August 10, 2009

கதை கதையாம்...

"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்!" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். "ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல? அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம்! அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல!" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். "பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா?" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் "அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.

கந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். "சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.

இது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் "பிதுக்கா பிதுக்கான்னு" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது? க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(

6 கருத்து:

மகேஷ்...
நல்லா எழுதி இருக்க...
கொஞ்சம் பொறாமையாவும் இருக்கு...
இது போல் நிறைய எழுதவும்...
வாழ்த்துக்கள்...

இப்பெல்லாம் கம்ப்யூட்டரை வச்சி கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க மகேஷ்!
அந்த கதைகளை கேட்ட ஆசையா இருக்கு இப்போ! ம்ம்ம...

Hey Dude.... you write well... keep the spirit going..

// தமிழ்ப்பறவை said...
மகேஷ்...
நல்லா எழுதி இருக்க... //

நன்றி அண்ணா! பொறாமை உங்க பெருந்தன்மையைக் காட்டுகிறது...:)

நன்றி கலை!Thanks Dude!

நல்லா எழுதி இருக்க...
இது போல் நிறைய எழுதவும்...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More