Showing posts with label நினைவுகள். Show all posts
Showing posts with label நினைவுகள். Show all posts

February 22, 2010

ஸ்னேஏஏக் பாபு!

                                       
அண்ணனைப் பாம்பு கடித்துவிட்டது. மரவள்ளிக்கிழங்குக் காட்டுக்குத் தண்ணீர் பாய்ச்சுகையில் கடித்துவிட்டு ஓடிவிட்டது. என்ன பாம்பு என்று கண்டுபிடிக்க முடியவில்லை. நான்கு நாள் மருத்துவமனையில் இருந்தார். இப்போது விஷம் முறிந்து வீடு திரும்பியிருக்கிறார். இந்த மாதிரி தருணங்களில், நோயாளியை விசாரிக்கிறேன் பேர்வழி என அந்தந்த வீடுகளில் கூட்டம் கூடிவிடுவார்கள். இரவு பதினொரு மணி வரை அரட்டைக்கச்சேரி தான். பாம்புக்கடியை விசாரிக்க வந்தால் பாம்புகள் பற்றி அலசி ஆராய்வார்கள். பேசும் ஆட்களுக்குத் தகுந்த மாதிரி விஷயங்கள் இருக்கும். ஆனால் பேசுவது என்னவோ பாம்புகளைப் பற்றித்தான். ஆண்கள் பொதுவாகத் தங்கள் வீரதீரச் செயல் பற்றி அள்ளி விடுவார்கள். "அங்க அந்த பாம்பு அடிச்சேன், இங்க இந்த பாம்பு அடிச்சேன்" என்று ஒரே ரணகளம் தான். பெண்கள் எல்லாம் பாம்பு பார்த்து பயந்த கதைகள். "வைக்கப்போருக்கடிய‌‌ பாம்ப பாத்துட்டு அவுங்கள கூப்புட்றக்குள்ள ஓடிப்போச்சுக்கா" இந்த தினுசில். பாட்டிகள் குழுவில் தான் பாம்புகளின் அதிசய சக்திகள், நாகமாணிக்கம் என அமானுஷ்யம் பேசுவார்கள். நாகமாணிக்கம் எடுக்கும் முறையை ஒரு நூறு முறை பேசியிருப்பார்கள். பாம்பைப் பார்த்துக் கையெடுத்துக் கும்பிட்டால் ஒன்றும் செய்யாது என்கிற ரீதியில் தான் பேச்சு இருக்கும். என்னை மாதிரி குழந்தைகளோ(ம்க்கும்!) ஆச்சரியாமாக அவற்றைக் கேட்டுக்கொண்டிருப்போம்!

கிராமப்புறங்களில் வாழ்க்கை அதுவும் விவசாயிகளின் வாழ்க்கை பாம்புகளோடு இயைந்தது. மாதத்துக்கு மூன்று முறையேனும் பாம்பு அடிக்க வேண்டியிருக்கும். அதே மாதிரி பாம்புகள் பற்றியக் கதைகளுக்கும் பஞ்சமில்லை. பெரியப்பா பாம்பு அடிப்பதில் கில்லாடி. ஆனால் அவரையே கதிகலங்கச் செய்த பாம்பு ஒன்று இருக்கிறது(இருந்தது?). வண்டிச்சாலையில் பரண் மீது தான் கோழி அடையும். அங்கு நுழைந்த பாம்பு முட்டைகளையெல்லாம் குடித்துக்கொண்டு சுகஜீவனம் நடத்தி வந்திருக்கிறது. ஒரு நாள் முட்டை எடுக்க பரண் மீதேறிய பெரியப்பா அலறியடித்துக்கொண்டு இறங்கினார். பாம்பு ஒன்று கண் அருகில் சீறியதாம். பின் ஜமா சேர்த்துப் பரணைப் பிரித்து அந்தப் பாம்பை அடித்துவிட்டார்கள். கருநாகம். ஆறடிக்கு இருந்தது. முட்டையை விழுங்கியிருந்ததால் அசையமுடியவில்லை. அதனால் பெரியப்பா தப்பினார். இன்றும் அதைப் பற்றிப் பேசினால் சிலிர்க்கும் அவருக்கு. இன்னொரு கதை பாம்பு ஒன்றைக் கொத்தியே சாகடித்த நான்கு வான்கோழிகள் பற்றியது. இது மாதிரி நிறைய சம்பவங்களும் கதைகளும் பெரிய அளவில் பேசப்படும்.


