தனப்போக்கு எல்லாம் சேர்ந்து அணியைப் பலவீனமாக்கின‌. இதெல்லாம் விட முக்கியக் காரணம் நமது ஆர்வம். உள்ளூர் கிரிக்கெட் போட்டிக்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தைக் கூட உலகக் கோப்பை ஹாக்கிக்குத் தருவதில்லை. எல்லாம் சேர்ந்து ஹாக்கியை பழங்கதையாக‌ மாற்றிவிட்டன. இந்தியாவின் தேசிய‌ விளையாட்டு என்ற‌ அந்த‌ஸ்தை கிட்ட‌த்த‌ட்ட கிரிக்கெட் எடுத்துக்கொண்ட‌ இந்த நிலையில், ஹாக்கியைப் பிர‌ப‌ல‌ப்ப‌டுத்தும் இந்த‌ முய‌ற்சி பாராட்டுக்குரிய‌துஇனி AHL! 2008 ஆம் ஆண்டு பயணத்தைத் தொடங்கிய AHL போட்டிகளுக்கு இது மூன்றாம் ஆண்டு. முதல் வருடம் பல்கலைக்கழக மாணவர்களை மட்டும் கொண்ட நான்கு அணிகளுடன் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் இப்பொழுது எம்.ஐ.டி மற்றும் வேலம்மாள் கல்லூரி அணிகளும், இன்ஃபோசில் மற்றும் சி.டி.எஸ் மென்பொருள் நிறுவனங்களைச் சேர்ந்த அணிகளும் பங்குபெறுகின்றன.வரும் வருடங்களில் மேலும் பல அணிகள் பங்குபெறும் என நம்புவோம்.பார்வையாள‌ர்க‌ளுக்கும் ப‌ரிசுகள் உண்டு. ஆட்ட‌த்தின் முத‌ல் பாதி முடிந்த‌தும் வெற்றி பெற‌ப்போகும் அணியைச் ச‌ரியாக‌க் க‌ணிப்ப‌வ‌ர்க‌ளுக்கு, பெனால்டி மூல‌ம் கோல் செய்யும் பார்வையாள‌ர்க‌ளுக்கு என பரிசுகள் காத்திருக்கின்றன.

எங்கே : அண்ணா பல்கலைக் கழக மைதானம்.
எப்போது : பிப்ரவரி 22 முதல்.நான் போறேன்!.டிஸ்கி : 2010 பிப்‍ 28 முதல் மார்ச் 13 வரை டெல்லியில் ஆடவர் உலகக்கோப்பை ஹாக்கி போட்டிகள் நடக்க இருக்கின்றன. தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பது வேறு விஷயம்!


February 10, 2010

அரட்டை - 10-2-2010

காலம் கடந்து கிடைக்கும் உதவி வீண் என எங்கோ படித்தது. அது நீதிக்கும் பொருந்தும். பத்து வருடம், பதினான்கு வருடம் என வழக்குகள் இழுத்தடிக்கப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை எப்படியிருக்கும்? உதாரணத்துக்கு ருசிகா வழக்கு. 90களில் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகி தற்கொலை செய்து கொண்ட டென்னிஸ் வீராங்கனை. குற்றம் சாட்டப்பட்டவர் ரத்தோர். பத்தொன்பது ஆண்டுகள் கழித்து அவருக்குக் கிடைத்த தண்டனை ஆறு மாதம் சிறை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம். இதை விட அந்தப்பெண்ணின் தகப்பனை வேறு விதமாக‌ அசிங்க‌ப்ப‌டுத்த‌ முடியாது. இன்னும் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது. ரத்தோர் குற்றமற்றவர் என்று கூட நிரூபிக்கப்படலாம் யாருக்குத் தெரியும். அப்புறம், கசாப் என்ற‌ தியாகி ஒருவரைப் பராமரித்து வருகிறோமே. அந்த வழக்கு என்ன ஆகப் போகிறதோ தெரியவில்லை. தமிழ்நாட்டில், சங்கரராமன் கொலை வழக்கு. எல்லா சாட்சிகளும் பல்டி அடித்தாகி விட்டது. அடுத்தது என்ன? வழக்கு தள்ளுபடி. "ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம், ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது" என்பதில் பின்பாதி சரி தான். ஆனால் ஓராயிரம் குற்றவாளிகள் தப்பித்தால் என்ன ஆவது? தப்பித்துக்கொள்ளாலாம் என குற்றங்கள் பெருகாதா? தார்மீக அடிப்படையில் பார்த்தால் கூட பாதிக்கப்பட்டவருக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டாமா? வயசாகிப்போன நீதித்துறை!!!!!!!!


