Showing posts with label அறிவியல். Show all posts
Showing posts with label அறிவியல். Show all posts

June 30, 2010

"சூரியக்" குடும்பம்.


புளூட்டோ... பதவியிழந்த இந்த முன்னாள் கிரகத்தைப் பற்றிய கட்டுரை ஒன்று சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. புளூட்டோவிற்கு அந்தப் பெயர் கிடைத்தது சுவாரஸ்யமான சம்பவம். 18 ஆம் நூற்றாண்டின் இறுதி வரை எட்டு கோள்களே அறியப்பட்டிருந்தன. சூரியக் குடும்பத்தின் அந்த ஒன்பதாவது கிரகத்துக்கான(Planet X) தேடல் வெகுகாலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்படி இப்படியென்று 1930ல் இந்தக் கிரகம்(?) கண்டறியப்பட்டது. கிரகம் என்றால் பெயர் வைக்கவேண்டுமே! பெயர் வைக்கும் உரிமை மக்களிடமே விடப்பட்டது. உலகெங்கும் இருந்து ஆயிரக்கணக்கான பெயர்கள், பரிந்துரைகள் குவிந்தன. அதில் இங்கிலாந்தைச் சேர்ந்த பதினோரு வயது சிறுமியின் பரிந்துரை மிகப் பொருத்தமாக இருந்தது. அவள் சொல்லியிருந்த பெயர் "புளூட்டோ." சொல்லியிருந்த காரணம் தான் இந்தப் பெயரைத் தெரிவு செய்ய உதவியது. "சூரியக் குடும்பத்தின் எல்லாக் கோள்களும் (பூமியைத் தவிர) ரோமானிய அல்லது கிரேக்கக் கடவுளர்களின் பெயரைக் கொண்டுள்ளன. அதே போல, இந்தக் கிரகத்துக்கும் கடவுளின் பெயரை வைப்பதே சரி. இயல்பில் இருட்டு மற்றும் அதீத குளிரைக் கொண்டுள்ள இந்தக் கிரகத்துக்கு ரோம் புராணத்தின் பாதாள உலகின் கடவுளான புளூட்டோவின் பெயரே மிகப் பொருத்தமானதாக இருக்கும்" என்பதே அவள் கொடுத்திருந்த விளக்கம். இப்படியாக புளூட்டோ கிரகம் நாமகரணம் சூட்டப்பட்டது. ஓரிரு கோள்களுக்கானப் பெயர் காரணம் ஏற்கெனவே தெரிந்திருந்தாலும் மற்றக் கோள்களைப் பற்றியும் தெரிந்துகொள்ளத் தூண்டியது அந்தக் கட்டுரை.

கூகிள் அண்ணாச்சியைக் கேட்டேன். மற்ற கோள்களுக்கானப் பெயர்க் காரணங்கள்.

புதன் - மெர்க்குரி -  வேகமான கிரகம். 88 நாட்களில் சூரியனைச் சுற்றி வருகிறது. இறக்கைகள் கொண்ட ரோமானியக் கடவுளான மெர்க்குரியின் பெயர் வாய்த்தது. இவரது இறக்கைகள் இவரது தகப்பனாரான ஜூபிடர் அளித்ததாம். இவற்றை வைத்துக் காற்றை விட வேகமாகப் பறப்பாராம்.

வெள்ளி - வீனஸ் - பொதுவாக அனைவரும் அறிந்திருப்போம். ரோமானியக் காதல் தேவதை. அழகி. பிரகாசமான அழகியத் தோற்றத்தால் இந்தப் பெயர்.

பூமி - எர்த் -  கடவுள் பெயர் இல்லாத ஒரே கிரகம். பழங்கால ஜெர்மன்-ஆங்கிலத்தில் எர்டா என்றால் நிலம்/மண் என்று பெயர். இது மருவி எர்த் ஆனது.

செவ்வாய் - மார்ஸ் - ரோமானிய யுத்தக் கடவுள். இந்தக் கோளின் சிவப்பு நிறம் இரத்தத்தை நினைவூட்டுவதால் இந்தப் பெயர்.

வியாழன் - ஜூபிடர் - ரோமானியக் கடவுள்களின் அரசன். இந்தக் கோளின் பிரம்மாண்டத்துக்காக இந்தப் பெயர்.

சனி - சேடர்ன். - ஜுபிடரின் அப்பா. ரோமானிய லார்ட் ஆஃப் தி ரிங்க்ஸ் :). வில்லனாக மாறிய இவரது தந்தையான யுரேனஸிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்துத் தனியாக அரசாண்டார் என்று ஒரு கதை உண்டு. பிறகு இவரிடமிருந்து ராஜ்ஜியத்தைப் பறித்தார் ஜுபிடர்.

யுரேனஸ் - முதலில் இங்கிலாந்து மன்னரின் நினைவாக ஜார்ஜியன் கிரகம் என்று தான் இதனை அழைத்தார்கள். பிறகு கிரேக்கக் கடவுளான ஔரானஸின் நினைவாக யுரேனஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. ஔரானஸ் சனிக் கிரகத்தின் தந்தை. சொர்க்கங்களின் கடவுள்.