ஊரைப் பொறுத்தமட்டில், பாம்புகள் இம்சையானவை என்றாலும் பேசுவதற்கு சுவாரஸ்யமானவை. நாகப்பாம்புகள் தெய்வங்கள் என்ற நம்பிக்கை எங்கள் ஊரிலும் உண்டு. ஆனால் எல்லா ஊரிலும் போல எங்கள் ஊரில் பாம்புப்புற்றுக்கு யாரும் பால் வார்ப்பதில்லை. ரத்தம் தான். கோழி அறுத்து தலையைப் படைப்பார்கள். மீதி வழக்கம் போல நமக்குத்தான். ஆனால் சிக்கிவிட்டால் நாகப்பாம்பும் பரலோகம் போகவேண்டியதுதான். அவற்றுக்கு மட்டும் இறுதி மரியாதை செய்து எரிப்பார்கள். தெய்வமாச்சே!.


எப்பொழுது பாம்புகள் பற்றி பேச ஆரம்பித்தாலும், நமச்சிவாயக்கவுண்டரைப் பற்றி பேசிவிட்டுத்தான் சபையைக் கலைப்பார்கள். அவர் பாம்புக் கடிக்கு திருநீறு போடுவார். விஷ‌க்கடிக்கு அவர் வீட்டுக்குப் போய் நீறு போட்டுக்கொண்டால் போதும் என்பது நம்பிக்கை. நான்கைந்து வருடங்களுக்கு முன் வரை நானறிய யாரும் மருத்துவமனைகளைத் தேடிப்போனதில்லை. எவ்வளவு மோசமான நிலையிலும் அவர் போடும் நீறு தான் மருந்து. மயங்கிக்கிடந்தவர்கள் கூட நீறு போட்டதும் எழுந்துவிடுவதை நிறைய முறைகள் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏனோ சில மனக்கசப்புகளால் நீறு போடுவதை நிறுத்திவிட்டார். அதன் பிறகு தான் மருத்துவமனை. ஆனால் அவர் நீறு போடுவது இன்னும் வியப்பாகத்தான் இருக்கிறது. எங்கள் ஊர் பாம்புகளுக்கு விஷம் இல்லையா? அல்லது இவர் நீறு போட்டால் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை தான் குணப்படுத்துகிறதா என்றெல்லாம் கூடத் தோன்றியிருக்கிறது(பாழாய்ப்போன படிப்பு இந்த மாதிரியான விஷயங்களை நம்ப‌ மறுக்கிறதே). ஆனாலும் ஆராய விருப்பமில்லை. அவர் நீறு கொடுத்தார், குணமான‌து என்பதே போதுமாயிருக்கிறது.



September 06, 2009

உள்ளம் கேட்குமே...

நண்பர்கள் யாருமில்லாமல் வீக் எண்ட் கழிவது இதுதான் முதல்முறை. சொல்லி வைத்தாற்போல் எல்லோரும் ஊருக்குப் போயிருந்தார்கள்! போரடித்த சனிக்கிழமை மதியம் படம் ஏதாவது பார்க்கலாம் என்று ஹார்ட் டிஸ்க்கில் தேடியபோது "உள்ளம் கேட்குமே" கண்ணில் பட்டது. படத்தை போட்டுவிட்டு, பீட்ஸா ஹட்டை அழைத்து ஒரு சிக்கன் சுப்ரீமுடன் ஒரு பெப்சியும் ஆர்டர் செய்வதற்குள் லைலா பேச ஆரம்பித்திருந்தார். "அமெரிக்கா! உலகத்துல எல்லாருக்கும் இங்க வரணும்னு ஆசை இருக்கும். ஆனா நான் தவிர்க்க முடியாம தான் வந்தேன்." எனும்போதே படம் ஆரம்பித்துவிடுகிறது.

