April 04, 2009

நாட்டியப் பேரொளிபோன வாரம் எம்.ஜி.ஆர் - பத்மினி நடித்த மன்னாதி மன்னன் படத்தைப் பார்க்க நேர்ந்தது. படம் ஆரம்பித்து சிறிது நேரத்தில் ஒரு காட்சி வரும். பத்மினிக்கும் எம்.ஜி.ஆருக்கும் நடனப் போட்டி. நடனமாடிக்கொண்டே காலால் சிங்கத்தை வரைய வேண்டும். அதுவும் கீழே பார்க்காமல்! ஆனால் அதிர்ஷ்டவசமாக (எம்.ஜி.ஆருக்கு) பத்மினி கீழே விழுந்துவிடுவார். அதனால் அவர் தோற்றதாக அறிவித்துவிடுவார்கள் கலா அக்கா போன்ற நடுவர்கள். அதன்பின் படத்தைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு பத்மினியைப் பற்றி பேச ஆரம்பித்தோம். அப்பொழுது தெரிந்து கொண்ட தகவல்களையும் பின்னர் வலையில் தேடித் தெரிந்துகொண்ட தகவல்களையும் இங்கே தொகுத்திருக்கிறேன்.

{}

தமிழ் சினிமா தன் வளர்ச்சியில் எத்தனையோ நடிகைகளைக் கண்டிருக்கிறது.  அழகு, நடிப்பு, நடனம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மிகச்சிலர். அவர்களில் முதன்மையான இடத்தில் திகழ்ந்தவர் பத்மினி.  

1932 ஆம் ஆண்டு ஜூன் 12 தேதி, திருவனந்தபுரத்தைச் சார்ந்த தங்கப்பன் பிள்ளை- சரஸ்வதி அம்மாளின் இரண்டாவது புதல்வியாக பிறந்தார் பத்மினி. இவருக்கு மூத்தவர் லலிதா, இளையவர் ராகினி. ராஜ குடும்பத்தில் பிறந்த பத்மினி தமிழ் சினிமா உலகின் முடிசூடாராணியாகவே விளங்கினார். சிறுவயதிலேயே பரதம், கதகளி மோகினியாட்டம் போன்ற நடனங்களைக் கற்றுத்தேர்ந்த பத்மினியின்  அரங்கேற்றம் பத்து வயதில் நடைபெற்றது. 

{}

1948ல் வெளிவந்த 'கல்பனா' என்ற இந்திப் படத்தில் நடனமாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் முதலில் வெளிவந்த படம் தமிழில்! 'கன்னிகா' (1947)  என்ற படத்தில் தனது சகோதரி லலிதாவுடன் (சிவ மோகினி நடனம்) திரையுலகப் பயணத்தைத் தொடங்கினார். அடுத்த ஆண்டில் வெளிவந்த 'வேதாள உலகம்' படத்தில் வரும் பாம்பாட்டி நடனம் சிறப்பான வரவேற்பைப் பெற்றது. அதன் பின் இந்த சகோதரிகளின் நடனம் எல்லா படங்களிலும் இடம்பெற ஆரம்பித்தது. 

'மணமகள்' என்ற படத்தில் முழுமையான கதாநாயகி வேடத்தில் நடிக்க ஆரம்பித்த பத்மினி, நடிப்பிலும் தானொரு பேரொளி தான் என்று நிரூபித்தார். அதற்கு கட்டியம் கூறுவது போல் அமைந்த படங்களில் சில தில்லானா மோகனாம்பாள், மங்கையர் திலகம், எதிர்பாராதது, தெய்வப்பிறவி போன்றவை.

இவர் நடிகர் திலகத்துடன் கதாநாயகியாக நடித்த முதல் படம் 'பணம் (1952)'. இதன் பிறகு இந்த ஜோடி கிட்டத்தட்ட 60 படங்களில் நடித்து திரையுலகில் கோலோச்சியது. அவற்றில் சில தூக்கு தூக்கி, தில்லானா மோகனாம்பாள், உத்தம புத்திரன், வியட்னாம் வீடு, புதையல், திருவருட்செல்வர் ஆகியவை. உத்தமபுத்திரன் படத்தில் வரும் "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே" என்னும் படகு பாடலை அவ்வளவு சீக்கிரமாக மறந்து விட முடியுமா என்ன? 

