July 02, 2009

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் ???


ஓரினச்சேர்க்கை உறவு சட்டவிரோதம் இல்லை என்று டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பளித்துள்ளது.

ஓரினச்சேர்க்கை சட்டவிரோதம் எனக் கூறி வந்தது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 377 வது பிரிவு. அன்புமணி ராமதாஸ் சுகாதார அமைச்சராக இருந்தபோதே இந்த சட்டத்தை நீக்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால் எதிர்ப்புகள் வலுக்கத்தொடங்கியதாலோ என்னவோ அப்போதைக்கு கைவிடப்பட்டது. தற்போது அந்த சட்டப்பிரிவு செல்லாது என்று தீர்ப்பளித்திருக்கிறது நீதிமன்றம்! ஒவ்வொரு குடிமகனுக்கும் தனி மனித உரிமைகள் / விருப்பம் போல வாழ்வு இத்யாதி இத்யாதிகளைப் பற்றி பேசுகிறது அரசியல் சட்டத்தின் 21வது பிரிவு. ஆனால் அதை தடுக்கும் வகையில் 377வது சட்டப் பிரிவு உள்ளது. எனவே இது செல்லாது என்று கூறப்பட்டுள்ளது. எனினும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் சட்டத்தில் எந்தவிதமான மாற்றமும் இல்லை என தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது.

கிட்டத்தட்ட 25 லட்சம் பேரைக் கொண்ட இந்த மைனாரிட்டி சமூகத்தின் தனி மனித உரிமைகள் இந்த 377 வதி பிரிவினால் பாதிக்கப்படுகின்றன. மூன்றாம் பாலினம் என்ற விஷயத்தை அங்கீகரிக்கும் சமூகம் தனி மனிதனின் Sexual Orientation ஐ தேர்ந்தெடுக்கும் உரிமையை மட்டும் மறுப்பது நியாயமில்லை. தவிர ஹோமோசெக்ஷூவாலிட்டி என்பது மரபணு /ஹார்மோன் சார்ந்த விஷயம். இதைக் குற்றமாக்குவது என்பது ஒருதலைப் பட்சமானது. இதனை சட்டப்பூர்வமாக்குவதால் எய்ட்ஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தயங்காமல் சிகிச்சைக்கு வருவார்கள். இவ்வாறான வாதங்களை எடுத்து வைக்கிறது ஒரு தரப்பு.

"இல்லை, இது ஒரு வக்கிரமான மன நோய். அருவருக்கத் தக்க விஷயம். இயற்கைக்கு புற்ம்பான செயல். இந்த செயலை குற்றமில்லை என அறிவிப்பது. ஓரினச்சேர்க்கையை ஊக்குவிப்பதாக அமையும். பொதுஜனங்களிடம் பாலியல் சில்மிஷம் அதிகமாகும். குழந்தைகளுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் பெருகும். எய்ட்ஸ் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். குடும்ப அமைப்புகள் முறைகெட்டுப்போகும். ஒருவனுக்கு ஒருத்தி என்ற அற்புதமான கட்டுப்பாடு (இன்னும் வழக்கில் இருக்கிறதா என்ன?) காற்றில் பறக்கவிடப்படும். இந்தியாவின் உலகப்புகழ் வாய்ந்த கலாச்சார கூறுகள் சீரழியும்." என்றெல்லாம் வாதிடுகிறது இன்னொரு தரப்பு.

இதனிடையே மத்திய அரசு "ஓரினச்சேர்க்கையை ஆதரிப்பது ஒழுக்க விதிகளுக்குப் புறம்பானது. நாகரிகமான வாழ்க்கை முறைகள் பாதிக்கப்படும். பெரும் சுகாதார அச்சுறுத்தலாக அமையும்" என்று கூறியுள்ளது.

கலாச்சாரம் எல்லாம் காற்றில் பறக்கவிடப்பட்டு ரொம்ப நாளாகிவிட்டது. இந்த விஷயம் தான் கலாச்சாரத்தை சீர்குலைக்கும் என்பதெல்லாம் வெறும் வாதம். ஆனால் இந்த தீர்ப்பை முன் மாதிரியாகக் கொண்டு தொந்தரவுகளும் குற்றங்களும் நடைபெறாமல் போதும். என்று எதிர்பார்க்கிறது என்னை மாதிரியான அன்றாடங்காய்ச்சித் தரப்பு!

குறிப்பு : ஆரோக்கியமான விவாதங்கள் வரவேற்கப்படுகின்றன.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More