August 26, 2008

ஏற்காடு பயணம்

வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து மூன்று நாள் விடுமுறை கிடைத்ததும் மூட்டை முடிச்சுகளுடன் கிளம்பினோம் ஏற்காட்டிற்கு. பேருந்து மற்றும் விடுதி அறைகளுக்கு முன்பதிவு செய்துவிட்டிருந்தோம். மூன்று நாள் ஏற்காட்டில் என்ன செய்ய போகிறோம் என்ற கவலை Clifton Inn புண்ணியத்தில் தீர்ந்தது (பாதி நேரம் அறையில் தண்ணீர் வராமல் அடைந்து கிடந்தால் எப்படி வெளியே போவதாம்? ).
அறைக்குப் போய்ச் சேர்ந்ததே வெள்ளி மதியம் தான். குளித்து சாப்பிட்டு விட்டு Sight seeing கிளம்பினோம். முதலில் சென்றது சேர்வராயன் கோயில்.
கடல் மட்டத்தில் இருந்து சுமார் 5300அடி உயரத்தில் இருக்கும் இந்த இடம் தான் சேர்வராயன் குன்றுகளிலே உயரமான இடம். இங்கு இருப்பது குகை கோயில். இந்த குகை கர்நாடகாவில் இருக்கும் தலைக்காவிரி வரை செல்வதாக சொல்கிறார்கள். இந்த மலையைச் சுற்றி இருக்கும் சுமார் 50 மலைக் கிராமங்களுக்கு இது தான் காவல் தெய்வம். ஆண்டு தோறும் மே மாதம் இங்கு விழா நடைபெறுகிறது.

தரிசனம் முடிந்து அங்கிருக்கும் View Point வந்தால் ஒரே பனி மூட்டம். இங்கிருந்து பார்த்தால் மேட்டூர் அணை தெரியும் என்றார்கள். பார்க்க முடியவில்லை. அருகில் ஓர் பெரிய சமவெளி. வாகனங்களில் பாடலை ஒலிக்க விட்டு பலர் ஆடிக்கொண்டிருந்தனர்.


கீழே வரும் வழியில் ராஜராஜேஸ்வரி கோயில் உள்ளது. மிகச்சிறிய ஆனால் மிக அழகான கோயில். அம்மன் சிலை ஒரே கல்லால் ஆனது. விஜயதசமி இங்கு விசேஷம்.

பின்பு நேரே பகோடா பாயிண்ட் போனோம். அங்கிருந்து அரூர்,கிருஷ்ணகிரி பகுதிகளைப் பார்க்கலாம். இங்கு பிரமிட் வடிவில் அடுக்கபட்டிருக்கும் கல்கள் பலவற்றை காணலாம். இதன் மூலம் தான் இதற்கு பகோடா பாயிண்ட் என்று பெயர் வந்தது என்று அங்கிருந்த ஒரு டீக்கடைகாரர் சொன்னார். அங்கே சிறிது நேரம் கழித்துவிட்டு அறைக்கு திரும்பினோம்.
அடுத்த நாள் தான் பிரச்சனையே. காலையில் சுமார் மூன்று மணி நேரம் தண்ணீர் வரவில்லை. Service ம் சரி இல்லை. இந்த Hotel வேண்டாம் என்று காலி செய்து விட்டு வேறு Hotel பார்த்து தங்கினோம். இதற்குள் பாதி நாள் ஓடி போனது. மதியமாகக் கிளம்பினோம் அருவிக்கு. சுமார் 2 கி.மீ வரை காரில் சென்று பின் ஒரு கி.மீ கீழிறங்க வேண்டும். மிகவும் சரிவான ஒற்றையடி பாதை. ஒரு புறம் தனியாருக்குச் சொந்தமான தோட்டத்தின் முள் வேலி. மறு புறம் மலைச் சரிவு. வழுக்கினால் பிடித்துக்கொள்ள கூட எதுவும் இல்லை. கைகளை ஊன்றி தான் இறங்க வேண்டும். ஒரு வழியாக இறங்கி அருவியைச் சென்றடைந்தோம். அருவியைக் கண்டதும் வந்த களைப்பெல்லாம் ஓடியே போனது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பருவ மழைக்கு பிறகு சென்றால் அருவியில் நிறைய தண்ணீர் இருக்கும். ஒரு மணி நேர குளியலுக்கு பிறகு மேலேற ஆரம்பித்தோம். மேலே வருவது கீழிறங்குவதை விட சிரமமாக இருந்தது. கால்கள் இரண்டும் சரியான வலி. கஷ்டப்பட்டு மேலே வந்து சேர்ந்தோம்.
அறைக்கு சென்று சிறிது ஓய்வு எடுத்துக்கொண்டு ஏரிக்கு கிளம்பினோம். போய்ச் சேர்ந்த போது மணி 6 ஆகிவிட்டிருந்தது. படகு சவாரி செல்ல முடியவில்லை. ஏரியின் நடுவில் சிறு தீவும் அதனுள் ஒரு பூங்காவும் இருக்கின்றன. ஏரியின் அருகில் அண்ணா பூங்காவும், அதன் கரையில் மற்றொரு பூங்காவும் இருக்கின்றன. எல்லாம் பார்த்து விட்டு, இரவு உணவுக்கு வாங்க வேண்டியதெல்லாம்(!) வாங்கிக்கொண்டு அறைக்குச் சென்றடைந்தோம். 9 மணி வாக்கில் மழை ஆரம்பித்தது. Balcony யில் உட்கார்ந்து கொண்டு, இருளையும் மழையையும் ரசித்துக்கொண்டு வெகு நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
மூன்றாம் நாள் காலையில் Ladies Seat, Gents Seat, Children's Seat. Rose Garden ஆகியவற்றிற்கு விசிட் அடித்தோம். இவை எல்லாம் அருமையான View Points. சேலம் நகரின் அழகையும், பனி மூடாமல் இருந்தால் காவிரி ஆற்றையும் ( Telescope ) பார்த்து ரசிக்கலாம். Rose Garden இல் சிறிது ஓய்வு எடுத்து விட்டு அறைக்கு திரும்பினோம். ஏற்காட்டைப் பிரிய மனம் இன்றி பிரியாவிடை கொடுத்துவிட்டு சேலம் கிளம்பினோம். வரும் வழியில் முதல் நாள் மழையில் முளைத்துவிட்டிருந்த பல திடீர் அருவிகள் கண்ணுக்கு விருந்தளித்தன. அடுத்த நாள் ஆரம்பிக்க போகும் இயந்திர வாழ்கையை எண்ணிக் கொண்டே, மூன்று நாள் அனுபவித்த சொர்க்கத்தை விட்டு கீழிறங்கினோம். :)

1 கருத்து:

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More