ஏற்கெனவே ஏற்காடு பற்றி பதிவிட்டிருந்தாலும், கிளியூர் அருவி பற்றி தனியாக புகைப்படப்பதிவு ஒன்றை எழுத வேண்டும் என்பது நீண்ட நாளைய விருப்பம். அதனால் இந்த பதிவு.
**************
கிளியூர் அருவி சேர்வராயன் மலைத்தொடரில், ஏற்காட்டில் இருந்து சுமார் 3 கி.மீ தொலைவில் உள்ளது. சுமார் 300 அடி உயரத்தில் இருந்து விழுகிறது இந்த அருவி. ஏற்காடு ஏரியின் உபரி நீர் இங்கு அருவியாக விழுந்து கிளியூர் கிராமத்தை அடைகிறது. பொதுவாக பருவமழைக்கு பிறகே (ஜூலை முதல் நவம்பர் வரை) அருவியில் நல்ல நீர்வரத்து இருக்கிறது. மற்ற சமயங்களில் வறண்டே காணப்படுகிறது.
எப்படி போவது?
ஏற்காடு ஏரி அருகே ஒரு வழி பிரிகிறது.

அங்கிருந்து சுமார் இரண்டரை கி.மீ வரை வாகனங்களில் செல்லலாம். நடந்து செல்ல விரும்புவர்கள், வரும் வழியில் இருக்கும் காஃபி தோட்டங்கள் வழியாக
காலாற நடந்து வரலாம் (திரும்பி வருவது சிரமம்).
அங்கிருந்து அருவி வரை நடராஜா சர்வீஸ் தான்.
சிறிது தூரம் வந்த பிறகு ஒரு சிறிய உணவகம் இருக்கிறது (பெயர் ஏதோ "கார்த்திக்" என்று நினைவு!).
இப்படி கவனமாக இறங்கி வந்தால்,
இந்த இடத்தை தாண்டி, கொஞ்ச நேரத்தில்... அருவி!!!
ஆள் நடமாட்டம் அதிகமின்றி நமக்கே நமக்கு என்று இருக்கிறது அருவி. மணிக்கணக்கில் குளிக்கலாம். அருவிக்கு அருகில் சில பேர் மது அருந்திவிட்டு பாட்டிலை அங்கேயே போட்டு உடைப்பதால் ஏகப்பட்ட கண்ணாடித் துண்டுகள் கிடக்கின்றன. அதனால்.. கால் பத்திரம்!
பொது நலன் கருதி குளிக்கும்போது எடுத்த புகைப்படங்கள் தவிர்க்கப்படுகின்றன.. :)
**************
இனி சில குறிப்புகள்:
1) மழை பெய்திருந்தால் ஒரு நாள் கழித்து போவதே உத்தமம். ஏனெனில் பாதை மிகவும் வழுக்கும்.
2) பெண்கள் மலையேற்றத்திற்கு வசதியான உடை அணிந்து செல்லவும்.
3) அண்மையில் காலில் அடிபட்டிருந்தால் போகாமல் இருப்பதே நலம்.
4) வாடகை காரில் செல்பவர்கள் சரியான வாடகையை முன்னமே பேசிவிடவும்.
சேலத்திலிருந்து ஏற்காட்டிற்கு அடிக்கடி பேருந்துகள் கிடைக்கும். குறைந்த வாடகைக்கு அறைகள் கிடைக்கின்றன. இரண்டு நாள் பயணத்திற்கு அருமையான இடம் ஏற்காடு!
0 கருத்து:
Post a Comment