June 16, 2010

மதிப்பெண்

இந்தத் தேர்வு முடிவுகள் வரும் நேரத்திலெல்லாம் ஒரு குழப்பம் எழுந்து அடங்கும். முடிவுகள் எல்லாம் கன்னாபின்னாவென்று இருக்கும். அதிக மதிப்பெண்கள் எதிர்பார்ப்பவர்களுக்கு மிகக் குறைவாகவே கிடைக்கும். சில நேரத்தில் எதிராகவும் நடக்கும். எனக்குத் தெரிந்த மாணவி ஒருத்தியின் நிலைமை இது. பொதுவாக அதிக மதிப்பெண்கள் வாங்கும் பெண் அவள். பன்னிரெண்டாம் வகுப்புத் தேர்வுகளும் நன்றாக எழுதியிருந்தாள். ஆனால் முடிவுகள் அவள் எதிர்பார்த்த மாதிரியில்லை. மதிப்பெண்கள் குறைந்திருந்தன. சந்தேகப்பட்டு விடைத்தாள் நகல் வாங்கிப் பார்த்ததில் அதிர்ச்சி. ஒரு பாடத்தில் இரண்டு விடைகள் திருத்தப்படவேயில்லை. இன்னொரு பாடத்தில், சரியான விடைக்கு மதிப்பெண்கள் தரப்படவேயில்லை. சரி மறு கூட்டலுக்கு அல்லது மறு திருத்தலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றால் "இருக்கிற மதிப்பெண்களும் போய்விடப்போகிறது ஜாக்கிரதை" என்கிறார்களாம் அவளது வகுப்பாசிரியை. குழப்பத்தில் இருக்கிறாள்.

இது ஒரு உதாரணம் தான். இதை மாதிரி நிறைய வகை சொதப்பல்கள் இருக்கின்றன. விடைத்தாள்கள் திருத்தும்போது தரப்படும் சம்பளம் போதவில்லையென்று ஒரு ஆசிரியை சில விடைத்தாள்களை ஒளித்து வைக்க முயன்றார் என்று கூட செய்தி வந்தது. எவ்வளவு அலட்சியம்? மாணவர்களின் எதிர்காலமல்லவா இது? இவர்களது கோபத்தைக் காட்ட யாரோ ஒரு முகம் தெரியாதவனின் எதிர்காலத்தைப் பாழடிப்பதா?

இதைப்பற்றியெல்லாம் யோசிக்கும் போது நிறைய கேள்விகள் சந்தேகங்கள் தோன்றின. ஆசிரியர்களை விட்டுவிடுங்கள். அனைவரும் அதை சேவையாகப் பார்ப்பதில்லை. தொழிலாக மாறி வெகு காலம் ஆகிறது. ஆனால் நம் கல்விமுறை? ஏன் இன்னும் இந்த மாதிரி தேர்வு முறை/மதிப்பெண்கள் அடிப்படையிலேயே இருக்கிறது? நிறைய பேர் ஒன்றுமே புரியாமல் மனப்பாடம் செய்தல்லவா தேர்வெழுதுகிறார்கள்? தமிழ்ப்பாடத்தில் வரும் செய்யுள்கள் கூட பொருள் புரிந்து கொண்டு படித்தால் சுவை இன்னும் கூடும். ஆனால் தாவரவியலில் வரும் ஒளிச்சேர்க்கைச் சுழற்சியையோ அல்லது இயற்பியலில் வரும் ஏதேனும் ஒரு ஆய்வையோ மனப்பாடம் செய்வதால் என்ன நன்மை இருக்க முடியும்? (நானெல்லாம் மனப்பாடம் செய்தால் தேர்வு எழுதி முடிக்கும் வரை நினைவில் இருந்தாலே பெரிய விஷயம். முடித்தவுடம் அந்தப் பாடம் இருக்கும் பகுதியை மட்டும் மூளை தானாகவே ஃபார்மெட் செய்துவிடும்.)

இன்னும் ஏன் இந்த பக்கம் பக்கமாக விடை எழுதும் முறை ஊக்குவிக்கப் படுகின்றது? நுழைவுத்தேர்வுகளில் இருப்பது போன்ற சரியான விடையைத் தேர்வு செய்யும் முறை இருந்தால் என்ன? இப்பொழுது இருக்கும் குழந்தைகள் நம்மை விட சீக்கிரம் விஷயங்களைத்(!) தெரிந்து கொள்கிறார்கள். அவர்களுக்குத் தகுந்த மாதிரி கல்வி இருக்க வேண்டாமா? இப்போது இருக்கும் முறை தான் மொழிப்பாடங்களுக்குச் சிறந்தது. பிள்ளைகளுக்கு விளக்கி எழுதும் திறமை அவசியம். அதற்கு இந்த முறை தான் சரி என்று ஒரு வாதம் இருக்கிறது. இது எந்த அளவுக்குச் சரி? மொழிப்பாடங்களுக்கு மட்டும் இந்த முறையை வைத்துக்கொள்ளக்கூடாதா? கல்வி முறை குழந்தைகளைச் சிந்திக்க வைக்க வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தற்போதைய கல்விமுறை அப்படி இருக்கிறதா என்ன? கல்லூரிகளில் இருப்பது போன்று பதினொன்று பன்னிரெண்டாம் வகுப்புகளிலேயே ப்ராஜெக்ட் செய்யவிட்டால் என்ன? பத்தாம் வகுப்பு வரை அடிப்படைகளைக் கற்றுக்கொள்ளட்டும்! அதற்கப்புறமாவது அவர்கள் படித்ததை உபயோகிக்கட்டும். தெரிந்தவர்கள் சொல்லுங்கள்!

உங்களுக்கு ஒரே ஒரு கேள்வி. இப்பொழுது இருக்கும் பள்ளிக் கல்வி முறையில் ஒரு மாற்றம் செய்யும் அதிகாரம் உங்களுக்கு இருந்தால் என்ன மாற்றம் கொண்டு வருவீர்கள்?

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More