June 02, 2009

பள்ளி மாணவர் தலைவன்

வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தம் வீசும் பக்கங்கள் பள்ளி நாட்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள்..  எத்த்னையோ நினைவுகள்..அவற்றில் SPL ஆக இருந்த காலங்கள் மறக்க முடியாதவை. 

SPL - School Pupil Leader, பள்ளி மாணவர் தலைவன். பெயர் தான் கெத்து. ஆனா செம கடியான போஸ்ட். நான் பத்தாம் வகுப்பு படித்த போது, தேர்தல் எதுவும் வேண்டாம், இவனே இருக்கட்டும் என்று தலைமையாசிரியர் சபித்து விட்டுப் போய்விட்டார். தேர்தல் வந்தால் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு நோட், புத்தகங்களில் ஓட்ட லேபிள் கொடுத்தாவது ஜெயித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த எதிர்க்கட்சி முகாமில் பெரிய ஏமாற்றம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் செய்ய வேண்டியிருந்த வேலைகள் அப்படி! 

முக்கியமான வேலை ப்ரேயர் நடத்த வேண்டும். பெரிய ராணுவ வீரன் போல மார்ச்பாஸ்ட் செய்து கொண்டு போய், ஆசிரியரை அழைத்து வந்து கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, உறுதிமொழி கூறி, தினம் ஒரு குறள் சொல்லி, நாட்டுப்பண் பாடி.... ஏறு வெயிலில் நின்று தாவு தீர்ந்துவிடும்.  தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு கேசட் இருக்கும். ஆனால் பவர் கட் என்றால் முடிந்தது கதை. ஏதாவது குறள் சொல்லவேண்டும். அந்த நேரத்துக்கு எது தோன்றுகிறதோ அதை சொல்லி சமாளிக்க வேண்டும். நிறைய நாள் "அகர முதல" வையும் "கற்க கசடற" வையும் வைத்து ஒட்டியிருக்கிறேன். பிரேயருக்கு தமிழாசிரியர் வந்தால் அந்த இடத்திலேயே திட்டு கிடைக்கும் "வேறு ஏதும் தெரியாதா?" என்று.. தினம் தினம் நடக்கும் அவஸ்தை இது.

அடுத்தது பள்ளியை அமைதியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு. நாம் சொன்னால் ஒரு பயலும் கேட்க மாட்டான். சொன்னதற்காகவே சத்தம் போடும் நல்ல உள்ளங்கள் இருப்பார்கள். ஒரு முறை ஆசிரியர் வராததால் மொத்த வகுப்பும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு வந்த தலைமை, SPL ஐ அழைத்து வா என சொல்ல, யம தூதுவன் போல ஒருத்தன் வந்தான். நானும் நம்பி போனேன். ஒன்றும் பேசவில்லை. தலையைப் பிடித்து அழுத்தி குனிய வைத்தார். முதுகில் இரண்டு அறை கொடுத்தார். அப்புறம் தான் பேசவே ஆரம்பித்தார். "ஏண்டா இவங்க எல்லாம் இப்படி சத்தம் போடுறாங்க?" என்றார். அவமானம் பிடுங்கித் தின்ன ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன். இப்படி அவங்க வீட்டு மாடு பால் கறக்கலனா கூட அடி வாங்க வேண்டியிருக்கும். இது அவ்வப்போதைய அவஸ்தை!

ஏதாவது சுற்றறிக்கை வந்தால், அதை ஒவ்வொரு வகுப்பாக எடுத்துச் சென்று படித்துக் காட்ட வேண்டும். இந்த கடியான வேலையை கருத்தாக நான் செய்ய காரணம் 7-ஆ வகுப்பு... இந்த வகுப்பில் தான் தாரகேஸ்வரி டீச்சர் இருப்பார்கள். :) அப்புறம் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர் கூட்டம் நடக்கும். ஆலோசனை செய்வார்களோ இல்லையோ, கிலோ கணக்கில் கறி வாங்கி மொக்குவார்கள். அதையும் நாம் தான் போய் வாங்கி வர வேண்டியிருக்கும். சாப்பிட போற சமயத்துல மட்டும் "நீ போய் கிளாஸ் பாத்துக்க" என்று வகையாக கழட்டி விட்டுவிடுவார்கள்.

சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் வகுப்பறைகளை அல்ங்கரித்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்கு பரிசளிக்கும் பழக்கம் எங்கள் பள்ளியில் உண்டு. அந்த வருடம் ஆறாம் வகுப்பில் ஒரு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசும் கொடுத்தார்கள். அது சுழற்கோப்பை. கொடுத்து அரை மணியில் திரும்ப பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரிசை வாங்கிய அந்த வகுப்பு லீடர் இது தெரியாமல் எஸ்கேப் ஆகியிருந்தார். பிறகு? சைக்கிளில் துரத்திச் சென்று வாய்க்கால் மேட்டிற்கு அருகில் அவனை பிடித்து வாங்கி வர வேண்டியதாக போனது. 

இப்படி நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் எல்லாமும் செய்து கொண்டு படிக்க முடிந்தது. தினம் தினம் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க மனம் விரும்பியது. ஏதோ ஒன்று சலிப்படையவிடாமல் செய்தது. அது தான் பள்ளிப்பருவம். Good Old Days!

டிஸ்கி : நேற்று ஃபோன் செய்த என் பள்ளி நண்பன் அருள் "என்னடா SPL..." என்று ஆரம்பித்தான். பின் ரொம்ப நேரம் அரட்டை. என் பால்ய நினைவுகளை மீட்டெடுத்த அவனுக்கு நன்றி!

4 கருத்து:

நல்லாருக்கு மகேஷ்...
//நிறைய நாள் "அகர முதல" வையும் "கற்க கசடற" வையும் வைத்து ஒட்டியிருக்கிறேன்.//
//தலையைப் பிடித்து அழுத்தி குனிய வைத்தார். முதுகில் இரண்டு அறை கொடுத்தார். அப்புறம் தான் பேசவே ஆரம்பித்தார். "ஏண்டா இவங்க எல்லாம் இப்படி சத்தம் போடுறாங்க?" என்றார். //
//அது சுழற்கோப்பை. கொடுத்து அரை மணியில் திரும்ப பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரிசை வாங்கிய அந்த வகுப்பு லீடர் இது தெரியாமல் எஸ்கேப் ஆகியிருந்தார்//
நல்ல அனுபவங்கள்.. தாராளமாகத் தொடரலாம்...

நன்றி அண்ணே!!! மறக்க முடியாத காலங்கள் அவை....:)

//இப்படி அவங்க வீட்டு மாடு பால் கறக்கலனா கூட அடி வாங்க வேண்டியிருக்கும்.//

Ayyo Ayyo !!!! unnaiellam partha pavama irruku.

super post

// Ithayam said...
Ayyo Ayyo !!!! unnaiellam partha pavama irruku.//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

வருகைக்கு நன்றி இதயம்....:)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More