Showing posts with label இன்ன பிற. Show all posts
Showing posts with label இன்ன பிற. Show all posts

July 05, 2009

வேதாளம் கேட்ட கேள்விகள்.

யாரோ எப்போதோ கிளப்பிவிட்ட வேதாளம் அங்கே சுற்றி இங்கே சுற்றி இப்போது என் முதுகில் ஏறிக்கொண்டுள்ளது. இந்த வேதாள்த்தை என் மீது ஏவி விட்ட புண்ணியவான் அண்ணன் தமிழ்ப்பறவை அவர்கள்! நல்லவேளை இந்த வேதாளம், ப்தில் சொல்லாவிட்டால் தலை சுக்குநூறாகப் போகக்கடவது என்றெல்லாம் சபிக்கவில்லை. சில கேள்விகளுக்கு பதில் சொல்லாவிட்டாலும் "தொலைந்து போ" என லூசில் விட்டுவிட்டது.
இனி வேதாளம் கேட்ட கேள்விகளும் இந்த விக்கிரமாதித்தன் பதில்களும்!

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?

மகேஷ் - குழந்தையாக இருந்தபோது என்ன பெயர் வைப்பது என்ற குழப்பம் வந்ததாம் என் தாத்தா, சில பெயர்களை எழுதி சுருட்டிப்போட்டு தவழ்ந்து கொண்டிருந்த என்னை எடுக்க வைத்திருக்கிறார்! எடுத்த சீட்டில் இருந்தது மகேஷ். நானே வைத்துக்கொண்டதால் (?) எனக்கு இந்த பெயர் பிடிக்கும். தோழிகள் / ரசிகைகள் (அடீங்) இந்த பெயரையும் சுருக்கி "மேக்ஸ்" என்று அழைப்பது இன்னும் ஜோராக இருக்கிறது.

ரசிகன் - இதுவும் நானே வைத்துக்கொண்ட பெயர். இந்த வார்த்தையின் மகத்துவத்தும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதுவும் நெம்ப பிடிக்கும்.

2) கடைசியா அழுதது எப்போது?

நினைவில்லை.

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?

ரொம்ப சுமாராகவே இருக்குமென்பதால் மெனக்கெட்டு ரசித்ததில்லை. இந்த கேள்விக்காக எழுதிப் பார்த்ததில்.... வேண்டாம். மகா மட்டமாக இருக்கிறது.

4) பிடித்த மதிய உணவு?

சிக்கன் கொழம்பும் சுடுசோறும். கலந்துக்க கொஞ்சூண்டு தயிரும்!

5) நீங்கள் வேறு யாராவதாக இருந்தால் உங்களோட நட்பு வச்சுக்குவீங்களா?

அது அந்த வேறு யாரோவைப் பொறுத்தது. எனக்கு ஒன்றும் ஆட்சேபணை இல்லை.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?

மெரீனா கடலைப் பார்த்ததும் கடலில் குளிக்கும் ஆசையே விட்டுப் போய் விட்டது. அருவிக் குளியலுக்கே என் ஓட்டு.

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?

சிரிக்கிறாரா என்று.

8) உங்களிடம் உங்களுக்குப் பிடித்த விசயம் என்ன? பிடிக்காத விசயம் என்ன?

பிடித்த விஷயம் - எளிதில் நட்பு பாராட்டுதல்...
பிடிக்காத விஷயம் - கோபம், நெருங்கியவர்கள் மீதும்.

9)உங்கள் துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?

பேச்சுலர் சாமியோவ்!

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?

நண்பன் ஜெயப்பிரதி.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?

கருப்பு நிற அரைக்கால் சட்டை.

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?

விக்ரம் என்ற படத்தில் வரும் "மீண்டும் மீண்டும் வா" பாட்டு!

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?

கருப்பு

14) பிடித்த மணம்?

மல்லிகை

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவர்களிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?

லவ்டேல் மேடி - இவரோட நக்கலான பேச்சு. இந்த கேள்விகளை இவர் எப்படி கையாளப்போகிறார் என்ற எதிர்பார்க்கிறேன்.

16) உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?

அண்ணன் தமிழ்ப்பறவை - அநேகமாக அனைத்தும். இவரது உவமைகளும், இவர் வரையும் படங்களும் ஜூப்பரா இருக்கும்.

17) பிடித்த விளையாட்டு?

யோவ், வேதாளம்! இன்னா மாதிரி பாட்டு கேட்டுட்டு இருக்கேன், இப்ப வந்து இன்னா வெளாட்டு புடிக்கும்னு கேக்குறியே! என்னென்னவோ தோணுதுபா!

சரி சரி, ஹாக்கி ரொம்ப புடிக்கும்.

