நானா படேகர், ஜான் ஆப்ரகாம் நடித்த "Taxi No 9211" என்ற ஹிந்தி படத்தின் ரீ-மேக் தான் இந்த படம் (ஹிந்தியிலேயே ஒரு ஆங்கில படத்தை தழுவி தான் எடுத்தார்கள் என்று கேள்வி!). நானா படேகர் நடித்த பாத்திரத்தில் பசுபதி. அவர் மனைவியாக சிம்ரன். ஜான் ஆப்ரகாம்க்கு பதில் "அஞ்சாதே" அஜ்மல். அவர் காதலியாக மீனாக்ஷி.முதலில் வழக்கமான நாயகன்-நாயகி டூயட், அப்பாவை கொன்றவர்களை பழிவாங்குவது, டான்ஸ் ஆட வெளிநாட்டுக்கு போவது என்று போர் அடிக்காமல் இருந்ததற்காகவே டைரக்டருக்கு ஒரு "ஜே" போட்டு விடலாம். இனி சுருக்கம். பணக்காரர்கள் மட்டுமே வாழவேண்டும் என்று நினைக்கும் ஒரு பணக்கார இளைஞன். பணக்காரர்களால் தான் வாழ முடியவில்லை என்று நினைக்கும் ஒரு டாக்ஸி டிரைவர். இருவரும் சந்திக்கிறார்கள். அதிலிருந்து அன்று இரவு வரை நடக்கும் சம்பவங்களை த்ரில்லர் பாணியில் சொல்லியிருக்கிறார்கள். சில இடங்களில் சுவாரஸ்யமாக. சில இடங்களில் மொக்கையாக. பசுபதி, சிம்ரன் ஆகியோர் நன்றாக நடித்து இருந்தார்கள், வழக்கம்போல. அஜ்மல் ஸ்மார்ட் ஆக இருக்கிறார். நன்றாகவும் நடிக்கிறார். மனோபாலா சில இடங்களில் சிரிக்க வைக்கிறார். மீனாக்ஷி விஜய் பட நாயகியை விட குறைவான காட்சிகளிலேயே வருகிறார். பசுபதி பாத்திரம் கொஞ்சம் ஓவரோ? என்ன தான் பணக்காரர்களால் மேல் வெறுப்பு இருந்தாலும் கொலை செய்யும் அளவுக்கா போவர்கள்? அதுவும் இரண்டு முறை. அப்புறம் அந்த கார் சண்டை. காரிலேயே குத்துச்சண்டை போடுவார்கள் போல! அதுசரி, இந்த படத்திற்கு எதற்கு பாட்டு? ரெண்டு நாயகர்களுக்கும் பாட்டு வைத்து படத்தை இழுத்துவிட்டார்கள். விஜய் ஆண்டனி சார், நீங்கள் போட்டிருக்கும் பாடல்கள் நெஞ்சாங்கூட்டில் நிற்கவில்லை. ஆத்திசூடியை இப்படியா குதறி வைப்பது?
பத்திரத்தை கிழித்து சுவற்றில் ஒட்டியிருந்ததை பார்த்ததுமே முடிவை ஊகிக்க முடிகிறது. நல்ல, வித்தியாசமான கதையை தொய்வான திரைக்கதை மூலம் வீணடித்துவிட்டர்கள். இடைவேளைக்கு அப்புறம் பின் சீட்டில் உட்கார்ந்திருந்த மாமி அடித்த கமெண்ட்கள் கூட படத்தை விட சுவாரஸ்யமாக இருந்தது.
படத்தில் ஒரு சின்ன இன்ப அதிர்ச்சி அம்சவல்லி! அட நம்ம பூஜாவை சொன்னேன். அவரும் கொஞ்சூண்டு வருகிறார். அவ்ளோதான்!
த நா 07 அல - 4777 - சவாரி கிடைக்கும்.
1 கருத்து:
Keep it up
Post a Comment