August 25, 2009

இதயம் ஒரு கோயில்....


பெங்களூரு நாராயணா ஹிருதயாலயாவைச் சேர்ந்த இதய நோய் மருத்துவர் தேவி பிரசாத் ஷெட்டி, விப்ரோ ஊழியர்களுடன் கலந்துரையாடியதன் சாராம்சம் என்று ஒரு மின்னஞ்சல் வெகு நாளாகவே உலவிக்கொண்டிருக்கிறது. அதன் தமிழாக்கம் உங்களுக்காக!

மாரடைப்பு சில காரணங்கள்?
* சீரற்ற உணவு முறை.
* புகைப்பழக்கம்
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை
* மரபு ரீதியான காரணங்கள்!

பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக மாரடைப்பு வரக் காரணம் என்ன?
45 வயது வரை இயற்கை பெண்களைப் பாதுகாக்கிறது.

சர்க்கைரை நோய்க்கும் மாரடைப்புக்கும் ஏதேனும் தொடர்பு?
இருக்கிறது! சர்க்கரை நோயாளிகளுக்கு மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

மாரடைப்பினால் ஏற்படும் வலியையும் Gas பிரச்சனையால் ஏற்படும் வலியையும் எப்படி வேறுபடுத்துவது?
ECG யின் மூலம் மட்டுமே கண்டுகொள்ள முடியும்.

இதய நோய்கள் பரம்பரை வியாதிகளா?
ஆம்!

மாமிசம், குறிப்பாக மீன் சாப்பிடுவது இதயத்துக்கு நல்லதா?
இல்லை! அதிலும் மூளை, ஈரல் மற்றும் கிட்னி பகுதிகள் அதிகம் கொழுப்புச் சத்து கொண்டவை. (இனி அஞ்சப்பரிலோ அல்லது காரைக்குடியிலோ ஆர்டர் சொல்றதுக்கு முன்னாடி யோசிங்க!)

எந்த எண்ணெய் வகை சிறந்தது ? சூரியகாந்தி, ஆலிவ்.... ?
எதுவுமே நல்லதில்லை.

Junk Food - என்னென்ன?
பொரிக்கப்பட்ட/ வறுக்கப்பட்ட உணவுகள். மசாலா ஐட்டங்கள். சமோசாக்கள்...

ஆரோக்கியமானவராகத் தோன்றுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறதே?
இது silent attack, யாருக்கு வருமென்று ஊகிக்க முடியாது. அதனால், முப்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் சீரான இடைவெளியில் பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

இளைஞர்களுக்கிடையே இதய நோய்கள் அதிகரித்துள்ளதற்கான காரணம் என்ன?
உடல் உழைப்பு ஏதுமில்லாத வாழ்க்கை முறை, புகைப்பழக்கம், ஜங்க் ஃபுட் இவை முக்கியக்காரணங்கள்.

எனக்கு இருபது வயது தான் ஆகிறது. எனக்கு கொலஸ்ட்ரால் இருக்க வாய்ப்பிருக்கிறதா?
கொலஸ்ட்ரால் வயது பார்ப்பதில்லை. குழந்தைக்குக் கூட இருக்க வாய்ப்பிருக்கிறது.

நம்மில் நிறைய பேர் இரவு வெகு நேரம் கண் விழிக்க வேண்டியிருக்கிறது. சீரான உணவுப்பழக்கமோ வாழ்க்கை முறையோ இருப்பதில்லை. இப்படி இருப்பவர்களுக்கு உங்கள் அறிவுரை என்ன?
சீரான வாழ்க்கை முறையைப் பழகிக் கொள்ளுங்கள்.

மாரடைப்பு வந்தால் உடனே செய்ய வேண்டிய முதலுதவிகள் என்னென்ன?
அவரை தூங்கும் பொசிஷனில் படுக்க வைக்கவும். aspirin மற்றும் sorbitrate மாத்திரைகளை வைத்துக்கொள்ள செய்யலாம். அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு உடனே கொண்டு செல்லவும். முதல் ஒரு மணி நேரம் மிகவும் முக்கியமானது/அபாயகரமானது.

மாரடைப்பு வந்தவரே அவருக்கு முதலுதவி செய்துகொள்ள முடியுமா?
நிச்சயமாக! மேலே சொன்ன பதிலே தான்!

வாக்கிங், ஜாகிங் எது சிறந்தது?
வாக்கிங்.

மன உளைச்சலைக் குறைக்க என்ன வழி?
எல்லாவற்றிலும் perfection எதிர்பார்க்காமல் வாழப் பழகிக்கொள்ளுங்கள். :)

இதயத்தைப் பாதுகாக்க முக்கியமாகப் பின்பற்ற வேண்டியவை?
* டயட் - புரதம் நிறைந்த அதே சமயம் கார்போ மற்றும் கொழுப்பு குறைந்த உணவுகள்.
* எடைக்கட்டுப்பாடு - (உங்க BMI Score என்ன ?)
* இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரையை கட்டுக்குள் வைத்தல்.
* புகைப்பழக்கதை விட்டொழித்தல்
* உடற்பயிற்சி - ஒரு நாளைக்கு குறைந்தது அரை மணி நேர நடைப்பயிற்சி. வாரத்துக்கு ஐந்து நாட்களாவது.

பத்திரமா பாத்துக்கங்க!

டிஸ்கி 1: இந்த பதிவு நிறைய பேரைச் சென்றடைய உதவுங்கள்!

டிஸ்கி 2: இது மொழிபெயர்ப்பு தான். தவறு ஏதேனும் இருந்தால் சுட்டிக்காட்டுங்கள்.

August 22, 2009

எந்திரனும் உன்னைப் போல் ஒருவனும்


ரொம்பவும் எதிர்பார்த்த கந்தசாமி படம் பார்த்தவர்களை நொந்தசாமிகளாக்கி விட்டாராம். ஆனால் நாம் தான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குவோமே! இனி வரப்போகும் படங்களையும் ஒரு மாதிரி எதிர்பார்த்து வைப்போம். ஹ்ம்ம்ம்ம் எவ்வளவோ பண்ணிட்டோம். இத பண்ண மாட்டோமா?