நெப்டியூன் - கடல் நிறம் கொண்ட கிரகம். கடல்களின் கடவுளான (ரோமானிய) நெப்டியூனின் பெயர் சூட்டப்பட்டது.

கிரகங்கள் மட்டுமில்லாது அவற்றின் நிலாக்களுக்கும் இதே முறை பின்பற்றப்பட்டது.

தமிழ்நாட்டைச் சற்று நினைத்துப் பாருங்கள். "சூரியக்" குடும்பத்துக்கு இப்போதைய முதல்வர் பாராட்டுக் குழுவினர் பெயர் வைத்திருந்தால் என்னென்ன பெயர்கள் வைத்திருப்பார்கள்? உதாரணம் : சூரியன் - கலைஞர்.



April 28, 2010

கிரிப்டோக்ராஃபி

கிரிப்டோக்ராஃபி என்றால் தெரியுமல்லவா? தகவல்களை மறைத்துப் பரிமாற்றிக்கொள்ளும் முறை பற்றியப் படிப்பு. மறைத்து என்றால் சங்கேதங்களாக இருக்கலாம். குறியீடுகளாக இருக்கலாம், விக்கிரமாதித்தன் கதைகளிலோ அல்லது டான் ப்ரௌன் நாவல்களிலோ வருவது போல புதிர்களாகவும் இருக்கலாம். இன்றும் கிராமங்களில் ஜாடை பேசுவது என்று ஒரு வழக்கு உண்டு. வெளியாருக்குத் தெரியாத மாதிரி(சில சமயம் தெரியும் மாதிரியும்) வார்த்தைகளை அமைத்து சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் புரியும் வண்ணம் பேசுவார்கள். இவ‌ற்றையெல்லாம் கிரிப்டோக்ராஃபியில் சேர்ப்பார்க‌ளா என்று தெரிய‌வில்லை. ஆனால் கிரிப்டோக்ராஃபி என்று முறைப்ப‌டி வ‌கைப்ப‌டுத்தியுள்ள‌து நான்காயிரம் ஆண்டுக‌ளுக்கு முந்தைய மெசபடோமிய எழுத்துக்கள் சிலவற்றை. எனது அபிப்ராயப்படி முதல் மனிதர்களான ஆதாம் ஏவாளுக்கு இடையூறாக‌ மூன்றாவது மனிதன் வந்த அந்த கணத்தில் கிரிப்டோக்ராஃபி பிறந்திருக்க வேண்டும். :)

இந்தச் சங்கேதங்கள், குறியீடுகள் பற்றிய படிப்புக்கு ஆங்கிலத்தில் கிரிப்டாலஜி/கிரிப்டோக்ராஃபி என்றும் தமிழில் மறையீட்டியல் என்றும் பெயர். கிரிப்டோ(ரகசியமாக) என்ற கிரேக்க வார்த்தையிலிருந்து வந்தது தான் கிரிப்டோக்ராஃபி. இந்த ரகசியத் தகவல் பரிமாற்றத்தில் மூன்று நிலைகள் இருக்கின்றன. 1. என்கிரிப்ஷன் 2. ட்ரான்ஸ்மிஷன் 3. டிகிரிப்ஷன்.

நீங்கள் மறைக்க வேண்டிய தகவலை (Plain Text) யாருக்கும் புரியாத எழுத்துக்களாக(Cypher Text) மாற்றுவது என்கிரிப்ஷன். என்கிரிப்ட் செய்ய உப்யோகப்படுத்தப்படும் வழிமுறையை "கீ" என்பார்கள். ட்ரான்ஸ்மிஷன் என்பது மாற்றப்பட்ட செய்தியை உங்கள் பார்ட்னருக்கு அனுப்புவது. நமக்கு மிகவும் பழக்கப்பட்ட முறை புறாக்காலில் கட்டி அனுப்புவது. நிறைய அவகாசமிருந்தால் தெரிந்தவர்களின் தலையை மொட்டையடித்து, அதில் சைஃபர்டெக்ஸ்ட்டை பச்சை குத்தி முடி வளர்ந்த பிறகு கூட அனுப்பலாம்.
டிக்ரிப்ஷன் என்பது சைஃபர்டெக்ஸ்ட்டை உடைத்து அனுப்பப்பட்ட செய்தியைப் பெறுவது. பொதுவாக என்கிரிப்ட் செய்ய மற்றும் உடைக்க ஒரே "கீ" யை உபயோகிப்பார்கள்.

ரொம்ப‌க் க‌ஷ்ட‌ப்ப‌டுத்திக்கொள்ளாமல் சில என்கிரிப்ஷன் வகைகளைப் பார்ப்போம். மிக‌ எளிய முறை பதிலீடு (Substitution). அதாவ‌து ஒரு எழுத்துக்குப் ப‌தில் குறிப்பிட்ட‌ இன்னொரு எழுத்து.