உடன் படித்த நண்பன் ஒருவன் திருமணத்திற்காக அனைவரும் ஒன்று கூடுகிறார்கள். அதன்பின் ஃப்ளாஷ்பேக்கும் நடப்புமாக படம் தெளிந்த நீரோடையைப் போல பயணிக்கிறது. துள்ளித்திரியும் கல்லூரி வாழ்க்கையில் கேட்பதெல்லாம் கிடைத்துவிடுவதில்லை என்ற சிம்பிள் லாஜிக் தான் கதை. இரண்டு நாயகர்கள், மூன்று நாயகிகள். அவர்கள் யாருடைய காதலும் நிறைவேறாமல் போகிறது. இதை சோக வயலினெல்லாம் வாசிக்காமல் அழகாகச் கொல்லியிருப்பார் ஜீவா. வழக்கமான கதைகளில் சில பல சபதங்கள் நிறைவேறியிருக்கும். இங்கு ஜஸ்ட் லைக் தட் பிரிகிறார்கள். அப்புறம் என்ன நடக்கிறது என்பது மீதிக்கதை. ஷாம், ஆர்யா, லைலா, பூஜா, அசின் என படம் முழுக்க இளமைப்பட்டாளம். இதில் ஷாம், லைலா தவிர மற்றவர்கள் புதுமுகங்கள். லைலாவைப் ப‌ற்றிச் சொல்லியே ஆக‌ வேண்டும். சும்மாவே லூசு போல‌ இருப்பார். இந்த‌ப் பாத்திர‌த்தில் ந‌டிக்க சொல்லித்த‌ர‌வா வேண்டும்? அசத்தியிருப்பார். ஷாமிடம் காதலைச் சொல்லப்போகும் இடத்தில் அழுகையும் சிரிப்புமாக அதகளம் பண்ணியிருப்பார். அந்நியன் விக்ரம் போல. மற்றவர்களும் குறை சொல்லாத அளவுக்கு நடித்திருப்பார்கள்.


நட்பு, காதல், காமெடி, ஏமாற்றம், வலி எல்லாம் கலந்த ஒரு Stylish Movie இந்த படம். படத்தில் பாதிக்கும் மேல் சில ஆங்கில மற்றும் இந்திப் படங்களின் ( American Pie, Kuch Kuch Hota Hai) பாதிப்பு இருக்கும். ஆனாலும் சுஜாதாவின் எளிமையான வசனங்களோ, ஹாரீஸின் இனிமையான இசையோ, அழகான காட்சியமைப்புகளோ அல்லது கதை சொல்லப்பட்ட விதமோ... ஏதோ ஒன்று ரொம்பக் கவர்ந்துவிட்டது.

படத்தின் மிகப்பெரிய பலம் ஹாரீஸ். சொந்தச் சரக்கு என்று நம்புகிறேன். பாட்டுக்களும், பிண்னனி இசையும் அட்டகாசம். குறிப்பாக அந்த லைக்கோ லைமா! கல்யாண வீட்டில் ஒருவருக்குப் பூக்கும் காதலுக்கு இந்த இசைப் பிண்ணனி அபாரம். பாடல்களில் மழை மழையும், ஓ மனமேவும் என் All time Favs. யார் வந்தது யார் வந்தது... இந்த வரிகளை மறக்க முடியுமா என்ன?

படத்தில் சில பிடித்த காட்சிகள்:

1) ஆர்யா அம்மா, மணப்பெண்ணிடம் ஆர்யாவின் நண்பர்களை அறிமுகப்படுத்தும் காட்சி. இது பிரியா என்று ஆரம்பிப்பார். "இதுல யாரு ஐரின்?" என்று மணப்பெண் கேட்பாள். அப்போது ஒரு மியூசிக் வருமே? அது.