1) எந்திரன்

சூப்பர் ஸ்டார் படம். எதிர்பார்ப்புக்கு கேட்கவா வேண்டும்? சங்கர் சார், சிவாஜில விட்டதை இதிலே பிடிக்கணும்! ஆனால் நான் எதிர்பார்ப்பது சுஜாதாவுக்காக. பாவம் மனிதர் ஆனந்த தாண்டவத்தில தான் மொக்கைவாங்கிட்டார். இதிலாவது அவரை கௌரவியுங்கள்!

2) உன்னைப் போல் ஒருவன்

வெட்னெஸ்டே என்ற இந்திப் படத்தின் தமிழ் வடிவம். உலக நாயகனுக்காக வெயிட்டிங்கோ வெயிட்டிங்.

3) அசோகவனம்

விக்ரம், ஐஸ்வர்யா ராய் போன்ற பழம்பெரும் நடிகர்கள் நடிக்கும் படம். ஏதோ இராமாயணக் கதையாம். எப்படியும் இந்தியில் எடுத்து தமிழில் டப் செய்யப்போகிறார். "குரு" போல! எனக்கு சுவாரஸ்யமில்லை. ஆனால் ஊரே எதிர்பார்ப்பதால் நானும் எதிர்பார்க்கிறேன்.

4) ஆயிரத்தில் ஒருவன்

வரும், ஆனால் வராது டைப் படம் இது. கொஞ்ச நாள் போனா மறந்தே போயிடும் செல்வா... சீக்கிரம் இறக்குங்க! பாவம் கார்த்தி! சோழ நாடு, தாய்தின்ற மண் என பாடல்கள் ஆவலைத் தூண்டுகின்றன. பார்த்திபன் கேரக்டருக்காகவும் காத்திருக்கிறேன்.

5) கோவா

வெங்கட் பிரபு இயக்கம். ஏதோ ஹாலிவுட் நடிகை ஒருவர் நடிக்கிறார் என்றெல்லாம் கிளப்பிவிட்டார்கள். வெங்கட் ஹாட்ரிக் அடிப்பாரா என்று பார்ப்போம்.

6) சுல்தான் தி வாரியர்

அனிமேஷன் படமாம். அதுவும் முப்பரிமாணத்தில். இந்த நுட்பத்தில் இந்தியர்கள் எந்த நிலையில் தான் இருக்கிறார்கள் என்று பார்ப்போமே!

7) சென்னையில் ஒரு மழைக்காலம்

இது வருமா வராதா என்று கௌதமுக்குத் தான் வெளிச்சம். ஸ்டில்ஸ் எல்லாம் கலர்ஃபுல்லாக இருக்கிறது. கௌதமுக்காக வெயிட்டிங்!

8) மதராஸப்பட்டினம்

ஏதோ பீரியட் படம் போல இருக்கிறது ஸ்டில்சைப் பார்த்தால். டைரக்டர் விஜய். "பொய் சொல்லப் போறோம்" எடுத்தாரே அவர் தான். எதற்காக என்று தெரியாமலேயே கன்னா பின்னாவென எதிர்பார்க்கிறேன்.

9) அங்காடித் தெரு

வெயில் படம் மூலமாக ஆனந்த அதிர்ச்சி கொடுத்தவர். இந்த படத்தில் என்ன கதைக்களம் என்று பார்ப்போம்.

10) நான் அவன் இல்லை 2


ஹி ஹி ஹி!

இந்த பத்துப் படங்கள் மட்டுமல்லாது, தளபதியின் வேட்டைக்காரன் (இதுவாவது கை கொடுக்குமா?) மற்றும் சின்னத் தளபதியின் "கண்டேன் காதலை (ஜப் வி மெட்டின் தமிழ்)" படத்தையும் வழி மேல விழி வைத்துக் காத்திருக்கிறேன்!

கழுத காசா பணமா? வெயிட் பண்ணுவோம்.

August 19, 2009

என்னைக் கொன்னுடுங்க!

மலைச்சாமிக் கவுண்டருக்குத் தொண்ணூறு வயதிருக்கும். ஆடி அடங்கிய ஜீவன். இய‌ற்கை உபாதைக‌ளுக்காவ‌து நடமாடிக்கொண்டிருந்த‌வ‌ர், மூன்று மாத‌ங்க‌ளுக்கு முன்னால் கீழே விழுந்து இடுப்பெலும்பை உடைத்துக்கொண்டார். அன்றிலிருந்து வாழ்க்கை, ப‌டுக்கையில் தான். மகன் நல்லப்பன் ஒரு லாரி ட்ரைவர். மாதத்தில் முக்கால்வாசி நாள் ரெய்ப்பூர்,குஜராத் என ரூட்டில் ஓடிக்கொண்டிருப்பவர். சாப்பாடு, த‌ண்ணீர் மற்றும் எல்லாவ‌ற்றிற்கும் என்ன செய்வது? ம‌ரும‌க‌ளைத் தான் சார்ந்திருக்க வேண்டிய‌தாயிற்று.

"என்னாலயெல்லாம் உன்ற அப்பனுக்கு ஊழியஞ்செய்ய முடியாது சாமி! " என்று கைவிரித்துவிட்டாள் ம‌கராசி. "ஏன்? பொறந்தவள பாக்க சொல்றது?" என்று பெரியவரின் மகள் வேலம்மாளை வேறு உள்ளே இழுத்தாள்.