உதார‌ண‌ம். Army is In. இந்தச் செய்தியை dupblvlq என்று மாற்றலாம். எப்படியென்றால் Aக்கு பதில் மூன்று எழுத்து தள்ளி இருக்கும் d ஐ எழுதிக் கொள்ள வேண்டும். R க்கு பதில் u. இந்த மாதிரி.... இந்த முறையை அறிமுகப்படுத்தியவர் ஜூலியஸ் சீசர். செய்தியைப் பெறும் படைத்தளபதிக்கு இந்த முறை எத்தனை எழுத்துத் தள்ளியிருக்கிறது என்றுத் தெரிந்திருக்கும்.

இன்னொரு முறை:

உதாரணத்துக்கு உங்கள் காதலிக்கு Meet Me In Inox at three என்ற செய்தியை அனுப்புகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அதனைக் கீழ்கண்டவாறு எழுதுங்கள். முதல் வரியில் முதல் ஐந்து எழுத்துக்கள். இரண்டாவது வரியில் அடுத்த ஐந்து.....



எழுதிய முறைக்கு மாறாக மேலிருந்து கீழாக படியுங்கள். Meoheixrenaetitemnt என்று வரும். அவ்வளவுதான். இதை உங்க்களுக்குத் தோதான ட்ரான்ஸ்மிஷன் முறையில் அனுப்புங்கள். பின் விளைவுகளுக்குக் கம்பெனி பொறுப்பல்ல.

பழங்காலத்தில் கிரிப்டோக்ராஃபி என்று பெரிதாக எதுவும் தேவைப்பட்டிருக்கவில்லை. நிறைய பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாததால், சாதாரண எழுத்துருக்களே போதுமானதாக இருந்தன. கல்வியறிவு வளர வளர, தகவல்களைப் பாதுகாப்பதில் அதிகக் கவனம் தேவைப்பட்டது. அப்போது ஆரம்பித்தது தான் கிரிப்டோக்ராஃபி. குறியீடுகள், கலைத்துப் போடப்பட்ட எழுத்துக்கள், ஒரு எழுத்துக்குப் பதில் மற்றொரு எழுத்து என மாற்றம் காண ஆரம்பித்தது இந்தத் துறை. ஒவ்வொரு என்கிரிப்ஷன் முறையும் வெகு சீக்கிரத்தில் காலாவதியாக ஆரம்பித்தது. அதுவும் கணிப்பொறியின் கண்டுபிடிப்புக்குப் பிறகு பெர்முடேஷன் காம்பினேஷன் முறை, மற்றும் புள்ளிவிவர (ப்ளைன்டெக்ஸ்ட் எந்த மொழி என்று தெரிந்தால் அந்த மொழியில் அதிகமாக சேர்ந்து வரும் எழுத்துக்களை வைத்து டிகிரிப்ட் செய்ய ஆகும் நேரத்தைக் குறைப்பது. உதாரணத்துக்கு ஆங்கிலம் என்றால் the, -ent, -nd இப்படி) அடிப்படையிலெல்லாம் சைஃபர்டெக்ஸ்ட் உடைக்கப்பட்டது அதனால் மிகச் சிக்கலான என்கிரிப்ஷன் முறைகள் தேவைப்பட்டன. இப்பொழுதெல்லாம் Bits, Bytes, Hexa Decimal என்று ரொம்பவே ஃபிலிம் காட்டுகிறார்கள்.

கிரிப்டோக்ராஃபியின் முக்கிய நோக்கம் தகவல் பாதுகாப்பு! தகவல் திருடப்படாமல் இருக்க உங்கள் மின்னஞ்சலை என்கிரிப்ட் செய்து அனுபுதல் முதற்கொண்டு பாஸ்வேர்டு, ஏ.டி.எம் பின் நம்பர், டிஜிட்டல் கையெழுத்து, பெறப்படும் தகவல் நடுவில் எங்க்கேயும் மாற்றப்பட்டதா என்று சரிபார்த்தல், அனுப்பியது இன்ன ஆள் தான் என்று சரிபார்த்தல் என்று கிரிப்டோக்ராஃபியின் பயன்பாடுகள் எராளம்.

இன்று பிரபலமான கிரிப்டோக்ராஃபி முறைகளில் சில SHA1 & Md5 என்றான் நண்பன். Md5 முறையில் "Karki is getting married Soon" என்ற வாக்கியத்தை என்கிரிப்ட் செய்தேன்.

bda25b3704807770ebf1de41e2461c41 என்று வருகிறது!

April 21, 2010

கிரையோஜெனிக்



சந்திரயான் – 1 எதிர்பார்த்த அளவு செயல்படாதது, கிரையோஜெனிக் – ஜி.எஸ்.எல்.வி தோல்வி போன்ற தொடர் நிகழ்வுகள், 2012 ல் சந்திரயான் – 2 திட்ட்த்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. சந்திரயான் 2, நிலவுக்கு மனிதனையனுப்பும் இந்தியாவின் திட்டம். ஆனால் திட்டமிட்டபடி சந்திரயான் – 2 நிலவுக்கு செலுத்தப்படும் என்று விஞ்ஞானிகள் தெரிவிப்பதாலும், 2011ல் விஜயகாந்த் முதல்வராகிவிட்டால் ராக்கெட் எஞ்ஜினுக்கே வேலையிருக்காது என்பதாலும் நாம் கவலையை விட்டுவிடலாம். கிரையோஜெனிக் எஞ்ஜின் பற்றிக் கொஞ்சம் பார்க்கலாம்.