மக்கள் திலகத்துடன் மதுரை வீரன், ராணி சம்யுக்தா, ராஜராஜன், மன்னாதிமன்னன் போன்ற பல படங்களிலும் காதல் மன்னனுடன் வீரபாண்டிய கட்டபொம்மன், வஞ்சிக்கோட்டை வாலிபன், ஆதிபராசக்தி ஆகிய படங்களிலும் நடித்திருக்கிறார்.  

வஞ்சிக் கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி-வைஜெயந்தி மாலா போட்டி நடனமும் (கண்ணும் கண்ணும் கலந்து) இடையில் வரும், பி எஸ் வீரப்பா அவர்களின் "சபாஷ்! சரியான போட்டி" என்ற வசனம் வெகு பிரசித்தம். உண்மையிலேயே அது சரியான போட்டி தான். சிங்கமும் புலியும் மோதிக்கொள்வது போல! அந்த பாடலைப் பார்த்தால் குந்தவைக்கும் நந்தினிக்குமான கல்கியின் ஒப்பீடு நினைவுக்கு வருவதாக நண்பர் கூறுவார். 

ஹிந்தியில், மேரா நாம் ஜோக்கர் போன்ற ஒரு சில படங்களிலும் தாய்மொழி மலையாளத்தில் சினேகசீமா போன்ற சில படங்களிலும் நடித்துள்ளார். இது தவிர இந்தி-ரஷ்ய மொழிப் படமான பர்தேசியிலும் நடித்திருக்கிறார். 

பத்மினியின் புகழ்பெற்ற பாடல்களில் மற்றொன்று திருவருட்செல்வர் படத்தில் இடம்பெற்ற "மன்னவன் வந்தானடி" என்ற பாடல். பரதத்தின் அபிநயம் பிடிக்கும் பொற்சிலைகளுடன் இவரும் ஒரு உயிருள்ள சிலையாக தோன்றியிருப்பார். 

இத்தகைய ஒரு நடிகைக்கு அம்மன் வேடம் கொடுக்காமல் இருப்பார்களா நம்மவர்கள்? ஆதி பராசக்தி மற்றும் சரஸ்வதி சபதம் போன்ற படங்களில் பார்வதி வேடமிட்டு நடித்தார். அதிலும் சரஸ்வதி சபதம் படத்தில் நாரதராக வரும் சிவாஜியை உருட்டி மிரட்டியிருப்பார்.

பெரும்பாலும் பரதம் சார்ந்த நாட்டியங்களையே ஆடி வந்த பத்மினி கழைக்கூத்தாடியாக 'ஜாலிலோ ஜிம்கானா டோலிலோ கும்கானா (அமரதீபம்) ' என்றும் ஆடிப்பாடியிருக்கிறார். நடனம் ஆடத் தெரியாத பெண்ணாகவும் ஒரு படத்தில் (சித்தி) நடித்திருப்பார்.

{}

திரையுலகின் உச்சத்தில் இருந்தபோதே, 1961ஆம் ஆண்டு மே மாதத்தில், கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ராமச்சந்திரன் என்பவரைத் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு "பத்மினி இன்ஸ்டிட்யூட் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ்" என்ற நடனப் பள்ளியை ஆரம்பித்து குழந்தைகளுக்கு நடனம் கற்றுக்கொடுத்தார். 

திருமணத்திற்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்த பத்மினி பல வெற்றிப்படங்களில் நடித்தார். அவற்றில் ஒன்று தான் காலத்தால் அழியாத காவியமான தில்லானா மோகனம்பாள். கொத்தமங்கலம் சுப்பு அவர்களின் நாவலை படமாக்கியிருப்பார்கள். முழுப்படம் கூட தேவையில்லை. "மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன" பாடல் ஒன்றே போதும் பத்மினியின் திறமையச் சொல்ல! பாடலின் ஒவ்வொரு ஃப்ரேமும் அசத்தல்!  "அழகர் மலை அழகா இந்த சிலை அழகா" எனும்போது கொடுப்பாரே ஒரு போஸ், இன்றும் எங்கள் ஊர் பெருசுகளுக்கு இந்த பாடலைப் பார்த்தால் கண்ணில் ஒரு மின்னல் வந்து மறையும். அப்புறம் அந்த நலந்தானா பாடல். பார்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொருவரையும் நலம்தானா என்று அவர் கண்கள் விசாரிக்கும்.

