April 19, 2009

இவிங்க எப்பவுமே இப்படித்தான்!!!

கல்லூரி இறுதி ஆண்டு. சேகர் தன் சொந்த ஊரில்(கரூர் அருகே ஓரு கிராமம்) திருவிழா என்று விருந்துக்கு அழைத்திருந்தான். விருந்து வெள்ளிக்கிழமை. அதே நாளில் Environmental Science தேர்வு வேறு இருந்தது. செமஸ்டர் தேர்வு இல்லையென்றாலும் இதன் மதிப்பெண்களை வைத்து தான் இன்டெர்னல் மதிப்பெண்கள் கணக்கிடப்படும். திருவிழாவா, மதிப்பெண்களா என்று யோசித்துப் பார்த்ததில் திருவிழாவும் அது சார்ந்த மகிழ்ச்சிகளுமே வென்றன. சரவணா, மணி, பரணி, தமிழ் மற்றும் நான் அடங்கிய குழு, சேகர் தலைமையில் புதனன்று மாலையே சேலத்திலிருந்து தன் பயணத்தைத் தொடங்கியது. எட்டு மணிவாக்கில் கரூர் வந்தடைந்தோம். சேகர் தங்கையும் அவள் கல்லூரியில் இருந்து கரூர் வந்து எங்களுடன் சேர்ந்து கொண்டாள். அனைவரும் சேகர் அப்பா காரில் அவர்கள் ஊருக்கு செல்வதென்று ஏற்பாடு. வந்தவர் சும்மா இருந்திருந்தால் பிரச்சனை இல்லை. "சாப்டீங்களா? " என்று கேட்டார். ஏன் அந்த வார்த்தையை கேட்டோம் என்று அவர் நிறைய தடவை வருத்தப்பட்டிருப்பார். நாங்கள் "இன்னும் இல்லை" என்றதும் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருந்த ஒரு உணவகத்திற்கு அழைத்துச்சென்றார். அங்கு தான் ஆரம்பித்தது எல்லாம்!

சூப் முதல் ஜூஸ் வரை ஒன்று விடாமல் கலந்து கட்டி அடித்தோம். பக்கத்து மேஜையில் அமர்ந்திருந்த சேகரின் தங்கை எங்களை பார்த்த பார்வை மகா கேவலமாக இருந்தது. "விடுங்க பாஸ்! இவிங்க எப்பவுமே இப்படித்தான்" என்று நாங்கள் பாட்டுக்கு எங்கள் வேலையைத் தொடர்ந்தோம். ஒருவழியாக சாப்பிட்டு முடித்து கிளம்பி அவன் வீட்டை அடைந்தோம். அவன் அம்மா தான் வரவேற்றார். அவன் அப்பா செய்த அதே தப்பை அம்மாவும் செய்தார். "இட்லி வச்சிருக்கேன். சாப்டுங்கப்பா!". இந்த வார்த்தை போதாதா ? அடுத்த ரௌண்ட் ஆரம்பமானது. அம்மா மனம் நோகக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக ஆளுக்கு ஐந்து இட்லி வீதம் சாப்பிட்ட எங்கள் நல்ல மனதை பாவம் அவன் தங்கை புரிந்து கொள்ளவேயில்லை. இப்பொழுது அவள் பார்வை கோபமாக மாறியிருந்தது. சாப்பிட்டுவிட்டு அவன் பாட்டியை சிறிது நேரம் கலாய்த்துவிட்டு உறங்கச்சென்றோம்.

காலை தீர்த்தம் எடுக்கும் சடங்கு என்று காவிரி ஆற்றிற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு நாங்கள் போட்ட ஆட்டத்திற்கு பாட்டி எங்களை அடிக்காமல் விட்டது ஆச்சர்யம் தான்! பின் அங்கிருந்து கோயிலுக்கு! பூஜை முடிந்ததும் சாப்பாடு போட்டார்கள்! (ஐ! ஜாலி!). சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் இருந்த பேருந்து நிறுத்த நிழற்கூடையில் அருமையான தூக்கத்தைப் போட்டோம்! 

அடுத்த நாள் தான் நாங்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த அந்த விருந்து. 'சைவம் சாப்பிட்றவங்க அந்த வரிசையில் உட்காருங்க' என்ற என் நண்பனின் அம்மாவைப் பார்தது எங்களுக்கு சிரிப்பு தான் வந்தது! அசைவப் பந்தியில் அமர்ந்து கட்டு கட்டென்று கட்டிய எங்களை அவன் தங்கை மிரட்சியுடன் பார்த்துக்கொண்டிருந்தாள். கண்டுகொள்ளவேயில்லையே! "மார்க்கெட்னு கூட பாக்கலியே" ரேஞ்சுக்கு சாப்பாடு உள்ளே போய்ய் கொண்டிருந்தது. வந்த நோக்கம் இனிதே நிறைவேறிய திருப்தியுடன் வெற்றிலையையும் போட்டுக்கொண்டு வெற்றி வீரர்களாய் வெளியே வந்தோம்! 

அன்று மாலையே சேலம் திரும்புவது என்று திட்டம். "அப்ப நாங்க கெளம்பறோம்மா" என்று அம்மாவிடம் நாங்கள் சொன்ன வார்த்தைகள்,  தங்கை காதில் தேனாய்ப் பாய்ந்திருக்க வேண்டும்! அப்படி ஒரு சந்தோஷத்துடன் திரும்பிப் பார்த்தாள்! அந்த பாசமலருக்கு நாங்களும் ஒரு "பை" சொல்லிவிட்டு பேருந்து நிறுத்தத்திற்கு வந்தோம். வழியனுப்ப வந்த அம்மாவும் அப்பாவும் வந்திருந்தார்கள். "பார்த்து போங்கப்பா",  "பத்திரம்" என்று என்னென்னவோ சொன்னார்கள். ஆனால் கடைசி வரை ஒன்றை மட்டும் சொல்லவேயில்லை. "இன்னொரு வாட்டி கண்டிப்பா வரணும்ப்பா"

3 கருத்து:

//ஆனால் கடைசி வரை ஒன்றை மட்டும் சொல்லவேயில்லை. "இன்னொரு வாட்டி கண்டிப்பா வரணும்ப்பா"//
விடுங்க பாஸூ... அவங்க எப்பவுமே(உங்க சம்பவத்துக்கப்புறம்) இப்படித்தான்...

///விடுங்க பாஸூ... அவங்க எப்பவுமே(உங்க சம்பவத்துக்கப்புறம்) இப்படித்தான்... //


:)))))))))

//சூப் முதல் ஜூஸ் வரை ஒன்று விடாமல் கலந்து கட்டி அடித்தோம்//
//நிழற்கூடையில் அருமையான தூக்கத்தைப் போட்டோம்! //

சாப்பாடு, தூக்கம் இதை தவிர வேறொன்றும் அறியேன் பரா பரமேனு டிபிகல் GCE பழக்கம் :) எல்லா கட்டுரையும் ரொம்ப நல்லா இருக்கு..

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More