18) கண்ணாடி அணிபவரா?

ஆம்! சில நாட்களாக.

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?

செண்டிமெண்ட், சண்டை, குத்துப்பாட்டு, குத்து வசனம், அட்வைஸ், ரத்தம், தத்துவம் இவை எதுவுமில்லாத படங்கள்.

20) கடைசியாகப் பார்த்த படம்?

சக்தே (எத்தனையாவது முறை என்று நினைவில்லை.)

21) பிடித்த பருவ காலம் எது?

கோடை காலம். அந்த பருவத்தில் எங்கள் கல்லூரிச் சாலை முழுவதும் கோலம் போட்டது போல இரத்தச் சிவப்பும், அடர் மஞ்சளுமாய் மாறி மாறி பூக்களை உதிர்த்திருக்கும் அந்த திலகம் மற்றும் பாதிரி (கொன்றை வகைகள்)மரங்களுக்காக!

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?

The Six Sacred Stones - By, Matthew Reilly.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?

அடுத்த நல்ல படம் கிடைக்கும் போது. நாள் கணக்கெல்லாம் எதுவுமில்லை.

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?

பிடித்த சத்தம் : குழந்தை (என்னோடது இல்லப்பா) எழுப்பும் எல்லா ஓசையும். ச்சோ ச்வீட்!
பிடிக்காத சத்தம் : அலாரம்

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?

கன்னியாகுமரி.

26) உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?

இருக்கிறது. நன்றாக பொய் சொல்வது.

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?

நிறைவேற்ற முடியாது எனத் தெரிந்தும் தரப்படும் வாக்குறுதிகள்.

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?

கோபம்.

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?

அதிகம் சுற்றியதில்லை. இப்போதைக்கு ஏற்காடு.

30) எப்படி இருக்கணும்னு ஆசை?

யாரையும் காயப்படுத்தாமல்.

31) மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?

Out of Syllabus

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.

வாழ்க்கைங்கறது வாழைக்காய் மாதிரி. கறை படியறதும் கறை படியாததும் நாம கையாள்றதப் பொறுத்து தான் இருக்கு. எப்பூடி?

May 31, 2009

நோ ஸ்மோக்கிங்!

இன்று (May 31) புகையிலை எதிர்ப்பு தினம். புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் சொல்லித் தெரியவேண்டியதில்லை.  மூச்சு வாங்குதலில் இருந்து மாரடைப்பு, புற்று நோய் ஆண்மைக்குறைவு வரை எராளமான விளைவுகள். புகைப்பவர் மட்டுமின்றி உடனிருப்பவரும் புகையால் பாதிக்கப்படுகிறார். புகைப்பவர்கள் அனைவருக்குமே அதன் விளைவுகள் தெரிந்திருந்தும், அந்த பழக்கத்தை விடமுடியாமல்/விரும்பாமல் இருப்பது தான் வேதனையான உண்மை.
{}
இன்று பதின் வயது சிறுவர்கள் கூட இந்த பழக்கத்துக்கு அடிமையாகி வருவது கண்கூடு. அவர்களைப் பொறுத்தவரை இந்த பழக்கம் ஹீரோயிசத்தின் வெளிப்பாடு. சரி எது தவறு எது என்று புரியாத வயதில், தன் மனம் கவர்ந்த ஹீரோ சினிமாவில் புகைப்பது சாகசமாகத் தெரிகிறது. விளைவு? டீக்கடை சந்தில் ஒதுங்குகிறான். யதார்த்த சினிமா எடுப்பதாக சொல்லிக்கொள்ளும் சில புண்ணியவானகள் இந்த விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கருணை காட்டி புகையை திரையில் காட்டாமல் இருங்களேன்! 
{}
இளைஞர்களுக்கும் புகைப்பதில் ஏதோ ஒரு அலாதி இன்பம். யாரையோ வெற்றிகரமாக ஏமாற்றிவிட்டதாக ஒரு ஆனந்தம். "சும்மா!" என்று ஆரம்பித்து இன்று விட முடியாமல் தவிக்கும் நண்பர்கள் நிறைய பேர். பெரியவர்களுக்கு அது மன அழுத்தத்தின் வடிகால். மூளை செல்களைத் தளர்வடையச் செய்வதனால் ஒருவித ரிலாக்ஸான நிலையை அளிக்கும் நிக்கோட்டின் வேறு பல கொடூர பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சிலருக்கு அது இல்லையென்றால் "காலை வேலை" கூட ஒழுங்காக நடைபெறாது.  அந்த அளவிற்கு உடம்பு அடிமையாகி போய்விடுகிறது! 
{}
ஒரு நாளைக்கு ஒன்று என்பதிலிருந்து ஒரு நாளைக்கு ஆறு பாக்கெட் என்பது வரை ஏகப்பட்ட வெரைட்டியில் புகைப்பவர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கு புகையினால் ஏற்படும் தீங்குகளும், இறப்பு புள்ளி விவரங்களும் தெரிந்தே இருக்கின்றன. தெரிந்தும் விட முடியாமல் தவிக்கிறார்கள். ஏதேனும் ஒரு விளையாட்டு அல்லது உடற்பயிற்சியில் ஈடுபட்டால் இந்த பழக்கத்தை விட்டொழிக்க முடியும் என்பது என் கருத்து! 
{}
எது எப்படியோ புகையை விட்டொழித்து வருங்கால சந்ததிக்கு புகையில்லாக் காற்றை பரிசளிப்போம்!

