Showing posts with label சுஜாதா. Show all posts
Showing posts with label சுஜாதா. Show all posts

October 01, 2010

எந்திரன் மேனியா

முதலில் அமரர் சுஜாதா அவர்களைப் பற்றி... கதையின் அடிநாதம் அவரின் என் இனிய இயந்திராவை ஒட்டியே இருக்கிறது. 
”செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரன், மனிதன் போல் சிந்திக்க ஆரம்பித்தால்?” என்ற கேள்வியை வைத்து அவர் எழுதிய கதை என்று பிரம்மாண்டமாக, எந்திரனாக வளர்ந்திருக்கிறது. அஞ்சலிகள்!!! அவரின் இழப்பு ஈடு செய்ய முடியாதது. 

இனி படம்... 

இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணிப்பதற்காக ஒரு மனித ரோபோவை (சிட்டி - ரஜினி)உருவாக்குகிறார் டாக்டர் வசீகரன் (ரஜினி). அந்த ரோபோவுக்கு மனித உணர்வுகள் கற்பிக்கப்படுகின்றன. பிறகு சிட்டி, டாக்டரின் காதலி சனா (ஐஸ்) மீது காதல் கொள்கிறது. இடையில் வில்லன்(டேனி), சிட்டியை தீய நோக்கத்துக்குப் பயன்படுத்த நினைக்கிறார். அதன் பிறகு நடக்கும் விறு விறு சுறு சுறு ரேஸ் தான் எந்திரன்.

ரஜினியைப் பற்றி சொல்லியே ஆக வேண்டும். தனது மாஸைப் பற்றிக் கவலைப்படாமல், வழக்கமான எண்ட்ரி இல்லாமல், குத்து வசனங்கள் இல்லாமல் நடித்திருக்கிறார். மற்ற So called super stars கவனிக்க வேண்டிய விஷயம் இது. மிரட்டல் தலைவா!!!!

ஐஸுக்கு வயசானது ராவணனிலேயே கன்ஃபார்ம் ஆகிவிட்டது. ஆனால் இந்தப் படத்தில் ரஜினியுடன் இருக்கும் போதெல்லாம் இளமையாகத் தெரிகிறார். டான்ஸ் அசத்தல். 

இயக்குனர் ஷங்கர் ஒரு அறிவியல் கதையை முடிந்த அளவுக்கு கமர்சியலாக்கித் தந்திருக்கிறார். வெற்றியும் பெறுகிறார். எங்கேயும் யோசிக்கவிடாத திரைக்கதை கடும் உழைப்பைக் காட்டுகிறது. கடைசி 45 நிமிடங்கள் பிரம்மிக்க வைக்கின்றன. அவரிடமிருந்து இந்த மாதிரியான பிரம்மாண்டங்களைத் தான் எதிர்பார்க்கிறோம். ரோட்டுக்குப் பெயிண்ட் அடித்து ரண்டக்க ரண்டக்க என்று பாடுவதையல்ல... :) 

சில இடங்களைத் தவிர்த்து கிராஃபிக்ஸ் நேர்த்தியாக இருக்கிறது. கலை, இசை, சண்டைப் பயிற்சி எல்லாம் செம செம... இரண்டாம் பாதியில் வரும் சில ரொமான்ஸ் காட்சிகளை மட்டும் வெட்டியெறிந்திருக்கலாம். பாடல்கள் பார்க்க நன்றாக இருந்தாலும் வேகத்தைக் குறைக்கின்றன. 

மொத்தத்தில் இந்திய நிறத்தில் ஒரு ஹாலிவுட் சினிமா... 

டிஸ்கி 1 : இந்தி மீடியாக்கள் படத்தைக் கொண்டாடுகின்றன. எப்பேர்ப்பட்ட படத்துக்கும் மூன்று ஸ்டார்கள் கூட கொடுக்க அழும் விமர்சகர்கள், எந்திரனுக்கு நான்கு நான்கரை என்று தந்திருக்கிறார்கள்.

டிஸ்கி 2 : இந்த மாதிரி முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால், கிராமத்திலிருந்து நகரத்துக்கு வந்து ரௌடிகளை அழிக்கும் சூப்பர் ஹீரோக்களை மட்டுமே பார்க்க வேண்டியிருக்கும் என்பது எனது கருத்து. :)

டிஸ்கி 3 : ஷாருக் படத்தைப் பார்த்துக் கண்டிப்பாக வருந்தியிருப்பார். 

*

August 05, 2010

எந்திரன் - முன்னோட்டம்.