{}

1981 ஆம் ஆண்டு செப்டெம்பரில் பத்மினியின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் பிறகு திரையுலகை விட்டு ஒதுங்கியிருந்தவர், நான்கு ஆண்டுகளுக்குப் பின் டைரக்டர் பாசிலின் வேண்டுகோளுக்கு இணங்கி 'பூவே பூச்சூடவா' படத்தில் நடித்தார். ஓரிரு படங்களில் (ஆயிரம் கண்ணுடையாள்) நடித்த பின்  உடல் நிலை காரணமாக திரையுலகில் இருந்து நிரந்தர ஓய்வு பெற்று அமெரிக்கா திரும்பினார். 

2003 ஆம் ஆண்டு, நியூயார்க்கில் நடந்த பன்னாட்டு தமிழ் நடுவம் நிகழ்ச்சியில் சுதா ரகுநாதன் அவர்கள் பாடலுக்கு அபினயம் பிடித்து ஆடினார் பத்மினி. அதுவே அவரின் கடைசி நடன நிகழ்ச்சி. சிறிது காலத்தில் இந்தியா திரும்பி, சென்னையில் வசித்து வந்தார். 2006 ஆம் ஆண்டு திரையுலகத்தினர் நடத்திய கலைஞர் கருணாநிதி அவர்களுக்கு பாராட்டு விழாவில் கலந்துகொண்டார். இதுவே அவர் கலந்து கொண்ட கடைசி பொது நிகழ்ச்சி! 

{}

பத்மினி -  சில விருதுகள்:

*  1957 ஆம் ஆண்டில் "சிறந்த க்ளாசிக்கல் டான்சர்" விருது (Moscow Youth Festival).
*  1954, 1959, 1961 மற்றும் 1966 ஆம் ஆண்டுகளில் "சிறந்த நடிகை" விருது (Film Fans Association)
* 1965 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "கலைமாமணி" விருது
* 1968 ஆம் ஆண்டில் தமிழக அரசின் "சிறந்த நடிகை" விருது (தில்லானா மோகனாம்பாள்) 
* 1985 ஆம் ஆண்டு "ஃபிலிம்ஃபேர்" விருது (பூவே பூச்சூடவா).
*  சோவியத் அரசு பத்மினி உருவ ஸ்டாம்ப் வெளியிட்டு கௌரவித்தது.

{}

2006 செப்டெம்பர் 24 ல் இந்த மண்ணுலகை விட்டு மறைந்தார் பத்மினி. தேவலோகத்தில் இருந்து தற்காலிகமாக பூமிக்கு வந்திருந்த ஒப்பற்ற பேரொளி விண்ணுலகம் மீண்டது. தமிழ்த் திரையுலகம் உள்ளவரை ஒரு மோகனாங்கியாக, ஒரு சம்யுக்தாவாக, ஒரு வெள்ளையம்மாவாக, ஒரு பாட்டிம்மாவாக என்றென்றும் வாழ்ந்திருப்பார்!

{}

உங்கள் விமர்சனங்களையும் மேலதிக தகவல்களியும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். பிடித்திருந்தால் தமிழ்மணத்தில் வாக்களிக்கவும். :) 

7 கருத்து:

//அழகு, நடிப்பு, நடனம் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றவர்கள் மிகச்சிலர். அவர்களில் முதன்மையான இடத்தில் திகழ்ந்தவர் பத்மினி//

உண்மை :)

அழகான நடையில், தெளிவாக, நன்றாக ஆராய்ந்து நல்லதொரு கட்டுரையை தந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்

வருகைக்கு நன்றி பிரேம்குமார்!!!

// அழகான நடையில், தெளிவாக, நன்றாக ஆராய்ந்து நல்லதொரு கட்டுரையை தந்திருக்கிறீர்கள்.

வாழ்த்துகள்//

நன்றி :)))))))

வார்த்தைகளால் எடை போட முடியாதவை பத்மினியின் அழகும் திறமையும்.பத்மினி உயிருள்ள(இருந்த போது)மகாபலிபுர சிற்பம்..

யார் யாருக்கோ பத்மஸ்ரீ தர்றாங்களே இவங்களூக்கு தந்தாங்களா இல்லயா? இவங்கல்லாம் கோபுரம் சார் கோபுரம். நீங்க தந்திருக்கிறது விக்கிபீடியாவுல படிச்சது போல இருக்கு.

வாங்க psycho.

// இவங்கல்லாம் கோபுரம் சார் கோபுரம். //

முற்றிலும் உண்மை.

// விக்கிபீடியாவுல படிச்சது போல இருக்கு.//

வலையில் தேடித்தெரிந்து கொண்ட தகவல்கள் தான் இவை. :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More