2) ஷாம் அசினிடம் ப்ரபோஸ் பண்ணும் காட்சி. "காதல் ரெண்டு மனசு சம்பந்தப்பட்ட விஷயாமா இருக்கலாம். ஆனா நம்ம Culture ல கல்யாணம் ரெண்டு குடும்ப சம்பத்தப்பட்ட விஷயம்." அந்த வசனம்.

3) க்ளைமாக்ஸ் ஏர்போர்ட் காட்சி

4) அப்புறம் அந்த Farewell காட்சி.

இப்படி நிறைய காட்சிகள் படம் முழுக்க.

{}

இந்தப் படம் பல கல்லூரி நினைவுகளைக் கிளறி விட்டது. ஒன்றுமே இல்லாத விஷயத்துக்காக ஆசிரியர்களைப் பகைத்துக்கொண்டது, நட்பா காதலா என்று தெரியாமலேயே முறிந்து போன ஒரு உறவு, கனமான சிலத் தருணங்களில் உடனிருந்த நண்பர்கள் என்று ஏதேதோ நினைவுகள். அன்று முழுவதும்.... "மறக்க நெனச்ச சில விஷயங்களை, காலம் திரும்பவும் நெனச்சுப் பார்க்க வைக்கும். அப்படி நெனச்சுப் பார்க்கும் போது சோகமான அந்த நினைவுகள் கூட சுகமானதா இருக்கும்." எவ்வளவு உண்மையான வார்த்தைகள்?

இந்தப்படம் ஆகச்சிறந்த படம் கிடையாது. இசையும் உலகத்தரம் கொண்டதல்ல. ஆனால் உங்களுக்கு கொஞ்சம் ஃபீல் பண்ணப் பிடிக்குமென்றால், சொல்லாமல் போன காதலை நினைத்துப் பார்க்க இஷ்டம் என்றால், தொடர்பறுந்து போன நண்பர்களை நினைத்துப் பார்க்கப் பிடிக்குமென்றால் இந்தப் படம் கட்டாயம் உங்களுக்குப் பிடிக்கும். Try பண்ணிப் பாருங்கள்!!!

டிஸ்கி : படத்தில் குறைகள் இல்லாமல் இல்லை. அதைச் சொல்லியெல்லாம் இந்தப் படத்தைப் பாழ் பண்ண விரும்பவில்லை...:)

June 25, 2009

வாத்தியார்


மறக்க முடியாத பள்ளி/கல்லூரி நாட்களுக்கு ஆசிரியர்களும் ஒரு முக்கிய காரணம்! சிலருக்கு ஆசிரியைகள். சுவாரஸ்யமானவர்கள், சாதுவானவர்கள், வேடிக்கையானவர்கள், கோபக்காரர்கள், வசீகரமானவர்கள் என எத்தனையோ வகைகளில்..

ஆறாவது படிக்கும்போது தமிழ் வகுப்பெடுத்த சின்னத்தம்பி அய்யா. இவர் ரொம்ப வேடிக்கையாகப் பேசுவார். ஒரு முறை பிழை இல்லாமல் எழுதுவதின் அவசியத்தைப் பற்றி விளக்குகையில் ஒரு கதை சொன்னார். வெளியூரில் வேலையிலிருக்கும் தகப்பனாருக்கு மகள் கடிதம் எழுதுகிறாள். ந‌லம் விசாரிப்பு இத்யாதி இத்யாதிகளுக்குப் பிறகு இறுதியாக இப்படி எழுதுகிறாள்.
"அப்பா, வரும்போது மறக்காமல் பாடைக்குத் துணி வாங்கி வரவும்"
இதைப் படித்ததும் அதிர்ச்சியாகுமா இல்லையா? அவள் சொல்ல நினைத்தது பாவாடைக்குத் துணி. ஒரு எழுத்து விட்டுப் போனதால் எவ்வளவு அனர்த்தம்?
"அதனால் பிழையில்லாமல் எழுதுங்களடா மண்டூகங்களா!" என முடித்தார்!