கிரையோஜெனிக்ஸ் என்பது மிகக் குறைந்த வெப்ப நிலையில் உள்ள் பொருட்களின் தன்மையைப் பற்றிய படிப்பு. குறைந்த என்றால் -150 செல்சியஸுக்குக் கீழே. கிரையோஜெனிக்ஸ் படிப்பில் இவ்வளவு குறைந்த வெப்பநிலைகளை அளக்க செல்சியஸுக்குப் பதில் கெல்வின் என்ற அளவு பயன்படுகிறது (0 டிகிரி செல்சியஸ் = 273 கெல்வின்). இந்த வெப்பநிலையில் பொதுவாக அனைத்து வாயுக்களும் திரவமாகிப் போகின்றன. திரவ நிலையிலுள்ள இந்த வாயுக்கள் திடீரென்று விரிவாகி (ஆவியாகி) வாயு நிலைக்கு மாறும் போது கிடைக்கும் சக்தி அபரிமிதமானது. இந்த சக்தி தான் ராக்கெட்டை சுமார் 30,000 கி.மீ உயரம் வரை உந்தித் தள்ள உதவுகிறது(Thrust). கிரையோஜெனிக் இஞ்ஜின்கள் இந்தத் தொழில்நுட்பத்தில் தான் இயங்குகின்றன. இந்த இயந்திரங்களில் எரிபொருளாக இருப்பவை  திரவ ஹைட்ரஜன் (LH2) மற்றும் திரவ ஆக்சிஜன்(LOX). இந்தத் திரவங்கள் எப்படி வாயுநிலைக்கு மாறுகின்றன, எவ்வளவு சக்தி கிடைக்கிறது என்பதெல்லாம் ரொம்ப சயன்ஸ் என்பதால் விட்டுவிடலாம்.

நமது ஜி.எஸ்.எல்.வியைப் பார்ப்போம். ஜி.எஸ்.எல்.வி ராக்கெட் செலுத்துதலில் மூன்று நிலைகள் உள்ளன. முதல் நிலையில் திட எரிபொருளும், இரண்டாவது நிலையில் திரவ எரிபொருளும் பயன்படுகின்றன. இரு நிலைகளில் சுமார் 130 கி.மீ உயரம் வரை செலுத்தப்படுகிறது. அதன் பிறகு கிரையோஜெனிக் இயந்திரம் இயங்க வேண்டும். முதல் இரு நிலைகளை வெற்றிகரமாகக் கடந்த ஜி.எஸ்.எல்.வி மூன்றாவது நிலையில் தோல்வியுற்றது. கிரையோஜெனிக் எஞ்ஜின் இயங்க ஆரம்பிக்கவேயில்லை. சோதனைகளில் நமது கிரையோஜெனிக் இயந்திரங்கள் வெற்றிகரமாக இயங்கியிருந்தாலும், விண்வெளியில், 130 கி.மீ உயரத்தில் இயக்குவது பெரும் சவால் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இந்தியா கிரையோஜெனிக் தொழில்நுட்பத்தில் இறங்கியதன் பின்னணியில் வழக்கம்போல அமெரிக்காவே இருக்கிறது. 90 களில் இந்திய-ரஷ்ய ஒப்பந்தம் மூலம் இந்தியாவுக்குக் கிடைக்கவிருந்த இந்தத் தொழில்நுட்பம், அமெரிக்காவின் தலையீட்டால் கிடைக்காமல் போனது. அமெரிக்கா இதற்குச் சொன்ன காரணம் “இந்தியா இந்த்த் தொழில்நுட்பத்தை ஏவுகணைகளைத் தயாரிக்கப் பயன்படுத்தக்கூடும் என்பது. அதனால் சொந்தமாக இந்த்த் தொழில்நுட்பத்தில் தன்னிறைவு அடையும் முயற்சி ஆரம்பிக்கப்பட்ட்து. அன்று ஆரம்பித்தப் பயணத்தின் ஒரு படிக்கட்டு இந்த்த் தோல்வி. படிக்கட்டு மட்டுமே. ஏனெனில், இன்னும் ஒரு வருட்த்தில் மீண்டும் ஒரு முறை ஜி.எஸ்.எல்.வி செலுத்தப்படுமாம்! With More Brilliance, With More Excellence! All the Best!

