May 31, 2009

அரட்டை : 01-06-09

ஒரு அனுபவம்

தாத்தாவிற்கு பேஸ் மேக்கர் ஆபரேஷனுக்காக சென்னை அரசு பொது மருத்துவமனையில் அட்மிட் செய்திருந்தோம். ஆபரேஷன் நல்லபடியாக நடந்தது. ஆனால் இந்த பணியாளர்கள்... "இங்கு சிகிச்சைகள் அனைத்தும் இலவசம். லஞ்சம் கொடுப்பதும் வாங்குவதும் குற்றம்" என்று கண்ணில் படும் இடத்தில் எல்லாம் எழுதியிருந்தும் 'நான் அதை செய்தேன், இதை செய்தேன் .. கொஞ்சம் கவனியுங்க" என்று நிற்கிறார்கள். கொடுக்காமல் இருக்கத் தோன்றவில்லை. நம் தாத்தாவைப் பார்த்துக் கொண்டவர்கள் என்ற எண்ணத்தாலா அல்லது ஒழுங்க்காக கவனித்துக் கொள்ள வேண்டுமே என்ற பயத்தினாலா என்று தெரியவில்லை.

ஒரு நெகிழ்ச்சி

போன முறை ஊருக்குப் போயிருந்த போது நடந்தது இது. எங்கள் வீட்டுப் பசுவிற்கு பேறு காலம். அம்மாவும் நானும் கூடவே இருந்தோம். பசுவிற்கு முதல் பிரசவம் என்பதால் என்ன செய்வதென்று அதற்குத் தெரியவில்லை. வலியெடுத்தால் உந்தித் தள்ளுவதற்கு பதில் காலை மட்டும் உதைத்துக் கொண்டிருந்தது. படுக்காமால் நின்று கொண்டேயிருந்தது. முக்கால் மணி நேரமாகியும் கன்று வெளியே வந்தபாடில்லை. அம்மாவிற்கு பயம் வந்துவிட்டது. மாட்டுக்கு ஏதாவது ஆகிவிட்டால்? ஒரு மாடு இறந்ததற்காக பத்து நாள் அழுது கொண்டிருந்தவர்கள் என் அம்மா. 
அதன் பிறகு என் பெரியப்பா வந்து லாவகமாக கன்றை இழுத்து வெளியே எடுக்க - சுகப்பிரசவம். உடனே அம்மா "பேத்தி பிறந்திருக்கா" என்று ஆனந்தக் கூச்சல்! 

ஒரு முடிவு

இந்த வார மொட்டை மாடி கூட்டத்தில் (எங்கள் வீட்டில் -கிழக்கு பதிப்பகத்தில் அல்ல) பின் நவீனத்துவத்தைப் பற்றி ஏனோ பேச்சு எழுந்தது. அந்த பதத்தைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறோம் அவ்வளவு தான். அது என்ன என்று நடந்த விவாதத்தை வெளியே சொன்னால் பின் நவீனத்துவவாதிகள் வீட்டிற்கு ஆட்டோ அனுப்புவார்கள். என்னென்னவோ பேசி கடைசியாக "ஒரு எழவும் புரியாமல் இருந்தால் அது பின் நவீனத்துவம்" என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது. 

ஒரு புகைப்படம்

இது எங்கள் வயல். நெல் பயிரிட்டிருந்த போது எடுத்தது. அந்த பருவத்தில் ஊர் முழுக்க இப்படி தான். ரம்மியமாக இல்லை?

6 கருத்து:

அந்த வயல் புகை படம் மனதை கொள்ளை கொண்டது

அரட்டை ஆரம்பம் அருமை...படம் அருமை.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் எதிர்பார்த்தேன் மகேஷ்...

வருகைக்கு நன்றி அது ஒரு கனாக் காலம்... :)

//தமிழ்ப்பறவை said...
அரட்டை ஆரம்பம் அருமை...படம் அருமை.. இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யம் எதிர்பார்த்தேன் மகேஷ்...//

வாங்க அண்ணே... இனி சுவாரஸ்யமாக அரட்டை அடிக்கலாம்... :)

"கடைசியாக "ஒரு எழவும் புரியாமல் இருந்தால் அது பின் நவீனத்துவம்" என்று ஏக மனதாக முடிவெடுக்கப்பட்டது."

பின் நவீனத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள்!
ஏக மனதாக அல்ல, ஏகப்பட்ட தகராறுகளோடு முடிவெடுத்துப் பார்த்திருந்தீர்களேயானால், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் எல்லா எழவும் நல்லாவே புரிஞ்சிருக்கும்:-)))

வாங்க கிருஷ்ணமூர்த்தி சார்!

// பின் நவீனத்தின் ஒரு சிறு பகுதியை மட்டுமே பார்த்திருக்கிறீர்கள்! //

உண்மை தான். இந்த விஷயத்தில் எனக்கு கேள்வி ஞானம் மட்டுமே!

// ஏகப்பட்ட தகராறுகளோடு முடிவெடுத்துப் பார்த்திருந்தீர்களேயானால், பின் நவீனத்துவம், முன் நவீனத்துவம் எல்லா எழவும் நல்லாவே புரிஞ்சிருக்கும்:-))) //

நீங்கள் சொல்வது சரி. அணுகும் முறை முக்கிய காரணம். பின் நவீனத்துவம் பற்றி முதலில் தெரிந்து கொள்ளாமல், அந்த வகை கதைகள் இரண்டு படித்ததனால் வந்த வினை. அதைப் படித்த பின் ஏனோ தொடர விருப்பம் ஏற்படவில்லை. அதனால் தான் இந்த முடிவு.

புரியும் படி , தெரிந்து கொள்ள முயற்சிக்கிறேன்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More