"வேலா, அப்பனை உன்ற வூட்டுக்குக் கொண்டு போயிட்றியா? இந்த பாவி மவ பட்டினி போட்டே கொன்னு போட்ருவா!" நல்லப்பன் தன் தங்கையைக் கேட்டார். "இல்லீங்ண்ணா,ப‌ருத்தி வெடிக்கிற‌ ச‌ம‌ய‌முங்க. பாங்கு பாக்கற(து)க்கும் நேரமிருக்காது, வூட்ல‌யும் எட‌மிருக்காது." த‌யாராக க‌ண்க‌ளில் க‌ண்ணீர் வைத்துக்கொண்டாள்.

பெரிய‌வ‌ருக்குத் தெரிந்து ரொம்ப‌ வ‌ருத்த‌ப்ப‌ட்டார். ம‌க‌னை அழைத்த‌வ‌ர், "க‌ண்ணு, எனக்கும் ஒவுத்திரியம்(வலி) தாங்க‌ முடியல, நீங்களும் பாங்கு பாக்க முடியாது. அதனால ம‌ருந்தோ ஊசியோ போட்டு என்ற கதைய முடிச்சிடுங்க!" என்றார். முடியவே முடியாது என்றார் நல்லப்பன். ஒத்துக்கொள்ள ம‌றுத்த‌ ம‌க‌னை பேசிப் பேசி வ‌ழிக்குக் கொண்டுவந்துவிட்டார். ம‌களை ச‌ம்ம‌திக்க‌ வைப்பது சுல‌ப‌மாக இருந்த‌து. ஒரு நாள் பார்த்து உள்ளூர் டாக்ட‌ரை அழைத்து ஊசி போட்டுக் காரிய‌ம் நிறைவேற்ற‌ப்ப‌ட்ட‌து.

****

இது ஒரு கற்பனை தான்... ஆனால் இந்த மாதிரி ஏகப்பட்ட சம்பவங்கள் அவ்வப்போது கிராமப்புறங்களில் அரங்கேறும். இந்த விஷயத்தில் இரு விதமான வாதங்கள் கேட்கக் கிடைக்கின்றன. ஒன்று, எந்த உயிரையும் கொல்லும் உரிமை நமக்கில்லை. இன்னொரு உயிரை எடுப்பது குற்றமே என்பது. இன்னொன்று, வலியால் அவதிப்படும்/குணமாகவே வழியில்லாத உயிர்களை வைத்திருந்து இம்சிப்பதை விட அவர்களைக் கொன்று விடுதலையடையச் செய்வதே நல்லது என்பது. இரண்டாவது தரப்பினர் அகிம்சாமூர்த்தி காந்தியை உதாரணமாகக் காட்டுவார்கள்.

எல்லாம் சரி தான், ஆனால் இதற்கு அங்கீகாரம் கொடுத்தால், கருணைக்கொலை என்ற பெயரில் மிகச் சாதாரணமாகக் கொலைகள் நடந்தேறும் இல்லையா? கருணைக்கொலைக்கு யார் அனுமதி கொடுப்பது? யார் அதை முடிவு செய்வது? யார் பரிந்துரைக்கலாம்? அவரை நம்பமுடியுமா? பாதிக்கப்பட்டவரே ஒத்துக்கொண்டாலும் அவர் முழு மனத்துடன் சம்மதித்தாரா? நிறைய கேள்விகள் உள்ளன. நமது சமூகத்தைப் பற்ற்றி சொல்ல்வே வேண்டாம். கரன்சியை அள்ளி இறைத்துக் காரியம் சாதித்தேப் பழகிவிட்டோம். அப்புறம் ஆளாளுக்கு வரிசையில் நிற்க ஆரம்பித்துவிடுவார்கள் மனு கொடுக்க! கருணைக்கொலை தேவையா என்பதை ஆராய எத்தனைக் கடுமையான வழிமுறைகளைக் கொண்டுவந்தாலும் அதற்கெல்லாம் டிமிக்கி கொடுத்துவிட மாட்டோமா?

கருணைக்கொலைகள் அனுமதிக்கப்படலாமா இல்லையா என்பதையே இன்னும் முடிவு செய்யாத நிலையில், இது மாதிரி கவனிக்கக் கஷ்டப்பட்டுக்கொண்டு உறவுகளைக் கொல்லும் புண்ணியவான்கள், புண்ணியவதிகளை என்ன சொல்வது?

August 10, 2009

கதை கதையாம்...

"அவரு சந்தக்கி போய்ட்டு வாரப்ப எப்பயும் சந்தன மில்லு பக்கமாத்தான் வருவாராம்!" கந்தாயி பாட்டி இப்படித்தான் அந்தக் கதையை ஆரம்பிக்கும். "ஒரு நாளு, அம்மாவாச இருட்டு கருகும்முனு இருந்துச்சாம். மில்லு பக்கத்துல ஒண்டி மினி (முனி) கோயிலு இருக்குதுல்ல? அதும் பக்கத்தால‌ வந்துகிட்டு இருந்தாராம்! அப்ப பாத்து ஒரு சின்ன பையன், உம்பட வயசு இருக்கும், முன்னால போய்ட்டு இருந்தானாம். சரி, பேச்சு தொணைக்கு ஆளாச்சுன்னு தம்பீ தம்பீன்னு கூப்புட்டாராம். அந்த பையன் திரும்பியே பாக்கலியாம். அட என்றா இதுன்னு பக்கத்தால போயி, தோள்பட்டைல கை வச்சாராம். அந்த பையன் திரும்பிப் பாத்தானாம் கண்ணு.... அப்படியே கண்ணு ரெண்டு செவ செவன்னு இருந்துச்சாம். வாயில சுருட்டோட. அப்படியே குப்புனு வேர்த்துருச்சாங் கண்ணு அய்யனுக்கு. அன்னிக்கு காச்சல்ல படுத்தவரு தான். பத்து நாளக்கி எந்திரிக்கவேயில்ல!" ஒரு லாவகமாகக் கதையை முடிக்கும் பாட்டி. அந்த பையன் முனீஸ்வரன் தான் என்பது பாட்டியின் வாதம். "பின்ன, அந்த நேரத்துல கோயிலுக்குப் பக்கத்தால வாயில சுருட்டோட யாரு கண்ணு நிப்பா?" என்று கேள்வி வேறு கேட்கும். பதிலாக ஏதாவது சொன்னால் "அட, கம்முனு இரு, உனுக்கு ஒன்னுந்தெரியாது" என்று சொல்லி எஸ் ஆகிவிடும்.