March 11, 2010

ஈ.எஸ்.பி

                                             

ஏதாவது ஒரு ரெஸ்டரண்டில் நண்பனுடன் அம‌ர்ந்திருப்பீர்க‌ள். லேவண்டர் கலர் சுடிதாரணிந்த சொர்க்கம் ஒன்று புன்னகைத்தபடி உங்கள் இருக்கையைக் கடந்து போகும். "அட, இது மாதிரி ஏற்கெனவே நடந்த மாதிரி இருக்கே" என வியப்பீர்கள். அல்லது "இந்த மாதிரி நடக்கும் என ஏற்கெனவே எனக்குத் தோன்றியிருக்கிறது" என சந்தோஷப்படுவீர்கள். உங்கள் நண்பர் கூட "ஒருவேளை உனக்கு ஈ.எஸ்.பி (Extrasensory perception) இருக்கும்" என உற்சாகப்படுத்துவது போல கலாய்த்திருப்பார். இது மாதிரி நடப்பதற்குக் காரணம் நம் மூளை ஒரே காட்சியை இரண்டு முறை பெறுவது தானாம். வழக்கமாக, ஒரு காட்சியை இரண்டு கண்களும் ஒரே சமயத்தில் மூளைக்கு அனுப்புகின்றன.இரு கண்களுக்குமிடையே Co-Ordination இல்லாத சில நேரங்களில், அனுப்பப்படும் இரு காட்சிகளுக்கிடையே மில்லி செகண்ட்கள் வித்தியாசம் இருக்கும். உதாரணத்துக்கு, அந்த சுடிதார் சொர்க்கம் ஒரு கண் மூலமாக ஏற்கெனவே மூளைக்குச் சென்று பதிவாகியிருக்கும். சில மில்லி செகண்ட்கள் கழித்து அதே காட்சி மூளைக்கு மறுபடியும் போகும். ஏற்கெனவே நினைவில் பதிவாகியிருக்கும் அந்தக் காட்சித் திரும்பவும் மூளைக்குக் கிடைப்பதால் தான் இப்படித் தோன்றுகிறதாம்.

இன்னொரு வகை Co-Ordination பிரச்சனை இருக்கிறது. தூக்கத்திலிருந்து கண்விழித்ததும் கை கால்களை அசைக்க முடியாமல் மிரண்ட அனுபவம் நம்மில் நிறைய பேருக்கு இருக்கும். பொதுவாக நாம் தூங்கும் போது நம் கை கால்கள் செயலிழக்கச் செய்யப்படுகின்றன(sleep paralysis). கனவுகளுக்கு React செய்யாமல் இருப்பதற்குத்தான் இந்த ஏற்பாடு. தூக்கம் தெளிந்தவுடன், சரியாகச் சொல்வதென்றால் கான்ஷியஸ் வந்தவுடன், கை கால்கள் இனி அசையலாம் என்று மூளையிடமிருந்து சிக்னல் கிடைக்கும். சில நேரங்களில் கான்ஷியஸ் வந்தும் உடலுக்கு சிக்னல் கிடைக்காமல் இருக்கும். அந்த சமயங்களில் தான் அசைய நினைத்தாலும் அசைய முடியாமல் திணறியிருப்போம். மிரட்டும் உருவங்கள், அமானுஷ்ய ஒலி, கையைக் காலை யாரோ பிடித்து அமுக்குகிறார்கள் என்னும் புகார்களெல்லாம் இதனால் தான்.
       
அட.... ஈ.எஸ்.பி என ஆரம்பித்து வேறு எங்கோ போகிறது. ஈ.எஸ்.பி (Extra Sensory Perception) என்பதைச் சாதாரண புலன்களுக்குச் சாத்தியப்படாத உணர்ச்சிகளை உணர்தல்(!) எனச் சொல்லலாம். இந்த மாதிரி அறிவியலுக்கு அப்பாற்பட்டதை பாராநார்மல் என்று சொல்வார்கள். அனைவருக்கும் தெரிந்த ஒரு வகை எதிர்காலத்தைக் கணிப்பது. இன்னும் சில வகைகள் இருக்கின்றன. டெலிபதி, தொலைவில் நடக்கும் விஷயத்தை அறிவது, ஆவிகளுடன் சவகாசம் வைத்திருப்பது(சிக்ஸ்த் சென்ஸ் நினைவிருக்கிறதா?), ஒரு பொருளை வைத்துக்கொண்டே ஒரு ஆளைப் பற்றிக் கணிப்பது(Psychometry). ஒரு பொருளை உருவம் மாற்றுவது கூட ஈ.எஸ்.பி தான்.

இந்த ஈ.எஸ்.பி பற்றிய ஒரு தியரி பின்வருமாறு கூறுகிறது. அனைவருக்கும் ஆழ்மனதில்  ஈ.எஸ்.பி சக்தி/உணர்ச்சி இருக்கிறது. ஆழ்மனது வெளி உலகுடன் தொடர்பு கொள்ளும் போது தான் புற மனதுக்குத் தெரிகிறது. அது வரை இந்த உணர்ச்சி அறியப்படாமலே போய் விடுகிறது.  அதாவது எல்லோருக்குமே ஈ.எஸ்.பி திறன் இருக்கிறது. ஆனால் பெரும்பாலானவர்களுக்கு அதை அறியும் சந்தர்ப்பம் வாய்ப்பதில்லை. இது ஒரு சாம்பிள் தான். நிறைய‌ தியரிகள் வந்துவிட்டன. ஈ.எஸ்.பி எங்கு ஏற்படுகின்றது என ஒன்று, இரண்டு ஆழ்மனங்கள் உள்ளன என ஒன்று.. இப்படி நிறைய!

