March 05, 2009

புற்றை இடித்தால் கனவில் பாம்பு வருமா?

பதிவர் வித்யா அவர்களின் பாம்பு சம்பந்தப்பட்ட இந்த இடுகையைப் பார்த்ததும் உன்மையிலேயே டரியல் ஆகிவிட்டது. சுவாரஸ்யமாக படித்துக்கொண்டு இருக்கும்போது பாம்பு படத்தை பார்த்ததும் மிரண்டுவிட்டேன்.
இதைப் படிக்கும் போது எங்கள் கல்லூரியில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது.
இறுதி ஆண்டு படிக்கும்போது தேசிய அளவில் கருத்தரங்கு ஒன்றை நடத்த துறைத் தலைவர் அனுமதி கிடைத்தது. அதற்கான ஏற்பாடுகளில் இறங்கினோம். போஸ்டர் டிசைன் செய்வது, நிதி வசூலிப்பது, சுத்தம் செய்வது இப்படி நிறைய வேலைகள்.
நான் படித்தது சேலம் அரசினர் பொறியியல் கல்லூரியில். எங்கள் கல்லூரியில் காலி இடத்திற்கு பஞ்சமே இல்லை (பெரியார் பல்கலைக்கழகம், இந்தியன் ஆயில் நிறுவனம் இவை போக ஒரு 200 ஏக்கர் தேறும்). அதனாலேயே புதர்கள் நிறைய உண்டு. அதோடு பாம்பு புற்றுகளும்... எங்கள் துறை கட்டிடம் முன்பு இருந்த வெட்டவெளியிலும் நான்கு புற்றுகள் இருந்தன. அந்த இடத்தையும் சுத்தம் செய்தாக வேண்டும். புற்று அருகில் செல்வதற்கே பயம். எங்கள் ஆசிரியர் வேறு "தூக்குங்கடா அந்த புத்த! " என்று ரம்யா கிருஷ்ணன் போல சொல்லி விட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். வேறு வழியின்றி சூரப்புலிகள் நான்கு பேர் கையில் கடப்பாரை, மண்வெட்டிகளுடன் குல தெய்வங்களை வேண்டிக்கொண்டே களத்தில் இறங்கினோம். கடப்பாரையை புற்று மேல் இறக்கியதும் அந்த இடமே அதிர்ந்தது. அட, புற்று அவ்வளவு ஸ்ட்ராங்க். சரி, தண்ணீர் விட்டு கரைப்பது என்று பொதுக்குழு எல்லாம் கூட்டாமலேயே தீர்மானித்தோம். பைப் இழுத்து புற்றுக்குள் தண்ணீர் விட ஆரம்பித்தோம். தண்ணீர் விடுவதும் மண்வெட்டியில் வெட்டுவதுமாக புற்று கொஞ்சம் கரைந்தது. அப்போது தான் தலையை சிறிது மேலே தூக்கி பார்த்தார் நண்பர். பார்த்ததும் தெரிந்துவிட்டது நாகம் இல்லையென்று. அப்பாடா என்று இருந்தது. தலையை பார்த்ததும் கடப்பாரையை ஓங்கி ஒரு குத்து குத்தினேன். தலையை உள்ளே இழுத்துக்கொண்டது. அதற்கப்புறம் வேலை வேகமாக நடந்தது. புற்றும் சீக்கிரம் கரைய ஆரம்பித்தது. பாம்பும் தலையைத் தூக்கி பார்ப்பதும், உள்ளே இழுத்துக்கொள்வதுமாக இருந்தது. எங்களிடம் அடிபட்டு சாவதை விட தண்ணீரில் மூழ்கி செத்து தொலையலாம் என்று நினைத்தது போலும். விடுவோமா நாங்கள்? தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல வேலையைத் தொடர்ந்தோம்.
ஏறத்தாழ இரண்டு மணி நேரத்திற்குப் பிறகு அந்த பாம்பு உள்ளே இருக்க முடியாமல் வெளியே வந்தது. ஆகா.. சாரைப்பாம்பு. எப்படியும் ஐந்து அடிக்கு குறையாமல் இருக்கும். சாரைப்பாம்பின் வேகம் அசாதாரணமானது. வெளியே வந்ததும் கிடைத்த சந்தில் ஓடப்பார்த்தது. அருகில் இருந்த ஜெயப்பிரதி, கையில் இருந்த மண்வெட்டியைத் திருப்பி அதன் தலையில் ஒரு போடு போட்டான். நானும் கோபாலும் கடப்பாரையால் ரெண்டு போட்டோம். சில வினாடிகளில் அசைவு நின்று விட்டது. உயிர் போய்விட்டதா என்று தெரியாததால் இன்னும் நாலு சாத்து சாத்தினோம். முடிந்தது அதன் கதை.
இவ்வளவு நேரம் எட்ட இருந்து வேடிக்கை பார்த்தவர்கள் எல்லாம் கிட்ட வந்து கதை பேசத் தொடங்கிவிட்டார்கள். எரிக்க வேண்டும், இல்லை.புதைத்தால் போதும் என்று (டேய்.. என்னங்கடா, நாட்டாமை படத்துல செத்துப் போன டீச்சருக்கு காரியம் பண்ற ஃபீல் கொடுக்கறீங்க? ). சரி கருமம் தொலையுது என்று எதிர்த்தாற்போல இருந்த டீக்கடையில் கொஞ்சம் பாலும் மஞ்சள் தூளும் வாங்கி, என் அழுக்கு கைக்குட்டையில் பாலை விட்டு மஞ்சள் தூளை தடவி, ஒரு ஐம்பது பைசாவை அதில் கட்டி பாம்பின் மேல் போட்டு கொள்ளிவைத்துவிட்டு எஸ்கேப்..... ஆச்சரியமாக மற்ற மூன்று புற்றுகளிலும் பாம்பே இல்லை. இவை எல்லாம் அந்த பாம்பின் கெஸ்ட் ஹவுஸ் போல...
அதற்கப்புறம் அங்கு இருந்த புதர்களையெலாம் அகற்றி சுத்தம் செய்து, மற்ற வேலைகளையெலாம் செய்து முடித்து பல்வேறு அரசியல் விளையாட்டுகளுடன் கருத்தரங்கு நடந்த கதையை சொன்னால், கல்லூரி இறையாண்மைக்கு ஊறு விளைவித்ததாக குற்றம் சுமத்தப்படுவேன்.

கொசுறு: எங்கள் துறையில் இருந்த ஆய்வக உதவியாளர் வேறு "இன்று உங்கள் கனவில் பாம்பு வரும்" என்று பயமுறுத்திவிட்டார். பாம்பு வந்தால் கூட பரவயில்லை. நாககன்னி கெட்டப்பில் இந்நாளைய ஸ்ரீப்ரியா வந்துவிட போகிறார் என்ற பயத்தில் தூங்கப் போனேன். நல்ல வேளையாக அன்றைய கனவில் அசின் வந்து ரட்சித்து அருளினார்!!!

4 கருத்து:

Collegela oru terroraa irunthirupeenga poala :)

டெர்ரரா? அப்படின்னா?
பாம்பு அடிக்கும் போது ஃபர்ஸ்ட் இயர் பொண்ணுங்க ஜன்னல் வழியா பார்த்துட்டு இருந்தாங்க, அதான்!

என்ன பண்றது பாஸ்? நம்ம கடமைய நாம செஞ்சுதானே ஆகணும்?

குட் இப்படித்தான் அசராம அடிக்கனும். அப்புறம் அந்த கொசுறு மேட்டர் ROTFL:)

எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.
வருகைக்கு நன்றி வித்யா.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More