கந்தாயி பாட்டி இந்த கதையென்றால் வேலப்ப தாத்தா இன்னொரு கதை சொல்வார். "சங்கீரி (சங்ககிரி) பஸ்ல கோண மேட்டுக்கிட்ட ஒரு பொம்பள ஏறுனாளாம். அது வேற கடேசி வண்டியா, அந்த பொம்பளயத் தவுர யாருமே இல்லியாம். ஏறுன பொம்பள சும்மா நகையும் நட்டுமா தக தகன்னு இருந்தாளாம். ஏறுனவ டிக்கெட்டே எடுக்கலியாம். கண்டெய்ட்டர் கேட்டுக்கிட்டே வாரானாம் ஆனா அந்த பொம்ப‌ள அசஞ்சே கொடுக்கலியாம். ஒரு கோயில் பக்கத்துல வந்ததும் நிறுத்தச் சொன்னாளாம். இங்கெயெல்லாம் நிக்காதும்மானு சொன்னானாம். பொம்பள ஒரு சிரிப்பு சிரிச்சாளாம். அவ்ளோதான். பஸ்சு அங்கெயே நின்னுடுச்சாம். அவளும் விடு விடுன்னு எறங்கி நடந்து கோயிலுக்குள்ள பூந்து கதவ சாத்திக்கிட்டாளாம்". அப்ப‌த்தான் அவ‌னுக்குத் தெரிஞ்சுச்சாம் வ‌ந்த‌து மாரியாயின்னு" அவ‌ரே மாரிய‌ம்ம‌னை நேரில் பார்த்த‌ மாதிரி ஒரு பார்வையுட‌ன் க‌தையை முடிப்பார்.

இது மாதிரி ஏக‌ப்ப‌ட்ட‌ க‌தைக‌ள் ஊருக்குள் உல‌வும். சாமி க‌ண் திற‌க்கும் போது அத‌ன் பார்வை எல்லைக்குள் ஓடிக்கொண்டிருந்த ர‌யில் அப்ப‌டியே நின்று போன‌து, முனி வேட்டைக்குப் போகும் போது எதிரில் வ‌ந்தவன் அப்பொழுதே பேச்சிழ‌ந்த‌து என்று தினுசு தினுசாக‌. ஆனால் இந்த‌ மாதிரிக் க‌தைக‌ள் இப்பொழுது கேட்க‌க் கிடைப்ப‌தில்லை. க‌தைசொல்லிக‌ளைக் கால‌ம் கொண்டு சென்றுவிட‌, இப்போதிருக்கும் தாத்தா பாட்டிக‌ளும் கதை சொல்ல ஏனோ ஆர்வ‌ம் காட்டுவ‌தில்லை. அவ‌ர்க‌ளைப் பிடித்து வ‌ம்ப‌டியாக‌ இந்த மாதிரி க‌தைகளைக் கேட்டால் "பிதுக்கா பிதுக்கான்னு" முழிக்க‌த்தான் செய்கிறார்க‌ள். இவை ம‌ட்டும‌ல்ல‌. எந்த‌க் க‌தைக‌ளைக் கேட்டாலும் ஒரு வித‌ ச‌லிப்புத்தான் ப‌திலாக‌க் கிடைக்கிற‌து. இப்போதெல்லாம் அவ‌ர்க‌ளுக்குக் க‌தைக‌ளை ஞாப‌க‌ம் வைத்து யாதொரு ப‌ய‌னுமில்லை. என்ன செய்வது? க‌தை கேட்கும் ஆர்வ‌மோ நேரமோ ந‌ம்மிட‌ம் இருப்ப‌தில்லை. ந‌ம‌து நேர‌த்தை செல்ஃபோனும் டி.வியும் ப‌றித்துக்கொள்ள‌, அவ‌ர்க‌ள் த‌ங்க‌ள் நேர‌த்தைத் திருமதி செல்வத்திலும் வைர‌ நெஞ்ச‌த்திலும் அட‌கு வைத்துவிட்ட‌ன‌ர். அதனால், மதுரைவீரனும், மாய‌க்க‌ண்ண‌னும், அர்ச்சுனனும், அபிமன்யுவும், கதைகள் வழியே காலம் காலமாக பயணித்த அலுப்புத் தீர, அவ‌ர்களின் ஞாப‌க‌ செல்க‌ளில் நெடுந்துயிலில் ஆழ்ந்துவிட்ட‌ன‌ர் :(

July 27, 2009

அரட்டை : 27-07-09


இந்தியாவின் முதல் அணுசக்தி நீர் மூழ்கிக்கப்பல் INS Arihant, கடந்த இருபத்து ஆறாம் தேதி (கார்கில் நினைவு தினம்) நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இது முழுவதுமாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டது. இதன் மூலம் இந்தியாவின் சுமார் நாற்பது ஆண்டு காலக் கனவு நனவாகி இருக்கிறது. கிட்டத்தட்ட இருபது வருடங்களாக கட்டுமானத்தில் இருந்ததாகக் கேள்வி. ஆனால் கப்பல் முழுவதுமாகச் செயல்பட குறைந்தது ஐந்து வருடம் ஆகும் போலத் தெரிகிறது! (ஆமா! இப்ப தானே Build Phase முடிஞ்சு இருக்கு? இன்னும் System Testing, User Acceptance..... hmm... Miles to Go!)