ஆனால் அறிவியலைப் பொறுத்தவரை ,ஈ.எஸ்.பி விஷயத்தில் குழப்பமான நிலையே நீடிக்கிறது. ஏனெனில் அறிவியலில் எல்லாமே டெஸ்ட் கேஸ் தான். எல்லாவற்றிலும் பாஸ் செய்தாக வேண்டும். சுஜாதா அவர்களின் வார்த்தையில் சொல்வதென்றால், ராமசாமிக்கு ஈ.எஸ்.பி இருக்கிறதென்றால் அதே தெருவில் வசிக்கும் குப்புசாமிக்கும் ஈ.எஸ்.பி இருக்கவேண்டும். விஞ்ஞானம் நம்பாவிட்டாலும் போலீஸ் ஈ.எஸ்.பியை நம்புகிறது போல! நிறைய கேஸ்களில் ஈ.எஸ்.பி குற்றவாளியை நெருங்க ‌உதவியிருக்கிறதாம்.

நித்யானந்தருக்கு ஈ.எஸ்.பி இருந்திருந்தால் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பார்?

October 13, 2009

நீலகிரி, நியூட்ரினோ, சில கேள்விகள்


நீலகிரி மாவட்டம் மசினகுடி, சிங்காரா வனப்பகுதியில் நியூட்ரினோ ஆய்வகம் ஒன்றை இந்தியா அமைக்க இருப்பதையும் அதை இயற்கை ஆர்வலர்கள் எதிர்த்து வருவதையும் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கேட்பத‌ற்கு டொரினோ மாதிரி இருக்கிறதே, அது என்ன நியூட்ரினோ என்று வ‌லையில் தேடிப்பார்த்த‌தில் சில‌ த‌க‌வ‌ல்க‌ள் கிடைத்தன.

இப்போதைக்கு ‌நியூட்ரினோ என்பது ஒரு மின்சுமை இல்லாத, ஒளியின் வேக‌த்திற்கு நெருக்க‌மாக‌ ப‌ய‌ணிக்க‌க்கூடிய‌ மிக‌ச்சிறிய (மிக மிக மிகச் சிறிய‌) துகள் என்று வைத்துக்கொள்வோம். இந்த துகள் சூரியனில் நடைபெறுகிற அணுப்பிளவு/இணைவு போன்ற செயல்பாடுகள் மூலம் இயற்கையாகக் கிடைக்கிறது. இது தவிர, இது அணு உலைகள் மூலமாகவோ அல்லது காஸ்மிக் க‌திர்க‌ளைக் கொண்டு அணுவைத் தாக்குவ‌தாலோ இவற்றைப் பெற‌ முடியும். ஒவ்வொரு வினாடிக்கும் 50 ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1000 பில்லியன்) நியூட்ரினோ துகள்கள் நம் உடம்பில் பாய்கிறது.

இருக்க‌ட்டும். இந்த‌ துக‌ளால் என்ன‌ ந‌ன்மை? இந்த துகளின் சிறப்பு என்ன? ஏன் நியூட்ரினோ ஆய்வ‌க‌ம் இந்தியாவில் அதுவும் நீல‌கிரி வ‌ன‌ப்ப‌குதியில் அமைக்க‌ப்ப‌டுகிற‌து?

ம‌ற்ற துகள்கள் (உம் : ஃபோட்டான்) வ‌ளிம‌ண்ட‌ல‌த்திலுள்ள‌ மாசுக்க‌ளால் (முக்கியமாக மின்காந்த அலைகளால்) வ‌லுவிழக்கக்கூடும். அதனால் நீண்ட தூரம் பயணிக்க முடியாது. ஆனால் நியூட்ரினோ, எந்த ஒரு பொருளாலும்/துகளாலும் பாதிக்க‌ப்ப‌டாம‌ல் ஊடுருவிச் செல்ல‌வ‌ல்ல‌து. இதுவே இத‌ன் சிற‌ப்பு. அத‌னால் தொலை தூர‌ ஆராய்ச்சிக‌ளுக்கு இந்த‌ துக‌ளைப் ப‌ய‌ன்ப‌டுத்த‌லாம். பிர‌பஞ்ச‌ம் உருவான‌ வித‌த்தைப் ப‌ற்றித் தெரிந்துகொள்ள‌ முடியும் என்கிறார்க‌ள். த‌விர‌ சூரிய‌னின் "கோர்" ப‌குதியை ஆராய‌வும் இது உத‌வுமாம். மேலும் ப‌ல ம‌க‌த்தான‌ ப‌ய‌ன்க‌ளைத் த‌ரும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

