வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைத்ததும் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினோம் ஏற்காட்டிற்கு. பேருந்து மற்றும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு செய்துவிட்டிருந்தோம். மூன்று நாள் ஏற்காட்டில் என்ன செய்ய போகிறோம் என்ற கவலை Clifton Inn புண்ணியத்தில் தீர்ந்தது (பாதி நேரம் அறையில் தண்ணீர் வராமல் அடைந்து கிடந்தால் எப்படி வெளியே போவதாம்? ).அறைக்குப் போய்ச் சேர்ந்ததே வெள்ளி மதியம் தான். குளித்து சாப்பிட்டு விட்டு Sight seeing கிளம்பினோம். முதலில் சென்றது சேர்வராயன் கோயில். கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5300அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் தான் சேர்வராயன் குன்றுகளிலே உயரமான இடம். இங்கு இருப்பது குகை கோயில். இந்த குகை கர்நாடகாவில் இருக்கும் தலைக்காவிரி வரை செல்வதாக சொல்கிறார்கள். இந்த மலையைச் சுற்றி இருக்கும் சுமார் 50 மலைக் கிராமங்களுக்கு இது தான் காவல் தெய்வம். ஆண்டு தோறும் மே மாதம்...