{}

முதல்வர் கலைஞருக்கு ஐநூற்றுச் சொச்சமாவது தடவையாக‌ தமிழ்த்திரையுலகினர் எடுத்த பாராட்டு விழாவில் அஜித் மனம் திறந்து குமுறியிருக்கிறார். இந்த மாதிரி விழாக்களுக்கு வரச்சொல்லி நடிகர்கள் மிரட்டப்படுவதாக‌ப் புலம்பியிருக்கிறார். இது வேறா?

அவ‌ர் வாரி வழங்குவதும், இவர்கள் விழா எடுப்பதுமாக வருடம் முழுக்க ஒரே கோலாகலம் தான். ஏதோ நல்லா இருந்தா சரி. மற்ற துறையெல்லாம் செழிப்பாக இருக்கிறது தமிழ்நாட்டில். பாவம் சினிமாத்துறை மட்டும் நொடித்துப்போய்விட்டது. நடக்கட்டும் நடக்கட்டும்

{}

கோவா பார்த்தாகிவிட்ட‌து. ஒரு வெளிநாட்டுக்காரியைப் பார்த்து ம‌ண‌ம் முடிக்கும் ல‌ட்சியம் கொண்ட‌ மூன்று இளைஞ‌ர்க‌ளின் க‌தை. (சிங்காரவேலன் கவுண்டமணி நினைவுக்கு வந்தார் : இதுவல்லவோ லட்சியம்....). ப‌ட‌ம் ஒவ்வொருக் காட்சியும் இளமைத்துள்ளல்(அட, அது இல்லீங்க!). சம்பத்,அர்விந்த் காதல் அளப்பறை. தில்லு தான் ரெண்டு பேருக்கும். தனித்தனிக் காட்சிகளாகப் பார்க்கும்போது வசீகரிக்கும் படம் மொத்த‌மாகப் பார்க்கும்போது அவ்வளவாகக் கவரவில்லை. .


{}

வலையுலகின் காதல் மன்னன் கார்க்கி' காதல் வாரம் கொண்டாடுகிறார். 'கார்ப்பரேட் கம்பர் நர்சிம்' காதலுக்காக சிலப்பதிகாரம் வரைச் சென்று காதலியின் அழகைப் பாட ஐடியா தருகிறார். ஆதி அவர்கள் ஒரு படி மேலே போய் தங்கமணி ஸ்பெஷல் என பதிவு போடுகிறார். இப்படி ஆளாளுக்குக் காதலைக் கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள். நம் பங்குக்கு ஏதாவது செய்யாவிட்டால் எப்படி?

எஸ்.எம்.எஸ்ஸில் வந்தது.

துன்ப‌த்திலும் ஒரு இன்ப‌ம்.
என்ன‌வ‌ளின் திரும‌ண‌த்துக்கு வ‌ந்த
அவ‌ள் தோழிக‌ள்!
What a Figures What a Figures....

நீதி : திரிஷா கிடைக்க‌லைன்னா திவ்யா!

February 06, 2010

Visual Treat... மெரீனா.

புத்த‌ம்புது காலை...


க‌ட‌லின் அக்க‌றை போனோரே...
அந்த நீல‌ நதிக்கரையோரம்....


நம்ம மெரீனா தான்.

சமீபத்தில் நான் எடுத்த புகைப்படங்கள் இவை. ந‌ல்லா இருக்கான்னு பார்த்து சொல்லுங்க. Subject, Composition, Focus, Post-processing etc. etc. குறித்த உங்கள் விமர்சனங்கள் இம்ப்ரூவ் செய்துகொள்ள உதவும். ப‌ச்ச‌ புள்ள‌ சாமி... பார்த்து போட்டுக்கொடுங்க. (ந‌ல்லா இல்லைன்னு சொன்னா காசு வெட்டிப்போட‌ப்ப‌டும்.)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More