ஆனால் இந்த‌ நியூட்ரினோக்க‌ளைப் பிடிப்ப‌து அவ்வ‌ள‌வு சுல‌ப‌மில்லை. லிட்ட‌ர் லிட்ட‌ராக வெள்ளை-ஸ்பிரிட் (அல்லது நீர் அல்லது கனநீர்... ) தேக்க‌ப்ப‌ட்ட ராட்ச‌தத் தொட்டிக‌ள் மூல‌மாகப் பிடிக்க‌லாம். அத‌ற்கு நிறைய‌ இட‌ம் தேவை. நிறைய மாச‌டையாத‌ இட‌ம். அத‌ற்குத்தான் நீல‌கிரி. திட்ட‌ம் என்ன‌வென்றால், 1.3 கி.மீ ஆழத்துக்குத் மலை உச்சியில் தோண்டி ஆய்வ‌க‌ம் அமைக்க‌ப்போகிறார்க‌ள். அது த‌விர‌ ஒரு இர‌ண்ட‌ரை கி.மீ தூர‌த்துக்கு ம‌லைய‌டிவார‌த்திலிருந்து அந்த ஆய்வ‌க‌த்திற்கு குகை மாதிரி தோண்ட‌ப்போகிறார்க‌ள். பிற்பாடு, ஜ‌ப்பான் அமெரிக்காவிலிருந்தெல்லாம் நியூட்ரினோக்க‌ளை க‌ட‌ல‌டியில் அனுப்பி, நீல‌கிரியில் பெற்றுக்கொள்ளும் திட்ட‌மும் இருக்கிற‌தாம் (அடங்கொன்னியா).

மலைப்பாக இருக்கிறது. ஒரு ம‌லையையே குடைய‌ப்போகிறார்க‌ளா? தோண்ட‌ப்ப‌ட்ட‌ ம‌ண்ணை என்ன‌ செய்ய‌ப்போகிறார்க‌ள்? ஆய்வகம் பாதுகாப்பானதா? கதிரியக்க அபாயம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறதா? த‌விர‌ ஆய்வ‌க‌ம் அமைக்க‌ க‌ட்டுமான‌ப் பொருட்க‌ள் எவ்வ‌ள‌வு தேவைப்ப‌டும்? குறைந்த பட்சம் இரும்பு 1 ல‌ட்ச‌ம் டன், சிமெண்ட் ஒரு 35,000 டன், இவை த‌விர‌ அலுமினிய‌ம், எஃகு லொட்டு லொசுக்கு என‌ ஒவ்வொன்றையும் அங்கு கொண்டு சேர்க்க‌ எவ்வ‌ள‌வு நேர‌ம் தேவைப்ப‌டும்? கிட்டத்தட்ட ஒரு லட்சத்து என்பதாயிரம் ட்ரக்கு சவாரி தேவைப்படும் என ஒரு கணக்கு சொல்கிறது. கட்டுமானம் மட்டும் நான்கு வருடத் திட்டம். அப்படியென்றால் ஒரு நாளைக்கு 130 சவாரி. எவ்வளவு கார்பன் மாசு வெளிப்படும்? இதெற்கெல்லாம் புதிதாக‌ சாலை ஏதாவது போடப்ப‌டுமா? இதையெல்லாம் விட‌ முக்கிய‌மாக தெரிவு செய்ய‌ப்ப‌ட்டுள்ள‌ இட‌ம் முதும‌லை வ‌ன‌வில‌ங்கு காப்ப‌க‌த்துக்கு மிக‌ அருகில் உள்ள‌து. அங்குள்ள‌ வில‌ங்குக‌ள் பாதிக்க‌ப்ப‌டுமே? இப்ப‌டி ஒவ்வொரு கார‌ணத்துக்காக‌வும் இந்த‌ ம‌லையை அழிக்க‌ ஆர‌ம்பித்தால்...? த‌மிழ‌கம் பெரிதும் நம்பியிருக்கும் தென்மேற்குப் ப‌ருவ‌ மழையின் மூல‌மான‌ மேற்குத் தொட‌ர்ச்சி ம‌லையின் க‌தி என்ன‌? இவை எல்லாம் தான் இய‌ற்கைப் பாதுகாவ‌ல‌ர்க‌ளின் கேள்விக‌ள்.

இதற்கு விஞ்ஞானிகள் கூறுவதெல்லாம், "இது அணு ஆராய்ச்சிக்கூடம் இல்லை. அதனால் கதிரியக்க பயம் தேவையில்லை" என்பது தான். மற்ற கேள்விகளுக்குப் பதிலில்லை.

எழுப்ப‌ப்ப‌ட்ட நியாயமான கேள்விகளுக்கு ச‌ரியான‌ முறையில் ப‌தில‌ளிக்க‌ப்ப‌ட‌வேண்டும், நீலகிரி மலைப்பகுதியில் உள்ள பல்லாயிரக்கணக்கான ஜீவராசிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்படவேண்டும், ஏற்கென‌வே ம‌னித மாசால் பாதிக்க‌ப்ப‌ட்டுள்ள ம‌லைக‌ளின் அர‌சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எண்ணமும்...

டிஸ்கி 1: உண்மையில், இந்த‌ இடம் சில பல ஆண்டுகளுக்கு முன்னமே தெரிவு செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தமிழக அரசு இன்னும் இசைவு தெரிவிக்காத காரணத்தால் திட்டம் இன்னும் தள்ளிப்போய்க்கொண்டிருக்கிற‌து.