April 22, 2009

பின்நவீனத்துவ பிறந்தநாளும் இன்ன பிறவும்!

வெள்ளிக்கிழமை மதியம் மட்டும் அலுவலகத்திலிருந்து பொன்னுசாமிக்கு (சோழிங்கநல்லூர்) போய் சாப்பிடுவது வழக்கம். அப்படி போன வாரம் சென்று திரும்பும் போது வழியில் கண்ட ஒரு காட்சி மனதை உருக்கியது. ஒரு உணகவகத்தின் பெயர்ப் பலகையை கையில் பிடித்துக்கொண்டு சாலையோரத்தில் நின்று கொண்டிருந்தார் அதன் காவலாளி. எப்படியும் அவருக்கு அறுபது வயதிற்கும் மேலிருக்கும். சென்னையின் வெயிலைப் பற்றி வேறு சொல்லவே தேவையில்லை. அந்த உச்சி வெயிலில் பெயர்ப்பலகையை கையில் ஏந்தியபடி வெயிலில் காய்ந்து கொண்டிருந்தார் பெரியவர். பெயர்பலகையைக் கூட பொருத்த துப்பில்லாத அந்த கடை முதலாளிக்கு கிருமிபோஜனம் தான் என்று மனதார சபித்துகொண்டே வந்தோம்!

{}
 
நேற்று நண்பன் பரணிக்கு பிறந்த நாள். கொண்டாட்டங்கள் (?) அனைத்தும் வழமையான ஆர்ப்பாட்டங்கள் எதுவும் இல்லாமல் அஹிம்சை முறையில் நடந்து முடிந்தன.  எங்கள் கல்லூரியில் பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு என தனி வரைமுறைகள் இருக்கின்றன. பிறந்தநாள் கொண்டாடுபவனை கை கால்களை பின்புறம் கட்டி மண்ணில் போட்டு உதைக்க வேண்டும். உள்ளாடை நீங்கலாக மற்ற அனைத்தையும் கழற்றிவிட்டு அடி போட வேண்டும். துப்பாக்கி கழுவ வைத்திருக்கும் எண்ணெய் உட்பட கையில் கிடைக்கும் திரவங்கள் அனைத்தையும் வைத்து அபிஷேகம் செய்ய வேண்டும். எங்கள் வகுப்பு பெண்கள் யாராவது ஒருவருக்கு தொ(ல்)லைபேசி காதலிக்கிறேன் என்று சொல்ல வேண்டும். இந்த மாதிரி நிறைய விஷயங்கள். கிட்டத்தட்ட இப்படி இருக்கும் 
 


இப்படி வழமையான நெறிமுறைகளை மீறி, சுய முரண்பாடுகளுடன் (எங்களுக்கு) கொண்டாடப்பட்ட இந்த பிறந்தநாள் விழாவை பின் நவீனத்துவ பிறந்தநாள் என்றே கருதுகிறோம். :)

நோ நோ! இதுக்கெல்லாம் எதுக்கு கட்டைய தூக்குறீங்க? 

{}
மரியாதை திரைப்படத்தின் இந்த படத்தைப் பார்த்தவுடன் எனக்கு ஒன்றுதோன்றியது.

{}

நியூட்டனோட தங்கமணி ஒருநாள் அவர்கிட்ட கேட்டாங்களாம் "ஏங்க, நான் எப்படி இருக்கேன்?" அப்படின்னு.

அதுக்கு அவர் சொன்னாராம்.  Tan C / Sin C

தங்க்ஸ்: அப்படின்னா ?

நியூட்டன் : Tan C / Sin C     =    (Sin C / Cos C)  / Sin C =   1/Cos C = Sec C

செக்சி!!!

எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க! 

குறிப்பு : எஸ் எம் எஸ்ஸில் வந்தது. திரிகோணவியல் அறிந்திராத நண்பர்கள் மன்னிக்க!

*****

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More