{}

கலைஞரின் "பொன்னர் சங்கர்" என்ற சரித்திர நாவலைப் படமாக்குகிறார்கள்(கேபிள் சங்கர் விமர்சனம் எழுதுவார்ல?). அனேகம் பேருக்கு பொன்னர் மற்றும் சங்கர் ஆகியோர் சரித்திர நாயகர்கள். ஆனால் கொங்கு தேசத்து மக்களுக்கு அவர்கள் அண்ணன்மார் சாமி என்று அழைக்கப்படும் குல தெய்வங்கள். வழி வழியாக சொல்லப்படும் அண்ணன்மார் சாமி கதைகளில், பொன்னர் சங்கர் ஆகியோருக்கு "வயது பதினாறு வாலிபம் தொண்ணூறு" என்று சொல்வார்கள். அதாவது அவர்கள் பதினாறு வயது வரை தான் வாழ்ந்தார்கள் என்றும் அந்த வயதுக்குள்ளேயே தொண்ணூறு வயதுக்கான ஆளுமையைப் பெற்றிருந்தார்கள் என்றும் சொல்லப்படும். இந்த பதினாறு வயது வாலிபர்கள் கேரக்டரில் தான் பிரசாந்த் நடிக்கிறார். ( என்ன கொடுமை சாமி இது? ). இது தவிர பொன்னர் சங்கரின் தங்கை - பெரிதும் வணங்கப்படும் அருக்காணித் தெய்வமாக யார் நடிக்கப்போகிறார்கள் என்று நினைத்தால் இப்பவே கண்ணைக் கட்டுகிறது. அதற்குள் ட்ராய் பட போஸ்டரில் பிரசாந்த் தலையை ஒட்டி வைத்து ஸ்டில்ஸ் வேறு. படம் வரட்டும் பார்க்கலாம். ஒரு ஆச்சர்யம். ரஹ்மான் இசை அமைக்கிறார் என்கிறார்கள்.

{}

இந்த மொபைல் தேர்வு செய்வது இருக்கிறதே, ரொம்ப கஷ்டம். தேவைப்படும் வசதியும் இருக்க வேண்டும், செக்ஸி மாடலாகவும் (மொபைல் தான்) இருக்க வேண்டும், ஸ்லிம்மாகவும் இருக்க வேண்டும், பணமும் குறைவாக இருக்க வேண்டும் (ஹி ஹி, இது இல்லாம?). இப்படி பார்த்துப் பிடிப்பதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. அதுவும் நண்பர்களிடம் கருத்துக் கேட்டால் அவ்வளவு தான். அவர்களுக்குப் பிடித்த மொபைலைத் தான் உங்கள் தலையில் கட்டுவார்கள். ஆனால் என் நண்பன் "சார்" ஐப் பார்த்து வாங்கு என்றான். எந்த சாரை என்று கேட்டதற்கு முறைத்த அவன், "சார் என்றால் SAR - Specific Absorption Rate. நமது உடம்பு கிரகிக்கும் கதிர்வீச்சின் அளவு" என்று விளக்கினான். SAR அளவு குறைவாக இருந்தால் நல்லதாம். 1.6 வாட்ஸ்/கி.கி என்பது தான் அதிகபட்ச பாதுகாப்பான அளவாம்! பார்த்துக்கோங்க சாம்யோவ்!

{}

இரு வீடியோக்கள் உங்களுக்காக. மேஜிக் எப்படி செய்கிறார்கள் என்று. சிம்பிள் வித்தை தான். பாருங்கள்




எல்லாமே டைமிங் தான்!

இன்னும் அரட்டையடிப்போம்! Have a great Week ahead!

July 19, 2009

இந்திய அணியும் விபத்துகளும்!


இந்திய ஹாக்கி அணியின் கோல் கீப்பர் பல்ஜித் சிங் புனேவில் நடந்த பயிற்சியின் போது வலது கண்ணில் பலத்த காயமடைந்தார்.

பல்ஜித்

கோல் கீப்பரின் Reaction Time ஐக் குறைக்கும் பயிற்சிக்காக கோல்ஃப் பந்து உபயோகப்படுத்தப்படும். இந்த பயிற்சியின் போது தான் அந்த விபத்து ஏற்பட்டது. வலது கண்ணின் ரெட்டினா மற்றும் லென்ஸ் ஆகியவை பலத்த சேதமடைந்திருப்பதாக டாக்டர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்திய அணியின் மிக சிறந்த ஆட்டக்காரர் பல்ஜித் சிங். இந்த விபத்து நிச்சயமாக அவருடைய ஹாக்கி கேரியருக்கு பலத்த அடி! அவருக்கு மட்டுமல்ல, இந்த சமயத்தில் இந்திய அணிக்கும் தான். ஏனென்றால், ஜூலை இறுதியில் தான் ஐரோப்பா டூர் போகிறது இந்தியா. இந்த மாதிரி சமயத்தில், அணியின் தூண் என்று சொல்லப்படுகிற ஒருவருக்கு இப்படி அடிபட்டிருப்பது கட்டாயமாக அணியின் தன்னம்பிக்கையை குலைக்கும்.

இந்த மாதிரி அசம்பாவிதங்கள் நடைபெறுவது இந்திய அணிக்கு புதிதல்ல! 2003 ல் ஜுக்ராஜ் சிங் கார் விபத்தில் காயமடைந்தார். இவர் சிறந்த Penalty Shoot Specialist. அந்த விபத்திற்குப் பிறகு ஜுக்ராஜ் சிங் அணியில் இடம்பெறவேயில்லை.

ஜுக்ராஜ்

அதே போல 2006 ல் சந்தீப் சிங் ரயிலில் நடந்த ஒரு அசம்பாவிதத்தால் காயமடைந்தார். அவர் பயணம் செய்த பெட்டியில் இருந்த போலீஸ்காரர் ஒருவரது துப்பாக்கி எதிர்பாராமல் வெடித்து காலில் காயமேற்பட்டது. இவரும் ஜுக்ராஜைப் போலவே Drag Flick Specilalist தான். 2006 உலகக்கோப்பைக்கு ஒரு மாதம் முன்பு இந்த விபத்து நேர்ந்தது. அதனால் உலகக்கோப்பை அணியில் அவர் இடம்பெறவில்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக சீக்கிரம் குணமடைந்து இன்னும் அணியில் இருக்கிறார்.