டிஸ்கி 2 : ஏதாவது தகவல் பிழை இருந்தால் சுட்டிக்காட்டவும்

டிஸ்கி 3 : இப்படி எல்லாம் யோசித்தால் அறிவியல் எப்படி வளரும் என்று கேட்பவர்களும் ஆட்டத்தில் கலந்துகொள்ளலாம்.

October 05, 2009

கனா கண்டேனடி தோழி....



"நைட் ஃபுல்லா கனவுல நீதாண்டா குட்டி" - காதலனைக் கொஞ்சும் காதலி.

"செத்துப்போன உன்ற அப்பா கெனாவுல வந்து கூப்டுறாரு" - மகனிடம் புலம்பும் மூதாட்டி

"மச்சி, 2 பேப்பர் புட்டுக்குற மாதிரி கனவு வந்துச்சுடா" - நண்பனுக்கும் சேர்த்து பீதியைக் கிளப்பும் மாணவன்

"கனவு காணுங்கள்" - அப்துல் கலாம்

"அது ஒரு கொடுங்கனவு" - காமம் பற்றி ஒரு எழுத்தாளர்.

இப்படி எப்போதாவது கனவுகளைப் பற்றி நாம் பேசுவதுண்டு. ஆனால் என் தோழி சதா சர்வ காலமும் கனவைப் பற்றித் தான் பேசிக்கொண்டிருக்கிறாள். சைக்காலஜி படிக்கிறாள். "கனவுகள் பற்றிய ப்ராஜக்ட் செய்யலாம் என்று இருக்கிறேன்" என்கிறாள். கனவுகள் பற்றி அவள் சொன்ன தகவல்கள் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்தன.

துரித கண்ணசைவு (Rapid Eye Movement - REM) என்று கேள்விப்பட்டிருப்பீர்கள். தூங்கும் போது மூடிய இமைகளுக்குள் கண் அசைவது. அந்த சமயத்தில் கனவு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று அர்த்தமாம். யாரோ ஒருத்தர் ஏதோ ஒரு ஆராய்ச்சி செய்யும் போது அவருடைய பேஷண்ட் தூங்கும் போது கண்ணைக் கண்ணை உருட்டியிருக்கிறார். எழுப்பிக் கேட்கவும் தான் இது தெரிந்திருக்கிறது. இந்த REM ன் போது உடல் வெப்பநிலை, இதயத்துடிப்பு எல்லாம் விழித்திருக்கும்போது இருந்த மாதிரியே இருந்ததாம்.

நாம் எல்லோரும் கனவு காண்கிறோம். தினமும் கனவு காண்கிறோம். ஆனால் 90 சதம் கனவுகள் நினைவில் இருப்பதில்லை. எழுந்து 5 நிமிடங்களுக்குள் மறந்துவிடுகின்றன. ஆனாலும் சில மேதைகளின் கண்டுபிடிப்பு / கவிதைகளுக்கு கனவு தான் இன்ஸ்பிரேஷனாக இருந்திருக்கிறது.

கருப்பு வெள்ளையில் கனவு காணும் காலமெல்லாம் மலையேறிப் போய்விட்டது. இப்போதெல்லாம் கனவு கலரிலேயே ரிலீஸ் ஆகிறது.

கோபம், துக்கம் போன்ற எதிர்மறை உணர்வுகள் தான் பெரும்பாலான கனவுகளில் வருகின்றன.

ஆண்களின் கனவுகள் பெரும்பாலும் மற்ற ஆண்களைப் பற்றியது. அதே சமயம் பெண்களின் கனவுகளில் ஆண்களும் பெண்களும் சமமான அளவில் வருகிறார்கள்.

இன்னொரு விஷயம், கனவு காணும்போது நமது கை கால்கள் தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்படுகின்றன. கனவுல் நடப்பதற்கு கையைக் காலை ஆட்டி எதிர்வினை செய்யாமலிருப்பதற்காகவாம். பாம்பு துரத்துகிறது என்று எழுந்து ஓடிவிடக் கூடாது அல்லவா?

உண்மையில் கனவுகள் உணர்ச்சிகளின் வடிகால்கள். தேவையில்லாத நினைவுகளை நீக்குவதற்காக இயற்கை அளித்த கொடை. கனவு காணும்போது பாதியில் எழுந்தவர்கள் / எழுப்பப்பட்டவர்களுக்கு மன உளைச்சல் வரலாம் என்கிறார்களாம் விஞ்ஞானிகள்.

ஆனால் கனவு என்பது என்ன? எங்கிருந்து வருகிறது? என்ற கேள்வியை பாஸ் செய்துவிட்டாள்.

எல்லாம் சொல்லிவிட்டு சொன்னாள். "Max, you know what? சராசரியா நமக்கு டெய்லி சிக்ஸ் ட்ரீம்ஸ் வருது"

"அப்படியா? எனக்கு செக்ஸ் ட்ரீம்ஸ் தான் வரும்" என்று சொல்ல நினைத்தேன், சொல்லவில்லை.

டிஸ்கி : தலைப்பிலிருக்கும் தோழிக்கும் சைக்காலஜி படிக்கும் தோழிக்கும் சம்பந்தம் இல்லை :)

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More