அப்புறம் நாக‌ல‌ட்சுமி டீச்ச‌ர். இவ‌ர் ரிட்டைய‌ர் ஆவ‌த‌ற்கு முத‌ல் வ‌ருட‌ம் இவ‌ரிட‌ம் ப‌டித்தேன். ஆறாவது சேர்ந்த புதிது. முதல் வகுப்பிலேயே Alphabets எழுதச் சொன்னார். நானும் வேக வேகமாக Capital Letters எழுதிக் கொண்டு போய் காட்டினேன், Good இப்ப Small Letters எழுது பார்க்கலாம் என்றார். திரும்பவும் அதே வேகத்துடன் எழுதிக்கொண்டு போய் காட்டினேன், விழுந்தது அறை. ஏனென்றால் நான் எழுதிக் கொண்டு போய் காட்டியது Capital Letters ஐயே கொஞ்சம் சின்ன சைசில். ...:)
Guardian Angel என்பார்க‌ளே. இவ‌ரைச் சொல்லலாம் அப்ப‌டி.. மாண‌வ‌ர்க‌ளுக்கு க‌ல்வியை ம‌ட்டும‌ல்லாது ந‌ல்ல‌ சூழ்நிலையையும் த‌ந்த‌வ‌ர். எந்த‌க் கார‌ண‌த்துக்காக‌வும் த‌ன‌து மாண‌வ‌ர்க‌ளை விட்டுக்கொடுக்காத‌வ‌ர். ந‌ன்றாக‌ப் பாடுவார். இவ‌ரைப் பார்த்தால் ஏனோ எம்.எஸ் அம்மா போல‌வே தோன்றும் என‌க்கு.

ப‌த்தாவ‌து ப‌டிக்கும்போது வ‌குப்பாசிரிய‌ராக‌ வ‌ந்தார் அர‌ங்க‌சாமி சார். இவ‌ர் தான் த‌லை‌மையாசிரிய‌ர். ம‌னித‌ருக்கு என் மேல் அலாதிப் பிரியம். அத‌னாலேயே நான் ந‌ல்ல‌ மார்க் வாங்கினால் கூட‌ ஏன் இன்னும் அதிக‌மாக‌ வாங்க‌வில்லை என‌ அடிப்பார். க‌ண்டிப்புக்கு பெய‌ர் போன‌வ‌ர். ஒரு முறை ஒரு மாண‌வ‌னை அடிக்கும் போது அவ‌ன் ம‌ய‌ங்கிவிட‌, ம‌ய‌க்க‌ம் தெளிய‌ வைத்து திரும்ப‌வும் அடித்தார். ஆனாலும் அனைவ‌ருக்கும் பிடிக்கும் இவ‌ரை. பாவ‌ம் விப‌த்து ஒன்றில் இறந்து போனார்.

அடுத்த‌து விஜ‌ய‌ல‌ட்சுமி டீச்ச‌ர். ஆசிரியை ஒருவ‌ரை உற‌வு முறை சொல்லி அழைத்த‌து இவ‌ரைத்தான். என் வ‌குப்பில் அனைவ‌ரும் இவ‌ரை அக்கா என்று தான் அழைப்போம். இவ‌ர் வீட்டுக்கார‌ரையும் மாமா என்று தான் அழைப்ப‌து. செம Brainy.

அப்புற‌ம் காலேஜ் ப‌டிக்கும்போது சில‌ர். அந்த‌ வ‌ய‌துக்கே உரிய‌ அக்குறும்புக‌ளால் பாதிக்க‌ப்ப‌ட்ட ஆசிரிய‌ர்க‌ள் தான் அதிக‌ம். ஒரு முறை, இன்டெர்னல் மார்க் ஒழுங்கா போடுவ‌தில்லை என்ற‌ ஒரே கார‌ண‌த்துக்காக‌ ஒரு சாரை ஹாஸ்ட‌ல் ரூமில் வைத்துப் பூட்டி தாழ்ப்பாளில் ஒரு நாயையும் கொண்டு வ‌ந்து க‌ட்டி, போகிற‌வ‌ன் வ‌ருகிற‌வ‌ன் எல்லாம் அந்த‌ நாயை உசுப்பேத்திவிட்டுக் கொண்டிருந்தோம். கொஞ்ச‌ நேர‌த்தில் அந்த நாய் எங்க‌ளைப் பார்த்தாலே அல‌ற‌ ஆர‌ம்பித்த‌து. அவர் எவ்வளவு தட்டியும் யாரும் திறக்கவில்லை. அது போட்ட‌ ச‌த்த‌த்தில் அன்று அவ‌ர் தூங்கியிருப்பார் என‌ நினைக்கிறீர்க‌ள்?