சந்தீப்

இப்போது பல்ஜித்! மூவருமே அவரவர் கேரியரின் உச்சத்தில் இருந்தபோது விபத்துகள் நடந்திருக்கிறது. மூவருமே சிறந்த ஆட்டக்காரர்கள். இந்த மூன்று விபத்துகளுமே அந்தந்த சம்யத்தில் அணிக்கு பெரிய இழப்பு!

Anyways, பல்ஜித் சீக்கிரம் நலம் பெறவும் இந்திய அணி சிறப்பாக விளையாடவும் வாழ்த்துவோம்!

July 11, 2009

Treasure Hunt விளையாடுவோமா?


இந்த விளையாட்டைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள்! ஒரு இடத்தில் அடுத்த இடத்திற்கான க்ளூ, அங்கு அதற்கடுத்த இடத்துக்கு என குறிப்பிட்ட இடத்தையோ அல்லது பொருளையோ தேடும் விளையாட்டு. சுத்தலில் விட்டாலும் சுவாரஸ்யமான விளையாட்டு. எங்கள் கல்லூரி விழா நடைபெறும்போது, முதல் நாள் இரவு இந்த விளையாட்டு நடக்கும். மரியாதைக்குரிய இடம் (கொடிக்கம்பம்), மாணவர்கள் அதிகம் விரும்பும் இடம் (கேண்டீன்), அதிகம் காலடி படாத இடம் (நூலகம்) என்று கிலோமீட்டர் கணக்கில் அலைய வைப்பார்கள். குழுக்களாகப் பிரிந்து, மெக்கென்னா தங்கம் தேடுவதைப் போல போட்டி போட்டுத் தேடிக்கொண்டிருப்போம். சைக்கிள், மொபைல் உபயோகிக்கக்கூடாது என்று நிறைய விதிகளும் உண்டு. வலையிலும் இந்த விளையாட்டு மிகப்பிரபலம்.

அதை மாதிரியாக வைத்து வலைப்பூக்களில் ஒரு விளையாட்டை முயன்றிருக்கிறேன். விளையாடிவிட்டு எப்படி இருக்கிறதெனச் சொல்லுங்கள்.

விளையாடும் முறை:

1) க்ளூக்கள் எல்லாம் இந்த பதிவிலேயே இருக்கும். ஒவ்வொரு க்ளூவும் ஒரு குறிப்பிட்ட பதிவரைக் குறிக்கும்.

2) ஒரு பதிவரைக் கண்டுபிடித்தவுடன், அடுத்த பதிவருக்கான க்ளூவை வைத்து அவர் வலைப்பூவில் தேடவேண்டும். அங்கிருந்து அடுத்தவர், அங்கிருந்து வேறொருவர்.

3)எல்லா க்ளூக்களுக்கும் பதிவின் முகப்பிலேயே விடை/லிங்க் இருக்கும். லிங்க் இல்லையென்றால் பதிவரின் பெயரை கூகிளில் தேடலாம்.
முக்கியமாக Lables அல்லது அவர்கள் விரும்பிப் படிக்கும் பதிவுகளில் (My Blog List)!

4) தெரு, வீடு, வாசல், கடை அனைத்தும் வலைப்பூவின் முகப்பையே குறிக்கும்.

5) ஒவ்வொரு வார்த்தைக்கும் முக்கியத்துவம் உண்டு.

6) ஒவ்வொரு எண்ணிற்கும் ஒரு பதிவர் பெயர். அத்தனை பெயர்களையும் கண்டுபிடிக்க வேண்டும்.

7) வெற்றி பெறுபவர்களுக்கு Inox Couple Pass தரலாமென்று திட்டம் *** (Conditions Apply!)

இனி க்ளூக்கள்!


* தமிழில் பேசும் இந்த பறவைக்கு வானமும் வசப்படும் (1). லிங்க் இந்த பதிவில் இருக்கிறது.

* அந்த பறவையின் கூட்டில் இருக்கிறது இளமை வேகம் (2).

* ரயிலேறி வந்தீங்களா? சரி சரி, தெரு வாசலிலேயே இருக்கிறது ஒரு வண்டியும் கூடவே கீயும். எடுத்துக்கொண்டு வாங்க. (3)

* இவர் நிரந்தர கவர்ச்சிக் கன்னியைப் பற்றி ஒரு ஆராய்ச்சி செய்திருக்கிறார். அந்த கட்டுரைக்கு பின்னூட்டியிருக்கிறார் ஒரு 'நாட்டிபாய்'. (4)

* அந்த பாய், "இளம் புலவ"ருக்கு (அந்த மாதிரி தான் பேர் வச்சு இருக்கார்). எழுதிய எதிர்பதிவின் கடைசியில் நவீன கம்பரைக் (5) கலாய்த்திருக்கிறார்.

* இவர் சொல்லும் இலக்கியக் கதைகள் அலாதியானது. ஆனா இப்ப அது இல்ல மேட்டர். இவர் ஒரு 'போட்டி' வைத்திருந்தார். ஊருக்கு உபயோகப்படும் போட்டி அது. அந்த பதிவில் இருக்கிறது அடுத்தவரின் பெயர் (6). அவர் பெயரைச் சொன்னால் 'கோவிச்சுக்குவாரா' என்று தெரியவில்லை.

* அவர் கடையிலேயே காத்திருப்பவர் கந்தா, கடம்பா, கதிர்......னின் நிகழ்காலம் (7)

* இன்பம், செல்வத்தின் அதிபதியை (8) தேடுங்கள் இங்கே.

* இவர் வீட்டிலேயும் ஒரு வாகனம் உண்டு. கார் அல்ல! (9)

அவ்ளோதான்! விடைகளைப் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள்!