சுஜாதாவின் "என் இனிய இயந்திரா" படித்திருக்கிறீர்களா? அழகான அறிவியல் கதை. நிலா என்ற அழகியும் ஜீனோ என்ற இயந்திர நாயும் சேர்ந்து கொண்டு செய்யும் சாகசங்கள் தான் கதை. ஜீனோ அநியாயத்துக்குப் புத்திசாலி. புத்தகம் படிக்கும், கவிதை நெய்யும், லாஜிக்கல் ரீசனிங்கில் வித்தை காட்டும். எல்லாவற்றிற்கும் மேலாக உணர்வுகள் என்ற உன்னதத்தைப் பெற்று படைப்பின் உச்சத்தை அடையும். தானாகவே சிந்திப்பது, நிலாவின் மேல் மையல் கொள்வது, தடவிக்கொடுத்தலில் இருக்கும் அன்பை உணர்வது, பயம் கொள்வது என்று அட்டகாசம் செய்யும்.

இயந்திரன் என்ற பெய்ரைக் கேட்டவுடன் அப்படிப்பட்ட செயற்கை அறிவுடன் கூடிய இயந்திரம் செய்யும் சாகசங்கள் தான் படம் என்று தெரிந்தது. பாடல்களும் ட்ரெய்லரும் அதை உறுதிப்படுத்துகின்றன. பார்க்கலாம் அறிவியலும் மசாலாவும் ஒன்று சேரப் போகின்றன. 160 கோடி பட்ஜெட் என்கிறார்கள். சன் பிக்சர்ஸ் செய்யலாம். ரஜினியின் முகத்தை விதவிதமான லைட்டிங்கில், விதவிதமானக கோணங்களில் என்பது விதமான படங்கள் எடுத்து கிராஃபிக்ஸ் செய்து இருக்கிறார்களாம். சண்டைக் காட்சிகளே மொத்தம் ஒரு மணி நேரம் வருகின்றதாம். ஊரெல்லாம் எந்திரன் தான்.

ஒன்று மட்டும் புரியவில்லை. ஆறு பாட்டுகளில் ஐந்து ரோபோவிற்குத்தான் போலிருக்கிறது. "அஃறிணையின் அரசன் நான், காமுற்றக் கணினி நான்" என்றெல்லாம் ரோபோ பாடுகின்றது. நம்மவர்கள் ஏலியனை வைத்துப் படம் எடுத்தாலும் அதற்கும் ஒரு பில்ட்-அப் சாங் வைப்பார்கள்.

ஆனால், சும்மாச் சொல்லக் கூடாது. முதல் முறை கேட்டபோது கன்னாபின்னாவென இருந்தப் பாடல்கள், புரிய ஆரம்பித்ததும் ஆட்டம் போட வைக்கின்றன. Rahman Rocks! "இரும்பிலே ஒரு இருதயம் முளைத்ததோ" கதறக் கதறக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

தமிழில் அறிவியல் படங்கள் வருவது வரவேற்கத்தக்கது. என்ன ஒன்று, டெரா ஹெர்ட்ஸும், ஜெரா பைட்ஸும் புரிந்து தொலைக்க வேண்டும்.

எந்திரன் டீமுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

*

October 29, 2009

காந்தளூர் வசந்த குமாரன் கதை.



ராஜராஜ சோழனின் காந்தளூர்க் கடிகைப் போரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ராஜராஜ‌ன் மெய்கீர்த்தியிலும் முதன்மையாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இந்த போர். சேர மன்னனுடன் பேச‌ அனுப்பப்பட்ட தூதுவ‌ன் ஒருவன் அவமதிக்கப்பட்டதால் வெகுண்ட ராஜராஜன் சேர நாட்டின் மீது போர் தொடுத்தான் என்பது வரலாறு. இதைப் பின்புலமாகக் கொண்டு அமரர் சுஜாதா எழுதிய நாவல் தான் "காந்தளூர் வசந்தகுமாரன் கதை"


திருவனந்தபுரத்துக்கு அருகில் உள்ள விழிஞம் தான் அப்போதைய காந்தளூர். மிக முக்கியத் துறைமுகம் காந்தளூர். சேர நாட்டின் மீதான நிரந்தர வெற்றிக்கு இந்தத் துறைமுகத்தைப் பிடிப்பது முக்கியமாக இருந்தது. தவிர ராஜராஜனால் நாடுகடத்தப்பட்ட ரவிதாசன் முதலியோரும் இங்கிருந்து தான் ஒற்ற‌ர்களைத் தயார்படுத்தி அனுப்பியாதாகவும் கூறுவர்.

இனி கதை...