{}

இன்னும் சொல்ல நினைக்கும் ஆசிரியர்கள் எத்தனையோ பேர். எல்லோரையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் இயந்திர கதியில் இயங்கும் இந்த வாழ்க்கையில் யாரையென்று போய் பார்ப்பது? இந்த மாதிரி நினைவுகளை மட்டுமே பொக்கிஷமாக பாதுகாக்க முடிகிறது. ஆனால் ஒன்று. எந்த ஆசிரியரும் தன் மாணவன் தன்னை வந்து பார்ப்பதில்லையே என வருந்துவதில்லை. ஏனெனில் எனக்கு ஒரே ஒரு அரங்கசாமி, ஒரே ஒரு நாகலட்சுமி தான்! ஆனால் அவர்களுக்கு நூறு மகேஷ்கள்!

I Salute you Teachers!!!

June 02, 2009

பள்ளி மாணவர் தலைவன்

வாழ்க்கைப் புத்தகத்தின் வசந்தம் வீசும் பக்கங்கள் பள்ளி நாட்கள். எத்தனையோ நிகழ்ச்சிகள்..  எத்த்னையோ நினைவுகள்..அவற்றில் SPL ஆக இருந்த காலங்கள் மறக்க முடியாதவை. 

SPL - School Pupil Leader, பள்ளி மாணவர் தலைவன். பெயர் தான் கெத்து. ஆனா செம கடியான போஸ்ட். நான் பத்தாம் வகுப்பு படித்த போது, தேர்தல் எதுவும் வேண்டாம், இவனே இருக்கட்டும் என்று தலைமையாசிரியர் சபித்து விட்டுப் போய்விட்டார். தேர்தல் வந்தால் கீழ் வகுப்பு மாணவர்களுக்கு நோட், புத்தகங்களில் ஓட்ட லேபிள் கொடுத்தாவது ஜெயித்துவிட வேண்டும் என்று எண்ணியிருந்த எதிர்க்கட்சி முகாமில் பெரிய ஏமாற்றம். ஆனால் பிற்காலத்தில் அவர்கள் மிகவும் மகிழ்ந்திருப்பார்கள். ஏனென்றால் செய்ய வேண்டியிருந்த வேலைகள் அப்படி! 

முக்கியமான வேலை ப்ரேயர் நடத்த வேண்டும். பெரிய ராணுவ வீரன் போல மார்ச்பாஸ்ட் செய்து கொண்டு போய், ஆசிரியரை அழைத்து வந்து கொடியேற்றி, தமிழ்த்தாய் வாழ்த்து பாடி, உறுதிமொழி கூறி, தினம் ஒரு குறள் சொல்லி, நாட்டுப்பண் பாடி.... ஏறு வெயிலில் நின்று தாவு தீர்ந்துவிடும்.  தமிழ்த்தாய் வாழ்த்து, திருக்குறள் மற்றும் தேசிய கீதம் ஆகியவற்றிற்கு கேசட் இருக்கும். ஆனால் பவர் கட் என்றால் முடிந்தது கதை. ஏதாவது குறள் சொல்லவேண்டும். அந்த நேரத்துக்கு எது தோன்றுகிறதோ அதை சொல்லி சமாளிக்க வேண்டும். நிறைய நாள் "அகர முதல" வையும் "கற்க கசடற" வையும் வைத்து ஒட்டியிருக்கிறேன். பிரேயருக்கு தமிழாசிரியர் வந்தால் அந்த இடத்திலேயே திட்டு கிடைக்கும் "வேறு ஏதும் தெரியாதா?" என்று.. தினம் தினம் நடக்கும் அவஸ்தை இது.