July 09, 2009

அவள் பெயர்...

வெள்ளி மாலை 3 மணி. அலுவலகத்தில் அமர்ந்து கணிணியை சுவாரஸ்யமில்லாமல் பார்த்துக் கொண்டிருந்தபோது தான் நண்பன் அழைத்தான்.
"மச்சி, இன்னிக்கு போகலாம் டா" என்றான்
"நெசமாத்தான் சொல்றியா?" நம்ப முடியாமல் கேட்டேன்.
"சத்தியமாடா, சீக்கிரம் வரப் பார்" என்று சொல்லிவிட்டுத் தொடர்பைத் துண்டித்தான்

எனக்கு பரபரப்புத் தொற்றிக்கொண்டது. எத்தனையோ முறை அவளைப் பற்றி சிலாகித்துக் கூறியிருக்கிறான். அனுபவங்களைக் கதை கதையாய் சொல்லியிருக்கிறான். ஆனால் ஒருமுறை கூட என்னை அழைத்துச் சென்றதில்லை. இதை வேறு யாரிடமும் கேட்கவும் தயக்கமாயிருந்தது. நான் மட்டும் தான் பாக்கி. நண்பர்கள் எல்லோரும் ஏற்கெனவே... விடுங்கள் அது எதற்கு இப்போது? ஒரு வழியாக இன்றைக்குத் தலைவருக்கு மனம் இறங்கியிருக்கிறது. அது போதாதா?
*
ஆறரைக்கெல்லாம் அறையில் தயாராக இருந்தேன். நண்பன் வந்தான். "என்னடா போலாமா?"
"போலாம் மச்சி" உடனே சொன்னேன். என் உடுப்பைப் பார்த்தவன் நகைத்தான்.
"என்னடா இப்படி ட்ரெஸ் பண்ணியிருக்க? அங்க போற(து)க்கு எல்லாம் ஒரு தனி டைப்பான ட்ரெஸ் இருக்குடா" என்றான். அவன் அறிவுரையின் படி தயாரானேன்.
*
போகும் வழியில் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்னவெல்லாம் செய்யக் கூடாது என்று விலாவாரியாக வகுப்பெடுத்தான். நானும் பவ்யத்துடன் கேட்டுக்கொண்டேன். இடம் நெருங்க நெருங்க பரபரப்பு கூடியது. அதே சமயம் "இன்றைக்கே அவசியமா?" என்றும் தோன்றியது. "சரி, என்னதான் நடக்கிறது என்று பார்ப்போமே!" என்ற அசட்டு தைரியம் உந்தித் தள்ளியது.
*
உள்ளே நுழைந்தோம். ஒரு மார்க்கமான வெளிச்சம் வரவேற்றது. "சரி தான், இந்த மாதிரி இடத்துக்கெல்லாம் இப்படிப்பட்ட வெளிச்சம் தான் சரி போல" என்று தோன்றியது.
அருகில் வந்து நின்ற "அவனிடம்" அவள் பெயரைச் சொன்னான் நண்பன். புதுப்பழக்கம் அல்லவா? நான் அமைதியாக அமர்ந்திருந்தேன். சிறிது நேரத்தில் அவள் வந்தாள். சிக்கென்று கச்சிதமாக, அழகாக, செக்சியாக...
*
எல்லாம் முடிந்து வெகுநேரம் கழித்து வெளியே வந்தோம். "மச்சி சூப்பர்டா, ஒரு மாதிரி இருக்குடா" என்றேன்.
"நல்லா இருக்கு இல்ல? அதுக்கு தான் காசு செலவானாலும் பரவாயில்லன்னு இங்க வரேன்" என்றான். உற்சாகத்தில் என்னென்னவோ பேசிக்கொண்டு பார்க்கிங்கை நோக்கி நடந்தோம்.

ம், சொல்ல மறந்துவிட்டேனே, அவள் பெயர்.......... டக்கீலா!

டிஸ்கி : அவளை பற்றி.. சாரி, டக்கீலாவைப் பற்றி அறியாதவர்கள் என் மானசீக குருநாயர் கார்க்கியானந்தா சுவாமிகள் எழுதியதை இங்கே படிக்கவும்.

July 05, 2009

வேதாளம் கேட்ட கேள்விகள்.

யாரோ எப்போதோ கிளப்பிவிட்ட வேதாளம் அங்கே சுற்றி இங்கே சுற்றி இப்போது என் முதுகில் ஏறிக்கொண்டுள்ளது. இந்த வேதாள்த்தை என் மீது ஏவி விட்ட புண்ணியவான் அண்ணன் தமிழ்ப்பறவை அவர்கள்! நல்லவேளை இந்த வேதாளம், ப்தில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாகப் போகக்கடவது என்றெல்லாம் சபிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் "தொலைந்து போ" என லூசில் விட்டுவிட்டது.
இனி வேதாளம் கேட்ட கேள்விகளும் இந்த விக்கிரமாதித்தன் பதில்களும்!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

மகேஷ் - குழந்தையாக இருந்தபோது என்ன பெயர் வைப்பது என்ற குழப்பம் வந்ததாம் என் தாத்தா, சில பெயர்களை எழுதி சுருட்டிப்போட்டு தவழ்ந்து கொண்டிருந்த என்னை எடுக்க வைத்திருக்கிறார்! எடுத்த சீட்டில் இருந்தது மகேஷ். நானே வைத்துக்கொண்டதால் (?) எனக்கு இந்த பெயர் பிடிக்கும். தோழிகள் / ரசிகைகள் (அடீங்) இந்த பெயரையும் சுருக்கி "மேக்ஸ்" என்று அழைப்பது இன்னும் ஜோராக இருக்கிறது.

ரசிகன் - இதுவும் நானே வைத்துக்கொண்ட பெயர். இந்த வார்த்தையின் மகத்துவத்தும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவும் நெம்ப பிடிக்கும்.