கதைப்படி, வசந்தகுமாரன் சேர நாட்டுக்கு அனுப்பப்பட்ட தூதுவன். அவனுடைய குரு,நண்பர் கணேசபட்டர். இந்த பெயர்களை எங்கேயோ கேட்ட மாதிரி இல்லை? சுஜாதாவின் பிரியத்துக்குரிய நாயகர்கள் கணேஷ், வசந்த் தான் சரித்திரத்தில் வருகிறார்கள். கணேச பட்டரிடம் அதே தீட்சண்யம். வசந்தகுமாரனிடம் அதே இளமைக் குறும்பு. ரசிக்க வைக்கிறார்கள்.


குதிரை வியாபாரத்துக்காக சோணாடு வந்த யவனன் ஒருவனைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்படுகிறான் வசந்தகுமாரன். இதனிடையே அரசகுமாரி அபிமதியைக் காதலிக்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலைகளால் காந்தளூரைச் சேர்ந்த சேர நாட்டு ஒற்றன் எனப் பழி சுமத்தப்படுகின்றான். இந்த சதியில் சிக்க வைப்பது ராஜராஜனைக் கொல்ல வந்த எதிரி நாடு ஒற்றர்கள். மரண தண்டனை விதிக்கப்படும் வசந்தன் எப்படித் தப்பிக்கிறான், எதனால் சேர‌ நாடு அனுப்ப‌ப்ப‌டுகிறான், ராஜராஜன் உயிர் எப்படிக் காப்பாற்றப்பட்டது, வசந்தன் காதல் என்ன ஆனது என்பதை சுஜாதா த‌ன‌து பாணியில் விவ‌ரித்திருக்கிறார்.

இந்தக் கதையில் நடைபெறும் அனைத்து முக்கிய சம்பவங்களுக்கும் சரித்திரத்தில் நடந்ததாகச் சொல்கிறார் சுஜாதா. பாத்திரங்களின் பெயர் வேண்டுமானால் வேறாக இருக்கலாம். ஆனால் சம்பவங்கள் உண்மை என்கிறார். உதகைக் கோட்டையைப் பிடிக்க முனைவது, ராராஜேஸ்வரத்துக்கான ஆயத்தப் பணிகள், மலை நாட்டின் மீதான போர் என ஏராளமான விஷய‌ங்கள் வருகின்றன. இந்தப் போர்களுக்கெல்லாம் கலிங்கப்பரணி,மூவர் உலா போன்ற நூல்களை ஆதாரமாகக் காட்டுவார்கள். 


பாத்திரங்களை கல்கி அளவுக்கு கட்‍அவுட் பாத்திரங்களாகப் படைக்காமல் சாதாரண மக்களாக உலவ விட்டிருப்பார் சுஜாதா. இதை அவரே கூறியிருப்பார்.  உதாரணத்துக்கு ராஜராஜன் மீதும் மக்கள் கோபப்படுகிறார்கள்கள். நாயகன் வசந்தனும் ஏராளமான வசவு வார்த்தைகளைப் பிரயோகிக்கின்றான்(உம் : விலைமகள் மைந்தன்). கணேச பட்டரும் ஆபத்துக் காலத்தில் மயங்கி நிற்கிறார். 


ஆனால் அரசகுமாரி ஒருத்தி கடத்தப்பட்டால் அந்நாளில் இப்படி வாளாவிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அது தவிர, அபிமதியை சளுக்க மன்னன் விமலாதித்தனுக்குக் கொடுக்க முனைந்தது, ராஜராஜனைக் கொல்ல நடந்த ச‌தியில் விமலாதித்தன் இருந்தான் என்பதெற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா எனத் தெரியவில்லை. நிறைய இடங்களில் ராஜராஜனை "இராஜராஜீச்சுரம் கொண்ட" என அடை மொழி கொடுத்து அழைக்கிறார்கள் கோயில் கட்டுவதற்கு முன்பே. இந்த மாதிரி சில விஷயங்கள் நெருடுகின்றன. ஆனால் உண்மையான வராலாறு தெரிந்தால் இதுவும் ஒரு பிரச்சனையாக இருக்காது என நம்புகிறேன்.


பக்கம் பக்கமாக வர்ணித்து எழுதப்பட்ட ஒரு காட்சி, நாடகத் தனமான வசனங்கள் என்றே சரித்திர நாவல்களைப் படித்தவர்களுக்கு சுஜாதாவின் கூர்மையான வசனங்களும், எளிய கதையோட்டமும் வித்தியாசமான விருந்தாக இருக்கும். ஆனால் சுஜாதாவின் மற்ற நாவல்களில் உள்ள அந்த "அது" இந்த நாவலில் இல்லை :)


குறிப்பு : காந்தி செத்துட்டாரா ரேஞ்சுக்கு இந்த நாவலைப் பற்றி இவ்வளவு தாமதமாக எழுதியிருக்கிறேன். ரொம்ப நாள் தேடலுக்குப் பின் போன வாரம் கிடைத்தது இந்த நாவல். அதான்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More