அடுத்தது பள்ளியை அமைதியாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு. நாம் சொன்னால் ஒரு பயலும் கேட்க மாட்டான். சொன்னதற்காகவே சத்தம் போடும் நல்ல உள்ளங்கள் இருப்பார்கள். ஒரு முறை ஆசிரியர் வராததால் மொத்த வகுப்பும் மரத்தடியில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தது அந்த நேரத்தில் அங்கு வந்த தலைமை, SPL ஐ அழைத்து வா என சொல்ல, யம தூதுவன் போல ஒருத்தன் வந்தான். நானும் நம்பி போனேன். ஒன்றும் பேசவில்லை. தலையைப் பிடித்து அழுத்தி குனிய வைத்தார். முதுகில் இரண்டு அறை கொடுத்தார். அப்புறம் தான் பேசவே ஆரம்பித்தார். "ஏண்டா இவங்க எல்லாம் இப்படி சத்தம் போடுறாங்க?" என்றார். அவமானம் பிடுங்கித் தின்ன ஏதோ சொல்லிவிட்டு அந்த இடத்தை விட்டு அகன்றேன். இப்படி அவங்க வீட்டு மாடு பால் கறக்கலனா கூட அடி வாங்க வேண்டியிருக்கும். இது அவ்வப்போதைய அவஸ்தை!

ஏதாவது சுற்றறிக்கை வந்தால், அதை ஒவ்வொரு வகுப்பாக எடுத்துச் சென்று படித்துக் காட்ட வேண்டும். இந்த கடியான வேலையை கருத்தாக நான் செய்ய காரணம் 7-ஆ வகுப்பு... இந்த வகுப்பில் தான் தாரகேஸ்வரி டீச்சர் இருப்பார்கள். :) அப்புறம் இரு மாதங்களுக்கு ஒரு முறை ஆசிரியர் கூட்டம் நடக்கும். ஆலோசனை செய்வார்களோ இல்லையோ, கிலோ கணக்கில் கறி வாங்கி மொக்குவார்கள். அதையும் நாம் தான் போய் வாங்கி வர வேண்டியிருக்கும். சாப்பிட போற சமயத்துல மட்டும் "நீ போய் கிளாஸ் பாத்துக்க" என்று வகையாக கழட்டி விட்டுவிடுவார்கள்.

சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் வகுப்பறைகளை அல்ங்கரித்து, சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட வகுப்புக்கு பரிசளிக்கும் பழக்கம் எங்கள் பள்ளியில் உண்டு. அந்த வருடம் ஆறாம் வகுப்பில் ஒரு பிரிவு தேர்ந்தெடுக்கப்பட்டது. பரிசும் கொடுத்தார்கள். அது சுழற்கோப்பை. கொடுத்து அரை மணியில் திரும்ப பிடுங்கி வைத்துக் கொள்வார்கள். ஆனால் பரிசை வாங்கிய அந்த வகுப்பு லீடர் இது தெரியாமல் எஸ்கேப் ஆகியிருந்தார். பிறகு? சைக்கிளில் துரத்திச் சென்று வாய்க்கால் மேட்டிற்கு அருகில் அவனை பிடித்து வாங்கி வர வேண்டியதாக போனது. 

இப்படி நிறைய வேலைகள் இருக்கும். ஆனால் எல்லாமும் செய்து கொண்டு படிக்க முடிந்தது. தினம் தினம் அந்த அவஸ்தைகளை அனுபவிக்க மனம் விரும்பியது. ஏதோ ஒன்று சலிப்படையவிடாமல் செய்தது. அது தான் பள்ளிப்பருவம். Good Old Days!

டிஸ்கி : நேற்று ஃபோன் செய்த என் பள்ளி நண்பன் அருள் "என்னடா SPL..." என்று ஆரம்பித்தான். பின் ரொம்ப நேரம் அரட்டை. என் பால்ய நினைவுகளை மீட்டெடுத்த அவனுக்கு நன்றி!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More