2) கடைசியா அழுதது எப்போது?

நினைவில்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ரொம்ப சுமாராகவே இருக்குமென்பதால் மெனக்கெட்டு ரசித்ததில்லை. இந்த கேள்விக்காக எழுதிப் பார்த்ததில்.... வேண்டாம். மகா மட்டமாக இருக்கிறது.

4) பிடித்த மதிய உணவு?

சிக்கன் கொழம்பும் சுடுசோறும். கலந்துக்க கொஞ்சூண்டு தயிரும்!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அது அந்த வேறு யாரோவைப் பொறுத்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

மெரீனா கடலைப் பார்த்ததும் கடலில் குளிக்கும் ஆசையே விட்டுப் போய் விட்டது. அருவிக் குளியலுக்கே என் ஓட்டு.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

சிரிக்கிறாரா என்று.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

பிடித்த விஷயம் - எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம் - கோபம், நெருங்கியவர்கள் மீதும்.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பேச்சுலர் சாமியோவ்!

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நண்பன் ஜெயப்பிரதி.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு நிற அரைக்கால் சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

விக்ரம் என்ற படத்தில் வரும் "மீண்டும் மீண்டும் வா" பாட்டு!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு

14) பிடித்த மணம்?

மல்லிகை

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

லவ்டேல் மேடி - இவரோட நக்கலான பேச்சு. இந்த கேள்விகளை இவர் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்க்கிறேன்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அண்ணன் தமிழ்ப்பறவை - அநேகமாக அனைத்தும். இவரது உவமைகளும், இவர் வரையும் படங்களும் ஜூப்பரா இருக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

சரி சரி, ஹாக்கி ரொம்ப புடிக்கும்.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம்! சில நாட்களாக.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

சக்தே (எத்தனையாவது முறை என்று நினைவில்லை.)

21) பிடித்த பருவ காலம் எது?

கோடை காலம். அந்த பருவத்தில் எங்கள் கல்லூரிச் சாலை முழுவதும் கோலம் போட்டது போல இரத்தச் சிவப்பும், அடர் மஞ்சளுமாய் மாறி மாறி பூக்களை உதிர்த்திருக்கும் அந்த திலகம் மற்றும் பாதிரி (கொன்றை வகைகள்)மரங்களுக்காக!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

The Six Sacred Stones - By, Matthew Reilly.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

அடுத்த நல்ல படம் கிடைக்கும் போது. நாள் கணக்கெல்லாம் எதுவுமில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தை (என்னோடது இல்லப்பா) எழுப்பும் எல்லா ஓசையும். ச்சோ ச்வீட்!
பிடிக்காத சத்தம் : அலாரம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

கன்னியாகுமரி.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்கிறது. நன்றாக பொய் சொல்வது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் தரப்படும் வாக்குறுதிகள்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

அதிகம் சுற்றியதில்லை. இப்போதைக்கு ஏற்காடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் காயப்படுத்தாமல்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

Out of Syllabus

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி?

July 02, 2009

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் ???


ஓரினச்சேர்க்கை உறவு சட்டவிரோதம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் எனக் கூறி வந்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 377 வது பிரிவு. அன்புமணி ராமதாஸ் சுகாதார அமைச்சராக இருந்தபோதே இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் எதிர்ப்புகள் வலுக்கத்தொடங்கியதாலோ என்னவோ அப்போதைக்கு கைவிடப்பட்டது. தற்போது அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் தனி மனித உரிமைகள் / விருப்பம் போல வாழ்வு இத்யாதி இத்யாதிகளைப் பற்றி பேசுகிறது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 25 லட்சம் பேரைக் கொண்ட இந்த மைனாரிட்டி சமூகத்தின் தனி மனித உரிமைகள் இந்த 377 வதி பிரிவினால் பாதிக்கப்படுகின்றன. மூன்றாம் பாலினம் என்ற விஷயத்தை அங்கீகரிக்கும் சமூகம் தனி மனிதனின் Sexual Orientation ஐ தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் மறுப்பது நியாயமில்லை. தவிர ஹோமோசெக்ஷூவாலிட்டி என்பது மரபணு /ஹார்மோன் சார்ந்த விஷயம். இதைக் குற்றமாக்குவது என்பது ஒருதலைப் பட்சமானது. இதனை சட்டப்பூர்வமாக்குவதால் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தயங்காமல் சிகிச்சைக்கு வருவார்கள். இவ்வாறான வாதங்களை எடுத்து வைக்கிறது ஒரு தரப்பு.

"இல்லை, இது ஒரு வக்கிரமான மன நோய். அருவருக்கத் தக்க விஷயம். இயற்கைக்கு புற்ம்பான செயல். இந்த செயலை குற்றமில்லை என அறிவிப்பது. ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதாக அமையும். பொதுஜனங்களிடம் பாலியல் சில்மிஷம் அதிகமாகும். குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகும். எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்ப அமைப்புகள் முறைகெட்டுப்போகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற அற்புதமான கட்டுப்பாடு (இன்னும் வழக்கில் இருக்கிறதா என்ன?) காற்றில் பறக்கவிடப்படும். இந்தியாவின் உலகப்புகழ் வாய்ந்த கலாச்சார கூறுகள் சீரழியும்." என்றெல்லாம் வாதிடுகிறது இன்னொரு தரப்பு.

இதனிடையே மத்திய அரசு "ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது. நாகரிகமான வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படும். பெரும் சுகாதார அச்சுறுத்தலாக அமையும்" என்று கூறியுள்ளது.

கலாச்சாரம் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. இந்த விஷயம் தான் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்பதெல்லாம் வெறும் வாதம். ஆனால் இந்த தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டு தொந்தரவுகளும் குற்றங்களும் நடைபெறாமல் போதும். என்று எதிர்பார்க்கிறது என்னை மாதிரியான அன்றாடங்காய்ச்சித் தரப்பு!

குறிப்பு : ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More